Sunday, August 19, 2007

'அன்புடன் புனிதர்களுக்கு' - எதிர்வினை 2

எதிர்வினை - 1

நகைச்சுவை என்கிற பெயரில் தமிழர்களின் புறநானூற்றை 'முறநானூறு' என்று எழுதி மகிழ்கிறது ஆனந்த விகடன். மன்னர்கால நகைச்சுவைத் துணுக்குகள் என்கிற பெயரில் தமிழர்களின் மூளைகளில் இவர்கள் செய்ய நினைக்கிற தொழிற்பாடுகளும்.. தமிழர்களின் வீரமரபை இழிவு செய்கிற செயலும்...புரியாமலில்லை.

எனவே, தமிழினம் மேம்படக் கூடாது என்கிற உள்நோக்கில் செயல்படும் ஆனந்த விகடன் பார்ப்பனர்களைப் பாதுகாப்பதில் மட்டும் விழிப்புணர்வோடு இருக்கிறது என்பதில் எனக்கு நேர்ந்த அனுபவமே சாட்சி.

ஹாய் மதன் கேள்விபதில் பகுதியில் இது கேள்வி...

பாரதியார் காதலித்திருக்கிறாராமே?

இதற்கு மதனின் பதில்...

மனைவியோடு வாழ்வதற்கே நேரமில்லாத பாரதிக்குக் காதலியா? எல்லாம் பொய்.

இந்தப் பதிலைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன். பாரதியார் தம் சுயசரிதையிலேயே தம் பிள்ளைப் பிராயத்துக் காதலைப் பற்றி உணர்வுப் பூர்வமாக எழுதியிருக்கிறரர். அவரது வரிகளையே ஆதாரமாகக் கொண்டு இந்தத் தவறான பதிலை மதனிடம் கூறி திருத்தி வெளிடுங்கள். ஒரு மகாகவியின் வரலாற்றில் பல இலட்சம் வாசகர்களுக்கு ஒரு பிழையைப் பதிவு செய்வது தவறு என்று மடல் எழுதி அனுப்பினேன்.

ஆனந்த விகடன் அந்தப் பிழையைத் திருத்த முன் வரவில்லை. அடுத்த வாரம் மதனுக்குத் தொலைபேசி செய்து "பதினோரு வயது பாரதி ஒன்பது வயது பெண்ணைக் காதலித்திருப்பதாக சுயசரிதையில் கூறியுள்ளார். எனவே, தங்கள் தவறான பதிலுக்குத் திருத்தம் வெளியிடுங்கள். அதுதான் நாகரிகம்" என்றேன்.

"வயசுக்கு வராத பெண்ணை பாரதி காதலித்திருக்கிறானா?" இதுதான் மதன் என்னிடம் கேட்ட கேள்வி. மதன் கேள்வி பதில் ஆனந்த விகடனின் வியாபாரத்திற்கான ஒரு பகுதி. மதனின் மீதான வாசகர்களின் நம்பகத்தன்மை குறைதல் கூடாது என்பதற்காகவே ஒரு மகாகவியின் வாழ்க்கை வரலாற்றை மறைக்கத் துடிக்கிறது ஆனந்த விகடன்!

இந்த ஆனந்த விகடனில்தான் ஞாநி அறிந்தும் அறியாமலும் என்ற பாலியல் மருத்துவ அறிவியல் தொடரை எழுதுகிறார். இந்தத் தொடரை வெளியிடும் தகுதி ஆனந்த விகடனுக்கு இல்லை என்பது எம் கருத்து. நோயுற்ற பெண்ணுக்கு மருத்துவம் பார்க்க வேண்டுமென்றால் மருத்துவரிடம் போகவேண்டுமே தவிர விபச்சாரத் தரகனிடம் அழைத்துப் போக வேண்டிய அவசியமில்லை. ஆனந்த விகடன் தமிழ்ச் சமுகத்தைச் சீரழிக்கத் துடிக்கிற விபச்சாரத் தரகுவேலையை பார்க்கிறது என்பதற்கு இதோ இந்தக் குறுங்கதையே எடுத்துக்காட்டு. 27.6.2007 ஆனந்த விகடனில் வந்தது.

"வா" என்றான் அவன்.

"ஊகூம்" என்றாள் அவள்.

"வா" என்றான் மீண்டும்.

"இல்ல" என்றாள்.

"வா" என்றான் திரும்பவும்.

"தப்பு" என்று முறைத்தாள்.

அதன் பிறகும் "வா" என்று இழுத்தான்,

"போடா" என்று அவன் தலையில் ஒரு குட்டு வைத்தாள்.

‘வ’ பக்கத்துல ‘¡’ போட்டிருந்தா தான் ‘வா’ன்னு இழுக்கணும், இது 'வ' என்று பொறுமையாக அந்த சிறுவனுக்குத் தமிழ்ப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தினாள் அந்த மிஸ்! ஒரு சிறுவனுக்கு ஒரு தமிழாசிரியை தமிழ் சொல்லிக் கொடுக்கும் காட்சியை வைத்தே இவ்வளவு வக்கிரமாக காம இச்சையைத் தூண்டி தமிழர்களிடம் காசு பார்க்கத் துடிக்கிற ஆனந்த விகடனா தமிழ்ச் சிறுவர்களுக்குப் பாலியல் கல்வியை நடத்தும் காகிதப் பள்ளிக் கூடமாக விளங்கப்
போகிறது. நம்புகிறீர்களா தமிழர்களே?

ஆனந்த விகடன் நமக்கு.. நம் தமிழர்களுக்கு ஏதேனும் செய்யுமென்று நம்புகிறீர்களா? இதோ 9.06.2007இல் ஆனந்த விகடனில் வந்த நகைச்சுவைகளைப் படியுங்கள்.

"என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு நேத்துதான் தெரிஞ்சது"

“தெரிஞ்சதும் என்ன பண்ணினே?”

"கலாவை வேலைய விட்டு நிறுத்திட்டேன்".


"நம்மோட கள்ளத் தொடர்பு தெரிஞ்சுட்டதால். உன்னை வேலையைவிட்டு நிறுத்தப் போறா என் மனைவி!"

"கவலைப்படாதீங்க எஜமான். உங்களுக்கு வெளியில இருந்து ஆதரவு தர்றேன்!"

ஆனந்த விகடன் ஆசிரியர் அவர்களே! பத்திரிகையாளர் ஞாநி அவர்களே! உங்கள் வீட்டிற்கு வந்து பண்டம் பாத்திரம் கழுவி, உங்கள் அழுக்குத் துணிகளைத் துவைத்து. உங்கள் அழுக்குத் துணிகளைத் துவைத்து. உங்கள் அறைகளைக் கூட்டிப் பெருக்கி - அதிலிருந்து வருகிற வருமானத்தில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்களே, அந்தப் பிள்ளைகளுக்கு அவர்களின் அம்மாக்களைப் பற்றி இவ்வளவு கேவலமாக அறிமுகப்படுத்துகிற ஆனந்த விகடனிலா எங்கள் பிள்ளைகள் பாலியல் அறிவைக் கற்றுக் கொள்ள வேண்டும்?

தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் எங்களையெல்லாம் படியுங்கள் படியுங்கள் என்று போராடிப் படிக்க வைத்ததெல்லாம் இப்படி நீங்கள் எங்கள் தாய்மார்களைப் பற்றி கேவலமாக எழுவதைப் படிக்கத் தானா ஞாநி!

ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லி ஓ போட வைக்கிற ஞாநியே! இப்படி சமூக பொறுப்பற்ற முறையில் பெண்களைக் கேவலப்படுத்தி பெண்களின் அரை நிர்வாணப் படங்களைப் போட்டு, படிக்கும் தமிழர்களின் காம இச்சையை வக்கிரமாகத் தூண்டிவிட்டு பணம் பறிக்கும் ஆனந்த விகடன் விற்பனையை அதிகப்படுத்துவதற்கான பச்சை மன்னிக்கவும். நீல வியாபாரத் தந்திரமே உங்களின் இந்தப் பாலியல் அறிவியல் மருத்துவத் தொடர்.

"ஒரு மருத்துவர், மருத்துவத்துக்கான கல்வித் தகுதி இல்லாத ஒருவரை, அதுவும் சிறுவனை.. அறுவை சிகிச்சை செய்யவோ, அதற்கு உதவியாக இருக்கவோ அனுமதிப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. அது மருத்துவத் துறையின் அற நெறிகளுக்கு மட்டுமல்ல... மானுட அறநெறிகளுக்கும் விரோதமானது."

இப்படி... 4.7.2007 ஆனந்த விகடனில் சொல்லியிருப்பது வேறு யாருமென்று.. பத்திரிகையாளர் ஞாநி அவர்களே. ஞாநி அவர்களே! இதே கருத்து தங்களுக்கும் பொருந்தும் இல்லையா! பாலியல் அறிவியல் தொடர் எழுதுவதற்கான மருத்துவக் கல்வியைத் தாங்கள் எந்த மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றுள்ளீர்கள்?

தாங்கள் எழுதும் பாலியல் அறிவியல் கருத்துகளில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால்.. மருத்துவப் பட்டம் பெறாத தாங்கள் சொல்வதை நம்பி எப்படி தெளிவு பெறுவது? மருத்துவத் துறையின் அறநெறிகளுக்கும் மானுட அறநெறிகளுக்கும் இது மட்டும் விரோதமாகாதா? ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளும்.. ஞாநி போன்ற பத்திரிகையாளர்களும்.. திரைப்பட, தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் தமிழர்களிடம் மட்டும்.. பாலியல் சார்ந்த காமத்தை வக்கிர உணர்ச்சியாக வைத்து வணிகம் செய்வதற்கான காரணம் என்ன?

ஒரே காரணம்தான்...

கணவனும் மனைவியும்.. தனித்துப் படுக்க ஒரு வீடு கிடைக்காத, ஓர் அறை கிடைக்காத குந்தக் குடிசையில்லாத.. புறம்போக்குகளாய்ப் பெரும்பகுதித் தமிழர்கள் வாழவேண்டியிருப்பதன் சோகம்தான் இதற்கு அடிப்படைக் காரணம். இதற்கான அரசியல் விழிப்புணர்வு பெற்று எம் தமிழ் இளைஞர்கள் சமூகப் போராளிகளாக மாறிவிடக்கூடாது.. என்றும் இவர்கள் இரசிகர் மன்ற உறுப்பினர்களாகவே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.. இவர்கள் இந்த மூன்றாம் பால் வியாபாரத்தை நம்மிடம் மும்முரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால்.... ரஜினி குறித்து எழுதுகிற ஆனந்த விகடன், ‘சினிமா ஓகே. அரசியல்?’ என்று எழுதுமா?(4.06.2007)

ஏன் தமிழ்நாட்டை தமிழர்களே ஆளக்கூடாதா? நீங்கள்தான் அதிகார மய்யமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் நடிகர்கள்தான் ஆளவேண்டுமா? அரசியலுக்கு ரஜினியை அழைக்கிற ஆனந்த விகடனே.. பல்கலைக் கழகம் கட்டி... பள்ளிகள் கட்டி.. ஏழைகளுக்கு இலவசக் கல்வி கொடுக்க.. எடுக்கப்பட்ட சிவாஜி படத்தில் நடித்த ரஜினி அவர்களின் பணத்தில் (அதாவது அவரது உயிருக்குயிரான எம் தமிழ்ச் செல்வங்கள் கொடுத்த பணத்தில்) கட்டப்பட்ட.. 'ஆஸ்ரம்’ பள்ளியில் இலவசக் கல்விபெறும் மாணவர்களின் பட்டியலை.. அல்லது எந்தெந்த ரஜினி ரசிகர் மன்ற பிள்ளைகள் படிக்கிறார்கள் என்கிற பட்டியலை.. அல்லது ஒரு குழந்தைக்கான ஓர் ஆண்டு கட்டணம் எவ்வளவு என்கிற பட்டியலையாவது ஆனந்த விகடன் கேட்டு வெளியிட்டுவிட்டு .. அவரை அரசியலுக்கு அழைக்குமா? இது என்ன ஆனந்த விகடன் ஆசையா? இல்லை அக்ரகாரத்து ஆசையா? இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்களை ஏமாற்றிப் பிழைத்தது போதாதா?

விடுங்கடா சாமி.
-----------×××----------------

இந்த கட்டுரையை பரவலாய் எல்லாரையும் படிக்கவைக்க உறுதுணையாய் இருந்த அன்பின் சேதுக்கரசி aka சேவைக்கரசி க்கு நன்றியும் அன்பும்.நீங்கள் நாலோ ஆறோ புத்தகம் மட்டும் படித்தால் போதாது தோழி ஒரு குழுமத்தை நிர்வகிக்க/வழிநடத்த பரவலான வாசிப்பனுபவமும் பன்முக பார்வையும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தான சிந்தனைகளும் முக்கியமாய் கருத்து சுதந்திரம் மற்றும் எதிர்வினைகளுக்கான ஆரோக்யமான பதில்கள் சொல்லுமளவிற்க்கு விசய ஞானமுமிருந்தால் குழுமம் தனக்கான நோக்கங்களில் முழுமையடைய வாய்ப்பிருக்கிறது.ஆனால் அன்புடன் புகாரியை துதிபாட மட்டும்தான் துவங்கப்பட்டது என்ற நோக்கம் உண்மையாக இருக்குமெனில் அதற்கெந்த அடிப்படைத்தகுதிகளும் தேவையில்லை.ஒரு தமிழ்படித்த பேராசிரியர்,நல்ல பேச்சாளரை வைத்தே தமிழின் தொன்மையை குலைத்த பார்ப்பனிய நுண்ணரசியல் எத்தகைய ஆபத்தானது இதைப்புரிந்துகொள்ளக்கூட உங்களின் மெத்த படித்த பண்பான நண்பர்களால் முடியவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது.மேலும் அறிவுமதியைப் பற்றி விமர்சிக்க புகாரி போன்றவர்களுக்கு எவ்வித தகுதியுமில்லை என்பதை நான் சொல்லியா இத்தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்துகொள்ள வேண்டும்?

மேலதிகமாய் அன்புடனில் வேகாத பருப்பென்ற சொல்லை நீங்கள் பயன்படுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நவீனத்துவத்தின் துவக்கப்புள்ளி பருப்பை வேகவைப்பதிலிருந்துதான் துவங்குகிறது இந்த சிந்தனைகள தொடர்ந்தால் நீங்கள் விரைவில் பின்நவீனத்துவத்தை எட்டிவிடலாம் ஒரு பின்நவீன சிந்தனையாளராக நீங்கள் அடையாளப்படுத்தபட்டால் அதில் எந்த ஆச்சர்யமும் எனக்கிருக்காது. மாறாய் மகிழ்ச்சியே பொங்கும்.

சாய்வான எழுத்துக்களில் சுட்டியிருப்பவை அன்புடனில் எடுத்தது
நன்றி: கீற்று இணையதளம்

21 comments:

TBCD said...

நல்ல..எதிர் வினை..ஆனா இந்தக் கும்பலுக்கு ஒரு மாற்று இல்லாமலே இருக்கே....

Jazeela said...

அய்யனார், வளரும் அன்புடனைக் கண்டு வயிற்றெரிச்சல், 'அன்புடனை' பற்றி எழுதி அவர்களை பிடித்துக் கொண்டு நீங்கள் பெரிய ஆளாகும் ஆகும் முயற்சி என்றெல்லாம் வந்து சொன்னாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை :-)

Anonymous said...

TBCD,
மாற்று உருவாகிறது - வெகு விரைவில் வரும் பாருங்கள்

காயத்ரி சித்தார்த் said...

என்ன ஒரு எள்ளல்!! ஆனா எல்லை தாண்டாம நிதானமா கோபப்பட்டிருக்கீங்க அய்யனார்.. அறிவுமதி சொன்ன மாதிரி 'இவங்க சொன்னா சரியாய்த்தான் இருக்கும்'ங்கிற கருத்துருவாக்க லிஸ்ட்ல மதனை நானும் கூட சேர்த்திருந்தேன். எவ்ளோ தப்புன்னு இப்பதான் புரியுது. நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்.

Maravandu - Ganesh said...

//சாய்வான எழுத்துக்களில் சுட்டியிருப்பவை அன்புடனில் எடுத்தது//

சாய்வான எழுத்துக்கள் எவை என்று
மேலும் கீழும் இழுத்துப்பார்த்து சலித்துவிட்டேன் , சாய்வான எழுத்துக்களுக்குப் பதிலாக தடித்த எழுத்திலோ அல்லது ஏதோ ஒரு நிறத்திலோ கொடுக்கலாமே !
மற்றபடி இந்தப் பதிவிற்கு பதில் சொல்ல எந்த கருத்தும் இல்லை

Ayyanar Viswanath said...

டிபிசிடி

மாற்று என்பது நிச்சயம் தேவை..மேலும் அது ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்க வேண்டும்.இது என்னுடையது எனக்கு பிடித்தது மட்டும்தான் இங்கு எழுதப்படவேண்டும் என்கிற தட்டையான நோக்கமில்லாமல் மாற்று கருத்துகள்,மாற்று சிந்தனைகள் உள்ளதாய் அது செயல்படவேண்டும் என்கிற ஆசையும் எனக்கிருக்கிறது.

Ayyanar Viswanath said...

ஜெஸிலா

நிச்சயம் சொல்வார்கள் :))

பூனையின் உலகம் வேறென்ன சொல்ல

Ayyanar Viswanath said...

காயத்ரி

அறிவுமதியின் இக்கட்டுரை மிக நுட்பமாய் விரவிக்கிடக்கும் அரசியலை வலிமையோடு முன்வைக்கிறது.நமக்கே தெரியாமல் ஊடுறுவும் சமுதாய நச்சுக்கிருமிகளை அடையாளம் காட்டுவதாய் இருக்கிறது.இதை எதிர்த்ததுதான் தாங்க முடியாத எரிச்சலை கிளப்பியது.நச்சுக்கிருமிகளை விட அதை வளர்த்தெடுக்கும் சில சாக்கைடை மனங்கள்தான் சமுதாயத்திற்க்கு ஆபத்தானவை.

Ayyanar Viswanath said...

கணேஷ் சரி செய்கிறேன்

TBCD said...

பெயரே வித்தியாசமா இருக்கே....வந்தா சரிங்க..

//*அன்புடன் எதிர்ப்பாளர் சங்கம்
said...

TBCD,
மாற்று உருவாகிறது - வெகு விரைவில் வரும் பாருங்கள்*//


//*டிபிசிடி

மாற்று என்பது நிச்சயம் தேவை..மேலும் அது ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்க வேண்டும்.இது என்னுடையது எனக்கு பிடித்தது மட்டும்தான் இங்கு எழுதப்படவேண்டும் என்கிற தட்டையான நோக்கமில்லாமல் மாற்று கருத்துகள்,மாற்று சிந்தனைகள் உள்ளதாய் அது செயல்படவேண்டும் என்கிற ஆசையும் எனக்கிருக்கிறது. *//

ஏன்..மாற்று தேவை அப்படின்னா., வெகு ஜன மக்களிடையே..இந்த பத்திரிக்கைகளின் வீச்சு , அதிகம்..அப்படி இருக்கும்..போது...அந்த லெவல்ல ஒரு ரீப்ளேஸ்மண்ட் இருந்தா நல்லா இருக்கும்..
இப்போ அரசியல்ல இருக்கிற மாதிரியே..ஒரு மாற்று இல்லாத ஒரு சுழ்நிலை வந்திட்டா...அப்பறம்..இதுக்கு..விடிவே இருக்காது...மேலே சொன்னா மாதிரி...அன்புடன் எதிர்க்கனும்..நடுநிலையா இருக்கனும்.. இப்போதைக்கு..அப்படி ஒன்னு தமிழ் நாட்டில இருக்கிறதா தெரியல்ல...வேற வழியில்லாமா....வெளிநாடு போனாலும்..அந்த பத்திரிக்கைகளா தான் வாசிக்கிறாங்க..

வெங்கட்ராமன் said...

***************************
இந்தத் தொடரை வெளியிடும் தகுதி ஆனந்த விகடனுக்கு இல்லை என்பது எம் கருத்து.
***************************

என் கருத்தும் அதேதான் தலைவரே. . . .

********************************
ஆனந்த விகடன் தமிழ்ச் சமுகத்தைச் சீரழிக்கத் துடிக்கிற விபச்சாரத் தரகுவேலையை பார்க்கிறது
********************************

முற்றிலும் உண்மை. . . . .

நல்ல பதிவு. . . .

Ayyanar Viswanath said...

கருத்துகளுக்கு நன்றி டிபிசிடி மற்றும் வெங்கட்ராமன்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

என்னடா அய்யாருக்கு இவ்வளவு கோபமான்னு அறிவுமதியின் கட்டுரையை வாசித்துவிட்டு நூல் பிடித்து அன்புடன் குழுமத்துக்கு போய் அந்த இழையில் இருந்த 78 மடல்களையும் படித்துவிட்டு வருகிறேன்.

ரொம்பவும் சரியாக,

//அறிவுமதியின் இக்கட்டுரை மிக நுட்பமாய் விரவிக்கிடக்கும் அரசியலை வலிமையோடு முன்வைக்கிறது.நமக்கே தெரியாமல் ஊடுறுவும் சமுதாய நச்சுக்கிருமிகளை அடையாளம் காட்டுவதாய் இருக்கிறது.இதை எதிர்த்ததுதான் தாங்க முடியாத எரிச்சலை கிளப்பியது.நச்சுக்கிருமிகளை விட அதை வளர்த்தெடுக்கும் சில சாக்கைடை மனங்கள்தான் சமுதாயத்திற்க்கு ஆபத்தானவை. //

சொல்லியிருக்கிறீர்கள். ஆசிப், ப்ரியன் மற்றும் முஜிப் ஆகியோரும் இன்னும் சிலரும் அருமையாக எழுதியிருந்தார்கள். விதண்டாவாத மடல்கள் சிலதையும் வாசித்தபோது அவை, இதே போன்ற பல மடல்களையும் பின்னூட்டங்களையும் நினைவுபடுத்தின. நீங்களே நச்சுக்கிருமிகளைவிட அவற்றை வளர்த்தெடுக்கும் சில சாக்கடை மனங்கள் சமுதாயத்திற்கு ஆபத்தானவை என்று சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். :)

மிச்சம் தனியாக.

-மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அய்யனார்: சாய்வான எழுத்துக்களில் மாற்றியிருக்கிறீர்களா? தெரியவில்லை. வேறு வண்ணங்களில் கொடுங்களேன். வெறுமனே உங்களின் இடுகைகளை மட்டும் வாசிப்பவர்களுக்குக் குழப்பமாகவிருக்கும் என்று நினைக்கிறேன்.

-மதி

Anonymous said...

ஒரு ஊர்ல் ஒரு கவிஞர் இருந்தாராம். நெறைய கவுஜை எழுதுவாராம்.(யாராவது ஊம் கொட்டுங்கோ) மொதல்லே ஆண்மீக குழு ஒன்றில் இவர் பருப்பு வேகாமல் வெளியேறினார். அப்பாலே சிங்கை குழுமம் ஒன்றில் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என வாதிட காதைப்பிடித்து வெளியேற்றினார்கள். அப்பாலிக்கா காபி குடிக்கிற கிளப் அங்கேயும் இவர் பருப்பு வேகவில்லை பிறகு மரத்தடி புல்வெளீ அங்கேயும் சரியில்லை பின் உயிரெழுத்து அதுவும் ஹோகயா கடைசியில் அவரே அன்புடன் ஆரம்பித்தார். இப்போ அங்கேயும் அன்பில்லை தடித்த வார்த்தைகள்.

சுகுணாதிவாகர் said...

அறிவுமதியின் எழுத்து எது, உங்கள் எழுத்து என்ற குழப்பம் விஞ்சுகிறது. இதை வாசிக்கும்போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

மதன் கேள்வி பதில் பகுதியில் இப்படியொரு கேள்வி,

' ரம்பாவுக்குப் பெரிசு, சிம்ரனுக்குச் சிறுசு, சினேகாவுக்கு இல்லவே இல்லை. அது என்ன?"

இதற்கு மதனின் பதில்

'கண்டுபிடித்துவிட்டேன் கேபிடல் R தான் அது".

அந்த நேரத்தில் பாமரன் குமுதத்தில் 'தெருவோரக்குறிப்புகள்' தொடர் எழுதிக்கொண்டிருந்தார். அவர் இதேபோல ஒரு கேள்விபதில் எழுதினார். அது குமுதத்தில் வெளியாகவில்லை என்றாலும் தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொண்டது. இதுதான் அந்தக் கேள்விபதில்...

'ஜெயகாந்தனுக்கு நீளம், மதனுக்குத் தடிமன், சுஜாதாவுக்குக் கிடையவே கிடையாது. அது என்ன? "

விடையை ....ம் பக்கத்தில் பார்க்க.

விடை...?

மீசை.

கையேடு said...

மிக நல்ல, மற்றும் சீறிய சிந்தனையுடனான எதிர்வினை. வாழ்த்துக்கள் - இரா.இரஞ்சித்

குமரன் said...

//அறிவுமதியின் எழுத்து எது, உங்கள் எழுத்து என்ற குழப்பம் விஞ்சுகிறது//

எனக்கும் தான்.

இந்த லட்சணத்தில், வெளிவருவதாக சொல்கிறீர்கள். ஆனால், தமிழ்நாட்டில் வெகுஜன பத்திரிக்கை விற்பனையில் நம்பர் ஒன் என்கிறார்கள்.

என்ன கொடுமை அய்யா இது?

வல்லிசிம்ஹன் said...

அய்யனார், பதிவு கண்டு வருத்தமாக இருக்கிறது. காயத்ரி எழுதி இருப்பது போல நாம் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் ஒருத்தரை வைத்தால் அவர்களின் உண்மை வடிவம் பயமுறுத்துகிறது:((((

தமிழ் பொறுக்கி said...

வணக்கம்..
உங்களின் ரௌத்திரம் சரி தான்...
ஆ.வி. பார்த்திபனை வைத்து எவ்வளவோ சம்பாறித்ததது..
அப்போது சீதாவை தவறாக சித்தரித்தது.....
இப்போது சீதா வின் பேட்டியில் பார்த்திபனை தவறாக சித்தரிக்கிறது.....
மொத்தத்தில் வியாபாரம்....ஏது துலாபாரம்...

ஸ்ரீ சரவணகுமார் said...

நன்றி,இப்பொதெல்லாம் மதனுடைய பதில்களில் பல முரண்பாடுகளை காண்கிறேன். எனக்கொரு உதவி செய்ய முடியுமா?. எனக்கு மதனிடம் கொஞ்சம் பேச வேண்டும்.அவருடைய தொலைபேசி எண்ணை எனக்கு மெயில் மூலம் அனுப்ப முடியுமா? என் இமெயில் முகவரி SREESHARAN@GMAIL.COM

Featured Post

test

 test