Tuesday, May 1, 2007

ஒரு மிகச்சிறந்த மரணம்



The Road Home

“என் கணவரது உடல் நகரத்தில் இருந்து இந்த மலைகிராமத்திற்க்கு இக்கிராம வாசிகளால் சுமக்கப்பட்டு கொண்டுவரப்பட வேண்டும்” என்ற ஒரு வயதான மனைவியின் வேண்டுகோளோடு துவங்குகிறது இப்படம்.

"Rememberance" என்ற பாவோ ஷீயின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த சீன மொழி திரைப்படம், 1999 ஆம் ஆண்டு புகழ் பெற்ற இயக்குனரான ஷாங்க் யிமோ (shank yimou) வின் இயக்கத்தில் வெளிவந்தது. அழகியல் ரீதியான முக்கியமான படைப்பு என சொல்லலாம். இப்படம் ஒரு மோசமான குளிர்காலத்தில் கருப்பு வெள்ளையில் துவங்குகிறது. தந்தையின் மரண செய்தியறிந்து நகரத்திலிருந்து வந்த தன் மகனிடம் சிரமமான ஒரு வேண்டுகோளை வைத்துவிட்டு தன் கணவனின் இறுதிச் சடங்கிற்க்கான ஆடையை நெய்யத்தொடங்குகிறாள் அந்த தாய்.

பனிப்பொழிவு மோசமாக தாக்கியிருக்கும் அந்த கிராமத்தில் பெரும்பாலான மக்கள் ஏற்கனவே நகரங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டிருந்தனர். தனது தந்தையின் உடலை மருத்துவமனையிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் கிராமத்திற்க்கு சுமந்தபடி கொண்டு செல்வதில் இருக்கும் சிக்கல்களை உணர்ந்து அக்கிராம மக்களின் உதவி வேண்டி செல்கிறான்.

இடையில் வண்ணங்களை குழைத்து Luo Changyu (Hao Zheng) என்ற ஆசிரியனின் வாழ்வு சொல்லப்படுகிறது. பள்ளிக்கூடம் இல்லாத அந்த மலை சூழ்ந்த கிராமத்தில் முதன் முதலில் ஆசிரியனாக வருகிறான் ஒரு இளைஞன்.அந்த கிராம மக்கள் அவனுடன் சேர்ந்து பள்ளிக்கூடத்தை கட்டும் பணியில் ஈடுபடுகின்றனர்.முதல் பார்வையிலே அவனிடம் மனதை பறிகொடுக்கும் Zhao Di (Zhang ziyi) அவன் பார்வை படும் இடங்களில் சுற்றி வருகிறாள். பள்ளிக்கூடம் கட்டும் பணியில் ஈடுபடும் ஆண்களுக்கு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பெண்கள் உணவு தயாரித்து கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் நேரிடுகிறது.மிகுந்த பரபரப்புகளோடு அவனுக்காக தான் பிரத்யேகமாய் சமைத்து கொண்டு செல்லும் உணவை அவன் சாப்பிட வேண்டும் என ஏங்குவதும்,தன் வீட்டில் அவன் உணவு அருந்தும் நாளுக்காய் காத்திருந்து மிகுந்த அன்போடும் வெட்கத்தோடும் அவள் உணவு பரிமாறுவதும்,அந்த ஆசிரியனின் குரல் கேட்பதற்க்காக அவள் வீட்டிலிருந்து வெகு தொலைவிலிருக்கும் கிணற்றுக்கு நீரெடுக்க வருவதும்
அரசியல் காரணங்களுக்காய் அவனை சிறைப்பிடித்து செல்வதை கேள்விப்பட்டு அந்த மலைப்பாதையில் பதபதைப்புகளோடு ஒடிவருவதுமாய் ஒரு எளிமையான கிராமத்து பெண்ணின் காதலை அழகாய் சொல்லியிருக்கிறார்கள். அவனுக்காக உருகி,தவித்து,ஏங்கி அதில் வெற்றியும் பெறுகிறாள்.



படம் முழுக்க அந்த ஆசிரியனைப் பற்றி பேசுகிறார்கள். அவனின் எளிமை,அன்பு,உரிமைக்காக போராடும் குணம் என மிகச்சிறந்த மனிதன் ஒருவனின் தன்னலம் கருதா தொண்டை பாராட்டுகிறார்கள். இதை எல்லாவற்றையும் விட இந்த பெண்ணின் கண்மூடித்தனமான காதல் அம்மனிதனை மிக உயரத்திற்கு கொண்டு செல்கிறது.

ஒரு பெண்ணின் எல்லைகளற்ற அன்பை உள்வாங்கிக் கொண்டு அந்த கிராமத்திலேயே தன் வாழ்நாள் முழுதும் செலவிட்டு ஒரு தலைசிறந்த ஆசிரியனாய் எண்ணற்ற மாணவர்களை உருவாக்கி அந்த கிராமத்தை விட்டு வெளியேற மறுத்து ஒரு மோசமான பனி நாளில் இறந்து போகிறார்.அவரின் இறுதிசடங்குகள் அவரது மனைவியின் ஆசைப்படி நிறைவேறுகிறது. உலகின் பல பாகங்களிலிருந்து அவரின் மாணவர்கள் குழுமி ஒரு மிகச்சிறந்த மனிதனின் மரணத்தை சிறப்பிக்கின்றனர்.

இயற்கையின் வண்ணங்களை வாரிப் பூசிக்கொண்டதுபோல் படத்தின் ஒவ்வொரு காட்சியும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. படத்தோடு கரைந்துபோகும்படியாய் அற்புதமான பின்னணி இசை. 18 வயதான சின்னஞ்சிறு கிராமத்து பெண்ணின் காதலை கவிதையாய் சொல்லியிருக்கிறார்கள். ஒரு கிராமத்து பெண்ணின் காதலை, அன்பை, பதட்டங்களை, இளமையின் அத்தனை உணர்வுகளையும் துல்லியமாய் பதிவு செய்திருக்கிறது இப்படம். ஜாங் ஜியி என்ற இந்த பெண்ணின் முகம் வெகுநாட்களுக்கு மனதை விட்டு அகலவே இல்லை.



உயரமாய் புற்கள் வளர்ந்த மிக நீளமான,நகரத்தை இணைக்கும் அச்சாலை படத்தின் மிகச் சிறந்த குறியீடு. இந்த பெண் அவனை முதலில் காண்பது, கொட்டும் மழையில் அவனின் திரும்புதல்களுக்காய் காத்துகிடப்பது. எப்போதும் அவனை சந்திக்க ஓடிக்கொண்டே இருப்பதனெ அந்த சாலை முழுக்க அவள் காதல் பரவிக்கிடக்கிறது.

இறுதியில் அவன் உடலை சுமந்தபடி ஒரு பெரும் கூட்டம் அச்சாலையை நிறைப்பது கவித்துவம். ஓரு மிகச்சிறந்த மரணம் இப்படித்தான் இருக்கமுடியும்.

மிகப் பெரிய பள்ளிக்கூடத்தை கட்டிவிட வேண்டும் என்கிற அந்த ஆசிரியனின் ஆசை நிறைவேறாமலேயே போய் விடுகிறது.அந்த சிறிய மலைக்கிராமப் பள்ளி பராமரிப்புகள் ஏதுமற்றும்,அடுத்த ஆசிரியன் யார்? மற்றும் அடுத்த தலைமுறைக்கான கல்வி பற்றிய கேள்விகளோடு படம் முடிகிறது.

தன் தாய்க்காக ஒரே ஒரு நாள் அப்பள்ளியில் பாடம் சொல்லித்தந்துவிட்டு விடைபெறுகிறான் அவள் மகன்.அவனது தந்தையின் குரலைப்போல் இல்லாவிட்டாலும் மகனது குரலும் காற்றில் கலக்கிறது.

இத்திரைப்படம் மூலம் தனிமனிதனது வேர் சார்ந்த கடமைகளின் அவசியத்தை முன் வைக்கிறார் ஷாங்க் யிமோ.

* ஏப்ரல் மாத வலம்புரி இதழில் இக்கட்டுரை வெளியானது.

12 comments:

MyFriend said...

இந்த படம் எப்போதோ பார்த்த ஞாபகம்.. இப்போ தலைப்பு கூட ஞாபகம் இல்லைங்கோ!! :-(

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

zhang yimouவின் படங்கள் எல்லாமே பெரும்பாலும் பிடிக்குமென்றாலும் அழகான இந்தக் காதற்கதை ரொம்பவும் பிடித்துப்போனது.

Ziyi Zhangஐயும் ரொம்பவே பிடித்திருந்தது.

zhang yimouவின் படங்களில் பயன்படுத்தும் வர்ணங்கள் மிகவும் விசேடமானவை இல்லையா. அதைப்பற்றியும் நாம் விரிவாகப் பேசவேண்டும். குறிப்பாக, இவருக்குப் பிடித்த சிவப்பு வர்ணம் பற்றி.

இவருடைய படங்களில் 4 படங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஒரு நாள், இவருடைய படங்களைப்பற்றி எழுத எண்ணம்... பார்ப்போம்..

ஒரு வழியாக விரிவாக எழுதியிருக்கிறீர்கள். வலம்புரிக்கு நன்றி! :)

-மதி

நாகை சிவா said...

பார்க்க முயற்சிக்குறேன் அய்யனார்!

உங்கள் நண்பன்(சரா) said...

அய்யனாரின் பதிவில் நான் இடும் முதல் பின்னூடம் என்று நினைக்கின்றேன்!
இந்தக் கதையை எங்கேயோ படித்த நியாபகம், திரைப்படமாகப் பார்க்க வில்லை! கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் பார்ப்பேன்! பகிர்ந்துமொண்டமைக்கு நன்றி!

அன்புடன்...
சரவணன்.

Ayyanar Viswanath said...

/இப்போ தலைப்பு கூட ஞாபகம் இல்லைங்கோ!! :-( /

திரும்ப பாருங்க

Ayyanar Viswanath said...

மதி உண்மையிலே சித்தார்த்துக்குதான் நன்றி சொல்லனும் ரெண்டு முறை எழுத வச்சான்.இன்னும் கொஞ்சம் விரிவா..இன்னும் கொஞ்சம் விரிவான்னு..தரமான ஆளுங்க மத்தியில் புதுசான எனக்கும் வாய்ப்பு கொடுத்ததுக்கு வலம்புரிக்கு நன்றியும் அன்பும்..

இவரோட red sorghum படம் பாத்திருக்கேன்..ஒரு சிவப்பு வண்ணக் கவிதை..

/இவருடைய படங்களைப்பற்றி எழுத எண்ணம்... பார்ப்போம்../

காத்திருக்கோம் மதி :)

Ayyanar Viswanath said...

சரி புலி

ஆமாம் சரவணன் :)
மிகவும் நன்றி

உண்மைத்தமிழன் said...

நானும் இந்தப் படத்தை பார்த்திருக்கிறேன். சீனாவில் இப்போதெல்லாம் கலாச்சார மீறல்களையோ, அல்லது கலாச்சாரத்தைக் காப்பாற்றும் விதமான கதைகளோ அதிகம் வருவதில்லை.

இப்படத்தில் இறந்து போன கணவன் அந்தக் கிராமத்தையும், தான் செய்த ஆசிரியர் வேலையையும் எவ்வளவு தூரம் காதலித்தார் என்பதை அவருடைய மனைவி புரிந்து வைத்துள்ளார். அந்த புரிதல்தான் தன் கணவரின் உடலை அக்கிராமத்தில்தான் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார். இறந்து போனவரின் உடலைக் கொண்டு செல்வதுடன் துவங்குகின்ற ந்தக் காதல் கதையைப் படம் பிடித்திருக்கும் அழகு அற்புதம். அருமையான லொகேஷன். மென்மையான நடிகர்கள்.. காதலியாக நடித்தவரின் முகம் ஜென்மத்திலும் மறக்க முடியாது. அப்படியொரு முகம்.

சீனா இயக்குநர்கள் அனைவருமே ஏதாவது ஒரு ரூபத்தில் கல்வி, உள் கட்டமைப்பு, கிராமப்புற வசதி மேம்பாடு இவற்றை மையமாக வைத்தே திரைப்படங்களை எடுக்கிறார்கள். நாம்..

Ayyanar Viswanath said...

/காதலியாக நடித்தவரின் முகம் ஜென்மத்திலும் மறக்க முடியாது. அப்படியொரு முகம்/
:) நிஜம்தான் ..ரெண்டு நாள் பித்து பிடிச்ச மாதிரி அந்த பொண்ணு மனசுக்குள்ள உட்கார்ந்து இருந்தது

விரிவான பின்னூட்டத்திற்க்கு நன்றி உண்மைத் தமிழன்

தென்றல் said...

விரிவான.... அழகான விமர்சனம், அய்யனார்!

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

Jazeela said...

வலம்புரியில் படித்த கட்டுரை. அங்கே பின்னூட்டம் போடவில்லை அதற்கான வாய்ப்பாக இங்கே ;-). நல்ல விரிவாக அழகாக இரசித்து எழுதியிருக்கிறீர்கள். ரொம்ப பழைய படத்தை பற்றி எழுதுவதால் படித்த பிறகு பார்க்கும் ஆர்வம் வரும் போது கிடைக்கமாட்டிங்குது குருந்தகடு. ;-)

Ayyanar Viswanath said...

நன்றி தென்றல் :)

ஜெஸிலா குறுந்தகடு இருக்கு ..ஆனா அதுக்கா பதிலா புத்தகங்கள் கொடுக்கனும் :)

Featured Post

test

 test