Friday, May 25, 2007

பைத்தியமாதல் அல்லது மனம் பிறழ்தல்



இந்த இரவை இப்படியே நீட்டிக்க விருப்பமில்லை அவனுக்கு இரவுகளின் மீது தீராக் காதல் கொண்டதால் அவன் இரவுகளை தூங்கிக் கழிப்பதில்லையென தன் பதின்ம பருவத்தில் சபதமெடுத்துக்கொண்டான்.இரவின் சன்னல்கள் அவன் சிறுவயதில் திறக்கவேயில்லை ஒரு பெண்ணின் மெய் தீண்டலில் அவன் இரவு விழித்து கொண்டது இளமையின் தடத்தில் இரவு தன் பூக்களை ரகசியமாய் ஒளித்துவைக்கிறது.பெண்ணை அறியும்போது இரவும் சேர்ந்தே அறிந்து கொள்ளப்படுகிறது. மதுவின் போதைக்கு சாத்தியமற்ற இந்த இரவின் நீட்சியில் என்ன செய்யலாம்? நெஞ்சு கமற கமற புகைத்து தொலைக்கலாம்.அறையெங்கும் சிதறிக் கிடக்கும் புத்தகத்தில் இரவு பற்றி எழுதப்பட்ட கருமை பூசிய கவிதைகளை எத்தனையாவது முறையாகவோ படித்து தொலைக்கலாம்.வேறென்ன செய்ய முடியும் இந்த வெளியில்? அறையில் சூழ்ந்திருக்கும் மங்கலான வெளிச்சத்தை மொத்தமாய் மங்கச் செய்து விட்டு சன்னலைத் திறக்கலாம் பின்னிரவில் நிலவின் ஒளி சன்னலின் வழி இறங்கும் நிகழ்வைப் பார்த்துகொண்டிருக்கலாம்.வேறெதாவது கிளர்ச்சியான,ஆறுதலான ஒரு சம்பவத்தை நினைத்துக் கொண்டிருக்கலாமெனில் பாழாய்போன இருத்தலிய கொள்கைகள் தன் கூரான பற்களினால் கடித்துக் குதறி மூளையில் படிந்துள்ள பழைய அடுக்குகளைத் தின்று செறித்து விட்டது.மேலும் எந்த ஒரு ஆறுதலான நெகிழ்வான நிகழ்வுகளும் அவனுக்கு நேர்ந்ததாய் நினைவில்லை.நேற்றைய இரவில் என்ன செய்தான் என்பது கூட மறந்து போய்விட்டிருந்தது.எல்லாம் உதறி வெளிவந்து இரவையும் கருமையையும் உற்று நோக்குகையில் இரவு ஒரு பெண்ணென்பதுத் தெரிய வந்தது.இந்த உலகம் தோன்றிய தினத்திலிருந்து இந்த இரவுப் பெண் வெகு ரகசியமாய்த் தன் வெளியுடன் கலவி கொள்ளும் அதி ரகசியத்தினைத் தெரிந்து கொண்ட அந்த இரவில் தன் முதல் கிளர்ச்சியை தன் இயற்கை விதித்த உச்சத்தின் பரவசத்தை தன்னிச்சையாக அடைந்தான்.தன் புனிதம் வெளிப்பட்ட இரவு குமைந்து மருகி அவனை குரூரத்துடன் பார்த்தது.அவனின் நினைவில் தன் பிம்பத்தை அழிக்க முயன்று தோற்ற இரவுப்பெண் தன் இயலாமையின் வன்மத்தில் அவனை சபித்து விட்டு ஓடி மறைகிறாள்.

இயக்கத்திலிருக்கும் பொருட்களின் மேல் இரவுப்பெண் தன் மேலைடையை களைந்து வெகு நேர்த்தியாய்ப் போர்த்திவிட்டு பிரபஞ்சத்துடன் ரகசிய கலவியில் தன்னைத் தொலைக்கும்போது இவனின் நிலைக்குத்திய விழிகள் நினைவிற்க்கு வந்து அச்சமடைந்தாள்.தன் அந்தரங்கம் வெளிப்பட்ட வன்மத்தில் இருள் பிம்பம் கலைத்து சொற்களின் வடிவம் கொண்டு அவனின் இருப்பிடமடைகிறாள்.மதிய கனவொன்றில மனம் பிறழ்ந்து கொண்டிருந்த அவனை அசைத்து தான் இருள் நகரத்தில் வாழ்வதாகவும்,அவனின் இரவு காதலை சிலாகித்தும்,இருளின் வசீகரம் அவளையும் தூங்கவிடாததைப் பற்றியும் இருள் பற்றி எழுதபடும் கவிதைகளை அவள் தின்று செறிப்பதைப் பற்றியுமாய் தொடர்ச்சியாய் கதைக்கிறாள். ஒத்த உணர்வுகளை கொண்ட சக பயணியை அவள் கண்டெடுக்க இத்தனை நாள் காத்துக்கொண்டிருந்ததாகவும் அவனைப் பற்றி நேற்றய இரவில் விழித்திருந்த ஆந்தையொன்று அவன் இருப்பறிந்து உலகின் மற்றொரு பாகத்தில் இருளை அசையாது பார்த்துக்கொண்டிருந்த அவளிடம் வந்து சொன்னதாகவும் இருளின் தடம்பிடித்து உன்னிடம் வந்து சேர்ந்தேனெனவும் அவன் தலை வருடிக் கதைத்தாள்.
முதலில் நம்ப மறுக்கும் அவன் அவளின் வெம்மையை உணர்ந்து கொண்டபின் அவள் மீது பைத்தியமாகிறான்.மெல்ல அவனின் உடலின் மீது புராண காலப் பசலைகள் தனது கொடிகளை விரித்துப் படறத் துவங்குகின்றன.உடல் தானாகவே பச்சை நிறத்தை அடைகிறது.சோர்வடைந்த அவனின் கண்களிலிருந்து அவன் எப்போதும் பார்த்திராத சமவெளிகளின் நெடிய பசுமை மெல்ல நிரம்புகிறது. அவன் உடலில் ஏற்படும் மாற்றங்களைத் தடுக்க முயன்று ஓய்கிறான்.மேலும் அவளின் கதையாடல்களை தாங்க இயலாது தான் விரும்பும் இரவொன்றில் தூங்கியே இராத பொழுதொன்றில் அவளின் சொற்களை தன்னுள் நிரப்பியபடித் தூங்கிப் போகின்றான்.ஒரே நாளில் தன் எதிரியை ஒழித்த இரவுப் பெண் அன்று இரவு தன் முழு ஆடை களைந்து பிரபஞ்சத்தில் லயிக்கிறாள் மீண்ட தன் அந்தரங்கத்தின் புனிதங்களோடு. பாதுகாக்கப்பட்ட பிரபஞ்ச ரகசியம் மீண்டும் தன்னை மூடிக் கொள்கிறது.

பறவைகளோடு விடிந்த பகல் அச்சமூட்டுவதாய் இருக்கிறதவனுக்கு அவன் எப்போதுமே பார்த்திராத பகலின் ஒளிவெள்ளம் வெகு நேரத்திற்க்கு அவன் கண்களை செயலிழக்க செய்து குருடாக்குகிறது.இரைச்சலின் சத்தங்களுக்கு அவனின் காதுகள் பழகாததால் பெரும் சத்தமொன்றில் கிழிந்து காதுகளிலிருந்து வெள்ளமென வடிய ஆரம்பிக்கிறது குருதி.புகையில் தூசுப்படலத்தில் வீங்கிப் போகிறது நாசித்துவாரம்.தன் அறையை இருட்டாக்கி ஒரு மூலையில் பதுங்கிகொள்கிறான் கருநிழல்கள் வசிக்கும் இடுக்குகளில் தன்னை பொருத்திக்கொள்ளும் கணத்தில் அவன் தானும் ஒரு நிழல் என்பதை உணரத் தொடங்குகிறான்.மேலும் தன்னை இந்நிலைக்குத் தள்ளிய அப்பெண்ணின் வெம்மை மிகுந்த சொற்களின் விஷம் அவன் உடலிலிருந்து மெல்ல வடிய ஆரம்பிக்கிறது.மீண்டும் அவனது உடல் கருமை வாறிப் பூசிக் கொள்கிறது.இருப்பினும் மதிய பொழுது நெருங்கும்போது அவன் உடல் பரபரப்படைகிறது.அவளின் சொற்கள் மிதந்து வரும் சன்னலின் கதவுகளை திறந்து வைக்கிறான் மிகுந்த பசியுடன் அவளின் சொற்களுக்காக காத்திருந்ததின் சோர்வில் மீண்டும் உறங்கிப்போகிறான்.அந்தியில் விழிப்புறும் அவன் தான் வஞ்சிக்கப்பட்டதை அறிந்து குமைகிறான்.சொற்கள் மிதந்து வந்ததின் இருப்பிடம் புரிந்து வெறி கொள்கிறான்.இனி இரவில் மட்டுமில்லை பகலிலும் தூங்குவதில்லையென குமைந்து தன் இமைகளை ஒவ்வொன்றாக பெயர்த்து எறிகிறான்.நிலைக்குத்திய விழிகளுடன் அமர்ந்திருந்தான் இரவுப்பெண்ணின் வருகைக்காக

நேற்றய லயிப்பில் சோர்ந்த இரவுப்பெண் இவனை மறந்து தூங்கிப் போகிறாள் சற்று தாமதித்து விழிப்புற்ற அவள் மதிய பொழுதில் தான் அனுப்ப மறந்த சொற்கள் அவளை சூழ்ந்திருப்பது கண்டு கலக்கமுற்றாள்.வாரி சுருட்டி எழுந்து வெளியை நெருங்கும்போது அவனின் சலனமில்லாத அமர்வு அவளுள் பெரும் பீதியடையச் செய்தது மேலாடை கலையுமுன் சொற்களின் வடிவம் கொண்டு அவனை நெருங்குகிறாள்.மிகுந்த பாசாங்குடன் அவன் தலைக்கோதும் உத்வேகத்தோடு அவன் உடல் தொட்டு முகம் நிமிர்த்துகையில் அவனின் இமைகளற்ற கண்களின் தரிசனம் பார்த்து அதிர்ச்சியில் விறீடுகிறாள் இனி எப்போதுமே காக்க முடியாத தன் அந்தரங்கத்தின் புனிதம் அவனின் கண்களின் வழியே கைக்கொட்டி சிரிப்பது கண்டு உறைந்து போகிறாள்.வெகு நேரமாகியும் இரவு வராததை கண்டு குழம்பிய பகல் அவளின் வரவிற்க்காகத் தன்னை நீட்டிக்கிறது.நள்ளிரவாகியும் முடியாத பகலினை கண்டு அதிர்ச்சியடையும் உலகம் குழப்பத்தில் மூழ்குகிறது முடியாத பகலின் உக்கிரத்தில் மனம் பிறழ்ந்து பைத்தியமாகிறது உலகம்.

23 comments:

Anonymous said...

தலைவா

ஏன் இந்த கொலவெறி

இளங்கோ-டிசே said...

நன்று.

காயத்ரி சித்தார்த் said...

உறைய வைத்த கற்பனை! விமர்சிப்பதற்கான வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னும்...

கதிர் said...

முத்தறதுக்குள்ள ஒரு கண்ணாலத்த பண்ணிக்கோ ராசா!

பிரதி சனிக்கிழமைளில் தலைக்கு எண்ணெய் வைக்கவும்

அரை மணிக்கொருமுறை சூரிய வெளிச்சத்தை பார்க்கவும்.

Ayyanar Viswanath said...

அனானி உனக்காகத்தான் இந்த முற கொஞ்சம் அடக்கி வாசிச்சேன் :)

Ayyanar Viswanath said...

நன்றிகள் டிசே

Ayyanar Viswanath said...

காயத்ரி இதில் எதுவும் உள்குத்தில்லையே :)

Ayyanar Viswanath said...

தம்பி எண்ணெயும் சூரியனும் ஓ கே
கல்யாணத்துக்கு ஏதாவது ஏற்பாடு ???ஹி..ஹி..

Jazeela said...

அய்யனார் எப்படி இப்படியெல்லாம்? கற்பனை மட்டும் தானே?

பாரனாய்ட் தாக்கத்தில் இரவு ஒழுங்கா தூக்கம் வராதது மாதிரி தெரியுது உங்களுக்கு. ;-) வெய்யில்ல அதிகம் சுத்தாதீங்கன்னா கேட்டாதானே ;-)

தமிழ்நதி said...

நன்றாக இருக்கிறது அய்யனார்! இதைத் தான் பின்நவீனத்துவ எழுத்து என்பதா... 'புண்'நவீனத்துவமாக வந்திருக்கிறது. ஒரு மாதிரி கவலையாக இருந்தது வாசிப்பின் முடிவில். தற்சோகம் மட்டும்தானே தெரிகிறது இதில். அவளைப் பேசவிடாத ஒற்றைப்பார்வை உறுத்துகிறது.

மஞ்சூர் ராசா said...

கோணங்கியின் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை.

கதிர் said...

//கல்யாணத்துக்கு ஏதாவது ஏற்பாடு ???ஹி..ஹி..//

உனக்குலாம் ரொம்ப கஷ்டம்யா!!!!

என்னோட பக்கம் வந்து பாரு கல்பனாக்கள், மஞ்சுளாக்கள் எல்லாம் பாக்கலாம்.

ஆமா அதெல்லாம் உன்னோட வேலைதான??

எனக்கு தெரியும்யா!

Ayyanar Viswanath said...

ஜெஸிலா
கற்பனை மட்டும்தான் மத்தபடி நான் கிடேசன் பார்க் மெம்பர்தான் :)

Ayyanar Viswanath said...

தமிழ்நதி புண்நவீனத்த புரிஞ்சிகிட்டதுக்கு நன்றி ..ஆமாம் ஒற்றை பார்வைதான் இல்ல..எனக்கு இப்பதான் படுது..:)

Ayyanar Viswanath said...

அய்யோ மஞ்சூர் அப்படியா :(

Ayyanar Viswanath said...

யோவ் தம்பி உன் ரசிகைகளுக்கு நான் ரசிகன் மட்டும்தான்..மூல காரணம் நானில்ல நம்புய்யா

Rajasekar said...

Hidaa...
Unakku intha mathiri ellaam aahumnu naan nenaichu kooda paarkala.
Naan un Annan kitta un kalyana vishayama pesaren :-)

Ayyanar Viswanath said...

வாங்க மழை பிரியரே !! பேர் சூப்பரப்பு!! சீக்கிரம் எழுத ஆரம்பி

செல்வநாயகி said...

நன்று. இதை எப்படியோ தவறவிட்டுவிட்டேன் அய்யனார். பூங்காவிலிருந்து வந்தேன். எனக்கும் உங்கள் எழுத்துக்கள், லாவகமாகக் கைகூடிவரும் நடை எல்லாம் இன்னும் பல தளங்களிலும், பரப்புக்களிலும் விரிவடையவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. தவறவிடாது அவற்றைப் படிக்கும் ஆர்வமும். தொடருங்கள்.

நளாயினி said...

இருட்டறையுள் ஊடறுத்த உட்புகுந்த ஒளிக்கற்றையாய் ஊடுருவிய காதல் படுத்தம் பாடு. அருமை. மிகவும் ரசித்த வாசித்தேன்.

Ayyanar Viswanath said...

உங்கள் ஊக்கத்திற்க்கும் அன்பிற்க்கும் நன்றி செல்வநாயகி பூங்காவிற்க்கும் நன்றிகள்

Ayyanar Viswanath said...

நளாயினி
:) இந்த வடிவம் உங்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது.நன்றி

Anonymous said...

பயமா இருக்கு..நீங்க இவ்வளவு பெரிய மண்டைன்னு தெரியமால் போச்சு,

Featured Post

test

 test