Monday, December 31, 2007

2007 ஆம் வருடத்திற்கு நினைவஞ்சலி


இந்த வருடம் எப்படித் துவங்கியதென யோசிக்கையில் சில பிலிப்பைன் தேசத்து நண்பர்கள் நினைவில் வந்து போகிறார்கள்.ஏழு பெண்கள் மற்றும் ஆறு ஆண்களின் உற்சாக கூச்சலோடுத் துவங்கிய ஆண்டிது.இந்த பிலிப்பைன் தேசத்து மக்களைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது.குடும்பம், சமூகம் என்பது போன்ற இறுக்கமான கட்டமைப்புகள் ஏதும் இல்லாதவர்.கலாச்சாரம், ஒழுங்கு போன்ற பிரச்சினைகளும் ஏதும் இல்லாதவர்.தனி மனித சுதந்திரம் தனி மனித விருப்பு வெருப்புகளை முதன்மையாய் கொண்டவர்கள். தனக்கான எழுத்து ஏதும் இல்லாதோர்.We are following american culture எனச் சொல்வதில் பெருமைப்பட்டுக் கொள்பவர். நமது மொழிக்கான எழுத்துகளை நாம் கொள்ளாது போயிருந்தால் நாமும் இபடித்தான் எவனோக்களின் அடிவருடிகளாயிருந்திருப்போம் என்பது போன்ற சிந்தனைகள் நமது மொழியை இன்னும் நேசிக்கத் தூண்டுகின்றன. பிலிப்பைன் தேசத்து மக்கள் கொண்டாட்டத்தை அடிப்படையாய் கொண்டவர்கள்.மிகச் சாதாரண செண்டிமெண்ட்கள் ஏதும் இல்லாதோர்.குட்டையான இவர்களை ஜீன்ஸ் இல்லாமல் பார்த்தால் நீங்கள் பாக்கியவான்கள்.

இத்தகைய பாக்கியவான்களோடு துவங்கிய இந்த ஆண்டு சடுதியில் தன்னை அடையாளம் மாற்றிக் கொண்டு வலைப்பதிவன் எனும் இன்னொரு அரிதாரத்தை பூசிச் சென்று கடந்தபடி இருக்கிறது.எனக்கேத் தெரியாத இன்னொரு வடிவத்தை எனக்குக் கொடுத்தபடி கடந்துபோன இக்காலத்தை மிக ஆச்சர்யத்தோடும் அதிசயத்தோடும் பார்க்கும் வழிப்போக்கனாயிருக்கிறேன்.எனக்கெப்போதுமிருந்த தனிமையை நம்பித் துவங்கிய இவ்வலைப்பதிவு நான்கு மாதங்களில் தனக்கான அடையாளத்தை இழந்தது.நட்பு என்பதின் மூலமாய் ஆட்டம் கண்ட இவ்வலைப்பதிவும் பதிவனும் இப்போதொரு மக்கள் நிரம்பிய கூட்டத்திலிருக்கிறார்கள்.இவனை நான்கு பேர்க்குத் தெரிந்திருக்கிறது. இவனைச் சிலர் படு மோசமாய் வெறுக்கிறார்கள்.மிகக் குறைந்த சிலர் நேசிக்கவும் இருக்கிறார்கள்.பயன்படுத்தத் தக்கவனாய் இருக்கிறான். குப்பைக்குச் சமானமானவனாயும் இருக்கிறான்.எதுவாய் இருக்கிறான் என்பது இன்னளவும் அவனுக்கு எட்டவில்லை.ஏகப்பட்ட குறைகளோடும் மிகச் சிறிய நிறைகளோடும் வாழும் சொற்பமானவர்களுக்குள் அவனை அடையாளப்படுத்தி விட முனையும் இன்னொரு அற்பமான முயற்சிகளிலுள் இதுவும் ஒன்று என்பதைத் தவிர சொல்ல வேறெதுவும் இல்லை அல்லது இதை அவன் ஒப்புக்கொள்கிறான்.

...............................**********......................................

நான் என் வாழ்வைக் கொண்டாடுகிறேன் / கொண்டாடுவதாய் நினைத்துக் கொள்கிறேன். நான் மிக விருப்போடு சில கொலைகள் புரிகிறேன்,நான் மிக வருத்தத்தோடு சில மகிழ்வுகளை எதிர்கொள்கிறேன்.நான் என்பதும், இது என்பதும், அது என்பதும் எனக்கெப்போதும் நிறைவையே தருகிறது.
*எந்த கதவிடுக்குகளிலும் வேட்டி நுனி சிக்கிக் கொள்ளாது கடந்து போகிறது என் காலம். எதிர் கொள்ள வருபவைகள் பற்றி ஏதொரு சிந்தனையுமில்லை.எப்போதுமே சிந்திக்கத் துணியாத என் வாழ்வு தந்திருப்பதெல்லாம் அவ்வப்போது நினைத்துக் கொள்ள சில சந்தோஷங்களையும் எப்போதும் நினைத்துக் கொள்ள சில துக்கங்களையும் தவிர்த்து வேறெதுவுமில்லை.
என்னைப் பிரிதொன்று கொல்லாதிருக்கும்வரை நான் வாழ விரும்புகிறேன்.
..................................**************.............................
இந்த வருசத்தோட ரெசுல்யூசன் என்ன அய்யனார்?
போடாங்கோஓஓஓஓஓஓஓஓ ......

நண்பர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள்....
*கல்யாண்ஜி யினுடையது

Friday, December 28, 2007

சில கனவுகளைப் பகிர்ந்துகொள்ள இயலாது



HOUSE OF SAND AND FOG (2003)


சொந்த வீடுகளைப் பற்றியதான ஏக்கங்கள் எப்போதுமிருக்கின்றன.நமது சுவாசத்தை,மகிழ்வை, துயரத்தை உள்வாங்கியபடி மெளனமாய் நிற்கும் வீடுகளின் அழகு அளப்பறியாதது.வாழ்வின் அலைவுகளின் நீட்டிப்பில், தேவைகளின் கழுத்து நெறிப்பில் வீடுகளைத் துறப்பது காட்டிலும் உயிர்வாழ்தலின் நிமித்தமாய் சொந்த வீடுகளைத் துறப்பது மிகவும் குரூரமானது. பணமோ, வசதிகளோ, சொந்த வீட்டினைக் காட்டிலும் அழகான வீடுகளோ எப்போதுமொரு இயந்திரத்தனத்தை இயல்பிலேயே கொண்டிருக்கிறது. இன்னொரு உயிராய் நம்முடன் எப்போதும் வசித்திருக்கிறது நாம் வாழ்ந்த வீடுகள்.


ஒரு வீட்டை மய்யமாக கொண்டு நிகழும் துயர சம்பவங்களை இத் திரைப்படத்தில் பதிவித்திருக்கிறார்கள்.யார் மீது குற்றம் சொல்வதென தெரியாமல் எல்லார் மீதும் பரிதாபம் கவிழ நிகழ்ந்த துயரங்களிலிருந்து மீள் பதிவித்துக் கொள்ள முடியாமல் இறுகிப் போய் கிடந்தது என் நேற்றய மாலை.


ஈரான் தேசத்திலிருந்து உயிர் வாழ்தலின் நிமித்தமாய் Colonel Massoud Amir Behrani (பென் கிங்ஸ்லி) யும் அவரது மனைவியும் மகனும் அமெரிக்கா வருகிறார்கள்.ஈரானின் கர்னலாக இருந்த பென்கிங்ஸ்லி அரசியல் காரணுங்களாயும் தன் மகனின் உயிர் மீதிருந்த பயத்திலும் இங்கே வசிக்க வருகிறார். ஏலத்திற்கு விடுவதாய் அறிவிப்பு செய்திருந்த ஒரு வீட்டினை வாங்கி பராமரிப்பு வேலைகள் செய்து அதிக விலைக்கு விற்பதன் மூலம் தன் மகனின் படிப்பு செலவை சமாளித்து விட முடியும் எனத் திட்டமிட்டு ஒரு வீட்டை வாங்குகிறார். அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கு (Jennifer connelly)தன் வீடு ஏலம் போகும் காலை வரை அவ்விதயம் தெரியாமல் போய்விடுகிறது.வரிகளை ஒழுங்காய் செலுத்தவில்லை என்பதற்காக அவ்வீட்டினை ஏலத்திற்கு விட நிர்பந்திக்கிறது அரசாங்கம்.அவளை காலி செய்ய வரும் போலிஸ் Lester (Ron Eldard)அவள் நிலைகுலைந்து போயிருப்பதை அறிந்து உதவி செய்ய முன்வருகிறான்.தனது வீட்டை இழக்க விரும்பாத அப்பெண், அவளுக்கு உதவி செய்ய வரும் போலிஸ், பென்கிங்ஸ்லி இவர்கள் மூவருக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டம்தான் படம்.எவ்வித பூச்சுமில்லாமல் வெகு நேர்த்தியான திரைக்கதை விழிகளை இமைக்க மறக்கச் செய்து விடுகிறது.


எனக்குப் பிடித்த காதாபாத்திரம் பென்கிங்க்ஸ்லியின் மனைவி(Shohreh Aghdashloo-) அன்பும் தாய்மையும் மிகுந்து வழியும் அற்புதமான பெண். கலாட்டா செய்ய வருபவளின் காலில் பொத்துக்கொண்ட ஆணிக்காக மருந்திடும் காட்சியில்,தன் மகனைக் கொன்று விடுவார்கள் அதனால்தான் இங்கே பதுங்கியிருக்கிறோம் என் கதறும் காட்சியில்,தன் கணவனால் இப்பெண்ணுக்கு என்ன பிரச்சினையோ என அவனிடம் முறையிடும் காட்சியில், தற்கொலைக்கு முயன்றவளுக்கு பரிவுகளோடு தேநீர் தரும் காட்சியில் என திரையில் வரும் அத்தனைக் காட்சியிலும் மிகவும் நெகிழ வைக்கும் பாத்திரப்படைப்பு.தன் மகன் இறந்துபோன செய்தி கேட்டு உறைந்து போய் கதறும் காட்சியில் என்னமோ செய்து விடுகிறார். மிக மெதுவான ஆங்கிலம், மிக மிக சாந்தமான முகம் என அப்பாத்திரத்திற்கு மிகச் சரியான தேர்வு.


பென் கிங்க்ஸ்லி ஒரு அற்புத நடிகன்.மிக இறுக்கமான முகத்தோடும், தன்னால் ஒரு பெண் பாதிக்கப்படுகிறாளே என சங்கடப்படுவதிலும், தன் மனைவியை அறைந்துப் பின் தவித்துப்போவதிலும், தன் பதின்ம வயதுப் பையனிடம் மிகப் பரிவாய் தன் நிலையை விளக்குவதிலும், தற்கொலைக்கு முயன்றவளை காப்பாற்றி மிகத் தொய்வோடு அமர்ந்திருப்பதிலும், எனக்கு என் மகன் மட்டும் போதும் வேறெதுவும் வேண்டாம் என தரையில் தலை குத்தி கதறுவதிலும், இறுதியில் தன் இராணுவ உடையோடு முகத்தில் ஒரு பிளாஸ்டிக் காகிதத்தை இறுக்கமாய் மூடிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதிலும் தானொரு மிகச் சிறந்த நடிகன் என்பதை நிரூபிக்கிறார்.



விழித்தெழுந்த காலையில் தன் வீடு தனக்குச் சொந்தமானதில்லை உடனே காலி செய்யவேண்டும் என்ற நிர்பந்தத்தில் நிலை குலைந்து போகும் kathy (jeniffer conelley) எங்கு போவதென தெரியாமல் குழம்பிப் போகிறாள். வேலையும் இல்லை, கையில் பணமுமில்லை, தங்க இடமுமில்லை, இந்நிலையில் தான் வாழ்ந்த வீட்டை விட்டுப் போகவும் முடியாது வீட்டையே சுற்றிச் சுற்றி வருகிறாள்.உதவி செய்ய வந்தவனின் சொந்த பிரச்சினைகள், தன் வீட்டை எடுத்துக்கொண்டவர்களின் பரிதாப நிலை என எல்லா சிக்கல்களிலும் சிக்கித் தவிக்கும் பெண்ணாக நடித்திருக்கிறார்.a beautiful mind படத்திற்கான சிறந்த நடிப்பிற்காக தேர்வு செய்யப்பட்ட ஜெனிபர் தன் செறிவான நடிப்பால் மிளிர்கிறார்.தன்னால் தன்னைச் சுற்றி உள்ளவர் எல்லாரும் பாதிக்கப்படும் குற்றவுணர்வில் சிக்கித் தவிப்பது, இரண்டு முறை தற்கொலைக்கு முயல்வது, கடையிலும் தற்கொலை செய்து கொள்ள முயசித்துத் தோற்றுப்போவதென துயரத்தின் சாயல்களை தேக்கி வைத்திருக்கும் கதாபாத்திரம்.


மனிதாபிமானத்தின் நீட்சியாய் ஜெனிபரின் மேல் காதல் வயப்படும் போலிசாக lester.தன் மனைவி மற்றும் குழந்தைகளால் ஏற்படும் மன உளைச்சல், மேலதிகரிகளின் மூலமாய் வரும் பிரச்சினைகள், அத்தோடு ஜெனிபர் மீதான காதல் என பிரச்சினைகளின் இன்னொரு உருவமாய் இப்பாத்திரம்.பலவந்தத்தின் மூலமாக அந்த வீட்டை ஜெனிபருக்கு பெற்றுத் தர முயலும்போது மனம் பதறிப்போகிறது.எதிர்பாராத விதமாய் பென்கிங்ஸ்லி மகன் இறப்பதற்கு காரணமாகிறான்.



தற்கொலைக்கு முயன்று தோற்று ஜெனிபர் தன் வீடு திரும்புகிறாள்.மகன் இறந்த துக்கம் தாளாது படுக்கையில் தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடக்கும் பென்கிங்ஸ்லி மற்றும் அவர் மனைவியின் உடல்களைப் பார்த்துக் கதறி செய்வதறியாது அவர்களுக்கு இடையில் கால்கள் குறுக்கிப் படுத்துக்கொள்வதோடு படம் முடிகிறது.



Andre Dubus III ஆல் எழுதப்பட்ட நாவலை அதே பெயரில் திரைப்படமாக்கியிருக்கிறார் Vadim Perelman. இவர் தற்போது Ayn Rand ன் நாவலான Atlas Shrugged ஐ திரைப்படமாக்கிக் கொண்டிருக்கிறார் .இத் திரைப்படம் மூன்று விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டது எந்த அரசியல் காரணங்களுக்காக தேர்வு செய்யப்படவில்லை என விளங்கவில்லை :)



*வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஜோதிகா குறிப்பிடுவது இத்திரைப்படத்தைத்தான்.

Wednesday, December 26, 2007

பிரசவக் குறிப்புகள் அல்லது தாய்மை பற்றிய சிலாகிப்புகள்





கிழிக்கப்பட்ட வயிறு ஒட்டப்பட்டதோ, வெறும் மயக்கம்தானா? வேறேதும் நிகழ்ந்துவிட்டதா எனத் துணையான நண்பன் துடித்துக்கொண்டிருந்ததோ, செவிலிகள் எல்லாம் சேர்ந்து அள்ளிக்கொண்டுவந்து அறையில் போட்டதோ, விடாத குளிரில் வெடவெடத்த உடம்பை அவர்கள் என் உள்ளங்கால் தேய்த்து உஷ்ணப்படுத்தியதோ எதுவும் அறியாத உணர்வற்ற நிலையில் கட்டிலில் கிடந்திருக்கிறேன். எல்லாம் சரியே என சோதித்த மருத்துவர், வலிவந்த நொடிமுதல் என் இன்னொரு தாயாக உடனிருந்த களைப்பில் "காலையில் பார்க்கிறேன். அவள் சரியாக இருக்கிறாள்" எனச் சொல்லி நகர்ந்து நள்ளிரவுதாண்டிய இருளில் மருத்துவமனை வாசல்வரை போயிருப்பார். உடல் அசையாத மயக்கத்திலும் என் உதடுகள் அசைத்துக் கேட்கிறேன் "where is Bonnie?"
"அவர் ஓய்வுகொள்ளப் போயிருக்கிறார், காலை மறுபடியும் உன்னைப் பார்ப்பார், உறங்கு" என்று உடனிருந்தவர்களின் குரல்கள் காதுகளை எட்டவில்லை. தொடர்ந்து அதே பல்லவியை அழுத்தமாகவும் பாடத் தொடங்குகையில் பயந்துபோன செவிலிகள் ஓடிப்போய்ப் பிடித்தே வந்துவிட்டார்கள் தன் வாகனம் கிளப்பிக்கொண்டிருந்த மருத்துவரை. "Yes dear I am here" அது Bonnie யின் குரலாக வந்ததும் மூளைக்கு எட்டுகிறது. "Thank you doctor, you saved me and my child" அவ்வளவுதான்.

செலவநாயகியின் ஒரு கிறுக்கியாக வாழும் ஆசையிலிருந்து...


பனி படர்ந்த முன்னிரவுகளில் ஆளரவம் அடங்கிய வீதிகளில் சற்றே முன்புறம் சரிந்த வயிறுமாய் தலையைச் சுற்றிக் கட்டப்பட்ட ஸ்கார்ப் மற்றும் முழுக்கை ஸ்வெட்டர் அணிந்த மனைவியை நடைக்கு கூட்டிப்போகும் ஆண்களைப் பார்க்கும் போது ஒரு மலர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இன்றைய வாழ்வில் பதினோரு மணி வாக்கில் பூங்காவிற்கு செல்ல நேரிடுகையில் இது போன்ற ஒரு சோடியையாவது பார்க்க நேர்கிறது.ஓசூரில் டைட்டன் குடியிருப்பில் வாழ்ந்த சமயங்களில் பெரும்பாலான இரவுகளில் இதுபோன்ற தம்பதியினரின் அந்நியோன்யத்தை, கிசுகிசுப்பை,குழைவை எதிர்கொள்ள நேர்ந்ததுண்டு.வறண்ட இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டு உண்மையான நேசத்திற்கான நம்பிக்கைகளை மீள்பதிவித்துக்கொள்வேன்.

பிரசவிப்பது என்பது உயிர்களுக்கான இயல்பு இதில் சிலாகிக்க என்ன இருக்கிறது? என்பது போன்ற வறட்டுத்தனமான அணுகுமுறைகளோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை.தாய்மை என்ற ஒரே தனித்தன்மைக்காக மட்டும் ஒரு பெண் எத்தனை அபத்தமானவளாக இருந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம் எனத்தான் தோன்றுகிறது. பிரசவங்களை எதிர்கொள்ளும் நேரங்களில் ஏற்படும் பயம் மிக அடியாழத்திலிருந்து எழுவதை அதன் வெளிப்பாட்டிலிருந்து புரிந்து கொள்ள முடியும். என் பால்யங்களில் கன்றிலிருந்து வளர்க்கப்பட்ட பசுமாடு அதன் கன்றை ஈன்றெடுத்த தருணம்தான் என்னுடைய முதல் பயம், முதல் படபடப்பு, முதல் ஆச்சர்யமுமாய் இருந்தது.ஈன்ற சில நிமிடங்களில் அதன் துள்ளல்களில் கிடைத்த பரவசம் மிக மங்கலாய் நினைவிலிருக்கும் அற்புத நிகழ்வு.

கன்றினுக்குப் பிறகு என் சகோதரியின் பிரசவம்தான் என்னை பயப்படவும் நெகிழவும் வைத்தது.ஒரு நண்பகலில் அரசுமருத்துவமனை வாசலில் இதற்கும் அதற்குமாய் நடந்தபடி புதிதாய் பழக்கமாயிருந்த சிகெரெட்டினை மட்டும் துணைக்கழத்தபடி மனதிற்குள் இல்லாத கடவுள்களையெல்லாம் வேண்டிக்கொண்டிருந்தேன்.எனக்குள்ளிருந்த பெண் தன்மைகள் எட்டிப்பார்த்த தருணங்களில் அதுவும் ஒன்று.அவளுக்கு திருமணமான பின்னரும் அபத்தமாய் எதையாவது உளறிக்கொட்டுவது போல் எனக்குப் பட்டால் சத்தமாய் குரலெழுப்பியோ அல்லது மிக மோசமாய் கடிந்துகொண்டோ என் அறிவுஜீவித்தனத்தை நிரூபித்துக்கொள்வேன். ஒன்றிரண்டு முறை அறைந்தும் இருக்கிறேன்.அவளின் பிரசவத்திற்கு பின்பு எத்தனை முட்டாள்தனமாய் அவள் நடந்துகொண்டாலும் அறைய கைகள் எழுவதே இல்லை பின்பு அது கடிந்து பேசுவதையும் நிறுத்திவிட வழிவகுத்தது.பிரசவ தருணங்களில் சாலையில் சிகெரெட் புகைத்துக்கொண்டிருந்த எனக்கே இத்தனை மாற்றங்கள் வந்தது ஆச்சர்யத்தைத் தந்தது. கணவர்கள் பிரசவ தருணங்களில் பிரசவ அறைக்குள் மனைவியுடன் இருப்பது மிகவும் தேவையான அவசியமான ஒன்று.பெண்ணை உடல்ரீதியிலான புரிதல்களோடு அணுகுவதன் மூலமே எப்போதுமே மாற்ற இயலாத நம் அடிப்படைத் தன்மைகளை சிறிதளவேணும் குறைக்க இயலும்.

80 திலிருந்து 90 வரைக்குமான தமிழ் திரைப்படங்கள் பெண்களைக் குறிவைத்தே எடுக்கப்பட்டது. தொலைக்காட்சி பெண்களை வீடுகளில் விழுங்குவதற்கு முன்பு வரை பகல் காட்சி முழுக்க திரையரங்குகள் பெண்களைத்தான் நிரப்பி வைத்திருந்தது.அப்போதைய வியாபாரிகள் பெண்களை ஈர்க்க புகுத்திய யுக்திகளில் பிரசவமும் அலைக்கழிப்பும் முதன்மையானது.உணர்ச்சி பொங்கும் தாலி வசனங்கள், இறுதிக் காட்சி தீ மிதிப்பு வகையறாக்களைக் காட்டிலும் இந்த யுக்தி அதிகக் கண்ணீரை வர வைத்தது. கதாநாயகனின் தங்கை, அக்கா, மனைவி களுக்கு பெரும்பாலும் பெரும் மழை கொட்டும் நள்ளிரவுகளில்தான் பிரசவ வலியெடுக்கும் சொல்லிவைத்தார்போல வில்லன்கள் நிறைமாத கார்ப்பிணியை தரையிலிழுத்துப்போவர் பாதி வழியிலேயே குழந்தை பிறக்கும் அந்த பெண் கால்கள் இடையில் இரத்தம் சிந்தி இறந்து போவாள்.பெரும்பாலான திரைப்படங்கள் இவ்வாறுதான் எடுக்கப்பட்டன.இவைகள் பிரசவம் குறித்த பயங்களை ஏற்படுத்தியிருந்தது. பார்வையாளனான எனக்கே இத்தனை பயங்களெனில் பிரசவிக்கும் பெண்ணுக்கு எத்தகைய மன உளைச்சலை இத் திரைப்படங்கள் ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்பதை யோசிக்கும்போது இவ்வியாபாரிகளின் குரூர முகம் கண்முன் வந்து பெரும் வெறுப்பை உண்டாக்குகிறது.

நண்பனின் தொணதொணப்புகளுக்கு செவி சாய்த்து ஒரு ஆயுள்காப்பிட்டுக்காக வேண்டி மருத்துவ பரிசோதனைக்கு சென்றிருந்தேன்.அந்த மருத்துவமனை கிருஷ்ணகிரியின் மய்யத்தில் இருந்தது.கிருஷ்ணகிரி மிகவும் பின் தங்கிய ஏழை மக்களால் நிறைந்தது நான் சென்றிருந்த காலை வேளை ஏகப்பட்ட நோயாளிகளால் நிறைக்கப்பட்டு நிற்க இடமின்றி ஒண்டிக்கொண்டிருந்தேன்.முந்தய தினத்தில் இரவுப் பணி முடிந்து வந்திருந்ததால் சோர்வு அப்பட்டமாய் கண்ணில் மிதந்தது.தேகத்தில் எலும்பைத் தவிர கொஞ்சம் சதைகளையும் கொண்டிருந்த பெண்ணொருத்தி தன் பருத்த வயிற்றுடன் மாடிப்படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தாள்.கையில் குளுகோஸ் பாட்டிலோடு அப்பெண்ணைத் தாங்கியபடி ஒரு செவிலியும் குறுகலான படிக்கட்டுளில் இறங்கி வந்துகொண்டிருந்தாள் இந்த நிலையில் இப்பெண்ணை இம்மாதிரி கொண்டு வருகிறார்களே எனப் பதைத்து பார்த்துக்கொண்டிருந்தபோதே அப்பெண் சறுக்கி விழுந்தாள். சின்னதாய் ஒரு கூச்சல் அப்பெண்ணின் பனிக்குடம் உடைந்ததை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சியில் படபடப்பாய் வந்தது நின்றுகொண்டிருந்த நான் மயங்கி விழுந்தேன்.அந்த பெண்ணை ஒரு மருத்துவர் கூட்டமும் என்னை சில மருத்துவர்களும் சூழ்ந்து கொண்டனர் கண் விழித்துப் பார்த்தபோது என்னை ஒரு பெஞ்சில் கிடத்தியிருந்தனர் வெட்கமும் அவமானமும் ஒரு சேர பிடுங்கித் தின்றது.சுற்றி இருந்த வலிய நெஞ்சினர் கொல் லென சிரித்தனர்.அந்த மருத்துவர் இந்த மாதிரி இருக்கியே எனக் கடிந்து கொண்டார்.அதற்குப் பின் மருத்துவமனைக்கு செல்வதையே நான் பெரும்பாலும் தவிர்த்து வந்தேன்.

இந்த பயங்களுக்கு யார் காரணம் எனத் தெரியவில்லை.நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம்மை சிதைத்துக்கொண்டிருக்கிறது வணிக ரீதியிலான வெகுசன ரசனைகள்.

Tuesday, December 25, 2007

பெண்களின் நகரம்- கட்டற்ற சுதந்திரத்தின் களி நடனம்


Città delle donne, La (1980) aka The City of Women

"It's the viewpoint of a man who has always looked at woman as a total mystery, not only as the object of his fantasies, but as mother, wife, lady in the drawing room, whore in the bedroom, Dante's Beatrice, his own personal muse, brothel entice--and more. He projects onto her all of his own fantasies."

- felini
ஆறு மாதங்களுக்கு முன்பு என்னால் இத் திரைப்படத்தை 30 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாய் பார்க்கமுடியவில்லை.(அப்பட்டமான ஆணியவாதியான என்னால் முப்பது நிமிடங்கள் பார்க்க முடிந்ததே அதிசயம்தான்)எந்த ஒரு ஆணாலும் இப்படத்தை எவ்வித அதிர்வுகளும் இல்லாது பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. கிட்டத்தட்ட இருபத்தேழு வருடங்களுக்கு முன்னால் இத்திரைப்படம் அபூர்வ புனைவுத் தன்மையோடு எடுக்கப்பட்டிருப்பது பெரும்
ஆச்சர்யத்தைத் தந்தது ஃபெலினியின் மற்றத் திரைப்படங்களான Nights of Caribea, La strada போன்றவற்றில் காணமுடியாத புதிய பரிமாணம் மேலும்
பரவசத்தைக் கூட்டியது.

ஒரு ரயில் பயணத்திலிருந்து துவங்குகிறது படம் Snàporaz தனது இருக்கைக்கு எதிரில் மிகக் கவச்சியான ஒரு பெண்ணை சந்திக்கிறான். அவளது கிளர்வில் மயங்கி பின் தொடர்ந்து கழிவறையில் முத்தமிடுகிறான்.ஏற்கனவே இரண்டு ஆண்களால் என்னைத் திருப்தி படுத்த முடியவில்லை உன்னால் முடியுமா? எனக்கேட்டு அவனை மேலும் கிளர்த்துகிறாள். அவன் கலவிக்கு தயாராகும் சமயத்தில் ரயில் நிற்கிறது. அவள் அவனை விலக்கிவிட்டு இறங்கிப்போகிறாள்.அவளிடமிருந்து விடுபடமுடியாது அதே இறக்கத்திலிறங்கி அவளைத் தொடர்ந்து போகிறான் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த காட்டினை நோக்கிச்செல்கிறாள் விடாது பின் தொடர்ந்து முத்தமிடும் அவனை போக்குக் காட்டி மறைந்து விடுகிறாள்.சிறு அலைவிற்குப் பிறகு ஒரு ஓட்டலை காண்கிரான் அதில் உள்நுழைபவன் ஆச்சர்யத்தில் உறைந்து போகிறான் அந்த ஓட்டல் முழுக்க ஏகப்பட்ட பெண்கள்.முற்றிலும் பெண்களாலான ஒரு உலகம்.

கும்பல் கும்பலாய் எங்கு பார்த்தாலும் பெண்கள் ஓரிடத்தில் கூட்டமாய் குடித்து சிரித்து மகிழ்கிறார்கள்.இன்னொரு கும்பல் ஆண் குறிகளை
கேலிச்சித்திரங்களாக வரைந்து அவற்றைத் திரையிட்டு கிண்டலடித்து மகிழ்கிறார்கள். இன்னொரு பெண் ஆவேசமாய் பேசுகிறாள்.ஆண்கள் தங்களை அடிமையாக்கிய துயரங்களை கோபம் கொப்பளிக்க உரக்க கத்துகிறாள் .காமத்திற்கு ஆணை நம்பியிருக்கத் தேவையில்ல சுய புணர்வும் ஓரினப் புணர்வும் மட்டுமே பெண் விடுதலைக்கான ஒரே வழி என சத்தமாய் பிரசங்கிக்கிறார்கள்.இல்லத்தரசிகள் எவ்வாறு குடும்பம் என்ற கட்டமைப்பில் சிதைக்கப்படுகிறார்கள் குடும்பப் பொறுப்புகள், குழந்தைகள், ஆணின் காமம், உணவு, என எல்லாவற்றையும் ஒரு குடும்பப் பெண் எப்படி சமாளிக்கிறாள் என்பதை கேலி நாடகங்களாக நடத்திக் காண்பிக்கிறார்கள்.ஆறு ஆண்களை மணந்த பெண்ணொருத்தியை அழைத்து வந்து அவளின் பிரசங்கத்தைக் கேட்கிறார்கள். கைத் தட்டி மகிழ்கிறார்கள். ஆறு ஆண்களையும் மேடையிலேற்றி மகிழ்ந்து போகிறார்கள்.

இதையெல்லாம் திகிலோடு பார்த்துக்கொண்டிருக்கிற நம் ஹீரோ வை அலேக் காக கடத்தி பனிச்சறுக்கு மைதானத்தின் நடுவில் விட்டு குறுக்கும் நெடுக்குமாய் மிக விரைவாய் சறுக்கி விளையாடி பயமுறுத்துகிறார்கள். பயந்து போய் கத்துபவனை பின்னாலிருந்து மிக வேகமாய் தள்ளி விடுகிறாள் ஒருத்தி, படிக்கட்டுகளில் தடுமாறி கீழ்தளத்திற்கு சென்றடையும் அவனை வயதான பெண்ணொருத்தி காப்பாற்றுவதாய் கூட்டிக்கொண்டு போய் வயலின் நடுவில் வைத்து கலவிக்கு பலவந்தப் படுத்துகிறாள் அலறியடிக்கும் அவனை அப்பெண்ணின் தாயார் வந்து
காப்பாற்றுகிறாள். ஒரு சிறுமியிடம் ஒப்படைத்து அருகிலிருக்கும் ரயில் நிலையத்தில் சேர்த்துவிடும்படி பணிக்கிறாள்.

பாதி வழியிலேயே மித மிஞ்சிய போதையில் இளம் பெண்களின் கூட்டம் இரண்டு கார்களில் சுற்றிக்கொண்டிருக்கிறது ஒருவழியாய் காரில் ஏறும் அவனை மிக வேகமாய் செலுத்தி பயமுறுத்துகிறார்கள் கீழிரங்கி ஓடுபவனை தொடர்ந்தும் விரட்டியுமாய் மகிழ்கிறார்கள். ஒரு புதரில் மறையும் அவனை
காப்பாற்றுகிறான் இன்னொரு ஆண்.(Dr. Xavier Katzone) கையில் துப்பாக்கி கொண்டு அந்த பெண்களை விரட்டியடிக்கிறான் எதற்கும் பயப்பட வேண்டாம் எனச் சொல்லி தன் வீட்டில் தங்க வைக்கிறான்.

Dr. Xavier Katzone ன் பிறந்த நாள் விழாவில் அத்தனை பெண்களும் கலந்துகொள்கிறார்கள். மதுவினால் நிறைகிறது கூடம்.அந்த
கேளிக்கைகளுக்கு நடுவில் Snàporaz ன் மனைவியும் இருக்கிறாள்.அவளைப் பார்த்து அதிர்ச்சியடைபவன் அவளை திரும்பிப்போக பணிக்கிறான் அவனது
அதிகாரங்களை அடக்குமுறைகளை மிகுந்த ஆவேசத்துடன் எதிர்க்கிறாள் அவனைப் பழி வாங்கப் போவதாய் சொல்லியபடி குடிக்க ஆரம்பிக்கிறாள்.இரண்டு பெண்கள் அவனை திருப்தி படுத்த வருகிறார்கள். நடனமாடுகிறார்கள் கலவிக்கு முயற்சித்து தோற்று நீளமான சறுக்குப் பாதையில் சறுக்க ஆரம்பிக்கிறான் வளைந்து நெளிந்து செல்லும் அதில் மிக வேகமாய் சறுக்கியபடி எங்கிருந்தோ கீழே விழுகிறான்.வழி முழுக்க பெண்கள் அவனை பயமுறுத்துகிறார்கள்.வெறும் பெண்கள் மட்டுமே நிறைந்த பெரிய விளையாட்டுத் திடலில் இவனை ராட்சத பலூனொன்றில் கட்டி மேலே அனுப்புகிறார்கள் சிறிது தூரம் சென்றதும் அப்பலூனை குறிபார்த்து சுடுகிறாலொருத்தி தவறி ஒரு தளத்தில் விழுபவனை அந்த வயதான பெண் வரவேற்கிறாள்.

இப்போது ரயில் மீண்டும் வருகிறது snaporaz ஆரம்பக் காட்சியில் அமர்ந்திருப்பது போன்று அமர்ந்திருக்கிறான் எதிரில் அவனது மனைவி அமர்ந்திருக்கிறாள்.நடந்ததெல்லாம் கனவு என மகிழ ஆரம்பிக்கும்போது அந்த கேபினில் நுழையும் மூன்று பெண்கள் அவன் கனவில் வந்தவர்களாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறான்.அப்பெண்கள் கள்ளமாய் சிரித்துக்கொள்வதோடு படம் முடிகிறது.

ஏகப்பட்ட அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்திய இத்திரைப்படத்தை சர்ரியலிச சினிமாவில் வகைப்படுத்துகிரார்கள்.இங்க்மர் பெர்க்மெனும் ஃபெலினியும் இணைந்து இத்திரைப்படத்தை உருவாக்க நினைத்திருக்கிறார்கள்.ஆனால் எங்கெடுப்பது என்ற சிக்கல் பிரதானமாய் இருந்திருக்கிறது.ஃபெலினி இத்தாலியிலும் பெர்க்மென் ஸ்வீடனிலும் எடுக்கவேண்டும் என பிடிவாதமாய் இருந்ததால் சில வருடங்களுக்குப் பிறகு ஃபெலினி தனியாகவே இத்தாலியில் எடுத்தார்.பெண்ணின் யுகாந்திர அடக்குமுறைகளை மிக ஆக்ரோஷத்துடன் உடைக்க முனைந்த முயற்சி எனத்தான் எனக்குத் தோன்றியது.ஆனால் எதிர் பெண்ணியவாதம் எனவும் ஃபெலினி விமர்சிக்கப்பட்டார்.பெண்கள் இத்திரைப்படத்தை தனியாய் பார்த்து எல்லாரையும் பழிவாங்கிய திருப்தியடைந்துகொள்ளலாம்.பலவீனமான இதயம் உள்ள ஆண்கள் இத்திரைப்படத்தை தவிர்ப்பதே நல்லது.

கேள்விகள் பெருகித் தீர்வுகள் கிடைத்த மாலையில் எழுதப்பட்ட சில சிதறல்கள்

உன் அலட்சியங்களை எதிலாவது வைத்துப் பூட்டிவிடலாமா?
உன் சிந்தனைகளை என்ன செய்வது?
உன் கிண்டல்களை
எள்ளல்களை
புரிதல்களை
எல்லாம் தெரிந்து வைத்திருப்பதை
ஒற்றைச் சொல்லில் முழுசாய் நிராகரிப்பதை
என்ன செய்வது?
என்ன செய்வது?
என்ன?
என்ன?
குழம்பிப்போய்
தெளிந்து
பின் குழம்பி
உன்னை வசமாக்க
புலம்ப
காத்திருக்க
தவிக்க
உன்னுலகத்தைச் சிறைப்படுத்த
குறுகலாக்க
பைத்தியமாக்க
காதலைப் பிரயோகிக்கலாமென்றிருக்கிறேன்
என்னுடைய முலைகள் கவர்ச்சியானது
மேலும் எனக்கு அழகான உதடுகளும் உண்டு
நீ என்ன பெரிய மசிராடா?

............................******.........................................

யாரிடம் நிரூபிக்கலாம்?
எவரை பயமுறுத்தலாம்?
எவர் தலையில் ஏறி உட்காரலாம்?
யாரை நசுக்கலாம்?
குத்திக் கிழிக்க மென்மையான சில உடல்கள் எதிர்படுமா?
முளைக்கத் தொடங்கிய கொம்பின் நமைச்சல்கள்
மிகவும் அருவெருப்பானது

...............................******.........................................

எப்படியாவது என்னை அடையாளங் கண்டு கொள்கிறாய்
அல்லது
உனக்கு முன்னர்
நானும் என்னை அடையாளங் கண்டு கொள்கிறேன்
இது இதற்காகத்தான்
இது இதனால்தான்
பல்லிளிப்பின் பின்னாலிருப்பது எல்லாமும்
ஆடை விலக்கிப் பார்க்கும் குறி /யோனி நமைச்சலின்
நாகரீக வடிவமன்றி
வேறெதுவும் இல்லை

...............................******.........................................

ரகசியங்களைத் தெரியும்படி புதைத்துவைப்பதின்
பின்னாலிருக்கும் குறுகுறுப்புகள்
தெரியாமலில்லை
மறுத்தலின்
ஒளிதலின்
புரியாமலிருப்பது போன்ற பாவனைகளின்
அரசியலெல்லாம்
கண்டுபிடித்தலின்
தேடுவதின்
கிறங்குவதின்
மீதிருக்கும் வேட்கைகள்தான் என்பது
எனக்கும் தெரியும்
இருப்பினும் புரியாமலிருப்பது போன்ற நாடகத்தினை
இருவரும் சேர்ந்தே நடத்துவோம்
குறைந்தபட்சம்
கலவிக்கு முன்னாலான
சில காட்சி இன்பங்கள்
பாழாய்ப் போன உடலுக்கு
மிகவும் இன்றியமையாதது

............................******.........................................

கருப்புக்குழந்தையொன்று
உன்னை முத்தமிடுவதை
தொலைபேசியில் கேட்டேன்
இன்றென் மாலையை யாரோ
ஆசிர்வதித்திருக்கக்கூடும்

............................******.........................................

Sunday, December 23, 2007

பூமியிலிருக்கும் குட்டி நட்சத்திரங்கள்



இந்த இருள் எத்தனை பயத்தை தருகிறது என்பதை
நான் ஒருபோதும் உன்னிடம் சொன்னதில்லை அம்மா!
நான் உன் மீது எத்தனை கவனமாயிருக்கிறேன் என்பதையும்
ஒருபோதும் சொன்னதில்லை அம்மா!
ஆனால் உனக்கு தெரியும் இல்லையா அம்மா?
உனக்கு எல்லாமே தெரியுமே என் அம்மா!

என்னை இந்த கூட்டத்தில் தனியே விட்டுப் போகாதே
வீட்டுக்குத் திரும்பும் என் வழியை மறந்துவிடுவேன்
நினைத்துக்கூட பார்க்க இயலாத
தொலைதூரங்களுக்கு என்னை அனுப்பாதே
நான் அந்த அளவு மோசமா அம்மா?
நான் அந்த அளவு மோசமா என் அம்மா?
(....Tujhe sab hai pata,meri maa )

குழந்தைகளின் உலகம்தான் எத்தனை அற்புதமானது! அவர்களின் விழிகளில் தென்படும் அத்தனைக் காட்சிகளுமே ஆச்சர்யங்கள்தாம். பிரபஞ்சத்தை முழுக்க உள்வாங்கியபடி இருத்தலியத்தின் பிரதான வடிவமாய் திகழ்வது குழந்தையாகத்தான் இருக்கமுடியும்.அறிவு,புத்திசாலித்தனம் போன்ற மாபெரும் அரக்கர்கள் வசமாகும்வரை குழந்தமைகளின் உலகம் கடவுள்தன்மைக்கு மிக நெருக்கமானது.

இஷானுக்கு எதிலும் பயமில்லை.எல்லாமும் ஆச்சர்யங்கள்தாம்.பனித் துண்டங்களை செய்பவனின் நேர்த்தி, தண்ணீரை அண்ணாந்து குடிப்பவனின் திறமை,ரெயில்வே கிராதிகளில் ஓ வென இரைச்சலோடு விளையாடும் குழந்தைகள் இவைகளை விழிகள் விரியப் பார்த்துக்கொண்டிருப்பான். பாடங்கள்,மதிப்பெண்கள் மற்றும் பிறரால் ஒழுங்கு என சொல்லித் தருபவைகளைப் பற்றி எந்தக் கவலையுமில்லை. அவனது உலகத்தை மீன் குஞ்சுகளாலும், நாய்களாலும், பறவைகளாலும், வண்ணத்துப் பூச்சிகளாலும், வண்ணங்களாலும் நிரப்பி வைத்திருக்கிறான். இஷான் தன் கவனத்தை செலுத்திப் படிக்க முனைந்தாலும் எழுத்துக்கள் நடனமிடத் துவங்குகின்றன. அதன் நடன அசைவுகளில் அவனால் சரியாக எழுத்துக்களைத் தடம் காண முடியாமல் போய்விடுகிறது.மேலும் அவனால் ஒரே சமயத்தில் மூன்று நான்கு கட்டளைகளை செயல்படுத்த முடியாது. தமிழ் புத்தகத்தில் நாற்பதாவது பக்கத்தில் நான்காவது பத்தியில் மூனறாவது வரியைப் படி என்றால் தவித்துப்போவான்.தன்னை நோக்கி விரைந்து வரும் பந்தினைக்கூட அனுமானித்துக் கையில் பிடிக்க முடியாது. (இதற்கு dyslexia என்று பெயர்)


அவனது பிரச்சினைகளை அடையாளம் காண முடியாத பெற்றோரும் ஆசிரியர்களும் அவனை முட்டாள் என்றும் பிடிவாதக்காரனென்றும் பழிக்கிறார்கள்.இந்த மிக வேகமான உலகத்தில் இத்தகைய குணங்களோடு ஒரு மனிதனால் எப்படி உயிர் வாழ முடியுமென பயப்படுகிறார்கள்.முடிவில் பலவந்தமாய் அவனை ஒரு விடுதியுடன் கூடிய பள்ளியில் சேர்க்கிறார்கள்.ஒன்பது வயதில் ஒரு சிறுவன் தனித்து விடப்படுவது மிகக்குரூரமானது. எதிர்காலம், படிப்பு, என்னும் பெயர்களில் குழந்தைகளை விடுதிகளில் அடைப்பதை விட மிகப்பெரிய வன்செயல் எதுவும் இருக்க முடியாது.


சிறுவர்களை மய்யமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் extreme close-up shot கள் நேரடியாக மனதைத் தைக்க வல்லது. இந்தப் படத்தில் பெரும்பான்மைக் காட்சிகள் மிகவும் நெருக்கமாக எடுக்கப்பட்டுள்ளது இஷானாக நடித்திருக்கும் சிறுவன் தன்னுடைய முக பாவணைகளின் மூலம் அவனது உலகத்திற்கு நம்மைக் கொண்டு போய் விடுகிறான்.அந்த முன்பற்களும், அழுக்கான ஆடைகளும், ஆச்சர்யமான பார்வைகளும், எதற்கும் பயப்படாத அந்த பாவனைகளும், மிகச் சிறப்பாய் வந்துள்ளது.தாயை விட்டுப் பிரிந்தபின் ஏற்படும் பயத்தையும், நெருக்கமற்ற சூழல் ஏற்படுத்தும் கசப்பையும் மிக அழகாய் வெளிப்படுத்தியுள்ளான்.


இடைவேளையில் வரும் அமீர்கான் அந்தச் சிறுவனை அவனது உலகிலிருந்து மீட்டெடுக்க பெரும் சிரத்தை எடுக்கிறார்.அவனுக்குள்ளிருக்கும் அழகான ஓவியனை அடையாளம் கண்டுபிடித்து அதை எல்லாருக்கும் உணரவைக்கிறார்.கற்பித்தல்களில் புதியமுறைகள், தாமஸ் ஆல்வா எடிசனிலிருந்து அபிஷேக் பச்சன் வரை இந்த dyslexia நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்தாம் என்பன போன்ற மேற்கோள்கள் அவனை அவனது உலகிலிருந்து பெயர்த்தெடுக்க உதவுகிறது. அவனுக்காக தன் அத்தனை ஆற்றல்களையும் செலவிடுவதன் மூலமாக அவனின் துயரமான நம்பிக்கையற்ற உலகிலிலிருந்து வெளிக்கொண்டு வருகிறார்.


மிகக் குறைந்த கதாபாத்திரங்கள், கச்சிதமான நடிப்பு, உறுத்தலில்லாத இசை, அழகான ஒளிப்பதிவென படம் மிக நேர்த்தியாய் வந்திருக்கிறது.மிக மோசமான ஆசிரியர்களாக சித்தரிக்கப்படுபவர்கள் அமீர்கான் வந்ததும் தடாலடியாய் மாறிவிடுவது சற்று செயற்கையாய் இருந்தாலும் ஒரு வித நெகிழ்வுத் தன்மைக்கு பார்வையாளர்களை கொண்டு சென்றுவிடுவதால் லாஜிக்குகளை யோசிக்க முடியவில்லை.கடைசி பதினைந்து நிமிடங்களில் உள்ளிருந்து மிகக் கனமாய் ஏதோ ஒன்று பெருகி தொண்டையை அடைத்துக் கொள்கிறது.அதற்கு பெயர்தான் நல்ல சினிமாவாக இருக்க முடியும்.


அமீர்கானுக்கு இறுக்கமான ஒரு Hug.....

Tuesday, December 18, 2007

வலைப்பதிவு விருதுகள் - வடிகட்டின அபத்தம்

மயிர்கள் சிரைக்காத என் நிர்வாணம்
அழிக்கப்படாத காடுகளைப் போல கம்பீரம் வீசுகிறது...
சுகிர்தராணி
சங்கமம் என்றொரு புதிய பக்கம் சிறந்த வலைப்பூக்களைத் தேர்வு செய்ய வந்திருக்கிறது 17 பேர் அடங்கிய நடுவர் குழுவின் பெயர்களையும் வெளியிட்டிருக்கிறது.போட்டிகளை அதிகமாக்குதல், பிளவுகளைக் கொண்டுவருதல், வியாபாரமாக்குதல் போன்ற அதிகார மய்யங்களின் துவக்கங்கள் இவ்விதமான பாகுபாடுகளின் அடிப்படையிலிருந்துதான் துவங்குகிறது. மோகன்தாஸ் கேட்பது போன்று சிறந்தது தாழ்ந்தது என்பதை சொல்ல இவர்கள் யார்?எதை நிரூபிக்க அல்லது யாரிடம் பெயர் வாங்க இங்கே எழுதுகிறோம்?ஆயிரம் பதிவர்களில் ஐந்து பதிவர்கள்தான் சிறந்தவர் என்பதை நிரூபிப்பதன் மூலமாக இவர்கள் அடையப்போவது என்ன?முதலில் வலைப்பூ என்பதென்ன?என்றெல்லாம் கோபமான சிந்தனைகள் எழ இந்த அறிவிப்புகள் தூண்டுதலாய் இருக்கிறது.

வலைப்பூ என்பது நமக்கு ஒரு வடிகால் நம் சிந்தனைகளை எழுத்துக்களாக்கிப் பார்க்குமொரு இடம். இதில் என் சிந்தனை சிறந்ததென்றோ அடுத்தவர் சிந்தனை தாழ்ந்தது என்றோ எதுவுமில்லை.புதியவர்களை ஊக்குவிப்பது என்ற பெயரில் கிளம்பி வந்திருக்கும் இந்த பூதம் 5 ஐ திருப்தி படுத்திவிட்டு 995ஐ நோகடிக்கும் ஒரு முயற்சியே.வலைப்பூ போட்டிகளுக்கு அப்பாற்பட்டது. இது போன்ற முயற்சிகள் எழுதிக்கொண்டிருப்பவர்களை ஊக்குவிக்கும் என எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?

நம் சூழலில் விருதுகள் என்பது இதுவரை ஒற்றைப்பரிமாணத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளது. எது சிறந்தது என்பதை தீர்மானிக்கும் தகுதி நம் சூழலில் எவருக்கும் இல்லை அல்லது அப்படித் தகுதியுள்ளோர் எவரும் முன்வருவதில்லை. இலக்கியம், கலை, சினிமா, அரசியல் என எவ்வித வடிவமாயிருந்தாலும் அதில் சிறந்தவர் என நாம் எப்போது ஒத்துக்கொள்ளுகிறோமென்றால் சம்பந்தபட்டவர் இறந்தபிறகுதான்.இதற்கான அடிப்படைக் காரணம் தேர்வுக் குழு என குழுமும் ஒருசிலரின் குறுகிய பார்வையே.இந்த ஒரு சில மாகாத்மாக்கள் கூடி அவரவர் அறிவுக்கு ஏற்றார்போல சிலதை அடையாளப்படுத்திவிடுவதே நம் வழக்கமாய் இருந்துவருகிறது.இதற்கான உதாரணங்களை நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காதென்றே நினைக்கிறேன்.(வைரமுத்துவிலிருந்து பேரரசு வரைக்குமாய் இதுவரை தரப்பட்ட விருதுகளில் எங்கிருக்கிறது செறிவு?)

சங்கமம் என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் நுட்பங்களை புரிந்துகொள்ளமுடியாமல் இல்லை.பிரதிகளின் ஊடாய் இழையோடியிருக்கும் அரசியலின் தடம் பற்ற துணிபவன் இன்றைய வாசகன். எனவே சங்கமத்திற்கு பின்னாலிருக்கும் திரட்டியினுக்கான தன்முனைப்புகளை இனம் காண்பது எளிதே. தமிழ்வெளி போன்றோ மாற்று போன்றோ தமிழில் திரட்டிகள் பெருகுவது வரவேற்கத்தக்க ஒன்றே புதிய திரட்டி என்கிற நேரடி அறிமுகத்தோடு வருவதற்கு பதிலாய் இதுபோன்ற வலைப்பதிவு விளையாட்டுக்களில் ஈடுபடுவது தேவையற்றது.

பரிந்துரைகள் மூலமாக தேர்வு செய்யப்போகிறோம் என்றோ.. புதுவித திட்டங்களை அறிமுகப்படுத்தி பதிவர்களிடமிருந்து பதிவர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்றோ உங்களின் விளக்கங்கள் இருக்குமானால் அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பதிவர்களை காயப்படுத்தும் ஒரு முயற்சியே.
என்னளவில் இந்த ஆண்டின் சிறந்த வலைப்பூ என்னுடையது. என்னைப்போன்றே இந்த வருடம் எழுத வந்திருக்கும் மற்றவர்களுக்கும் அவரவர் வலைப்பூ சிறந்தது.இதில் நீங்கள் வந்து சொல்ல எதுவுமேயில்லை.ஊக்குவிக்க விரும்பினால் போட்டிகளை நடத்துங்கள் பரிசுகளை கொடுங்கள் விருப்பமுள்ளவர் கலந்துகொண்டு வெற்றிபெறட்டும் தகுதிகளை வளர்த்துக்கொள்ளட்டும்.வெகுசன அரசியல் சாக்கடைகள் எதுவும் கலந்திடாது வலைப்பூக்கள் அதனதன் சுதந்திரத்தில் சந்தோஷமாய் இயங்குகிறது உங்களின் சொந்த நலனுக்காக/அடையாளத்துக்காக இதில் வேட்டு வைக்காதீர்கள் நண்பர்களே...

கடைசிக் குறிப்பாய் என் வலைப்பூவினை யாரும் பரிந்துரைக்க வேண்டாம் என நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

Monday, December 17, 2007

துபாய் திரைப்பட விழா - நானும் பத்மப்ரியாவும் ஆசிப்பும் அடூரும்


என்னளவில் இந்தத் திரைப்படம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.ஒரு புதிய முயற்சி மற்றும் நேர்த்தியான சினிமா என்கிற அடிப்படையில் படத்தை அணுகலாம்.ஆனால் அடூர் கோபாலகிருஷ்ணன் என்கிற பெயர் ஏற்படுத்தியிருக்கும் hype ற்கான தனித்தன்மைகள் எதுவும் இத்திரைப்படத்தில் இல்லை.அடூரிடம் பார்வையாளர் அரங்கிலிருந்து கேட்கப் பட்ட முதல் கேள்வி.. இது ஆண்களுக்கெதிரான இன்னொரு பெண்ணிய படமா? என்பதுதான் அடூர் இதை மறுத்தார் இது பெண்ணியம் பேசும் படமில்லை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலான மக்களின் வாழ்வு வெவ்வேறு சிறுகதைகளாக பதிவிக்கப் பட்டிருக்கிறதே தவிர இது ஆண்களுக்கெதிரான படமில்லை என்றார்.
சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன ஏன் மீண்டும் மீண்டும் பெண்ணையே சுற்றி வருகிறது சினிமா? என்கிற கேள்விக்கு தனக்கு தெரிந்த நன்கு பழக்கமான ஒன்றை பதிவிக்கவே தான் விரும்புவதாகவும் மற்ற பிரச்சினைகளைப் பேச வேறு இயக்குநகள் இருக்கிறார்கள் எனவும் எனக்கு உண்மைகளைத் திரைப்படமாக்க மிகவும் பிடித்திருக்கிறது எனவும் பதில் சொன்னார்.இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிகம் படித்தவர்கள் இருக்கிறார்கள்.. இருப்பினும் இன்னும் பெண்களுக்கெதிரான கொடுமைகள் நடக்கிறதே..இந்த நிலை எப்போது மாறும் என நினைக்கிறீர்கள்? எனும் இன்னொரு கேள்விக்கு இந்த கதைகள் 1935க்கும் 1945க்கும் இடையிலானது அப்போது கல்வித்தரம் மேம்பட்டிருக்கவில்லை.இப்போது நகரம் சார்ந்த பெண்களின் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன எனினும் இந்த கிரமப்புறம் சார்ந்த பெண்களின் வாழ்வில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை அந்த நிலை மாறலாம ஆனால் அந்த மாற்றங்கள் மிக மெதுவாகத்தான் நடக்கும் என்றார்.அத்தோடு மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கேரள மாநிலம் பெண்களுக்கு மேம்பட்டதாய்த்தான் இருக்கிறது பெரும்பாலான பெற்றோர்கள் ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை இருவருக்கும் சம கல்வியைத்தான் தருகிறார்கள் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இருக்கிறது என்றெல்லாம் கேரள சிறப்புகளை சொன்னார்.




தன் திரைப்படம் வெளியிடப்பட்ட திரைப்பட விழாக்கள் அதற்கு கிடைத்த பெரும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக சிலாகித்துக் கொண்டார்.அத்துடன் தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க நடிகை,நடிகர்கள் எப்போதுமே அதிக ஆர்வம் காட்டுவார்கள் இத்தனைக்கும் நான் எத்தனை சம்பளம் என்றெல்லாம் கேட்பதில்லை சொல்லப்போனால் சொற்பமான சம்பளம்தான் ஆனால் எப்படியும் தந்துவிடுவேன் என்றார்.
சிலரின் சிலாகிப்புகளுக்குப் பிறகு வெளியில் வந்த அவரை நானும் ஆசிப்பும் ஓரம்கட்டினோம்.நான் இத்திரைப்படத்தில் பயன்படுத்தப் பட்டிருந்த குறியீடுகளைப் பற்றி (symbolic images) கேட்டேன். இத்திரைப்படத்தில் குறியீடுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றார்.கடைசிக் குறும்படத்தில் நந்திதாவினுடைய தாயின் மரணத்தின்போது ஒரு காய்ந்த தென்னை ஓலை கீழே விழுவது போல காண்பிக்கப்படுமே அதென்ன? என்றேன் அதற்கு அவர் தென்னை மரம் மனிதர்களோடு மிகவும் நெருக்கமானது குடும்பத்தில் மூத்தவர் இறக்கும்போது காய்ந்த தென்னை ஓலை கீழே விழுவது போல காண்பிப்பது வழக்கம் என்றார் (இதைத்தானே குறியீடு என்றேன் ..என்னவோ)The spinster குறும்படம் முடியும்போது உலை கொதிப்பது போன்ற சப்தம் வரும் இது நந்திதாவின் மனதை பதிவிக்கிறதா என்றதிற்கும் இல்லை என மறுத்துவிட்டார்.அந்த சமயத்தில் அந்த இசை இருந்தது இசையை திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பதோடு என்னால் ஒத்துப்போக முடிந்தது.




பத்மப்ரியாவை ஆசிப் முற்றுகை இட்டார். சேரனின் தவமாய் தவமிருந்து பேச்சைத் துவங்க வசதியாய் இருந்தது. படம் மிக லெந்தியாச்சே என்றும் விருதுக்காக தனியாய் எடுக்கப்பட்டதிலும் நாந்தான் நடித்தேன் என்றுமாய் சொல்லிக்கொண்டிருந்தார்.குட்டியான கருப்புநிற ஆடையில் பத்மப்ரியா அழகாய்த்தான் இருந்தார். நடிக்கத் தெரியவில்லை.. ஆம்பளை மாதிரி இருக்கு... என்றெல்லாம் கமெண்டின அந்த இயக்குநரை ரெண்டு மிதி மிதிக்கலாம் என மனசில் கறுவிக்கொண்ட்டேன்.shall i take a picture with u priya? என்றதற்கு சந்தோஷமாய் இசைந்து என்னுடனும் ஆசிப்புடனும் படமெடுத்துக்கொண்டார். அடுத்தபடமான சந்தோஷ் சிவனின் Before the Rain க்காக ஆயத்தமானோம்.சொற்ப நேரமே இருந்ததால் ஸ்டார்பக்ஸில் லஞ்சை முடித்துக்கொண்டு இருக்கைகளுக்கு திரும்பினோம்.

Sunday, December 16, 2007

துபாய் திரைப்பட விழா - நாலு பெண்கள்

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் பத்மப்பிரியா,கீது மோகந்தாஸ்,மஞ்சு பிள்ளை,நந்திதா தாஸ் மற்றும் காவ்யா மாதவன் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப்படம் தகழி சிவசங்கரன் பிள்ளையின் நான்கு சிறுகதைகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.நான்கு தனித்தனி குறும்படங்களான இவற்றை ஒரு படமாக வெளியிட்டிருப்பது மிகவும் சிறப்பு.நான் லீனியர் அல்லது பன்முக பரிமாணம் போன்ற நோக்கிலும் இத்திரைப்படத்தை அணுகலாம்.திரையீடலுக்கு அடூரும் பத்மப்ரியாவும் வந்திருந்தது எதிர்பாராத மகிழ்ச்சி.திரைப்படம் துவங்குவதற்கு முன் சிறு அறிமுகம் ஒன்றைத் தந்த அடூர் படத்திற்கு பின்பு விரிவாகப் பேசலாம் என்றார்.1935 லிருந்து 1945 வரைக்குமான காலகட்டத்தில் கேரளாவின் கிராமத்து வாழ்வியலைப் பற்றியும் மக்களைப் பற்றியும் பேசும் படமாக இது இருக்கும் என்ற அறிமுகத்தோடு நிறுத்திக் கொண்டார்.
முதல் சிறுகதை The Prostitute சாலையோர வேசியாக நடித்திருப்பது பத்மப்ரியா படபடக்கும் விழிகளும் அழுக்கான ஆடைகளுமாய் முழுமையான கதாபாத்திரமாக மாற்றப்பட்டிருந்தார்.வேசி என தலைப்பிடபட்டிருந்தாலும் இந்த திரைப்படம் பேசுவது விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை.சாலையோரங்களில் வசிக்கும் மனிதர்கள் சமூகத்தின் எவ்வித அடையாளமுமில்லாமல் போவதை, சமூக ஒழுங்குகள் காப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் இம்மனிதர்களுக்கு எவ்வித அலைக்கழிப்பைத் தருகிறது என்பதை மிக இயல்பாய் பதிவித்திருக்கிறார்.நீள வசனங்கள் இல்லாதது பிரச்சார நெடியை குறைக்கிறது அதே சமயம் அழுத்தமான காட்சியமைப்புகள் இல்லாதது படத்திற்கு ஒரு வித நாடகத் தன்மையைத் தந்துவிடுகிறது.குறைவான வசனங்கள், மேல் சட்டையில்லாத ஆண்கள், மிக மெதுவான காட்சியமைப்புகள் என அடூரின் 'ட்ரேட் மார்க்' திரைப்படமாக இருந்தாலும் மிக முக்கியமான விதயம் ஒன்றை பதிவு செய்திருப்பதால் இந்தக் குறும்படம் எனக்குப் பிடித்திருந்தது.பத்மப்ரியாவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் இன்னொரு சாலையோர மனிதனிடம் தன் பழைய விதயங்களை நோண்டக்கூடாது என்கிற எச்சரிக்கையோடு சேர்ந்து வாழ்கிறாள்.அவன் மூட்டை சுமக்கும் வேலைக்கும் இவள் கல் சுமக்கும் வேலைக்குமாய் போகிறார்கள்.இரவில் சாலையோரங்களில் படுத்து உறங்குகிறார்கள்.ஒரு நாள் போலிசார் தூங்கிக் கொண்டிருந்த இவர்களை பொது இடத்தில் விபச்சாரம் செய்ததாக சொல்லி கைது செய்கிறார்கள்.நீதிபதியிடம் தாங்கள் கணவன் மனைவி என்பதை மட்டும்தான் அவர்களால் திரும்பத் திரும்பச் சொல்லமுடிகிறது.எவ்வித நிரூபணங்களும் அவர்களிடம் இல்லை. அவள் வேசி என்பதற்கு நிறைய சாட்சிகள் இருப்பதால் அவர்கள் இருவருக்கும் தண்டனை கிடைப்பதோடு படம் முடிகிறது.இருவருக்குமே அவரவர் தந்தையின் பெயர் தெரியவில்லை. இருவருக்குமே தாங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இருவருக்குமே வசிப்பதற்கு வீடெதுவும் இல்லை.ஆதலால் அவர்கள் குற்றவாளிகள்.

இரண்டாவது சிறுகதை The Virgin கீது மோகன் தாஸ் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.சாப்பாட்டு ராமனுக்கு வாழ்க்கைப்படும் இளம் பெண் ஒருத்தியின் துயரங்களையும் சுற்றுப் புற மனிதர்கள் ஒரு பெண்ணின் மீது அவதூறுகளைப் பரப்புவதால் அவளுக்கு ஏற்படும் சிக்கல்களையும் சொல்லியிருக்கிறார்கள்.எவ்வளவு சாப்பாடு போட்டாலும் தின்கிற ஒருத்தனுக்கு வாழ்க்கைப்படும் கீது கச்சிதமாய் நடித்திருக்கிறார்.எவ்வித கெட்ட பழக்கங்களும் இல்லாத ஒருவன் திருமணமான முதல் நாளிலேயே அவளை வீட்டில் விட்டுவிட்டு கடைக்குப் போய்விடுகிறான்.இரண்டவது சினிமாவிற்கு போய்விட்டு தாமதமாக வந்து குளிக்கப்போகிறான் உட்கார்ந்தபடியே அவளின் முதலிரவு முடிந்து போய்விடுகிறது.மிக அசூசையாய் தின்பதும் மிக இறுக்கமான முகத்தோடும் திரும்பிப்படுத்து தூங்குவதுமாய் இருப்பவனோடு ஒரு நாளை கழித்த பின்பு வெளியில் சொல்ல முடியாத வேதனைகளோடு தாய் வீட்டிற்கு விருந்துக்கு வருகிறாள்.அவள் கணவன் நான்கு நாட்கள் நன்றாய் வயிறு புடைக்கத் தின்கிறான் தூங்குகிறான் ஒரு நாள் பின்பு வந்து அழைத்துப் போவதாய் கிளம்பிப் போய்விடுகிறான்.அவன் திரும்பி வருவதே இல்லை.அதற்குள் சுற்றுப் புற மனிதர்கள் இவள் தப்பானவள் அதனால்தான் அவன் வந்து அழைத்துப் போகவில்லை என அவதூறு பரப்புகிறார்கள்.அவன் அவளை விவாகரத்து செய்யப் போவதாய் ஒருவன் கீது வின் பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறான்.கீது அதற்கு அவசியமே இல்லை ஏனெனில் எனக்கு கல்யாணமே ஆகவில்லை என சொல்வதோடு இத்திரைப்படம் முடிகிறது.இதில் சொல்லப்பட்ட்வைகளை விட சொல்லப்படாதவைகளே அதிகம்.சொல்லப்படாதவைகள் மிக அதிகமாய் இருந்ததினால் இந்தக் கதை ஒட்டாமலே போய்விடுகிறது.

மூன்றாவது கதை The Housewife ஆறுமுறை கருத்தரித்து இரண்டு குழந்தைகள் பெற்று அவை சில மாதங்களிலேயே இறந்து போன துக்கத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் மஞ்சு பிள்ளையின் பக்கத்து வீட்டு மனிதராக முகேஷ் தமிழ்நாட்டில் வசிக்கும் அவர் அவ்வப்போது தன் தாயை வந்து பார்த்து விட்டுப் போவார்.அந்த கிராம மனிதர்களை மறந்துவிடாமல் எல்லாரிடமும் மிக அன்பாக பழகுவதாகவும் ஏழைகளுக்கு உதவும் தயாள மனம் படைத்தவர் என்றுமாய் சொல்லி சிலாகிக்கிறார்கள் மஞ்சு பிள்ளையு ம் அவள் வேலைக்காரியும்.இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே முகேஷ் அவளைப் பார்க்க வருகிரான்.இருவரும் பழங்கதைகளை பேசி மகிழ்கிறார்கள் அவளின் நிலையறிந்த முகேஷ் அவளைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறான்.அவள்மீது எதுவும் குறையில்லை எனவும் அவள் கணவன் மீதுதான் குறையிருக்கலாம் என்று சொல்லியுமாய் அவளை மாற்ற முயற்சிக்கிறான்.குழந்தையில்லாததால் குதிரைக்காரனை பயன்படுத்திக்கொண்ட ராணியின் கதையை பூடகமாக சொல்கிறான் மறுநாள் மதியம் வருவதாய் சொல்லிவிட்டு செல்கிறான்.வழக்கத்திற்கு மாறாய் அன்று சீக்கிரம் வீடு திரும்பும் அவள் கணவன் முரளி அவளோடு உறவு கொள்கிறான்.அடுத்த நாள் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வரும் முகேஷை திருப்பி அனுப்பி விடுகிறாள் தனக்கு குழந்தைகளே இல்லாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் நேர்மையாக வாழ விரும்புவதாய் சொல்கிறாள்.இந்தக் குறும்படம் மிகக் க்ச்சிதமாய் இருந்தது தேவையற்றவைகள் எதுவுமில்லாது ஒரு குடும்பப் பெண்ணின் அலைவுகளை மிக நுட்பமாய் பதிவு செய்திருப்பது சிறப்பு.


நான்காவது கதை The Spinster நந்திதாசை பெண்பார்க்க வருபவன் அவளின் தங்கையான காவ்யா மாதவனை மணந்து கொள்கிறான்.எத்தனை முயற்சித்தும் நந்திதாவிற்கு திருமணம் கைகூடாமலே போய்விடுகிறது அவளுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வதாய் சொல்லும் அவளின் சகோதரனும் வெகுநாட்கள் காத்திருக்க முடியாமல் திருமணம் செய்து கொள்கிறான்.ஒரே ஆதரவான தாயும் இறந்துபோகவே அவளின் தங்கையான காவ்யா மாதவனோடு வசிக்கப் போகிறாள்.காவ்யாவின் இரண்டு குழந்தைகளும் நந்திதாவின் மீது அன்பாயிருந்தாலும் காவ்யாவிற்கு பிடிக்காமல் போகவே அங்கிருந்து திரும்பி பழைய வீட்டிலெயே தனியாக வசிக்க ஆரம்பிக்கிறாள்.ஒரு நாள் ஏதோ ஒரு அசைவில் வழியில் சந்திக்கும் ஒருவனை இரவு வரச்சொல்லி அவன் வந்து கதவைத் தட்டும்போது மறுத்துவிட்டு அவனை திருப்பி அனுப்பிவிடுகிறாள்.கடைசி வரை திருமணமாகாத ஒரு பெண்ணின் துயரங்களை பேசும் படம் இது நந்தாதாசுக்கு நடிக்க சொல்லித் தர வேண்டுமா. மிக அழகான மிகைப்படுத்தாத நடிப்பு.

திரைப்படம் முடிந்த பின்பான உரையாடல்கள் மற்றும் அடூரின் பகிர்வுகள் அடுத்த பதிவில்

துபாய் திரைப்பட விழா:திரைப்படங்களுக்கு முன்பு சில புகைப்படங்கள்

நான்காவது சர்வதேசத் திரைப்படவிழா துபாயில் கடந்த 9ம்தேதியிலிருந்து துவங்கி 16ம் தேதி வரை நடைபெற்றது.திரைப்படங்கள் திரையிடப்படும் இடங்களில் ஒன்றான மதினாத் செளக் மிக அழகான,வசதியான இடம். துபாயின் மிக செழிப்பான இடங்களில் ஒன்று.ஏழு நட்சத்திர ஓட்டல் மற்றும் ஜீமைரா ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு நடுவில் இருக்கும் இந்த மதினாத் செளக் பாரம்பரிய அராபிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டது. முழுதும் மரத்தினாலான பழைய கட்டிடங்களின் சாயலை ஒட்டிய மிக அழகான மால்.திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஆசிப்பும் நானும் மாலை சுற்றி வந்தோம் அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.காமிரா எதுவும் கொண்டு போகாததால் கைவசமிருந்த மொபைல்களிலே எடுத்தோம்.


















Friday, December 14, 2007

பில்லா - தலைல ராக்ஸ்



நாவல்களைத் திரைப்படமாக்குவதில் தமிழ்சூழலில் இருக்கும் சிக்கலை விட ரீமேக் திரைப்படஙகளுக்கு அதிக சிக்கல்கள்.ஏற்கனவே தெரிந்த ஒரு கதையை வெற்றிபெற்ற ஒரு திரைப்படத்தை மீண்டும் பார்ப்பதென்பது அலுப்புத் தட்டக்கூடிய ஒன்றே. இதை நேர்த்தியான திரைக்கதையின் மூலமே சரிகட்ட இயலும்.விறுவிறுப்பான காட்சியமைப்புகள், பொருத்தமான நடிகர்கள்,உடை,இடத்தேர்வு போன்றவைகள் ரீமேக திரைப்படங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற திரைப்படங்கள் மூலம் நேர்த்தியான வெகுசன இயக்குநர் என்ற அடையாளத்தைப் பெற்றிருந்த விஷ்ணுவர்த்தன் பில்லாவின் சொதப்பலான திரைக்கதையில் மற்றும் மேற்சொன்ன முக்கியமான விதயங்களில் சறுக்கியிருக்கிறார். திரைக்கதையில் ட்விஸ்ட் என மெனக்கெட்டிருப்பதற்கு பதிலாய் திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம்.

மலேசியாவின் தரமான ஓட்டல்கள் மற்றும் வசதியான அடிப்படைக் கட்டமைப்புகள் படத்திற்கான ரிச்னெஸை தானாகவேத் தருகிறது.ஓட்டல்களைத் தேர்வு செய்திருந்ததில் காட்டியிருந்த சிரத்தையை படமாக்கப் பட்ட இடத்திலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்.ஏறக்குறைய எல்லாக் காட்சிகளிலும் அந்த இரட்டைக்கோபுர கட்டிடம் வருவது மகா எரிச்சல்.தமிழனுக்கு கூலிங்க் க்ளாஸ் மேல் அப்படியென்ன காதலோ? சண்டைக் காட்சிகளில், நள்ளிரவில் என எல்லா நேரங்களிலும் எல்லா கதா பாத்திரங்களும் கூலிங்க் க்ளாசோடு வலம் வருகிறார்கள்.அஜித்தோடு நமீதா, நயன், துணைநடிகர்கள் என எல்லாரும் கூலிங்க் க்ளாஸ் சகிதமாகத்தான் திரிகிறார்கள்.ப்ளாக் சூட், கச்சிதமான உடல் என அட்டகாசமாய் பொருந்தும் அஜித் பாடிலேங்க்வேஜ் வாய்ஸ் மாடுலேஷன் என எல்லாவற்றிலும் கோட்டை விட்டிருப்பது பரிதாபம். மனிதருக்கு இன்னும் நேரம் சரியாகவில்லையோ? ஒரு படம் ஓடினால் நான்கு படம் சறுக்குகிறது.

தமிழனின் காம வடிகாலான நமீதாவை நயன் ஓரம் கட்ட முயற்சித்திருக்கிறார்.சிம்புவின் மீதிருக்கும் கோபத்தை அவர் இப்படிக் காட்டியிருக்க வேண்டாம்.பில்லா கதாநாயகிக்களுக்கான படம் இல்லையெனினும் ஸ்ரீப்ரியாவின் கவர்ச்சியான முகமும் பெரிய்ய கண்களும் பழைய பில்லாவிற்கு ஒரு கிக்கைத் தந்தது.அந்த கிக் இதில் இல்லை.நயன் இறுக்கமான பனியனோடு கன் னை தூக்கிக் கொண்டு நடந்து போகும்போது இந்த அம்மணிக்கு ஏன்யா இதெல்லாம் என ஆசிப் முனகினார். நயன் அட்டகாசமாய் நடித்திருந்த ராப்பகல் திரைப்படம் கண்முன் வந்து போனதோ என்னமோ.சந்தானம் வந்துபோகும் ஓரிரு இடங்களில் சிரிப்பை வரவைக்கிறார்.சிரிப்பு போலிசாக வரும் பிரபு எல்லாக் காட்சிகளிலும் சிரிப்பை வரவைக்கிறார் (பிரபு டிஎஸ்பி யா? என்ன கொடும சார்!)

மை நேம் ஈஸ் பில்லா பாடலை கொன்றிருப்பதுதான் உச்சகட்ட எரிச்சல்.எஸ்பிபியின் அழுத்தமான குரலும் நடுநடுவில் சிரிப்புகளோடு கம்பீரமாய் பாடப்பட்டிருந்த அப்பாடலை ஏதோ ஒரு மென்மையானப் பாடகர் பாடிக் கேட்பதை விட கொடுமை வேறெதுவும் இருக்கமுடியாது.எஸ்பிபியின் கால்ஷீட் கிடைக்கவில்லையா என்ன? படத்தில் ஈர்க்கும்படியாய் எதுவுமே இல்லையா? என்பதற்கு படம் மிக நீளமாய் இல்லை என்கிற நிறையைத்தான் என்னால் சொல்லமுடிகிறது.படம் முடிந்து வெளியில் வந்தபிறகு படம் பார்த்ததிற்கான எந்த உணர்வும் இல்லை.

ஆரம்பக் காட்சிகளில் ஏஏஏ!! தல ராக்ஸ் என விசிலடித்தும் கைத்தட்டியுமாய் மகிழ்ந்த ஆசிப் படம் ஆரம்பித்த 10 நிமிடங்களில் அசாதாரண மெளனத்திற்கு போய்விட்டார்.ஒரு விடுமுறை நாளின் மாலை வேளையை வீணாக்கியதற்கு பரிகாரமாய் துபாய் திரைப்பட விழாவில் ஞாயிற்றுக்கிழமை திரையிடப்படும் அடூரின் நாலு பெண்கள் திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை ஆசிப் வாங்கித் தந்துவிட்டார்.சந்தோஷ் சிவனின் ஆங்கிலப் படம் ஒன்றுக்கும் போவதாய் திட்டமிட்டிருக்கிறோம்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அஜித்...

Thursday, December 13, 2007

இந்த இரண்டு கவிதைகளுக்குமான தொடர்பை புரிந்து கொள்ள முடிகிறதா?

அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய்
இன்றும் ஒரு துயரத்தை சொல்ல வந்தவளை
ஏற்கனவே வெளித் தள்ளி கதவை சாத்தியாயிற்று
மீதமிருக்கும்
இந்த நாய்குட்டிகளின் முனகல்கள் நடுநிசியைக் குலைக்கிறது
பேசாமல் கழுத்தினை திருகிப் போட்டுவிடலாம்
மழையில் ஒண்ட வரும் பூனைக்குட்டியை
காலினால் ஒரு எத்து விடலாம்
யாருமற்ற மோனவெளியிலிருந்தபடி
எவரும் எழுதிடாத ஒரு கவிதையை
இந்த மழை நாளின் இரவிற்குள் எழுதிவிட வேண்டும்..


..............00000000000000000....................

என் வீதிகள் மிக விசாலமானது
மிக மிகத் துப்புரவானது
குருடர்
பிச்சைக்கார சிறார்
வயோதிகன்
சாலையோரத் தொழு நோயாளி
திருடர்
என எவருமில்லை இங்கே..
குளிரூட்டப்பட்ட சிற்றுந்திலமர்ந்தபடி
எங்கிருந்தோ பிடுங்கிவந்து நடப்பட்ட மரங்களையும்
தார்ச்சாலைகளுக்கு நடுவில் பூக்க வைக்கப்பட்டிருக்கும்
பூச்செடிகளையும் இரசித்தபடி
துவங்கும் என் விடியல்கள்
அதே கிரமத்தில் எவ்வித மாறுதலுமில்லாமல்
முடியும் மாலைகள்
நாளைய தேதிக்கான பயங்களோ
பதட்டங்களோ
திட்டமிடல்களோ
முடிக்கப்படவேண்டியவைகளோ
முடியாதவைகளோ எதுவுமில்லை
நாளை நேற்றைய தினத்தை போன்ற
இன்னொரு நாள்தான்

நானொரு பயங்கரமான உலகத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....

Sunday, December 9, 2007

உண்மைகளைப் பேசுதல்,கண்டறிதல் மற்றும் எழுதுதல்

பேசுதல்

ராஜேசு க்கு என் மேல தனிப்பட்ட பிரியம்
எங்க எப்ப எப்படி கூப்டாலும் ஒடனே வர
மச்சான் நாச்சி மாதிரி எவனாலும் முடியாது
எல்லோரோடயும் சட் னு பழக
பாலா மாதிரி எவனும் இல்ல
எதுன்னாலும் சிவா முன்னால வந்து நிப்பான்
செந்தில் மாதிரி குடிக்க எவனுமில்ல
பழநி மாதிரி அக்கறையா இருக்க
ஒருத்தனாலயும் முடியாது
பல்லன் மாதிரி எவனாலையும்
பசங்கள கவனிக்க முடியாது
கிறுக்கன் மாதிரி கிறுக்கன் ஒலகத்தில எவனுமில்ல
பசங்களுக்கு
என் கூட குடிக்கிறா மாதிரி வருமா?

கண்டறிதல்

இன்றைய மாலையை மதுவினால் குளிப்பாட்ட
நாள்முழுக்க குற்ற உணர்வை நிரப்பி வைத்தாயிற்று
நாளைய மாலைக்கு ஒரு ஆப்பிரிக்க திரைப்படம்
அதற்கடுத்த நாள் இருக்கவே இருக்கிறது உம்பர்த்தோ ஈகோ
வார இறுதிக்கு தியாகுவும் கதிரும் கராமா ஓட்டலும்
இருக்கும்வரை ஒன்றும் பிரச்சினையில்லை
கொஞ்சம் துயரத்தை
தனிமையை
காதலை
அழகியலை
சிலாகித்தலை
வெறுப்பை
கூட்டிக்கொண்டால்
கவிதையையோ
புனைவையோ
சினிமா கட்டுரையையோ
எழுதிவிடலாம்
இந்த வாரம் எப்போதும்போல் ஆரவாரம்தான்..

எழுதுதல்

உண்மையை எழுதமுடியுமென்கிற கணத்தில்
நானொரு முற்றுப் புள்ளியை வைத்துவிடுவேன்
(அ)
எழுத்து
உண்மையை கண்டறிதலுக்கான
இன்னொரு வழி

...........................00000000000000.....................

பேசுதல்

ஒன்றினுக்காய் உருகுவது
ஒன்றினுக்காய் இன்னொன்றினை
விட்டுக்கொடுப்பது
சதா அதே நினைப்பாய் இருப்பது
எங்கு சென்றாலும் பின் தொடர்வது
கேர் கேரிங்
வித் லவ்
பிரியங்களுடன்
முத்தங்களுடன்

இதையெல்லாம் விட ஆபாசமான சொற்கள்
வேரெதுவும் இருக்க முடியாது..

பசி கொண்ட உடல்கள்
தேவதைகளின் வடிவமேற்று
ஆளறவமற்ற இடங்களில்
சக உடல்களைத் தின்று தீர்க்கிறது..
முன் வந்து விழும் வெளிச்சத்தில்
பதறியடித்து எழுந்து
விரல்களைப் பற்றியும்
இதழ்களைப் பற்றியுமாய்
எழுதிக் குவிக்கிறது போன்ற பாவனையில்
தலை கவிழ்ந்தமர்கிறது

நீக்கமற எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறது
சுயநலத்தின் குரூரம்..
காதலை விட வன்முறையானது
வேறெதுவும் இல்லை..


கண்டறிதல்

இரண்டு பியர்களுக்கு மேல் குடித்துவிட்டால்
பழைய காதலிகளுக்குத் தொலைபேசி
இன்னும் அவள் நினைப்பிலேயே இருப்பதாய்
சத்தியம் செய்யலாம்..
உடன் வந்தவனை
ஐ லவ் யூ மச்சி
என குழறலாய் நேசத்தை சொல்லலாம்

என்ன செய்வது?
குடித்த பின்பெழும் நேசங்களை மட்டும்
சொல்லாமலிருக்க முடியவில்லை...

எழுதுதல்

எழுதப்பட்டவைக்கும் எழுதப்படபோவைக்குமான
வித்தியாசங்கள்
பெரிதாய் எதுவுமில்லையெனினும்
உங்களால் உடனே தடம்பிடித்து விடுமளவிற்காவது
உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன
ஆனால்
எழுதப்படுபவை எல்லாமே உண்மையுமல்ல
எழுதுகிறவன் எல்லாமே பொய்யனுமல்ல
எழுதுபவன் எழுதிக்கொண்டிருக்கிறான்
எழுத்து எழுதுபவனை எழுதிக் கொண்டிருக்கிறது

உலகம் இயக்கத்திலிருக்கிறது....

Saturday, December 8, 2007

நதியைப் போற்றுதலும் தூற்றுதலும்...

நதியின் விரிவுகளை
குளுமைகளை
சலனமில்லா அடி மணற் தணிவுகளை
கரையோர சலசலப்புகளை
எங்கிருந்து வருகிறது
எங்கு முடிகிறது
எனும் புதிர்களுக்கான துவக்கங்களை
ஒருபோதும் எதிர்கொண்டதில்லை
கண்ணுக்கெதிரில் மண் குழம்பலாய்
நுரைப்படலமாய்
இரு கரைகளையும் தொட்டபடி
சுழியிட்டு ஓடிக்கொண்டிருக்கிறது
ஆறு...

......... 0 ..............

நதிகள் வற்றாதாமே
அப்படியா?
நதிகள் பிரம்மாண்டமானவையாமே
அப்படியா?
நதியோர கரைகளில்
உயரமான மரங்கள்
மிக அழகாய் பூத்திருக்குமாமே
அப்படியா?
..............
எப்போதும் இருக்கிறது
நதிகளுக்கான ஏக்கம்...

......... 0 ..............

செயற்கை நீரூற்றுக்கள்
மூத்திரம் பெய்வதை
நினைவுபடுத்துகிறது
தேவை ஒரு
நதி

......... 0 ..............

நதிகள் வற்றுவதில்லை
ஆனால் சாக்கடை கலந்த நதியுண்டு
பூக்கள் மிதக்கும் நதி மிகவும் அழகானது
ஆனால் பிணங்களும் இப்போது நதியில்தான்
மிதக்கின்றன..

......... 0 ..............

நதிகளோடு புதிர்களும்
புதிரின் பின்னால் அலைவுகளும்
அலைவின் பின்னால் சோர்வுகளும்
சோர்வின் பின்னால் வெறுமைகளும்
வெறுமைக்குப் பின்
போடா ங்கோத்தா தான்!
......... 0 ..............

Wednesday, December 5, 2007

சிதைவுகளுக்குட்பட்ட மெளனங்களை மொழிபெயர்த்தல்


நீங்கள் ஒரு குழந்தையைக்
கொஞ்சிக்கொண்டிருக்கிறீர்கள்.
அதன் பனியொத்த உதடுகளை
நிமிண்டுகிறீர்கள்.
இப்போது குளித்து முடித்த
அதன் தேகத்தை தழுவுகிறீர்கள்.
கன்னததில் அழுந்த
முத்தமிடுகிறீர்கள்.
நல்லது இப்போது
நீங்கள் ஒரு கலவியை முடித்துவிட்டீர்கள்.

சுகுணா திவாகர்

நான்காம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையில் பக்கத்து வீட்டு செல்வியோடு தாயமோ பல்லாங்குழியோ விளையாடிக்கொண்டிருந்த ஒரு மதிய நேரத்தில்தான் அது நிகழ்ந்தது. செல்வியின் வீடு நீளமான, குறுகலான அமைப்பைக் கொண்டது.மாடிக்குச் செல்லும் படிக்கட்டுக்களுக்கடியில் இருந்தபடிதான் செல்வியின் தாத்தா அப்படிச் செய்தார்.குறுகுறுப்பையும் அருவெருப்பையும் சாக்லேட் கொண்டு மறக்கடிக்க செய்ய அவர் முனைந்திருந்தார்.சுருட்டு நாற்றமும் ஊத்தை வாயுமாய் அவரின் முகம் என் முகத்தில் என் உதடுகளைத் தேடி துழாவி முத்தம் மாதிரி ஒன்றை இட்ட நொடியில் எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது.அவரின் நடுங்கும் விரல்கள் என் பாவாடையினுள் துழாவியபடியிருந்த சில நிமிடங்களின் முடிவில் அவர் உடல் விநோதமாய் குலுங்கிற்று. திமிறியடித்து அவர் பிடியிலிருந்து ஓடி வந்த நான் பிறகு அந்த வீட்டுப் பக்கம் போகவில்லை.கம்பளிப் பூச்சியின் ஊறல்களைப் போலிருந்தது என்பது பழகிய ஒன்றாய் தெரிந்தாலும் எனக்கு அப்படித்தான் இருந்தது.என் அம்மாவிடம் இது பற்றி எதுவும் சொல்லவில்லை.பள்ளி முடிந்து வீடு வந்ததும் விளையாடப் போவதையும் நிறுத்திவிட்டேன்.வயதான தாத்தாக்களைப் பார்த்தாலே மெல்லிய பயம் ஒன்று எனக்கே தெரியாமல் படரத் துவங்கியது.

ஆரம்பப் பள்ளி முடிந்ததும் பக்கத்து ஊரிலிருந்த மேல் நிலைப் பள்ளிக்குப் போகத் துவங்கினேன்.மெல்ல அந்த சம்பவத்திலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தேன் எனினும் அவ்வப்போது என்னை யாரோ நசுக்குவது போன்ற கனவுகளில் பதறியடித்து விழித்துக் கொண்டிருந்தேன்.எட்டாம் வகுப்பு வரை எந்த சிக்கலும் இல்லாமல்தான் போய்க் கொண்டிருந்தது. ஒருமுறை மழையில் நனைந்து கடுமையான ஜீரம் வந்தது.என் அம்மா வீட்டுக்குப் பக்கத்திலிருந்த டாக்டரிடம் அழைத்துப் போனாள்.அந்த டாக்டருக்கு நடுத்தர வயதுதான் இருக்கும்.பரிசோதனை செய்வதாய் சொல்லியபடி ஸ்டெதாஸ்கோப்பினால என் மார்புகளில் அழுத்தினான். பின் மெல்ல இரண்டு பக்கத்திலும் அழுத்துவதும் கைகளால் உடல் முழுக்க அமுக்குவதுமாய் என்னை நெளியச் செய்தான்.உச்சமாய் அவனது விரல்கள் எனது அந்தர இடங்களைத் துழாவியபோது அவமானத்திலும், கூச்சத்திலும், வெறுப்பிலுமாய் குமைந்து போனேன்.அதற்குப் பின் எந்த காய்ச்சலுக்கும் வலிக்கும் நான் டாக்டரிடம் போகவே அஞ்சினேன்.தாத்தாக்களின் சித்திரத்தை விட டாக்டர்களின் சித்திரம் என்னை அதிக வெறுப்பில் தள்ளியது.

ஒன்பதாம் வகுப்பின் பாதியில் என் உடலைப்பற்றிய ரகசியங்கள் எனக்குப் பிடிபடத் துவங்கியது.மாதந்திரப் பிரச்சினைகளை நினைத்தாலே கோபமும் எரிச்சலுமாய் வந்தது.பள்ளி, நட்பு, வீடு, அம்மா என எல்லாவற்றையும் தாண்டின ஏதோ ஒரு வெறுமை எனக்குள் எப்போதும் இருந்து கொண்டேயிருந்தது. பத்தாம் வகுப்பில் செந்தில் பழக்கமானான்.எதிர் வீடு என்பதாலும் நன்றாய் படிப்பான் என்பதாலும் நாங்கள் இருவரும் என் வீட்டில் சேர்ந்தே படித்தோம்.என் நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டை போடுவது, லேபிள் ஒட்டி, பெயர் எழுதுவது எல்லாமே செந்தில்தான். இறுதித் தேர்வுகள் நெருங்கின சமயத்தில் இரவு வெகுநேரம் கண்விழித்துப் படிக்க வேண்டியிருந்தது. கணக்குப் பரிட்சைக்கு முந்தின நாள் இரவு எதிர்பார்க்காத சமயத்தில் என்னை கீழே தள்ளி முத்தமிட்டான்.அவன் பிடியிலிருந்து விலகி எழுவதற்குள் உயிரே போய்விட்டது.ஏனோ அவனை என்னால் அடிக்க முடியவில்லை.கீழே கிடந்த அவனை ஒரு முறை உற்றுப்பார்த்துவிட்டு வெளியே போய்விட்டேன்.

பத்தாம் வகுப்பிற்கு பிறகு எனக்கு படிப்பில் ஆர்வம் போய்விட்டது. வீட்டிலேயே இருந்துவிட்டேன்.அம்மாவிற்கு உதவியாய் எப்போதாவது வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குப் போவதோடு என் பதினமங்கள் முடிந்துபோனது.அம்மாவின் தூரத்து உறவினர் முறை வந்த சம்பத்திற்கும் எனக்கும் என் பத்தொன்பதாவது வயதில் திருமணமாகியது.சம்பத் பாண்டிச்சேரியில் ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தான்.எனக்கும் சம்பத்திற்கும் பத்து வருட வித்தியாசம்.சம்பத் முரட்டுத் தனத்தின் மொத்த உருவம்.அந்த இரவில் பைத்தியம் பிடித்த வெறிநாயினைப் போல் என் உடலினைக் குதறினான். அடிப்படையிலேயே எதிர்த்து நிற்கும் திராணி எனக்கில்லாமல் போய்விட்டதால் சம்பத்தோடு வாழ்வதில் எனக்குப் பெரிதாய் சிக்கல்கள் எதுவும் வந்துவிடவில்லை.

கிருத்திகா வந்தவுடன் என் வாழ்க்கையே மாறிப்போய் விட்டது.என் அத்தனை நாள் காத்திருப்புகளும்,தவங்களும் இவளுக்காகத்தானோ? என நினைத்துக் கொண்டேன்.என் கசப்பும் தவிப்புமான குழந்தைமைகளின் கருநிழல் என் குழந்தையின் மீது படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வதே என் முழு நேர வேலையாய் இருந்தது.மிகக் கவனமாய் அவளைப் பார்த்துக் கொண்டேன்.எல்லா விஷமக் கண்களையும் அறிந்து வைத்திருந்ததால் அவளுக்கான பசுமையான உலகத்தினுள் அவளை சுதந்திரமாய் செயல்பட வைக்க என்னால் முடிந்தது.கிருத்திகா நன்றாகப் படித்தாள். அவளின் ஒவ்வொரு அசைவையும் மிகக் கவனமுடன் நான் அணுகியதால் அவளுக்கும் எனக்குமான இடைவெளிகளில் அன்பையே நிரப்பி வைத்திருந்தோம். கல்லூரி முடிந்து பட்டத்தோடும் காதலனோடும் வந்த என் மகளை நான் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டேன்.ஒருவருடத்தில் கிருத்திகாவும் அரவிந்தும் அமெரிக்காவில் குடியேறிவிட்டார்கள்.சம்பத் போய் சேர்ந்த பிறகு இந்த தனிமை வாசம் அலுப்பாய் இருக்கிறது.செய்யப்பட எதுவுமே இல்லாத ஒரு முழுநாளை வைத்துக் கொண்டு என்ன செய்ய?

என் வீட்டின் முன்பக்கத்து இரும்பு கேட்டுகள் தளர்த்தப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்தேன்.பக்கத்து வீட்டு சந்துரு நுழைந்தான். குண்டுக் கன்னமும், குறுகுறு கண்களும், நல்ல நிறமுமாய் அழகான சிறுவன்.அவனை அருகில் கூப்பிட்டு மடியில் அமர்த்தினேன்.கன்னங்களை முத்தமிட்டேன். ஏதோ ஒன்று நிகழ்வதை என்னால் தடுக்க முடியவில்லை. அவன் மூச்சு திணறுவது தெரிந்தும் இறுகக் கட்டிக்கொண்டேன் பாட்டி! பாட்டி!! என்கிர அவன் அலறல்களைப் பொருட்படுத்தாது நிதானமாய் அவன் கால்சட்டையின் பட்டன்களை விடுவித்துக் கொண்டிருந்தேன்.

(சிறுவர் மனநல நிபுணர் சீதாவிற்கு..)

Sunday, December 2, 2007

நினைவுகளிலிருந்து குறிப்பெடுத்தல் அல்லது பூமரங்களைப் பற்றி சில குறிப்புகள்



---------- 1 -----------------
நினைவுகளே இல்லாதிருப்பது என்பதும், எண்ணங்களின் ஓட்டம் எதுவுமில்லாமல் அசையாத குளத்தினை ஒத்த இருப்பு என்பதும், சுலபத்தில் எவருக்கும் கிடைக்காத பொக்கிஷமாகத்தான் இருக்க வேண்டும்.எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் நம்மால் வாழ்வின் எல்லா நிமிடங்களையும் எதிர்கொள்ள முடிவதில்லை.தியானம்,பயம்,போதை போன்ற மூளையழிந்த சந்தர்ப்பங்களில் மட்டும்தான் நம்மால் சிந்தனை மற்றும் எண்ணச் சிக்கல்கள் எதுவும் இல்லாமல் இயல்பில் இருக்க முடிகிறது.படுத்த உடனேயே தூங்கி விடுவது மிகப்பெரிய வரமாய்த்தான் இருக்கமுடியும். என்னால் எப்போதுமே என் சிந்தனைகளிலிருந்து விடுபடமுடிவதில்லை.ஏதாவது ஒன்று உள்ளே எப்போதும் ஒடியபடியே இருக்கும்.அப்படி சிந்தனைகளே இல்லாத அற்புத தருணங்களும் வாய்த்திருக்கிறது.

ஓஷோ தியான முகாம்களில் இந்த "ப்ளாங்க்" தருணங்களைப் பெற்றிருக்கிறேன்.குறிப்பாய் குச்வாடா தங்கலில் இந்த அற்புத உணர்வு கிட்டியிருக்கிறது.நள்ளிரவைத் தொடும்வரை வியர்க்க விறுவிறுக்க நடனமாடிவிட்டு அங்கிருந்த நீச்சல் குளத்தில் வானம் பார்த்தபடி மிதந்திருந்த இரவுகள் எனக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கின்றன. அதற்கடுத்தபடியாக விபாஸனா தியான நாட்களிலும் சிந்தனைகள் எதுவுமில்லாமல் இயல்பில் இருக்கமுடிந்தது.சென்னையடுத்த திருநீர்மலைக்கு சமீபமான ஒரு புத்தர் ஆசிரமத்தில் பத்து நாள் தங்கலின் போது கிட்டிய ஆசுவாசமும் அமைதியும் வேறெந்த தருணத்திலும் பெற முடியாதது.பெண்ணொருத்தியின் அருகாமையும் முத்தங்களும் ஒருவேளை எண்ணச் சிக்கல்களிலிருந்தும் மனவோட்டத்திலிருந்தும் விடுபடும் தற்காலிக தீர்வுகளாயும் இருக்கக்கூடும்.எதுவெப்படியோ சிந்தனைகளிலில்லாமல் இருப்பதைவிட ஆசுவாசமானது வேரெதுவுமில்லை.

---------- 2 ---------------

என் பள்ளிக் காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடம் தமிழ், பிடிக்காத பாடம் அறிவியல். பழந்தமிழ் பாடல்களின் மீது பெரு விருப்பம் இருந்தது.என் பள்ளிக்காலத் தமிழாசிரியர்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களாய் இருந்தனர்(சம்பந்தம்,குப்புசாமி,அருணாசலம்,ஆறுமுகம்)


அற்ற குளத்தின் அறு/ரு நீர்ப் பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்-அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி இருப்பார் உறவு

சிறு வயதில் நெட்டுரு போட்ட பாடல்.இந்தப் பின்னிரவிலும் நினைவுகளின் இடுக்கில் இருந்து பெயர்த்தெடுக்க முடிகிறது.இந்தப் பாடலை யார் எழுதியது? எதில் வருகிறது? என்றெல்லாம் நினைவிலில்லை.ஒரு சில வார்த்தைகளும் மாறியிருக்கலாம்.ஆனாலும் உறவுகள் குறித்து எழுதப்பட்டிருக்கும் இப்பாடல் எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று.

பள்ளியில் பேச்சு,கவிதை,கட்டுரை என எந்தப் போட்டி வந்தாலும் நிச்சயம் ஏதாவது ஒரு பரிசை எனதாக்கி விட முடிந்தது.மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளிலும் என் பங்களிப்பும் பரிசும் தவறாமல் இருந்து வந்தன.நான் எழுதிய முதல் கவிதையின் தருணம் நன்றாக நினைவிலிருக்கிறது.ஒன்பதாம் வகுப்பில் கவிதைப் போட்டிக்காக கொடுக்கப்பட்டத் தலைப்பு நிலா.ஒரு சாயந்திரத்தில் மாடியில் அமர்ந்தபடி என் முதல் கவிதையை எழுதினேன். அந்தப் பிரதி இன்னும் கைவசமிருக்கிறது.இந்த முறை ஊருக்குப் போனால் அதை ஸ்கேனித்து பதிவிக்கும் எண்ணமும் இருக்கிறது.அந்தக் கவிதை இப்படித் தொடங்கும்

ஏ நிலாவே நீ எனக்கு மட்டுமே சொந்தமானவள்
உன் கன்னல் செரியும் பேரொளி
என் முகத்தில் மட்டுமே நிறைந்திருக்கிறது
…….
என் பயமெல்லாம் உன்னை சைட்
அடிக்கும்
விண்மீண்களை நினைத்துதான்

இப்போது இந்த கவிதையை நினைத்தாலும் சிரிப்பும் வெட்கமுமாய் வருகிறது.எல்லா துவக்கங்களும் அபத்தமானதுதான்போல.

பத்தாம் வகுப்பு மாணவர் மன்றத் தேர்வில் தமிழில் மாவட்ட அளவில் முதல் மாணவனாய் வரமுடிந்தது.(95/100)ஆனால் இறுதித் தேர்வில் கோட்டை விட்டேன் (89/100)
நான் மாநில அளவில் தமிழில் முதல் மாணவனாய் வருவேன்
என எதிர்பார்த்திருந்த தமிழாசிரியர் ஆறுமுகம் கடைசியாய் சொன்னது இப்போதும் உறுத்தலாய் இருக்கிறது (என் தலையில மண்ணள்ளிப் போட்டுட்டியேடா!!)
---------- 3 ---------------
மரங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் குறிப்பாய் பூ மரங்கள்.கிளைகள் முழுதும் பூத்திருக்கும் சிவப்புக் கொன்றை மரங்கள்,சின்னச் சின்னப் பூக்களாய் இடைவெளி விடாது நெருக்கமாய் பூத்திருக்கும் புங்கை மரங்கள்,மனதை மயக்கும் வாசனைகளோடு நீளமாய் பூத்திருக்கும் மரமல்லி மரங்கள், கசப்பும் மயக்கமுமாய் வாசனைகளைப் பரப்பி தரைமுழுவதும், இலைமுழுவதும் விரிந்திருக்கும் வேப்பம் பூ மரங்களெனப் பூ மரங்கள் என் நேசத்திற்குரியவை.எப்போதோ ஆனந்தவிகடனில் படித்த ஆபுத்திரனின் கவிதை ஒன்று..
மரங்களை விட அழகிய கவிதை வேறெதுவுமில்லை
….
இலைக் கரங்களால்
பிரார்த்திக்கும் விருட்சம்
தன் கோடை கால ஆடையை அணிந்திருக்கும்
….
தலையில் புறாக்கூடு சூடி நிற்கும்
……
கவிதைகள் என்னைப்போன்ற
முட்டாள்களால் எழுதப்படுகின்றன
மரங்கள் கடவுளால் மட்டுமே உருவாகின்றன
தேவதேவன் கவிதைகளிலும் மரங்களை அதிகம் பார்க்கலாம்.எதுவும் நினைவிலில்லாததால் பகிரமுடியவில்லை.

கொன்றை மரங்கள் விடுமுறை முடிந்த ஜீன், ஜீலை மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும் பெரிய கிளைகளில் ஏறி பூக்களைப் பறித்து அதன் தேங்காய் பூவை தின்று கொண்டிருப்போம். காய்களைப் பறித்து கொக்கி சண்டை போடுவது,முன்னமர்ந்திருப்பவனின் தலையை குறிவைத்தடிப்பதென கொன்றை மரங்களோடு கழிந்த நாட்கள் அற்புதமானவை.வீட்டின் முன்புறம் பெரிய புங்கை மரமொன்று இருந்தது. பின் கொல்லையில் மிகப் பெரிதாய் இரண்டு வேப்ப மரங்கள். ஏப்ரல் மாதத்திலேயே வேம்பும், புங்கையும் பூக்கத் தொடங்கிவிடும்.அதிகாலையில் எழுந்து முன்வாசலுக்கோ தோட்டத்திற்கோ வரும்போது ரம்மியமான பூக்களின் வாசனை மெல்லிய கிறக்கத்தைக் கொடுக்கும்.தரையில் படுக்கை விரித்திருக்கும் பூக்களை என் அம்மா எவ்வித சலிப்புமில்லாமல் வாரி தெருவில் கொட்டுவாள்.குப்பைமேடும் பலவகைப் பூக்களோடு மிகுந்த அழகாய்த் தோற்றமளிக்கும்.

மரமல்லிப் பூக்கும் காலம் அலாதியானது மழைக்காலத்தில்தான் அவைப் பூக்கும்.டிசம்பர், ஜனவரி மாதங்களில் மரம்முழுக்க வெள்ளையாய், நீளமாய் பூக்க ஆரம்பித்துவிடும். இரவில் பெய்த மழையில் நனைந்தபடி தரை சேர்ந்திருக்கும் பூக்கள் எழுப்பும் வாசம் நம்மை வேறொரு உலகத்திற்கு அள்ளிக்கொண்டு போகும். எல்லாவற்றையும் இழந்துவிட்டிருந்தாலும் மரமல்லி மரங்கள் மட்டும் என்னோடு இப்போதுமிருக்கின்றன நான் வசிக்கும் கராமாவில் இருக்கும் பூங்காவில் நிறைய மரமல்லிப் பூமரங்கள் இருக்கின்றன. எந்த நாட்டிலிருந்தாலும் பூக்களும் மரங்களும் எவ்வித வித்தியாசங்களையும் காண்பிப்பதில்லை.சிந்தனை மிகும் சாயந்திரங்களில் இப்போதெல்லாம் தஞ்சமடையும் இடம் மரமல்லி மரத்தடியாகத்தான் இருக்கிறது.தனிமை மிகுந்து கசப்பும் துயரமுமான மாலைகளில் யாரேனும் பார்க்கிறார்களா?என்பதை உறுதி செய்துகொண்டு இம்மரங்களை இறுகக் கட்டி முத்தமிட்டு வருகிறேன்.

Wednesday, November 28, 2007

ஆத்மாநாமை துணைக்கழைத்தபடி புனைவுகளிலிருந்து எழுதப்படும் இன்னொரு புனைவு

என்னைக் களைந்தேன்
என் உடல் இருந்தது
என் உடலைக் களைந்தேன்
நான் இருந்தது
நானைக் களைந்தேன்
வெற்றிடத்துச்
சூனிய வெளி இருந்தது
சூனிய வெளியைக் களைந்தேன்
ஒன்றுமே இல்லை....

ஆத்மாநாம்
இந்த இருக்கை உனக்கு வசதியாக இருக்கிறதா?சரியாய் அமர்ந்துகொள்...குளிர் போதுமா?...கொஞ்சம் குறைக்கட்டுமா?..குறைவாகத்தான் குடித்திருக்கிறாய்..இன்னும் வேண்டுமானால் தருவிக்கட்டுமா?..என்னிடம் போதிய சிகரெட்டுகளும் கைவசமிருக்கின்றன்..இந்த ஒரு இரவைப் பொறுத்துக்கொள் ..நான் என்னைப் பற்றி யாரிடமாவது பேச வேண்டி இருக்கிறது..எனக்கான பேச்சுக்கள் அதிகரித்து என்னை இரவில் தூங்கவிடுவதில்லை (மனமுலைகள் பெருகிப் பெருகி இன்னும் முலைகள்..) என வாழ்வில் நான் செய்திருந்த எல்லா வன்முறைகளும் இப்போது தொடர்ச்சியாய் நினைவுக்கு வருகிறது.அவை தந்த கசப்புணர்வில் என் மீதே எனக்கு குமட்டிக் கொண்டு வருகிறது....எங்காவது வாந்தி எடுக்க வேண்டியதின் உந்துதல்களில் இந்த அறையை, இரவை, உன்னை நாடி வந்திருக்கிறேன்.திலகவதி மொழி பெயர்த்திருந்த ஜாங்லீயின் தவம் என்றொரு சிறுகதை நினைவிற்கு வருகிறது, அதில் கதாநாயகி இப்படிச் சொல்வாள் "நான் தூங்கப் போகும் முன் அன்றைய தினத்தில் நான் செயத தவறுகளை நினைத்துக்கொள்வேன்.. மூடியப் போர்வைக்குள்ளிருந்து ஆயிரம் ஜோடிக் கண்கள் என்னையே பார்ப்பது போலிருக்கும்... எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் தண்டனை அது" என,என்னைப்பொருத்தவரை என் வன்முறைகளைச் சத்தமாய் வாய்விட்டுச் சொல்வதுதான் சரியானதாய்ப் படுகிறது...என் மொழி உனக்குத் தெரியாமல் போனதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சொல்லப்போனால் நீ! ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பித்தாய்...என் உளறல்களை,அபத்தங்களை,குற்றங்களை நீ! அறிந்து கொள்ள வேண்டியதின் பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்தாய்.

பெண்களை விட அவர்களின் பெயர்களில் எனக்கு கிறக்கம் அதிகம்.ஏனோ தெரியவில்லை..என்னுடன் பழகுபவர்களின் பெயர்களை அடிக்கடி உரக்க கூப்பிட்டுக் கொள்வது எனக்கு வழக்கமாக இருக்கிறது.என் நண்பன் ஆழியூரானைப் போலவே எனக்கும் நித்யா, அர்ச்சனா, நிவேதா, யாழினி, ப்ரியதர்ஷினி, ப்ரியா என்றெல்லாம் பெயர் வைத்திருக்கும் பெண்கள் அழகாய் இருப்பார்கள் என்ற கற்பனையும் உண்டு.இந்த நேரத்தில் எனக்கு நந்திதா என்ற பெயர் பிடித்திருக்கிறது.உன்னை நந்திதா என்றழைக்கட்டுமா?
நந்திதா
நந்திதா
நந்திதாஆஆஆஆஆஆஆ..
மன்னித்துக்கொள்..இப்படி ஆரம்பத்திலேயே உன்னை மிரட்சி அடைய செய்திருக்க வேண்டாம்.ஏனோ சத்தமாய் கூப்பிடுவதில் இப்படி கத்துவதில் உள்ளே ஏதோ ஒன்று நிறைவடைகிறது.

அகம் பிரம்மாஸ்மி, நான்,ஆத்மா,சாரீரம்,நத்திங்க்னஸ்,எம்ப்டினஸ்,நீதான் கடவுள்,உள்ளிருக்கும் புத்தர்,தேவன், சாத்தான், புனிதம், புண்ணாக்கு இப்படி ஏகப்பட்ட திரிவுகளாய் நம் வரலாறு முழுக்க, வாழ்க்கை முழுக்கத் திரித்துப்போயிருக்கின்றனர் ஏகப்பட்ட மகானுபாவர்கள்.இந்த சமயத்தில் நான் உனக்கொன்று சொல்லுகிறேன் கேட்டுக்கொள்!.. என் வாழ்வு முழுக்க நான் அலைந்து திரிந்து கண்டெடுத்தப் பேருண்மை இதுதான்.. நீ! இப்பிரபஞ்சத்தின் ஏனைய விலங்குகளோடு இன்னுமொரு விலங்கு அவ்வளவுதான்.ஒரு விலங்காய் இருப்பதை முழுமையாய் உணர்ந்துகொள்வது மட்டுமே உண்மைக்கான தீவிர தேடுதலின் முடிவாய் இருக்கமுடியும்.

சரி இந்த ஆத்ம(?)விசாரங்களை நிறுத்துவோம்.நான் வாழ்ந்திருந்த இந்த சொற்ப காலத்தினுள் என்னால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைப் பற்றி பேசுவோம்.சொல்லப்போனால் அதற்காகத்தான் இங்கு வந்தேன்.என் நினைவிலிருப்பதை மட்டும் இப்போது பட்டியலிடுகிறேன்.
1.நீர்த்தவளை,ஓணான்,பட்டாம்பூச்சி,தெருநாய்,பாம்பு,எலி போன்ற சக விலங்குகளை/உயிரினங்களை கொல்வதில் எனக்கு மிகப்பெரிய ஈடுபாடிருந்தது.என் பால்யம் முழுக்க அவைகளைத் தேடித் தேடி கொன்று கொண்டிருந்தேன்.
2.பத்தாம் வகுப்பு கடைசித் தேர்வில்(வரலாறு புவியியல்) பின்னால் உட்கார்ந்திருந்த நண்பன் பார்த்து எழுதுகிறான் எனத் தெரிந்தும் என் விடைத்தாளினை கேள்வித்தாள் கொண்டு மூடினேன்.அந்த தேர்வில் அவன் தோல்வியுற்றான்.(அவனை திரிசூல் பாரில் மது சப்ளை செய்துகொண்டிருக்கிறவனாக சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது)
3.ஒரு சின்னஞ்சிறு கிராமத்து பெண்ணை (அவள்பருவமெய்தி ஓராண்டுதான் ஆகியிருந்தது) காதல் என்றபெயரில் துன்புறுத்தினேன்.அவளை கிளர்த்த கவிதைகளாய் எழுதிக் குவித்து,காத்திருந்து, பின்னால் அலைந்து, முதலைக் கண்ணீர் வடித்து, சிகரெட்டுகளாய் புகைத்து,எக்ஸ்பையரி ஆன மருந்தை குடித்து விடுவதாய் மிரட்டி யாருமற்ற ஒரு மதியத்தில் அவளின் உதடுகளில் முத்தமிட்டு என் காதலின் வெற்றிக்கனிகளை ருசித்தேன்.
4.எனக்காக தன் வீட்டை துறந்து, உறவுகளைத் தவிர்த்து, காத்துக்கொண்டிருந்த அதே பெண்ணை செட்டிலாகவில்லை என்றொரு சப்பைக் கட்டோடு இன்னும் நாட்களைத் தள்ளிப்போட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல் காத்திருப்பின் வலிகளை தாங்கமுடியாது விலகிப்போன பெண்ணைக் கொண்டு எழுதிய புனைவுகளில் என்னை அடையாளப்படுத்திக் கொண்டேன். (செத்தும் கொடுத்தாள் பாதகத்தி!)

5.வராத காதலனுக்காய் காத்துக்கொண்டிருந்த பெண்ணொருத்தி என்னை விரும்புகிறாள் என மறைமுகமாய் தெரிந்தும்,அவளை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் விலகிப்போனேன்.(அவன் அவளை என்ன செய்திருப்பான் என யாருக்குத் தெரியும்?)

6.புத்திசாலிப்பெண்ணின் புத்திசாலித்தனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத ஆணொருவன் அவளை விலக்கி வைத்திருந்தான்.என்னால் அவளுக்கொரு வாழ்வமைத்துக் கொடுத்திருக்க முடியுமென்கிற சூழல் இருந்தும், விட்டால் போதுமென விலகிவிட்டேன்(அவளை கிளர்த்தி கலவி கொள்ள முயற்சித்து தோல்வியுற்றதால் அந்த ஓட்டம்)
7.எவ்வித காரணங்களுமில்லாமல் கன்னியொருத்தியின் காதலை காலில் போட்டு மிதித்தேன்.அவளைத் தாங்கொனா துயரத்தில் தள்ளினேன்.அதே சமயத்தில் நடுத்தரவயதுக்காரியொருத்தியின் காதலுக்காய் ஏங்கிச் செத்தேன்.

இன்னும் என்னால் நேரடியாக/மறைமுகமாக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் ஏரளமாயிருப்பினும் இவைகளை சொல்லி முடித்த பின் ஏற்படும் ஆயாசமும் கழிவிரக்கமும் என்னைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது.
ஆனாலும் நான் சாக விரும்பவில்லை.கலைத்துப் போட்டு வாழ்வதில் எனக்கு ஆர்வம் இருக்கிறது.சூழலகளை மாற்றுவது,வழக்கத்திற்கு எதிரான செயல்களை செய்வது போன்றவற்றின் மூலமாக என் அபத்தங்களை/இருப்பை பழிவாங்கிக் கொள்கிறேன்.ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல ஒரே செயலுக்கான எதிர் செயல்களை அவ்வப்போது செய்வதின் மூலமாக 'கவனிப்பு' சாத்தியப்படுகிறது.பழகிய மூளை,பழகிய வாழ்வு என்பதிற்கும் இயந்திரத்தனத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம்?

நானொரு மிருகம் என்பதை ஓர் அடர்ந்த காட்டில் நிர்வாணமாய் சுற்றியலைந்த போதுதான் கண்டுகொண்டேன்.பின் அதிலிருந்து மீண்டு நகரத்தில் வசிக்கத் தொடங்கினேன்.சமூகம் என்ற ஒன்றோடு இணைந்திருக்க முயலும்போது அன்பு என்கிற மிகப்பெரிய ஆயுதத்தை மனிதர்கள் பிரயோகிக்கத் தொடங்குகிறார்கள்(குறிப்பாய் பெண்கள்).இந்த யுக்தி மிகவும் ஆபத்தானது.ஒருவரைக் கொல்வது விடவும் அவரை நேசிப்பதென்பது மிகக் கொடிய தண்டனை.நான் இந்த சூழலிலிருந்து விலகி இருக்க ஆசைப்படுகிறேன்.நாளை மீண்டும் என் சொந்த கானகத்திற்கு திரும்பிப்போகிறேன்.கடைசியாய் சொல்லிவிட்டுப் போக எனக்கு யாரும் இல்லாததால் உன்னிடம் வந்தேன்.

எல்லாம் கொட்டி முடிந்த பின் மிகவும் சோர்வாக இருக்கிறது.உனக்குப் பாடத் தெரியுமா?...எனக்காக ஒரு பாடல் பாடுவாயா?...உன் சொந்த மொழியாய் இருந்தாலும் பரவாயில்லை....இசைக்கும் பெண்ணிற்கும் மொழியென்பது அவசியமில்லை..
.......
.......
ஓ! சாரி!
கேன் யூ சிங் எ சாங் ஃபார் மீ?

FUCK YOU BASTARD ! GET LOST!!

Tuesday, November 27, 2007

நான் சொன்னா கேட்பீங்களா கவிஞர்களே?


நேற்று மாலை பூட்டைத் திறந்து உள்நுழைகையில்
குவியல்களாய் சிதறிக்கிடந்தன தரையில்
புத்தக அலமாரியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்குமோவென
அஞ்சி நோக்குகையில் இறுகப் பூட்டப்பட்டிருந்தது அலமாரி.
கொஞ்சம் குனிந்து உற்றுப்பார்த்தேன் இப்படி இவைகள் கிடந்தன

அன்பே சுயம் பிரதி நெஞ்சு வெளி
காதல் தேடல் துயரம் மரம்
மழை யோனி இருப்பு வலி துடிக்குது ப றவை
குடை அவஸ்தை வாழ்வு சாம்பல்
விழி நாப்கின் நான் உதிரப்பெருக்கு கசிவு பிறழ்வு நீ புணர்ச்சி
இமை வசீகரம் திரிபு பின்னிரவு
புன்னகை நீட்சி புலம்பல் நதி
உதடு மீட்சி உயிர் இயங்குதல் பெருவெளி
முத்தம் ஈரம் குறி போதை
இடை தனிமை முலை
சடை பிரிவு வேதனை அவ நம்பிக்கை
ரோஜா பிரியம க ட்டுடைத்தல் இதயம்
மல்லிகை ஈரம் பிம்பம்


நான் வந்ததை உணர்ந்ததும் விழித்துக்கொண்டவை
ஒரே சமயத்தில் பேச ஆரம்பிக்க அவை கூச்சல்களாய் முடிந்தது ஒவ்வொன்றாய் முன் வந்து சொல்லும்படி வலியுறுத்தினேன்
அன்பே காதல் இமை மழை குடை மிகவும் இளைத்துபோயிருந்ததன
"பேனாவை கையிலெடுக்கும் எல்லா பேமானியும் எங்களைத்தான் எழுதறானுங்க 'த்தூ' "என ஒரே குரலில் சொல்லிற்று
சுயல் தேடல் தனிமை இருப்பு அவஸ்தை ஓரணியாய் வந்தன
மிகவும் நைந்துபோன அவைகள்
சன்னமான குரலில் புலம்பிற்று'விட்டுடச் சொல்லுங்க எங்கள'
வலி துயரம் வேதனை பிரிவு துயரம் தாங்கொணா கோபத்திலிருந்தன
"எங்கள் எழுதும் எல்லா நாதாறிகளும் பலருடன் சல்லாபித்து மூக்கு முட்ட குடிச்சிட்டு வாழ்வ கொண்டாடுதுங்க எழுத ஆரம்பிச்சா மட்டும் எங்கள இழுக்குதுங்க மசிர்" என்றன.
குறி முலை யோனி உதிரப்பெருக்கு எல்லாம் ஒன்றுசேர்ந்து உரக்கச் சொல்லியதை சபையில் பகிர விருப்பமில்லை
வெளி பெருவெளி மரம் பறவை பிறழ்வு பிரதி திரிபு கட்டுடைத்தல் கொஞ்சம் பூசினாற்போலிருந்தன
அவைகள் சத்தமாய் சொல்லிற்று
"இந்த பிந பொறம்போக்குங்க கட்டுடைக்கும் களவாணிகள பொத்திட்டு இருக்க சொல்லுங்க"
சத்தமில்லாமல் அவ்வப்போது புன்னகைத்தபடி கேட்டு முடித்தேன்

ஆகட்டும் பார்க்கலாம் சொல்லிப்பார்க்கிறேன் என
தேர்ந்த அரசியல்வாதியின்
சாயல்களோடு அவைகளை அனுப்பி
கதவை
சாத்தினேன்
நான் சொன்னா கேட்பீங்களா கவிஞர்களே?

Sunday, November 25, 2007

சில வியாழக்கிழமை பிற்பகல்களும் ஒரு காதலும்



காதல் உணர்வு எதனால் வருகிறது?ஒரு பெண் ஆணின் மீதும் ஆண் பெண்ணின் மீதுமாய் எதனால் காதல் கொள்கிறார்கள்?உடலின் தேவை,பாலியல் ஈர்ப்பு என்பதோடு மட்டும் காதல் முடிவடைந்துவிடுகிறதா? அல்லது அதையும் தாண்டி புனிதமானது என்பது போன்று வேறேதேனும் காரணங்கள் இருக்கிறதா?சூழல், சமூகம், வாழ்வியல் முறை என்பதையெல்லாம் தாண்டி அல்லது ஒரு பொருட்டாய் மதிக்காமல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட எது தன்முனைப்பாய் இருக்கிறது? என்பது போன்ற சிந்தனைகளை The Brief Encounter திரைப்படம் கிளரச்செய்தது.1945ல் வெளிவந்த பிரிட்டிஷ் திரைப்படமிது.இதன் நாடக வடிவம் 1936 களின் இறுதியிலேயே நிகழ்த்தப்பட்டது எனினும் இரண்டாம் உலகப்போரினால் ஒன்பது வருடங்கள் தாமதமாக 1945 ல் இந்நாடகம் திரைப்படமாக்கப்பட்டது.டேவிட் லீனின் இயக்கத்தில்
வெளிவந்திருந்த இப்படத்தில் லாரா கதாபாத்திரமாக Celia Johnson நடித்திருக்கிறார்.

ஏற்கனவே திருமணமான ஆணும் பெண்ணும் காதல் வயப்படும் கதை.புறநகரில் அன்பான கணவன் மற்றும் குழந்தைகளோடு வசிக்கும் இல்லத்தரசி லாரா எல்லா வியாழக்கிழமைகளிலும் நகரத்திற்கு வருவாள்.கடைவீதிக்கு சென்றுமுடித்த பின் மதிய திரைப்படக்காட்சி ஒன்றை பார்த்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.ஒரு நாள் ரயில் நிலைய புத்துணர்வு அறையில் Alec Harvey (Howard) யை சந்திக்கிறாள்.அலெக் ஒரு டாக்டர் திருமணமான இரண்டு குழந்தைகளின் தகப்பன்.இருவரின் ரசனைகள், நாகரீக அனுகுமுறைகள், பேச்சுக்கள் எல்லாம் பிடித்துப்போகவே அடுத்த சந்திப்பிற்காக ஏங்க ஆரம்பிக்கிறார்கள்.அடுத்த சந்திப்பில் காதல் வயப்படுகிறார்கள்.வியாழக்கிழமைகளில் மதியம் 12.30 திலிருந்து இரவு 9.30 வரைக்குமாய் இணைந்திருக்கிறார்கள். திரைப்படம், படகு சவாரி, கார்ப்பயணம் என இவர்களின் காதல் மெல்ல இறுக்கமாகிறது.லாரா ஒவ்வொரு வாரமும் தன் கணவனிடம் தகுந்த பொய்களை மிகுந்த உறுத்தல்களோடு சொல்கிறாள்.தனிப்பட்ட காதலும் பொதுப்பட்ட வாழ்வும் லாராவை அலைக்கழிக்கிறது.போகவே கூடாதென்னும் அவளது உறுதிப்பாடுகள் வியாழக்கிழமைகளில் காணாமல் போகிறது.


தன் நண்பனின் அறைக்கு ஒரு நாள் லாரவை கூட்டி செல்கிறான் அலெக்.அப்போது எதிர்பாராத விதமய் அலெக்கின் நண்பன் அறைக்குத் திரும்புகிறான்.லாராவை பின்புறமாய் வெளியேற்றிவிட்டு நண்பனை வரவேற்கிறான்.அந்த நிகழ்வில் திடுக்கிட்டு அவமானமடைந்த லாரா அவர்களின் உறவின் அபத்தங்களை உணர்ந்துகொள்கிறாள்.இரவில் ஆளற்ற சலையில் மழையில் நனைந்தபடி ஓடுகிறாள்.யாருமற்ற ஓரிடத்தில் புகைத்தபடி வெகுநேரம் அமர்ந்திருக்கிறாள்.பின் பிரிந்துவிடுவது மட்டுமே இத்தகைய அலைகழிப்புகளுக்கு தீர்வாய் இருக்க முடியும் என முடிவெடுக்கிறாள்.இருவரும் பேசி பிரிவதென்று முடிவெடுக்கிறார்கள்.தொந்தரவுகளுடன் நேரிடும் பிரிவின் துயர் தாளமல் ஒரு கணம் தற்கொலைக்கு முயன்று பின் மீள்கிறாள் லாரா.அவளின் சமீபத்திய சலனங்களை புரிந்துகொள்ளும் கணவன் என்னிடம் திரும்ப வந்ததிற்கு நன்றி என கட்டிக்கொள்கிறான்.

திருமணமான ஆண் எவ்வித உறுத்தல்களும்,தயக்கங்களும்,அலைக்கழிப்புகளும் இல்லாமல் இன்னொரு பெண்ணை மிகுந்த சுதந்திரத்தோடு காதலிக்கிறான்.ஆனால் திருமணமான பெண்ணிற்கான காதலில் இந்த சுதந்திரம் இருப்பதில்லை.தாய் என்கிற இன்னொரு வடிவம் பெண்ணிற்கான தனிப்பட்ட வாழ்வினை கேள்விக்குட்படுத்துகிறது.கணவன் நல்லவனாய் இருப்பதையும் மீறி பெண்ணிற்கான தேவைகள் தன் எல்லைகளை நீட்டிக்கிறது.அந்த சுதந்திர தன்மை தன் அழகியலையும்,அபத்தங்களையும்,அலைக்கழிப்புகளையும் உள்ளடக்கி இருக்கிறது.
ஒரு பெண்ணின் மன உணர்வுகளை துல்லியமாய் இந்தத் திரைப்படம் பதிவு செய்திருக்கிறது.



பெரும்பாலான காட்சிகள் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.கடைசி ரயிலை பிடிக்க ஒரு பிளாட்பாரத்திலிருந்து இன்னொரு பிளாட்பாரத்திற்கு ஓடுவது, சப் வே யில் முத்தமிடுவது, தவிப்புகளோடு காத்திருப்பது, துயரங்களோடு பிரிவது, தற்கொலைக்கு முயன்று வீச்சமான வெளிச்சத்தில் பயந்து பின் வாங்குவதென இவர்களின் காதல் முழுக்க முழுக்க ரயில் நிலையம் சார்ந்தே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.திரைப்படம் லாராவின் தன் சார்ந்த மொழியாய் வெளிப்பட்டிருப்பது ஒரு நாவலை படிக்கும் மன உணர்வை தருகிறது.திருமணமாகி காதலித்து கொண்டிருப்பவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நல்லது.என் நண்பனொருவனால் முழுமையாய் பார்க்கமுடியவில்லை.இத் திரைப்படத்தின் வீச்சம் அவனை அலைக்கழிப்புக்குள்ளாக்கியது.

Tuesday, November 20, 2007

மாலாவிற்கு மல்லிகா என்றும் பெயர்..



எனக்கு வயது முப்பத்தி மூன்று.என் பெயருக்கும் இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாததால் அது அவசியமில்லை.பஜாரிலிருக்கும் என் அரிசி மண்டிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கோரிமேட்டுத் தெரு இறக்கத்தில்தான் அந்த சிந்தனை தோன்றியது.கல்நகரை கடந்து முகல்புறா தெருவிற்குள் நுழையும்போது தீர்மானித்துவிட்டேன்.நாளையிலிருந்து குடிப்பதை நிறுத்திவிடவேண்டும்.பஜாருக்குள் நுழைந்தபோது சிகரெட்டையும் நிறுத்திவிடத் தோன்றியது.சைக்கிளை மண்டிக்கு முன்னால ஸ்டாண்ட் போடும்போது நாட்களைத் தோராயமாக கணக்கிட்டு செய்யும் அதையும் நிறுத்திடவிடவேண்டும் என கறுவியபடி முடிவெடுத்தேன்.எப்போதிலிருந்து குடித்துக் கொண்டிருக்கிறேன் எனக் கணக்கிட்டுப்பார்த்ததில் பதினாறு வருடங்கள் ஓடிப்போயிருந்தது பெரிய அதிர்ச்சியாய் இருந்தது.இன்று இந்த சிந்தனையும் கழிவிரக்கமும் தோன்ற நேற்று என் கடைச் சிப்பந்திகளை அவர்கள் மனைவி சகிதமாய் பாலசுப்பிரமணி தியேட்டரில் பார்த்ததே காரணமாய் இருந்திருக்க வேண்டும். என்னை எதிர்பார்த்திராத சிப்பந்திகள் நெளிந்ததும்,நானும் ஒப்புக்குப் புன்னகைத்து தியேட்டருக்கு உள்ளே போனதும்,படம் போட்ட பத்து நிமிடத்தில் எழுந்து வீட்டுக்கு வந்ததும் ஏன் எனத் தெரியவில்லை.நான் ஒன்றும் அந்த அளவிற்கு பொறாமைக்காரனும் இல்லை.என் இயலாமைகளின் தாங்க முடியாத கழிவிரக்கம் நேற்று முழுக்க தூங்க விடாமல் செய்துவிட்டிருந்தது.

சொன்னால் நம்புவீர்களா?என் முப்பத்தி மூன்று வருட வாழ்வில் எந்த ஒரு பெண்ணையும் நேசித்ததில்லை நேசிக்கப்பட்டதுமில்லை.பெண்ணொருத்தியின் வாசமோ,தீண்டலோ எதுவும் தெரியாதெனக்கு.ப்ளஸ் டு படிக்கும்போது கவிதாவும் நானும் அதிகாலையில் டியூசனுக்கு போகும் வழியில் தொடர்ச்சியாய் ஒரே இடத்தில் பார்த்துக்கொள்வோம்.அந்த நிகழ்வை கனவில் நீட்டிக்கொண்டதோடு என் இளமைக்காலம் முடிந்துபோய்விட்டது.அம்மாவோ,சகோதரியோ, சகோதரனோ யாருமில்லாத தனி ஆள் நான்.ப்ளஸ் டு முடித்த கையோடு மண்டியில் என்னை ஏற்றிவிட்டு என் அப்பா இறங்கி கொண்டார்.அவரை வாரத்தில் ஒரு நாள் வீட்டில் பார்ப்பதே அதிசயம் அதுவும் நிலைகொள்ளா போதையிலிருப்பார்.சக்தி தியேட்டர் மேட்டிலோ,முருகர் கோயில் பள்ளத்திலோ எனக்கு சித்தியோ சித்திகளோ இருக்கலாம்.
நண்பர்களென்று பெரிதாய் யாருமில்லை வெல்ல மண்டி சிவா மட்டும் கொஞ்சம் நெருக்கமாக பழகுவான் வயதில் சிறியவன் என்பதால் அவனோடும் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்வதில் சிக்கல்களிலிருந்தது.ஞாயிற்றுக்கிழமைகளில் அவனோடுதான் குடிப்பேன்.(குடியைப் பற்றி அதிகம் பேசுவதால் குடிகாரனென நினைத்துவிடாதீர்கள் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை குடிப்பேன் அவ்வளவுதான்.)

ஒருமுறை குடித்துக் கொண்டிருக்கும்போது சிவாவிடம் சொல்லிவிட்டேன்,அவன் அந்த போதையிலும் வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தான்.
"நீயெல்லாம் எதுக்கு ஒரு மனுசன்னு கீற! பேசாம செத்துடு!" என எக்களித்தான்.
"சரி இன்னா பொண்ணுதான இரு" என யாருக்கோ தொலைபேசினான்.நடுவில் வந்தான்
"இந்தா பார்ணா ஒரு புது பீஸ் வந்துகீதாம்! கொஞ்சம் செலவாவும் ஓகே வா?" என்றான் எனக்கு படபட வென இருந்தது.போதை குப்பென இறங்கி விட்டதாய் உணர்ந்தேன்.ஒரு திடத்திற்கு வந்து
"எவ்ளோ ஆனாலும் பரவால்ல சிவா!" என்றேன் அவன் மறுபடி வெகுநேரம் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.
"செரி மல்லிகா நம்பர் கொடு! என யாரிடமோ நம்பர் வாங்கி யாரிடமோ வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தான் எனக்கு நிலைகொள்ளாமலிருந்தது.கடைசியாய் வந்து
"நாளைக்கு பாத்துக்கலாம்ணா..புதுசு பிக்ஸ் ஆயிடுச்சாம்.. என் ரெகுலர் ஒண்ணு இருக்கு மல்லிகான்னு..அவளும் இன்னிக்கு ஃப்ரீயா இல்லையாம்..செரி வுடு! அப்புறம் பாத்துக்கலாம்" என்றபோது எனக்கு எங்கிருந்தோ ஒரு ஆசுவாசம் வந்து படர்ந்தது.அதுவரை அடித்துக்கொண்டிருந்தது ஒரு இயல்பு நிலைக்குத் திரும்பியது.ஒருவகையான திருப்தியோடு வீட்டுக்குப் போய்விட்டேன்.அதற்கு பிறகு சிவாவும் இதுகுறித்து எதுவும் பேசவில்லை.

உத்தமனாக தீர்மானித்த இன்றைய நாள் சந்தோசமாயிருந்தது.காலையிலிருந்து பிடித்திருக்க வேண்டிய ஐந்து சிகரெட்டுகளைத் துறந்திருந்தேன்.சாயந்திரம் ஏழு மணி வாக்கில் பெரிய கோயிலுக்குப் போனேன்.இதே ஊரிலிருந்தும் கோயில் பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை. கடைசியாய் எப்போது பெரிய கோயிலுக்கு வந்தேன் என தெரியவில்லை.இப்போதெல்லாம் கோவிலில் கூட்டம் அதிகரித்து விட்டது.எங்கு பார்த்தாலும் கம்பித் தடுப்புகளும் மரத்தடுப்புகளுமாய் கோயிலின் அழகையே இந்த பெருங்கூட்டம் சிதைத்து விட்டிருந்தது.பிரகாரத்திற்கு போகாமல் ஆயிரங்கால் மண்டப படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்தேன்.

அப்போதுதான் என் வாழ்வில் முதன்முதலாய் அது நிகழ்ந்தது.குட்டை கோபுரத்திலிருந்து வீழ்ந்த மங்கிய வெளிச்சத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.ஒடிசலாய் சாதாரண உயரத்தில் தலைநிறைய மல்லிகைப்பூவோடும் கண்களுக்கு அடர்வாய் மையோடும் என் பக்கமாய் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்.வெகு நாட்கள் கழித்து ஒரு பெண்ணை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.எனக்கே தெரியாமல் எங்கே அந்த பெண்ணை நெருங்கி விடுவேனோ என பயந்துபோனேன்.(ஒரு முறை என் மண்டியில் சாப்பிட்ட மத்தியான மயக்கத்தில் அமர்ந்துகொண்டிருந்தபோது வழக்கமாய் மண்டி கூட்ட வந்த தாட்டியான பெண்ணை அதிக நேரம் உற்றுப் பார்த்தேன் பின்பு எனக்கே தெரியாமல் அவளை மூர்க்கமாய் அணைக்க அவள் திமிறி கையிலிருந்த விளக்குமாற்றால் என்னை அடித்துவிட்டு வெளியேறினாள்)ஆனால் அவள் என்னை நோக்கி வந்தாள்.உலக அதிசயங்களில் இந்த நிகழ்வையும் தாராளமாய் சேர்க்கலாம்."என்னை உங்களுக்கு தெரியுமா? ரொம்ப நேரமாக பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே" என அவள் கேட்டபோது என் காலடியில் தரை நழுவியது.நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

ஒரு வழியாய் பதட்டத்தை ஒதுக்கி இளித்தேன்."நீங்க ரொம்ப அழகு" என உளறிக் கொட்டினேன்.அவள் மென்மையாய் சிரித்தாள் அப்படியா? என்றாள்.எனக்கு சற்று தைர்யம் வந்தது."நீங்க எங்க இருக்கிங்க?..உங்க அப்பா அம்மா யார்?.. நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.. உங்களுக்கு சம்மதமா? என்ற போது அவள் பெருங்குரலில் விடாமல் சிரித்தாள்."என் பேராவது தெரியுமா உங்களுக்கு? என்றபோது அந்த சங்கடத்திலிருந்து என்னை மீட்டெடுக்க நான் பார்த்திருந்த தமிழ் சினிமாக்கள் அத்தனையும் கை கொடுத்தன.பெயர் முக்கியமா?போன ஜென்ம தொடர்பு என்றெல்லாம் விடாமல் பேசினேன்.ஒருவழியாய் என் வாழ்வில் அந்த மேஜிக் நிகழ்ந்தது.அவளின் விலாசம் வாங்கினேன் நாளை வருவதாய் சொல்லிவிட்டு வீட்டுக்கு திரும்பியபோது கடைத்தெருவில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு 'இருளோ' வென இருந்தது ஆனால் மனசில் மட்டும் வெளிச்சமடித்துக் கொண்டிருந்தது.அத்தோடு மாலா! மாலா! என மனம் பிதற்றியபடியிருந்தது,அதுதான் அவள் பெயர்.. எத்தனை இனிமை பாருங்கள்! இரண்டே எழுத்து.. இந்த பெயரில் எந்த பெண்ணையும் இதுவரை கேள்விப்பட்டிராததும் கூடுதல் மகிழ்ச்சியளித்தது.

எனக்கு வெகு நாட்களாய் சமைத்துப் போட்டுக்கொண்டிருக்கும் தூரத்து பாட்டி சகிதமாய் அவள் வீட்டிற்கு போனது கூட தேவையில்லாத ஒன்றாய்த்தான் பட்டது. ஒரே ஒரு பாட்டியைத் தவிர அவளுக்கும் யாருமில்லை.அவளை நான் பேசவே விடவில்லை இரண்டே நாளில் திருமணம் என சொல்லி சம்மதிக்க வைத்தேன்.அவள் எதையோ சொல்ல வரும்போதெல்லாம் அவள் வாயை அடைத்தேன்.("என்ன மிஞ்சி மிஞ்சி போனால் பணமில்லை என்பாள் அல்லது யாரையாவது காதலித்து ஏமார்ந்ததாய் சொல்வாள் அவ்வளவுதானே!) அன்று என் கண்ணில்பட்டவர்களுக்கு மட்டும் என் திருமண செய்தியை சொன்னேன்.சிவா வெளியூர் வசூலுக்குப் பாண்டிச்சேரி போயிருந்தான் அவனுக்கு இந்த திடீர் காதல் கல்யாணம் எல்லாம் பெரிய ஆச்சர்யத்தை கொடுக்ககூடும்.முதலிரவு பற்றிய சங்கதிகளை எல்லாம் நான் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை ஆனால் இந்த உலகத்தில் பெண்ணைத் தவிர உசத்தி வேறெதுவும் இல்லை.

மூன்று நாள் கழித்து சிவா வந்தான் கலக்கிட்டணே! என்று கட்டிக்கொண்டான்.மாலாவைக் கூப்பிட்டு சிவாவிற்கு காபி எடுத்து வரச்சொன்னேன்.மாலா காபி கொடுத்து விட்டு அவசரமாய் உள்ளே போய்விட்டாள் சிவா முகம் திடீரென இறுகிப்போனது.
"ஆனாலும் உங்களுக்கு பெரிய மனசுண்ணே! என்றான் எனக்கு ஒன்றும் புரியவில்லை.கொஞ்ச நேரம் முழித்தேன்.சிவா மெல்ல சகஜமாகி "இவங்க பேரையும் மாத்திட்டிங்களா மல்லிகாவே நல்லாருந்ததே" என கண் சிமிட்டினான் எனக்கு இருட்டிக்கொண்டு வந்தது பொதுவாய் சிரித்து வைத்தேன் அவன் போனபிறகு உள்ளே வந்தேன் மல்லிகா என்ற மாலா கதவிற்கு பின்னால் தலைகுனிந்த படி நின்றுகொண்டிருந்தாள்.

எனக்கு நினைவழிந்து போகும் வரை குடிக்க வேண்டும் போலிருந்தது.

Featured Post

test

 test