Thursday, January 4, 2018

பசுஞ்சமவெளியும் பொன்னிற ஒளிக் கதிர்களும்


2017 எனக்கு மிக முக்கியமான வருடம். இவ்வளவு அழுத்தத்திலா இத்தனை நாள் இருந்தோம் என்பது வெளியேறிய பின்னர்தாம் தெரியவந்தது.  வானம் வரை விரிந்த பசுஞ்சமவெளியும், மினுங்கும் பொன்னிற சூரிய ஒளிக் கதிர்களும் சதா என் நினைவில் வந்து வந்து போய்க்கொண்டிருந்தன. இவ்வருடம் முழுவதுமே   அவ்வளவு மலர்ந்திருந்தேன். யார் மீதும் கோபமில்லை. எதன் மீதும் துக்கமில்லை. முழுமையாய் விடுதலையடைந்த மன உணர்வு இருந்து கொண்டிருந்தது. எனக்குள் நுழையும் எல்லாச் சொற்களும் பொருள் பொதிந்திருந்தன அல்லது சொற்களையும் மனிதர்களையும் சம்பவங்களையும் இவ்வருடத்தில்தான்  கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன். எப்போதும் மூளையின் கட்டுப்பாட்டிலிருந்த என் இயல்பு  அதன்  வறட்டுத்தனத்திலிருந்து வெளியேறியது.  பயங்களாலும் வெறுமைகளாலும் வெறுப்பினாலும்  பொறாமைகளாலும் இயலாமைகளாலும் சோம்பலாலும்  துக்கத்தினாலும் இன்ன பிற எல்லாச் சிறுமைகளாலும் தன்னை வருத்திக் கொண்டிருந்த ஓர் ஆன்மா விடுதலை பெற்றது. மிகையாகச் சொல்லவில்லை,  எனக்கு இது நேர்ந்தது.

ஓரிதழ்ப்பூ நாவலை எழுதி முடித்து, மெய்ப்புப் பார்த்து, திருத்தி, இறுதியை மீண்டும் மாற்றி எழுதி, மிகக் கச்சிதமான நூலாகக் கொண்டு வந்ததுதான் 2017 ஆம் வருடத்தின் சாதனை. இச்சாதனையில் சரி பங்கு ஹரன் பிரசன்னாவிற்கும் நாவலை உடனே வாசித்து அதன் நிறை குறைகளைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும் உரித்தானது. ஓரிதழ்ப்பூவை எழுத நிறைய கால அவகாசம் எடுத்துக் கொண்டேன். நான்கு வருடங்கள் என்பது நூற்றைம்பது பக்க நாவலுக்கு மிக அதிகம். இடையில் நிகழ்த்திரை கட்டுரைத் தொகுப்பிற்காக ஆறு மாதங்கள் போனாலும் மூன்றரை வருடங்களை வீணடித்தேன். போகட்டும் இனி சீரான இடைவெளிகளில் திட்டமிட்டிருக்கும் படைப்புகள் வெளிவரும்.

ஓரிதழ்ப்பூவின் செழுமைக்கு உதவிய நண்பர்களை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் பின் வருமாறு:

போதிராஜா o ஜெயமோகன் o ஜீ.முருகன் o ராஜசுந்தரராஜன் o உமாகதிர் o ச.கனியமுது o ரமேஷ் விஸ்வநாதன் o கல்பனா o மோகனவள்ளி o ஜெ.தீபலக்‌ஷ்மி o அசோக் o பினு பாஸ்கர் o மாரி விஸ்வலிங்கம் o முபாரக் o ஆபிதின் o தமிழ்நதி o பெருந்தேவி o லதாமகன் o எம்.மணி o லாவண்யா o தளபதி முஸ்தபா o கென் o சதீஷ்குமார் ராஜா o சக்ரா அருண் o ஹரன் பிரசன்னா மற்றும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர்

ஓரிதழ்ப்பூ அத்தியாயங்களாக தனிமையின் இசை பக்கத்தில் வெளியானபோது ஒவ்வொரு அத்தியாயத்தையும் நானூறிலிருந்து ஐநூறு பேர்  வரை வாசித்தார்கள். இந்த எண்ணிக்கை தந்த மலைப்பும் உற்சாகமும்தான் கிட்டத்தட்டக் காணாமலே போன என்னை மீட்க உதவியது. வெறும் எண்களாக மட்டுமே அறிமுகமாகி என்னை மீட்டுக் கொண்டு வந்தவர்களுக்கும் இந் நாவல் சமர்ப்பணம்.

0

2017 ஆம் வருடத்தின் துவக்கத்திலிருந்தே துபாயிலிருக்கும் தமிழ் வானொலியான 89.4 FM ல் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். நண்பர் நாகா நடத்தும் வானவில் நிகழ்ச்சியில் அவ்வப்போது பேசியது ஒரு புது அனுபவம். நேரிடையாக வெகு சன ஊடகத்தில் பேசுவது ஆரம்பத்தில் சிறு தயக்கத்தைத் தந்தாலும் பேசப் பேச உற்சாகமாக இருந்தது.  உலக இலக்கியம், புது சித்தாந்தங்கள், சம கால சிந்தனைப் போக்குகள், நாவல்கள், எழுத்தாளர்கள் என எல்லா தரப்பு விஷயங்களையும் பேசுகிறேன். இது உரையாடலாக அமைவது இன்னும் சிறப்பு. இதன் மூலம் புது நண்பர்களைப் பெற்றேன். வானொலி நேயர்களுக்கு அறிந்தவனானேன். வெகு சன ஊடகத்தில் அதன் இயல்பானக் கேளிக்கைகளை மீறி இலக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்தை செலுத்தும் நாகாவின் முயற்சி குறிப்பிடத்தக்கது. அவருக்கு என் நன்றி.

இந் நிகழ்வு  கூட்டிற்குள் புதைந்துகொண்டிருந்தவனை மீண்டும் வெளியே வரவும் மனிதர்களோடும் சமூக நிகழ்வுகளோடும் பங்கு கொள்ளவும் வைத்தது.  இவ்வருடத்தில் துபாயில் நிகழ்ந்த பெரும்பாலான நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். தொடர்பே இல்லாதிருந்த பழைய நண்பர்களோடு நட்பைப் புதுப்பித்தேன். இந்த நட்பு சங்கமம் புத்தகக் கண்காட்சி, திரைப்பட விழா, நூல் வெளியீட்டு விழா எனத் தொடர்ந்தது. ஜெயமோகனைச் சந்தித்து உரையாடியது, சல்மாவைச் சந்தித்தது என இந்த வருடம் முழுக்க குறிப்பிடத்தக்க  நிகழ்வுகள் இருந்தன. வருடத்தின் இறுதியில் நண்பர் மகேந்திரன் முன்னெடுப்பில் அல் அய்ன் நகரத்தின் பூங்காவில் பத்தொன்பது நண்பர்கள் வரைச் சந்தித்தது முத்தாய்ப்பு.

விடுமுறைக்கு ஊருக்குப் போனால் எங்காவது நண்பர்களோடு கிளம்பிப் போய் குடித்துக் கும்மாளமிடுவதுதான் வழக்கம். ஆனால் இம்முறையோ குடும்பத்தோடும் உறவினர்களோடும் அதிக நேரத்தை செலவழித்தேன். ஷீரடி சாய்பாபா கோவிலுக்குப் போனேன். எப்போதும் தூறிக் கொண்டிருந்த  மழையில் நனைந்து கொண்டே ஷீரடியிலும் நாசிக்கிலும் சுற்றி வந்தது முற்றிலும் புது அனுபவம். ஓர் அதிகாலையில் வாய்த்த சாய்பாபாவின் தரிசனம் சிலிர்ப்பூட்டுவதாய் இருந்தது. 

0
2017 ஜனவரி மாதத்தில் நண்பன் பினு பாஸ்கர் தன் திரைப்பட வேலைக்காய் அழைத்திருந்தான். கிளம்பிப் போய் பத்து நாட்கள் அவனோடு திரைக்கதை வேலைகளைப் பார்த்தேன்.  ஒரு திரைக்கதையை செப்பனிடுவது அலுப்பூட்டும் வேலையாகத்தான் இருந்தது. மொத்தக் குழுவினரும் பகலில் வேலை பார்க்கமாட்டார்கள். எனக்கோ இரவு பத்து மணிக்கே கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. தாக்குப் பிடித்து ஐந்து நாட்கள் கேரளாவிலும் ஐந்து நாட்கள் என் திருவண்ணாமலை வீட்டிலுமாய் அமர்ந்து கோட்டையம் திரைக்கதையை முழுமையாக்கினோம். சுதந்திரமாய் இயங்கினேன். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்தன. நன்றாக வந்திருக்கிறது. எல்லாம் சரியாக அமைந்தால் படம் பேசப்படும் என்றே நம்புகிறேன்.

பிப்ரவரியிலிருந்து கேம் ஆஃப் த்ரோன் தொடரைப் பார்க்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட எழுபது மணி நேரம். சில பகுதிகளை மீண்டும் மீண்டும் பார்த்தேன். இரண்டு மாதங்களை முழுமையாய் இத்தொடருக்குத் தந்தேன். எனக்குள்ளிருந்த ஏதோ ஒரு தடையை இத் தொடர் உடைத்தது. ஓரிதழ்ப்பூவை மீண்டும் மும்முரமாக எழுத இந்த ஃபேண்டஸி உதவியது. வழக்கம்போல நிறைய திரைப்படங்களைப் பார்த்தேன். கணிசமான மலையாளப் படங்கள் வெள்ளிக்கிழமை வெளிவரும் தமிழ்படங்களென எதையும் தவறவிடவில்லை. இவ்வருடத்தில் கண்டடைந்த அபூர்வமாக  பின்லாந்து இயக்குனர் அகி கரிஸ்மாகியையும்   இயக்குனர் யார்கோஸ் லாந்திமோஸையும் குறிப்பிடலாம். லாந்திமோஸின்  The Killing of a Sacred Deer திரைப்படத்தை துபாய் திரைப்பட விழாவில் பார்க்க முடிந்தது இன்னும் சிறப்பு. நிறைய குறிப்பிடத் தகுந்த புத்தகங்களையும் வாசித்தேன். வாசித்த பார்த்த சிறந்தவைகளை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

வருடத்தின் இறுதி வாக்கில் மாமல்லன் வழியாய் அமேஸான் கிண்டிலை அறிந்து கொண்டேன். இதுவரை பத்து புத்தகங்களை கிண்டிலில் பதிவேற்றி இருக்கிறேன். இன்னும் 3 நூல்களை  செப்பனிட வேண்டும். கிண்டிலில் வரவேற்பு நன்றாக இருக்கிறது. இதுவரைக்கும் விற்ற புத்தகங்கள், வாசிக்கப்பட்ட பக்கங்கள் குறித்தான புள்ளி விவரங்களைப்  பார்க்கும்போது சின்னதாய் பயம் எழுகிறது. ஏழாயிரம் பக்கங்கள் வரை வாசிக்கப்பட்டதாய் கிண்டில் சொல்கிறது. இது மிகப்பெரிய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் தந்திருக்கிறது. இன்னும் இன்னும் எழுத ஆர்வமும் மேலிடுகிறது. 2018 அதற்கான முன்னெடுப்பாய் அமையும் என்றே நம்புகிறேன்.

எப்போதும் என்னோடிருக்கும் உங்களுக்கு நன்றி.


Monday, December 11, 2017

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடுதினசரிகளின் துல்லியம்
     
     புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள்உள்ளே..

1.   தினசரிகளின் துல்லியம் - முரகாமி
2.   அன்னா கரேனினா
3.   பார்போஸோ வின் குரங்கு
4.   நிகழை முழுமையாய் வாழ்தல்
5.   இருளில் மறைந்திருக்கும் யானை
6.   ஆஸ்விட்ஸ் வதை முகாம்
7.   குளி சீன் நாயகிகளின் கரைச்சல்கள்
8.   புதிர்களின் சுழல்
9.   பப்பாளிக்காயின் மணம் 
10.  அகி கரிஸ்மாகி – புகைக் கலைஞன்
11.  யு.ஆர்.அனந்தமூர்த்தியின் பவ – பிறப்பு
12.  லார்ஸ் வோன் ட்ரையர்
13.  மணிரத்னம்
14.  கேம் ஆஃப் த்ரோன்ஸ்
15.  எஸ்.எல். பைரப்பா
16.  இரு வேட்டைக் கதைகள்
17.  அசோகமித்திரன்
18.  பி. லங்கேஷ்
19.  நூரி பில்கே சிலான்
20.  தமிழக அகதிகள்
21.  வாசிப்பும் விமர்சனமும்
22.  ஹோ ஷியோ ஷீன் (hou hsiao-hsien)
23.  ஜீ.முருகன்
24.  ஜெயலலிதாவும் செய்தி வெறியும்
25.  நீட்ஷேவின் குதிரை
26.  ஆஸ்கர் 2017
27.  தந்தையர்களைக் கொல்லுதல்
28.  இலக்கியப் பட்டியலின் அரசியல்
29.  மைக்ரோ திரைப்படக் குறிப்புகள்
30.  காட்சிகளின்றி காணுதல்
31.  துபாய் சர்வதேசத் திரைப்பட விழா
32.  கங்கைப் பருந்தின் சிறகுகள்
33.  தீக்கிரை – இன்செண்டீஸ்
34.  சிக்கவீர ராஜேந்திரன்
35.  ஸ்வீடிஷ் பிசாசும் தமிழ் பிசாசும்
36.  இயற்கையின் சமீபம்


 

துல்லியங்களுக்கு முன் :

இவை 2014 ஆம் வருடத்திலிருந்து எழுதப்பட்ட கட்டுரைகள், குறிப்புகள் மற்றும் மைக்ரோக் குறிப்புகள். ஃபேஸ்புக், ப்ளஸ், ப்லாக் என கண்ட இடத்தில் எல்லாம் கிறுக்கி வைத்தவை. இவற்றைத் தொகுப்பாக்க நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது. ஏராளமான வெட்டி ஒட்டும் வேலைகளை இந்தத் தொகுப்பு கோரியது. நிதானமாக செய்தேன். இதனோடே பழைய நினைவுகளில் ஊறவும் பிடித்திருந்தது.

சம இணைய கால உலகில் திரைப்படங்கள் குறித்தோ இயக்குனர்கள் குறித்தோ புத்தகங்கள் குறித்தோ – குறித்து என்பது குறித்து நீட்டி முழக்கி எழுதுவது - அபத்தம் எனத்தான் தோன்றுகிறது. வணிகப் பத்திரிக்கைகள், இலக்கிய இடை நிலை இதழ்களில் இந்தக் குறித்துத் தொடர்பான நிறைய கட்டுரைகளைப் பார்க்க முடியும். டெம்ப்ளேட் எழுத்தாளர்கள் அதே கீறல் விழுந்த ரெக்கார்டாய் சினிமா குறித்தும் புத்தகங்கள் குறித்தும் எழுதுவதை ஒரு சின்னப் பரிதாபத்தோடு கடந்து போவேன். எனக்குத் தெரிந்து முழுக்கதையையும் எழுதப்பட்டுவிட்ட சினிமா விமர்சனங்களை யாரும் வாசிப்பதில்லை. பக்கங்களை நிரப்ப ஒளிப்பதிவு அபாரம், நடிகையின் அருமையான முக பாவம் என்றெல்லாம் பிதற்றலாய் எழுதி வைப்பார்கள். வாசிக்கப் பாவமாக இருக்கும்.

இந்தத் தொகுப்பிலுள்ள குறிப்புகள் பக்கம், வடிவம், வாசக கவனம் என்பன போன்ற இடையூறுகள் எதுவும் இல்லாதக் குறிப்புகள். என் மன உணர்வுகளை கண்டமேனிக்கு எழுதி வைத்திருக்கிறேன். மற்ற சிரத்தையாய் எழுதப்பட்ட கட்டுரைகள் உருவாக்கும் பரிதாப உணர்வை இக் குறிப்புகளில் நீங்கள் பெற முடியாது என நம்புகிறேன்.

கன்னட இலக்கியம் குறித்தான அதிகக் கட்டுரைகளும் குறிப்புகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. என்னை தொந்தரவு செய்த படங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன். கவனமாக சுயதம்பட்டங்களைக் களைந்திருக்கிறேன். கடந்த மூன்று வருடங்களில் சுயபச்சாதாபத்தையும் கழிவிரக்கத்தையும் கடந்து வந்திருக்கிறேன். இணைய குழாயடி சண்டைகளிலிருந்து மீண்டிருக்கிறேன் என்பதை இக்குறிப்புகள் அறியத் தருகின்றன. நிஜமாகவே மகிழ்கிறேன்.
மற்றபடி இன்னும் ஒரு கட்டுரைத் தொகுப்பும் வரும். அந்தத் தொகுப்பில் இதிலிருக்கும் நிதானம் இருக்காது என நினைக்கிறேன். பார்ப்போம்.

கிண்டில் அபாரமாக இருக்கிறது. ஏழு புத்தகங்களை இறக்கியிருக்கிறேன். இது எட்டாவது புத்தகம். இன்னும் நிகழ்திரையும், உரையாடலினியும், கட்டுரைத் தொகுப்பும் நிலுவையில் இருக்கின்றன. நானே அட்டைகளை வடிவமைக்கிறேன். நானே தொகுக்கிறேன். நானே திருத்தங்களை செய்கிறேன். நானே கிண்டிலில் பதிவேற்றுகிறேன். எல்லாம் நானேதான்.

நீங்கள் வாசியுங்கள்

மிக்க அன்புடன்

அய்யனார் விஸ்வநாத்
டிசம்பர் 11, 2017

துபாய்.

Tuesday, November 14, 2017

தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியாகினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX


பத்துக் கதைகளை கிண்டிலில் இப்படி மின்நூல் தொகுப்பாகக் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணம் மிகத் தற்செயலானது. இதில் ஆர்வம் என்கிற ஒன்றைத் தவிர வேறெந்த இலாபக் குறிக்கோள்களும் இல்லை. எத்தனை பேர் வாங்குகிறார்கள் பார்ப்போமே என்கிற சிறுபிள்ளைத்தனமான ஆவல் மட்டும்தான் இக்கணத்தில் மேலோங்கி இருக்கிறது. கினோகுனியா என்கிற பெயர் தமிழ்ச் சூழலுக்கு வெளியில் இருந்ததால் அதையே இந்தத் தொகுப்பிற்கானப் பெயராய் தேர்ந்தெடுத்தேன். இருப்பின் அடிப்படையிலும் இலக்கிய மடங்களின் அங்கீகார அடிப்படையிலும் தமிழ் சூழலுக்கு வெளியே நானும் என் எழுத்தும் இருப்பதாலும் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
சிறுகதைகள் என்னுடைய களம் கிடையாது. மரபான ஒரே ஒரு சிறுகதையைக் கூட நான் இன்னமும் எழுதவில்லை. எழுதவும் மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். தமிழ் சிறுகதைப் பரப்பில் எல்லாவித சாத்தியங்களும் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டன. ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடர் மிகுந்து வராத இறுகிய கட்டுமாணங்கள் கொண்ட நவீனச் சிறுகதைகளிலிருந்து, சொல்லாமல் சொல்லிப் போகும் முத்திரைக் கதைகள் வரை எல்லாமும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. இனிப் புதிதாய் இதே மரபில் எழுத ஒன்றுமில்லை.
இனிமேலும் கதை என்ற ஒன்றை வழுவாத சட்டகங்களோடு எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா என்கிற அலுப்புதான் என்னை என் விருப்பத்திற்கு எழுத வைத்தது. என் கதைகள் எந்த மரபின் தொடர்ச்சியுமல்ல நானும் எந்தப் பள்ளியையும் சார்ந்தவன் கிடையாது. (அதற்காக வானத்திலிருந்து குதித்தது / தவன் என்றும் பொருளில்லை) இந்த மரபும் பள்ளிகளும் எனக்கு அலுப்பூட்டுவதாய் இருக்கின்றன. எனவே என் விருப்பத்திற்கு எழுதுகிறேன். அவை கதைகள் ஆகின்றனவா, கலையம்சம் கொண்டிருக்கின்றனவா என்பதெல்லாம் வாசிப்பவரின் பாடு.

மேலும் நம் சிறுகதைச் சூழலில் வட்டாரவழக்கு, காமம், வாழ்வியல் என எல்லாமும் ஏற்கனவே கற்பனையாக எழுதப்பட்டுவிட்டன. இனிமேலும் மோட்டு வளையைப் பார்த்துக் கற்பனையைப் பிராண்டிக் கொண்டிருப்பது உண்மையிலேயே அலுப்பானது என்பதால் நான் வழமையான கதைகளை எழுத முயற்சிக்கவில்லை. இத் தொகுப்பில் இருப்பவை யாவும் என்னுடைய அறிதல்களும் அறிய முயன்றவையும் மட்டும்தான். இலக்கிய குருமார்கள் சொந்த அறிதலை பொதுவிற்குக் கடத்துவதே கலை என்பார்கள். அது அவர்களின் அறிதல் என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை. என் வாழ்வும் பயணமும் எனக்குத் தந்ததை இப்படிப் புனைவுகளாய் எழுதிப் பார்த்திருக்கிறேன். பிடித்திருந்தால் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் தூக்கிப் போடுங்கள். மின் பிரதியின் வசதியே நொடியில் அழித்துவிடலாம் என்பதுதான்.
மற்றபடி இத்தொகுப்பை என்னால் இயன்ற அளவிற்கு பிழையில்லாமல் கொண்டு வர முயன்றிருக்கிறேன். முதல் கதையான சமீபத்திய மூன்று சண்டைகள் ரேமண்ட் கார்வரை வாசித்த பாதிப்பில் எழுதிப் பார்த்தது. அது மட்டுமே மற்ற ஒன்பது கதைகளிலிருந்து மாறுபட்டிருக்கும். இத்தொகுப்பில் வரும் சமவெளி மான் கதையின் போதாமைதான் ஓரிதழ்ப்பூவாக உருவானது. சோதிடன், அங்கையற்கன்னி, மலர்ச்செல்வி கதாபாத்திரங்கள் என்னோடு நான்கு வருடங்கள் வரைப் பயணித்தார்கள். ஓரிதழ்ப்பூ அச்சிலும் கிண்டிலிலும் ஜனவரியில் கிடைக்கும். அதற்கு முன்பு இத் தொகுப்பு வருவதில் மகிழ்ச்சி.

கினோகுனியா அமேஸான் கிண்டில்


மிக்க அன்புடன்
அய்யனார் விஸ்வநாத்
13 நவம்பர் 2017
துபாய்

Thursday, November 9, 2017

எனக்கு மனிதர்களைப் பிடிக்காது - கிண்டில் வெளியீடு

https://www.amazon.in/dp/B0778TCFP4எனக்கு மனிதர்களைப் பிடிக்காது’ கவிதைத் தொகுப்பை கிண்டிலில் பதிவேற்றி இருக்கிறேன். ஏற்கனவே என் வலைப் பக்கத்தில்  PDF ஆகத் தரவிறக்கிக் கொள்ளும்படி வைத்திருந்தேன். அமேஸான் விதிமுறைகளின் படி அதை நீக்கி இருக்கிறேன். இது ஒரு சோதனை முயற்சிதான். வெளியிடுகையில் இலவசமாகத் தரும் வசதி அமேசானில் இல்லை. எனவே  அதன் ஆரம்ப விலையான 49 ரூ. இது சரிவரும் எனத் தோன்றினால் சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு என அடுத்தடுத்து கொண்டு வருவேன். இந்த எண்ணம் தோன்ற மாமல்லனே காரணம். அவருக்கு என் நன்றி. 

கவிதைகள் மலிந்த இக்காலகட்டத்தில் கவிதைத் தொகுப்பை அச்சில் வெளிக் கொண்டு வரக் கூச்சமாக இருந்தது. எனவே மூன்றாண்டுகளுக்கு முன்பு ’எனக்கு மனிதர்களைப் பிடிக்காது’ தொகுப்பை பிடிஎப் ஆக மாற்றி வலையில் ஏற்றினேன். இப்போது வாசிக்கவும் நன்றாக இருப்பது போல் தோன்றவே இந்த கிண்டில் வெளியீடு. மேலும் எப்படித்தான் இருக்கிறது பார்ப்போமே என்கிற உடனடி ஆவலும் இந்த வெளியீட்டுக்கான இன்னொரு காரணமாக இருக்கலாம்.

உரையாடலினி தொகுப்பிற்குப் பிறகு எழுதிய கதைகளை தொகுத்துக் கொண்டிருக்கிறேன். கூகுல் பஸ் காலகட்டத்திலிருந்து எழுதிக் குவித்த சினிமா விமர்சனங்களையும் அலுவலக வெட்டி நேரத்தில் தொகுக்க வேண்டும். இப்படியாக இணையத்தில் எழுதிக் குவித்தவைகளை தனித் தனி தொகுப்புகளாக கிண்டிலில் கொண்டு வரப் பார்க்கலாம். நிச்சயமாக இத்தொகுப்புகளில் ஓசிதானே என்கிற அசட்டை மனப்பான்மை இராது. ஒரு கறார் ஆசாமியின் உயிர்ப்புதான் என்னை இன்னும் இயங்க வைக்கிறது. அந்த நேர்த்தி தொகுப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.

பொதுவாக என்னுடைய ஒரு நாள் என்பது வழமையைத் தாண்டி எதுவுமே நிகழாத ஒன்றாகத்தான் இருக்கும். அல்லது அப்படி நான் வைத்துக் கொள்வேன். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அவ்வளவு பரபரப்பு. மனிதர்களாலும் நிகழ்வுகளாலும் நிறைந்த நாட்கள் இவை. மனநிலை வாய்க்கும்போது ஒவ்வொரு பரபரப்பையும் விலாவரியாக எழுதப் பார்க்கிறேன்.

Thursday, October 5, 2017

அகி கரிஸ்மாகி - புகைக்கலைஞனின் நிரம்பி வழியும் கோப்பை

கடந்த ஒரு மாதமாக பின்லாந்த்தைச் சேர்ந்த இயக்குனரான அகி கரிஸ்மாகி யின் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை பதினைந்து படங்களைப் பார்த்திருக்கிறேன். இந்த வருடம் வெளிவந்த The Other Side of Hope மட்டும் கிடைக்கவில்லை. அகியின் மொத்த படங்களுமே மிக நேரடியான படங்கள். பின்லாந்தின் சூழலை வாழ்வியலை  மக்களைப் பற்றி மிகக் குறைவான காட்சி மொழியின் வழியாய் ஆழமான சலனங்களை உருவாக்குகின்றன. தனிப்பட்ட வகையில் என்னைப் புரட்டிப் போட்ட இயக்குனர்களான  டோனி காட்லிஃப், ஹோ வரிசையில் அகியும் இடம்பெறுகிறார். இவரது திரைப்படங்களின் முகத்திலறையும் நேரடித் தன்மை அசாத்தியமான திறப்பை அளிக்கிறது.

திரைப்படங்களைத் தவிர்த்த இவரது தனிப்பட்ட வாழ்க்கையும் குணாதிசயமும் குறைந்த பட்ச சுரணையோடு வாழ விரும்பும் அனைவரையும் ஈர்த்துவிடும் ஒன்று. இவரது நேர்காணல்களைத் தேடிப் பார்த்தேன். அவ்வளவு உயிர்ப்பும் தனித்தன்மையும் கொண்ட அசல் மனிதன். ஒரு போதும் அதிகாரத்திற்கோ வெளிப்பூச்சுகளுக்கோ மசியாத கலைஞன்.

நேற்று இரவு 1996 இல் வெளிவந்த Drifting Clouds படத்தைப் பார்த்து முடித்தேன். இத் திரைப்படத்தில் துக்கமும் ஏமாற்றமும் இழப்பும் இசையாக மட்டும் வெளிப்படும். இவரது திரைப்படங்களில் ஒரே ஒரு வார்த்தை கூட மிகையாய் இருக்காது.  இவ்வளவு மினிமலாகவும் ஒரு கதையை சொல்ல முடியும் என்பதுதான் அகியின் தனித் தன்மை. திரைப்படங்களில் நான் விழுந்து விழுந்து தேடிக் கொண்டிருக்கும் பிராந்திய அசல் தன்மை இவரது எல்லாத் திரைப்படங்களிலும் நிரம்பி வழிகிறது.

அகி ஆஸ்கர் விருதுகளை நிராகரித்தார். உலக நாடுகளின் அமைதிக்கு அச்சுறுத்துலாக இருக்கும் அமெரிக்க பெரியண்ணனின் நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். மேலும் தன்னை முன் நிறுத்திக் கொள்ளாத கலைஞன் என்பதால் வெகுசனப் பரப்பில் அதிகம் அறியப்படவில்லை. அதைக் குறித்து அகிக்கோ அல்லது அவரது ரசிகர்களுக்கோ ஒரு பிராதும் கிடையாது. அவரது பியர் கோப்பை இன்னும் இன்னும் நிரம்பி வழிகிறது. லீ ஹார்வி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்.

அகி கரிஸ்மாகியின் பதினேழு படங்களில் Ariel 1988 மற்றும் The Man Without a Past 2002 இவை இரண்டும் அதிகமான விமர்சகர்களின் பாரட்டைப் பெற்றிருக்கிறது. அகிக்குமே ஏரியல் மிகப் பிடித்தப் படம். எனக்கோ இதுவரை பார்த்த பதினைந்துமே பிடித்திருக்கிறது. Crime and Punishment, 1983 படம் துவங்கி 2011 இல் வெளிவந்த லீ ஹார்வி வரை அத்தனையுமே பிரமாதமான மிக முக்கியமான படங்கள்.  முடிந்த வரையில் ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாக எழுதப் பார்க்கிறேன்.


Wednesday, September 20, 2017

துப்பறிவாளனும் தமிழ் சினிமாவும்


துப்பறிவாளனில் இல்லாமல் போன தமிழ் சினிமா கூறுகளை பட்டியலிட முயற்சி செய்தேன். எதனால் இந்தப் படம் தமிழ்ப்படம் கிடையாது அல்லது என்னவெல்லாம் செய்திருந்தால் இது ஒரு  தமிழ்ப்படமாகி இருக்கும் என உட்கார்ந்து யோசித்ததில் கீழ்கண்ட ஞானத் தெறிப்புகள் கிடைத்தன.

1. விஷால் காஸ்ட்யூம் சரியில்லை. யுத்தம் செய் சேரனைப் போல துப்பறிவாளன் விஷாலையும் சாதாரண பேண்ட் சட்டை செருப்பில் காண்பித்திருக்கலாம். டைரடக்கருக்கு கருப்பு கண்ணாடி பிடித்தால் ஹீரோவும் போட்டுக் கொள்ள வேண்டுமா என்ன? ஸ்கார்ஃபும் கருப்பு கண்ணாடியும் தமிழ் சினிமாவுக்கு அந்நியமானது. முதல் காட்சியிலேயே இது நமது சினிமா இல்லை என்பது தெளிவாகிறது.

2. விஷால் வீட்டு ஹால் முழுக்க இங்கீலீஷ் புத்தகங்கள். பெயிண்டர்கள் பயன்படுத்தும் குதிரை மாதிரி ஒரு உயரமான ஸ்டூல், இதெல்லாம் யார் வீட்டில் இருக்கிறது. மேலும் தமிழில் படமெடுக்கும் மிஷ்கினுக்கு ஒரே ஒரு தமிழ் புத்தகத்தைக் கூட அந்த ஷெல்பில் வைக்க வேண்டும் எனத் தோணவில்லையே, இது நம்மை அவமானப்படுத்தும் செயல். தமிழ்ப்பட துப்பறிவாளன் வீட்டு ஹாலில் கண்ணாடி ஷோ கேஸ் இருக்க வேண்டும். அதில் சில பல விருதுகள், கோப்பைகள், விளையாட்டுகளில் ஜெயித்த பதக்கங்கள் மினுங்க வேண்டும். மேலும்  சுவரில் ரஜினி அஜித் போன்ற பிரபலங்களுடன் விஷால் நின்று கொண்டிருப்பதைப்போல புகைப்படம் எடுத்து  மாட்டி இருக்க வேண்டும். இதுவே தமிழ் சினிமா தோற்றத்தைக் கொண்டு வர உதவும்.

3. கதாநாயகியிடம் துடைப்பத்தைக் கொடுப்பது ஆணாதிக்க தடித்தனம். ஏன் வீட்டு சாவியை அவள் கையில் கொடுத்து சிம்பாலிக்காக லவ்வை சொல்லி இருக்கலாமே?

4. ஒவ்வொரு கொலையும் விபத்தைப் போல இருக்க வேண்டும் அவ்வளவுதானே, மிக எளிது மண்பாடி லாரியை விட்டு அவர்களை மோதிவிட வேண்டியதுதான். தமிழில் இதுவே மரபு.  இதற்குப்போய் செயற்கை மின்னல், விஷ ரெசின், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி என அடித்து விடுகிறார்கள். முடியல. வெளிநாட்டுப்படங்களைப் பாருங்கள் தப்பில்லை. ஆனால் அதை தமிழுக்கு ஏற்றார்ப்போல் மாற்றுங்கள் அப்போதுதான் நீங்கள் இயக்குனர்.

5. ஒரு வில்லன் மொட்டையை போலிசார் சூழ்ந்து கொள்கிறார்கள். மொத்த போலிஸார் முன்னிலையில் அந்த மொட்டை நடு ரோட்டில் மண்டி போட்டு உட்கார்ந்து கத்தியால் வயிறை அறுத்துக் கொள்கிறான். அடப்பாவிகளா இது ஹரகிரி. ஜப்பானிய மறவர்கள் தங்களை மாய்த்துக் கொள்ளும் முறை. இதைப் போய் திருடனுக்கு கொடுத்து அந்தக் கலாசாரத்தை இழிந்ததோடு மட்டுமில்லாமல் அட்டைக் காப்பியையும் அடித்திருக்கிறார்கள். அநியாயம். வெட்கம். வில்லன் கழுத்தில் சயனைட் குப்பி இருக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் பாலபாடம். பிடிபட்டால் எடுத்துக் கடித்து விட வேண்டும். இதுகூடவா இயக்குனருக்குத் தெரியாது. அட ஜெராக்ஸ் மிஷ்கினே.

6. பிரிட்ஜில் பீர்தான் இருக்க வேண்டும் ஆனால் இங்கு பிணம் இருக்கிறது. பாத்ரூமில் நடிகையின் குளிசீன் வைக்கலாம் இவர்களோ பிணத்தை துண்டு துண்டாக அறுக்கிறார்கள். வில்லன் அத்தனை முட்டையையும் உடைத்து ஆஃப்பாயில் போட்டு எடுத்து வீசுகிறான். கோபம் வந்தால் முட்டையை எடுத்து நேரடியாக வீசலாமே ஏன் ஆஃப் பாயில் போட்டு வீசுகிறான்? அட ஆஃப் பாயில்களா. வெளிநாட்டுப் படங்களில் வன்முறையைக் காண்பிக்கிறார்கள் என்றால் அவர்கள் நாஜிக்களால் துன்பபட்டு மனதளவில் வன்முறையாய் இறுகி இருக்கிறார்கள். எனவே வன்முறையை அப்பட்டமாய் காண்பிக்கிறார்கள். தமிழர்களாகிய நீங்கள் தமிழ்நாடு எனும் சொர்கத்தில் வாழ்கிறீர்கள். உங்களுக்கு என்ன போய் வன்முறை? நீங்கள் கூடி கும்மிதான் அடிக்க வேண்டும். கொலை பண்ணக் கூடாது.

7. விஷால் பெட்டிக் கடையில் போய் மார்ல்ப்ரோ கேட்கிறார். மிஷ்கின் ப்ரோ, வெளிநாட்டு பொட்டிக் கடைகளில்தான் மார்ல்ப்ரோ. நம்ம ஊர் பெட்டிக் கடைகளில் ஒரு கிங்க்ஸ் கொடுங்க என்றுதான் கேட்கவேண்டும்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் தட்டச்ச கை வலிக்கிறது. இறுதியாக சுரேஷ் கண்ணன் பாணியில் ஒரு பஞ்ச்

”பிட்சாவுக்கு தொட்டுக்க சாஸ் கொடுங்க மிஷ்கின், சாம்பார் கொடுக்காதீங்க ப்ளீஸ்”


Saturday, September 9, 2017

பப்பாளிக்காயின் மணம்


வியட்நாமின் நிலப்பகுதி எனக்குப் பிடித்தமானது. திரைப்படங்களில் ஆவணப்படங்களில் பார்த்ததுதான். நேரில் சென்றதில்லை. ஆனால் வியட்நாமின் மீதான உள்ளார்ந்த விருப்பம் என்னை விரைவில் அங்கு கொண்டு செல்லுமென்றே நம்புகிறேன். சேற்றுப் புதைவுகளில் ஆசுவாசமாக அசைபோடும் எருமைகளை காணும்போதெல்லாம் ஒரு சிறு புன்னகை தொற்றிக் கொள்கிறது. வருகிறேன் செல்லங்களே என அவைகளிடம் மிக ரகசியமாய் சொல்லிக் கொள்கிறேன். தலைக்கு சிறு குடையை கட்டிக் கொண்டு விடாத மழையைப் பொருட்படுத்தாது வயல்களில் வேலை பார்க்கும் மினுங்கும் கண்களைக் கொண்ட மனிதர்களை நேரில் பார்க்க வேண்டும்.

 THE SCENT OF GREEN PAPAYA என்கிற இந்தப் படம் வியட்நாமின் நிலக்காட்சிகளைப் பதிவு செய்யவில்லை. மாறாய் எளிய மனிதர்களின்  வாழ்வை மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறது.
வீட்டு வேலைக்குப் போகும் சிறுமியின் பதினைந்து வருட வாழ்வுதான் இந்தப்படம். அவளின் சின்னஞ்சிறு உலகம் அவள் கண்களின் வழியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. கவித்துவம் என்கிற சொல்லிற்கு இந்தப் படம் நியாயம் செய்கிறது. காட்சிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு துல்லியம், அவ்வளவு நுணுக்கம், அவ்வளவு நெகிழ்வு. மைய சரடாக அன்பு இருக்கிறது. பதிலுக்கு எதையும் எதிர்பாராத, அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத ஆழமான அன்புமிக்க மனிதர்களை இந்தப் படத்தில் பார்க்கலாம்.

பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டிலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடும் வாழ்க்கை முறையும் மனிதர்களும் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர்கள்தாம். தைவானிய இயக்குனரான HSIAO-HSIEN HOU  வின் படங்களில் நான் விழுந்து கிடந்த காலத்தை இந்தப் படம் மீண்டும் நினைவிற்கு கொண்டுவந்தது. தைவான் படங்களில் வரும் வீடும் மனிதர்களும் இப்படித்தான் இருப்பார்கள். கிட்டத்தட்ட  ஹோ வின் அதே திரைப்பட மொழியை Anh Hung Tran ம் கையாண்டிருக்கிறார்.


ட்ரான் இயக்கத்தில் வெளிவந்த நார்வேஜியன் வுட் திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்தேன். முரகாமியின் அதே புகழ்பெற்ற நாவல்தான். நாவல் தந்த உணர்வை திரைப்படத்தில் பெற முடியவில்லை என்றாலும் இறுதிக் காட்சிகள் பிரமாதமாக வந்திருந்தன. குறிப்பாக காற்று படத்தில் இன்னொரு கதாபாத்திரமாக மாறியிருக்கும். முழுமையானப் படமாக இல்லாததால் இயக்குனர் யார் என்பதைக் கூடப் பார்க்கவில்லை. இந்தப் படம் பார்த்துவிட்டு தேடிப்பார்த்ததில்தான் நார்வேஜியன் வுட் இயக்குனர் என்பது தெரியவந்தது. இவரின் மற்ற படங்களை தேடிப்பார்த்தேன். Cyclo வும் THE VERTICAL RAY OF THE SUN  திரைப்படமும் கிடைத்தது. மூன்றிலும் ட்ரான் மனைவியே பிரதான கதாபாத்திரம். க்ரீன் பப்பாயா படத்தைத் தொடர்ந்து சைக்லோவைப் பார்த்தேன். வியட்நாம் விளிம்பு நிலை மனிதர்களை அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார். கீரீன் பப்பாயா தந்த உணர்வை நீட்டிக்கச் செய்ய மனம் விரும்பியதால் பாதியில் நிறுத்திவிட்டேன்.

என் திருவண்ணாமலை வீட்டில் நிறைய பப்பாளி மரங்கள் இருந்தன.  இம்மரமும் அதன் அகல இலைகளும் பால்சொட்டும் பப்பாளிக் காயும் என் பால்யத்தோடு தொடர்புடையதால் திரைப்படத்தோடு ஒன்றிப் போக முடிந்தது. கிட்டத்தட்ட அந்தப் பச்சை வாசனையை திரையின் வழியாகவே முகர்ந்து விட முடிந்தது. 

Featured Post

பசுஞ்சமவெளியும் பொன்னிற ஒளிக் கதிர்களும்

2017 எனக்கு மிக முக்கியமான வருடம். இவ்வளவு அழுத்தத்திலா இத்தனை நாள் இருந்தோம் என்பது வெளியேறிய பின்னர்தாம் தெரியவந்தது.  வானம் வரை விர...