Thursday, September 20, 2007

மாலனை என்ன செய்யலாம்?

மாலனின் சமீபத்திய இடுகை மிகவும் மன வருத்தத்தை தந்தது..நாளைக்கு மூன்று பதிவுகள் மிகாமல் இடும் ஓசை செல்லா,ரவி உட்பட எந்த பதிவரும் இது குறித்தான எதிர் கருத்து எதையும் சொல்லாதிருப்பது ஏனெனத் தெரியவில்லை (சாதி சண்டை,போலி சண்டை போல ஈழத்தவர் பிரச்சினை அவ்வளவு சுவாரசியமாய் இருக்காதோ?)
உமையணனின் பின்னூட்டத்தில் தெரிந்த வேதனை இப்பதிவிட தூண்டியது

At 7:35 PM, உமையணன் said…

/மாலன்,
தயவு செய்து இந்த இடுகையை எக்காரணத்தை முன்னிட்டும் அழித்து விடாதீர்கள். ஆவணப்படுத்த வேண்டிய இடுகையிது. தமிழீழ விடுதலை போராட்டத்தை அல்லது உங்கள் பார்வையில் பயங்கரவாதத்தை இந்தியத்தமிழர்கள் ஏன் கண்டும் காணாமல் பாராமுகமாக இருந்தார்கள் அதற்கு இந்திய பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் எத்தணை பங்களித்தார்கள் என்பதற்கு இந்த இடுகை ஒரு வரலாற்றுச் சான்றாக இருக்கும். இந்தியத்தமிழர்களை ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்வதற்கும் உதவும்/

மாலன் இருக்கும் அதே சூழலில்தான் நெடுமாறன்களும் இருக்கிறார்கள் என்பதை சொல்லிக்கொள்கிறேன் நண்பா!

Wednesday, September 19, 2007

அவநம்பிக்கைகளை எழுதுதல்



"அவநம்பிக்கையை, மறுப்பை எனது நிலைப்பாடாகக் கொண்டிருப்பவன் நான். அதுவே எனது முற்போக்கான அம்சமெனக் கூறிக்கொள்ளலாம்"
“பதில்களே இல்லாத கேள்விகளை, தீர்வுகளே இல்லாத பிரச்சினைகளைக் கொண்டிருக்கிற நாட்களே மகிழ்ச்சியானவை"
-போத்ரியா
--------------- 01 ----------------------
இன்றைய நாள் ஒரு பழகிய நாய்குட்டியைப் போன்று வாலசைத்து நகர்கிறது

நாளையும் சாதுவான பூனைக்குட்டியைப் போலத்தான் இருக்கும்

நேற்றைய பொழுது சாம்பல் நிற அணிலின் சாயல்களில் கடந்துபோனது

பேண்ட்டில் புடைத்து கொண்டிருக்கும் மணிபர்சில் என் தேவைகளுக்கான பணம் விழித்திருக்கிறது

இன்னும் பார்ப்பதற்கு பத்து திரைப்படங்களும் படிக்க முப்பது புத்தகங்களும் மீதமிருக்கிறது

அதற்க்குப்பின் படிக்க/பார்க்க எவையெவை என நேற்றே பட்டியலிட்டுவிட்டேன்

அவ நம்பிக்கைகள் குறித்து சிலாகித்து எழுதலாமென தகுந்த மேற்கோள்களோடு இதை ஆரம்பிக்கிறேன்……….
--------------- 02 ----------------------
நம்பகத்தன்மைகள் போன்று அவநம்பிக்கைகள் துரோகமிழைப்பதில்லை.பல்லிளிப்புகளோ,மனதை தொடும் பாசாங்குப் பேச்சுகளோ மிகுந்த ஒப்பணைத் தீற்றல்களோ இருப்பதில்லை. அவநம்பிக்கைகள் அவ நம்பிக்கைகளாகவே இருக்கின்றன.மேலும் இவை காயமேற்படுத்துவதில்லை,வெறுப்பை உருவாக்குவதில்லை(இயல்பிலே வெறுப்பாயிருப்பதாலும்)சோர்வடையச் செய்வதில்லை தற்கொலைக்குத் தூண்டுவதில்லை வன்புணர்வு, கொலை, திருட்டு, கள்ளக்காதல் போன்றவற்றிர்கு மறைமுக காரணிகளாயும் இருப்பதில்லை.அவை அவையாக மட்டுமே இருக்கின்றன.ஒருவேளை தன்னிலையிலிருந்து பிசக நேரிடினும் அதன் பிசகலை இவ்வுலகம் கொண்டாடுகிறது
தான் தானாகவே இருப்பது தன்னிலையிலிருந்து விலக நேரிட்டாலும் பழிக்கு உள்ளாகாமலிருப்பது எத்தனை அற்புதமானது?அவநம்பிக்கைகளின் உலகம் மிகவும் பாதுகாப்பானது
--------------- 03 ----------------------

நீங்கள் இரண்டாம் அத்தியாயம் நன்றாய் வந்திருப்பதாய் நினைத்தால் முதலாம் அத்தியாயம் மிகச் சரியாய் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
நீங்கள் இரண்டாம் அத்தியாயம் சரியாய் வரவில்லை என நினைத்தாலும் முதல் அத்தியாயம் மிகச் சரியாய்தான் எழுதப்பட்டுள்ளது.
பிரதிக்கும் எழுதுபவனுக்கும் தொடர்பிருக்கலாம் அல்லது தொடர்பிருக்கத் தேவையுமில்லை
பிரதி பிரதியாக மட்டுமே இருக்கிறது மேலும் அப்படி இல்லாமலிருந்தால் மட்டும்தான் என்ன?
--------------- 04 ----------------------
இதோடு அது..
அதோடு இது..
எதோடு எது?
எதனோடும்
எதனோடும் இருந்து தொலையட்டும்
நீ எழுதிக்கொண்டிரு

இறப்பிற்கான போராட்டம் MAR ADENTRO aka THE SEA INSIDE


The Sea Inside (2004)
மரணத்திற்குப் பின் எதுவுமில்லை நீ பிறப்பதற்கு முன் எப்படி எதுவுமில்லாதிருந்ததோ அதைப்போலவே இறந்தபின்னும் எதுவுமில்லாதிருக்கும்.

(இறப்பதற்கு முன் ராமோனுக்கும் ரோஸாவிற்கும் நிகழும் உரையாடலிலிருந்து)

"உங்கள் உணர்வுகளை சாந்தப்படுத்துங்கள்... உங்கள் கண்களுக்கு முன்னால் திரைப்படத்தின் திரை ஒன்று விரிவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.. அதனூடே உங்களுக்குப் பிடித்தமான இடத்தை நினைத்துக்கொள்ளுங்கள்.. உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்... உங்கள் மொத்த உடலும் அமைதியடையட்டும்.. இப்போது உடல் மனம் இரண்டையும் தளரவிட்டு நினைவில் அந்த இடத்தை சென்றடையுங்கள்.. இப்போது அந்த இடத்தில் இருக்கிறீர்கள்... (ஒரு அழகிய கடற்கரை திரையிலிருக்கிறது) இந்த வண்ணம்.. இந்த ஒளி.. இந்த மிதமான வெப்பம்.. வெப்பத்தை உணருங்கள் உங்களுக்கு முன் விரிந்திருக்கும் இந்த அமைதி எல்லைகளற்றது. ''

இப்படியான பின் குரலோடு தியானத் தன்மையின் சாயல்களோடு ஆரம்பிக்கிறது இத்திரைப்படம். வாழ்வு, மரணம், அன்பு இந்த மூன்றிற்கிடையே அல்லல்படும் quadriplegics (கழுத்திற்கு கீழ் உடலின் பாகங்கள் எதுவும் செயல்படாது)நோயினால் பாதிக்கப்பட்ட ராமோன் என்வரின் போராட்டத்தை திரைப்படமாக்கியிருக்கிறார் Alejandro amenabar.
அலெஜாண்ட்ரோவின் மற்ற திரைப்படங்களான the others & Open your eyes போன்றே இந்த படத்தின் மய்யமும் மரணம்தான்.

இளம்பருவத்தில் காலிசியன் கடற்கரையில் குளிக்க ஒரு பாறையின் மீதிருந்து குதிக்கும்போது தவறுதலாய் ராமோனின் கழுத்து மணலில் புதைந்து கொள்கிறது.அந்த விபத்தின் மூலம் கழுத்திற்கு கீழிருக்கும் உடல்பாகங்கள் எதுவும் செயல்படாமல் போகிறது.படுக்கையிலே தன் வாழ்வை கழிக்கும் ராமோனால் தற்கொலையைக் கூட தன்னிச்சையாய் செய்து கொள்ள முடியாது. தனது தற்கொலைக்காக இன்னொருவர் உதவி செய்ய அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமெனக் கோரி மனு செய்கிறான் ஆனால் அந்த மனு 26 வருடங்களாக கிடப்பிலேயே போடப்பட்டிருக்கிறது.

ராமோனின் எல்லாத் தேவைகளையும் உயிரோடு இருந்தவரை அவரின் தாயும் அதற்க்குப்பின் அவரது அண்ணி மேனூலாவும் கவனித்துக் கொள்கிறார்கள்.அவரின் அண்ணன் ஜோஸ் அவரின் மகன் ஜாவி வயதான தந்தை எல்லாரும் மிக இணக்கமாக இருக்கிறார்கள். குறிப்பாய் ராமோனின் அண்ணி தன் மகனாகவே கருதுகிறார்.இருப்பினும் கெளரவமான மரணத்திற்காக போராடுகிறார் ராமோன்.

ராமோனின் நண்பியான ஜெனி அவரது வழக்கை ஏற்று நடத்த விரும்பும் ஜீலியா என்கிற வக்கீலை அறிமுகப்படுத்துகிறார்.
ஜீலியா ஸ்ட்ரோக்கினால ஒரு கால் பாதிக்கப்பட்டவர் ஜீலியாவினால் கைத்தடி இல்லாமல் நடக்க முடியாது ராமோனிடம் ஏன் நீங்கள் மரணத்தை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதற்கு ராமோன் இப்படி சொல்கிறார்
“மரணம் நம் எல்லாரிடமும் எப்போதும் உள்ளது அதைப்பற்றி பேசினாலோ தேர்ந்தெடுத்தாலோ ஏன் எல்லோரும் பயப்படுகிறீர்கள்”
”எனக்கு மூன்றடி தள்ளி நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் மூன்றடி என்பது சாதாரண மனிதனுக்கு ஒரு தூரமே அல்ல! ஆனால் எனக்கு இந்த மூன்றடிதான் உங்களை நெருங்குவதிற்கு இடையூராய் இருக்கிரது.. உங்களை தொடுவதற்கு இயலாமல் போகிறது.. ஒரு முடிவில்லாத பயணமாய்! ஒரு மாய தோற்றமாய்! ஒரு கனவாய்! எனக்கிருக்கிறது.. அதனால்தான் நான் இறக்க விரும்புகிறேன் மேலும் சுயகவுரவமான ஒரு மரணத்தை நான் விரும்புகிறேன்”
என்கிறார்

ராமோனை புரிந்துகொள்ளும் ஜீலியா அவரைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறாள்.அவரெழுதிய கவிதைகள்,அவரின் இளமைக்கால புகைப்படங்கள் எல்லாவற்றையும் சேகரிக்கிறாள்.மெல்ல ராமோனை காதலிக்க ஆரம்பிக்கிறாள்.இருவரும் சேர்ந்து புத்தகமொன்றை எழுதுகிறார்கள்.இடையில் ஜீலியாவிற்க்கு ஒருமுறை ஸ்ட்ரோக் வந்து இரு கால்களும் செயல்படாமல் போய்விடுகிறது.புத்தகத்தை வெளியிட்ட அன்று இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து புத்தக வேலைக்காய் பார்சிலோனா சென்றுவிடுகிறாள்.

ராமோனின் பேட்டியை தொலைக்காட்சியில் காணும் ரோஸா ராமோனை கான வருகிறாள்.ஒரு பரிதாபமாக தொடங்கும் அன்பு மெல்ல வலுவடைகிறது.அவரின் இறப்பை ஒத்துக்கொள்ளாத ரோஸ் கடைசிவரை அந்த எண்ணத்தை மாற்ற முயன்று தோற்கிறாள்.அவளின் எல்லா பிரச்சினைகளையும் அவரோடு பகிர்ந்துகொள்கிறாள்.ராமோனுக்கான பணிவிடைகளை செய்வதில் ஆர்வமும் இன்பமும் அடைகிறாள்.

பார்சிலோனா சென்ற ஜீலியா புத்தகத்தை மட்டும் அனுப்பி வைக்கிறாள் ஜீலியாவின் தற்கொலை எண்ணத்தை அவளின் கணவர் மாற்றிவிடுகிரார்.கடைசியில் ரோஸ் மிகுந்த வேதனைகளோடு ராமோனின் மரணத்திற்கு உதவுவதாய் ஒத்துக்கொள்கிறாள்.ரோஸாவின் இருப்பிடத்திற்கு பிடிவாதமாய் சக்கர நாற்காலியின் உதவியுடன் செல்கிறார் ராமோன்.கடைசியாய் ராமோனை வழியணுப்பும் அவரது குடும்பத்தாரின் துயரம் நெகிழ வைக்கிறது குறிப்பாய் மேனுலா.. துக்கத்தை அடக்க முடியாமல் பீறிட்டெழும் அந்த முகபாவனை எளிதில் மனதை விட்டு நீங்காது.

கடலுக்கு அருகில் மிகப்பெரிய சன்னல்களை கொண்ட வீடு ஒன்றை அவரின் மரணத்திற்காய் தேர்வு செய்கிறாள் ரோஸா.நண்பர்களுடன் கடைசி இரவை கொண்டாடிவிட்டு,பொட்டாசியம் சயனைட் கலந்த நீரை ஒரு கண்ணாடி குவளையில் வைத்துவிட்டு,அவரது கடைசி பேச்சை பதிவிக்க இயங்கும் கேமரா ஒன்றை பொருத்திவிட்டு சென்றுவிடுகிறாள்.

என் வாழ்வு முழுக்க பிறரை சர்ந்து வாழும் ஒன்றாகவே இருந்துவிட்டது குறைந்தபடசம் மரணமாவது தனித்தன்மையுடன் இருக்க ஆசைப்படுகிறேன்..இந்த மரணம் என திட்டப்படி என் நண்பர்களின் உதவியுடன் நிறைவேறுகிறது.. இதற்காய் யாரையாவது தண்டிக்க நினைத்தால் அவர்களின் தலையை துண்டித்துவிடாதீர்கள்!.. ஏனினில் மூளை என்னுடையது விரல்கள் மட்டும்தான் அவர்களுடையது.. வேண்டுமானால் விரல்களை தண்டியுங்கள்"
என சொல்லியபடி பொட்டாசியம் சயனைட் கலந்த நீரை குடித்து உயிர் விடுகிறார். 28 வருடங்கள் 4 மாதங்கள் மற்றும் சில நாட்களாய் நடத்திய போராட்டம் முடிவிற்கு வருகிறது.

இந்த கதை முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.இந்த கதாபாத்திரங்கள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்கள். இந்த திரைக்கதையை எழுதி முடித்துவிட்டு அலெஜாண்ட்ரோ அந்தந்த கதாபாத்திரங்களிடம் கொடுத்து படிக்க சொல்லியிருக்கிறார் சில சில சம்பவங்களை அதிகமாய் கொடுத்து இந்த படத்திற்கு மேலும் உயிரூட்டி இருக்கிறார்கள்.

கூர்மையான வசனம்,பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம்.இந்த திரைப்படத்தை எடுக்க நேர்ந்த விவரணைகளை 1 மணி நேரம் ஓடக்கூடிய டாக்குமெண்டரியாய் பதிவித்திருக்கிறார்கள்(ஒரிஜினல் டிவிடி வாங்கினால் அதனுடன் இணைப்பாய் ஒரு டிவிடி கிடைக்கும்).இந்த குழுவினர் ஒவ்வொரு படக்காட்சிக்கும் சிரமமெடுத்து பணியாற்றியிருக்கிறார்கள் திரையில் ஒரு சில நொடிகளே வந்துபோகும் காட்சிகளுக்கு அவர்கள் செயத பின் வேலைகள் பிரம்மிப்பூட்டக்கூடியதாய் இருக்கிறது.உதாரணத்திற்கு ராமோனின் இளமைப்பருவம் புகைப்படங்களாக மட்டுமே காட்டப்படுகிறது அந்த புகைப்படங்களை எடுக்க இவர்கள் மெனக்கெட்டிருப்பது இத்திரைப்படபம் ஒரு முழுமையான படமாய் வர உறுதுணையாய் இருந்திருக்கிறது.

Winner of Best forien Film- 2005 Academy awards
Winner of Best Forien Film- 2004 golden globes
உட்பட பதினான்கு விருதுகளை குவித்திருக்கிறது இந்த ஸ்பானிஷ் மொழித் திரைப்படம்.ராமோனாக நடித்த Javier bardem சிறந்த நடிகருக்கான விருதுகளை குவித்தார் என்பதை சொல்லத் தேவையில்லைதானே..

* நீல நிற எழுத்துக்கள் திரைப்படத்தில் வருபவை

(திரைப்படம் தந்த சித்தார்த்துக்கும்,விரிவாய் எழுத கேட்கும் மதிக்கும்,மரணத்தை பதிவித்த ஆழியூரானுக்கும்)

Wednesday, September 12, 2007

கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்கு



பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்கு மட்டுமே உரித்தான புழக்கத்தில் உள்ள மொழியை நாம் நாகரீகம் என்னும் பெயரில் கொன்று புதைத்து விடுகிறோம்.தமிழேயானாலும் நம் சொந்த பேச்சு மொழியில் உள்ள இணக்கத்தை நாகரீகம் கருதி பேசப்படும் வலிந்த பேச்சு வழக்கில் காணமுடிவதில்லை வேறொரு சூழலில் பண்பாட்டு ஒத்திசைவிற்காக பேச விழையும்போது நமக்கான அடையாளத்தை நாம் மறைமுகமாய் இழக்கிறோம்.சந்தர்ப்பம் கிடைக்கும்போது நமது பேச்சு வழக்கத்தில் பேசிக்கொள்வது எத்தனை திருப்தியம் மகிழ்ச்சியுமளிக்கிறதோ அத்தனை திருப்தி இந்த சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தபின் ஏற்பட்டது.

கதைகள் நமக்கு தெரிந்த நாம் புழங்கிய இடத்தை மய்யமாக கொண்டு எழுதப்படும்போது அந்த புத்தகம் வெகு சீக்கிரம் நம்மோடு ஒட்டிக்கொள்கிறது.கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்கு சிறுகதைத் தொகுப்பு நான் வாழ்ந்த சூழலைப்பற்றி பேசுவதால் புத்தகத்தோடு சுலபமாய் ஒட்டிக்கொள்ள முடிந்தது.மண் சார்ந்து எழுதப்படும் எழுத்துக்களில் எனக்கு மிகவும் பிடித்தமானதாய் கி.ராஜநாராயனின் எழுத்துக்களே முதலில் நினைவிற்கு வருகிறது.வெவ்வேறு மண் சார்ந்த மொழி வழக்குகளை பிரதானப்படுத்தி பல நாவல்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் கண்மணி குணசேகரனுக்கு முக்கியமான இடமொன்றைத் தரலாம்.

விருத்தாசலத்தில் அரசு போக்குவரத்து பணிமனையில் தொழிலாளியாக பணிபுரியும் கண்மணி குணசேகரன் 1993 லிருந்து எழுதி வருகிறார்.இதுவரை வெளிவந்த நூல்கள்
தலைமுறைக்கோபம் கவிதைகள்(1994)
உயிர்தண்ணீர் சிறுகதைகள் (1997)
அஞ்சலை நாவல் (1999)
ஆதண்டார் கோயில் குதிரை சிறுகதைகள்(2000)
காற்றின் பாடல் கவிதைகள்(2001)

பதினான்கு சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பில் நேரடியான கதையாடல்களை வட்டார மொழியின் வீச்சோடு முன் வைத்திருக்கிறார்.விருத்தாசலம்,பண்ருட்டி, விழுப்புரம்,திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறம் சார்ந்த மொழிநடையையும் மக்களையும்,மண் வாசத்தையும் தனது கதைகளில் உலவவிட்டிருக்கிறார் குறவர்கள், நாவிதன், ரெட்டியார்கள், குடியானவர்கள், படையாச்சிகள், என்பன போன்ற பின்புலங்களோடு உயிர்ப்பான கதாபாத்திரங்களின் மூலம் விளிம்பின் வாழ்வையும் குடியானவர்களின் அவலத்தையும் ஆதிக்க சக்திகளையும் எவ்வித மிகைப்படுத்தல்களும் இல்லாமல மிக இயல்பாய் பதிவித்திருக்கிறார்.

இந்த தொகுப்பில் கொடிபாதை,ஆணிகளின் கதை, சமாதானக்கறி, புள்ளிப்பொட்டை, கிக்குலிஞ்சான், மழிப்பு, ஏவல், வலை, ராக்காலம், ஆண், வனாந்திரம், சீவனம், வெள்ளெருக்கு, வண்ணம் போன்ற சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன.பேருந்தில் நிகழும் பிரசவத்தினை விவரித்திருக்கும் கொடிபாதை சிறுகதை கிராமத்து சூழலில் வறுமையில் உழலும் மனிதர்களின் வலிகளை சரியாய் தடம்பிடித்திருக்கிறது.குண்டும்குழியுமான ஒற்றையடி சாலையில் பிரசவத்திற்காக அழைத்து செல்லப்படும் நிறைமாத கர்ப்பிணி ஓடும் பஸ்ஸிலேயே மிகுந்த போராட்டங்களுக்குப் பின் தனது குழந்தையை ஈன்றெடுக்கிறாள்.இந்த சிறுகதையில் உலுக்கிப்போட்ட நிதர்சனம் கீழ்கண்ட வரிகள் தான்

ஆஸ்பத்திரில நிறுத்தட்டுமா...முன்னாலிருந்து ஓட்டுகிறவன் குரல் வந்தது

கூட்டத்தில் குனிந்து பணிக்கை பண்ணிக்கொண்டிருந்தவள் பட்டென்று நிமிர்ந்து சொன்னாள் "வேணாம் சாமீ பாவம் இல்லாதபட்டவன் ஆஸ்பத்திரிக்கு போனா தொட்டு தொட்டு பார்த்தாலும் ஆயிரம் ஐநூறுன்னு ஆவும் எந்த சிக்கலும் இல்லாம ஆண்டவன் புண்ணியத்துல தாய் வேற புள்ள வேற ன்னு சுத்தபடியா பூட்டுது.இனிமே அநேவசியம்தே..அந்த நெழல் கொடையில நிறுத்துங்க எறங்கிக்கறோம்.திரும்புகாலுக்கு இதே வண்டியில ஊருக்கு இட்டுகிட்டுப் பூடறோம்."


மழிப்பு எனும் சிறுகதை ரத்னவேல் என்கிற நாவிதனைப்பற்றி பேசுகிறது.கட்டையன் என்கிற குடியானவன் அவனிடம் சவரம் செய்துகொள்ள வரும் சம்பவத்தோடு விரியும் சிறுகதை அதிகாரத்திற்கெதிரான ஒரு சின்ன குரலை பதிவிக்கிறது.குடியானவப் பார்வையில் எழுதப்பட்டிருந்தாலும் நாவிதனின் கலகம் காலம் காலமான அடிமைத்தனத்தை, விளிம்பை சார்ந்து வாழும் நிர்பந்தத்தை ஆங்காரமான குரலில் சொல்கிறது.

"இம்மாங் குடியானவன் இருக்கிற ஊர்ல ஒருத்தனாவுது என்ன நெனச்சி பாத்தீங்களா.ஏம் பொண்டாட்டிப் புள்ளிவள நெனச்சி பாத்திங்களா.நம்பள சுத்திதான இருக்கிறான் அவம் பொழுது எப்படிப் போகும் காசி கன்னிய படி பண்டத்த குடுப்பம்னு நெனச்சிங்களா.நா என்னடா கடனா கேட்டன் செஞ்ச வேலக்கி கூலியதான கேட்டன்..எவன் கொடுத்திங்க..எவங் குடுக்கிறீங்க."மண்ணில் கையால் அடித்து அடித்து பேசினான்.."குடுக்கிற மகராசன் மோம்பிரிக் குப்பத்தில இருக்கறான் அங்க போறேன்..ஏண்டா போறேன்னு எதுக்குடா கேக்குறீங்க"...

கட்டையனுக்கு ஆத்திரமாகவும் அவமானமாகவும் இருந்தது குடிபோதயில் உளறுகிறவனிடம் என்னபோய் பேசுவது.அதைவிட அவன் வீட்டுப் படி நெல்லே இன்னும் கொடுக்கப்படாமல் இருந்தது அவன் பேசுவது பாரயால் செருகி இழுப்பதுபோல் அவனுக்குள் வலி தெறித்தது.

அப்படியே அவனை விட்டுப்விட்டுப்போகவும் கட்டையனால் முடியவில்லை.காலையிலிருந்து அவனுக்காக அலைந்த அலைச்சலை எண்ணி நொந்த படி கிட்டப் போணான் கீழே கிடந்த கத்திப் பெட்டியை எடுத்துக்கொண்டு அவன் கையைப் பிடித்து தூக்கினான்.

யார்ரா அது..உடம்பை ஒரு குலுக்கு குலுக்கியபடி லேசாய் கண்களைத் திறந்து மூடியபடி கேட்டான்.
.............
கையில் திணித்த கத்திப் பெட்டியை பட்டென்று பிடுங்கி படுத்த நிலையிலேயே தூக்கி எறிந்தான்.."ஆமா மயிர வெட்றான் ..போடா"...
கத்திப் பெட்டி பை முந்தரிச்சருகில் ஓடி பொத்தென்று விழுந்தது.


வெள்ளெருக்கு
கண்மணி குணசேகரன்
பதிப்பாளர்: தமிழினி
விலை : Rs.90.00
பக்கம்:208

(...புத்தகம் தந்த ஆசிப் மீரான் அண்ணாச்சிக்கு)

Tuesday, September 11, 2007

அல்பசினோ Vs ஷாரூக்கான்

ஆலிவர் ஸ்டோனின் எனி கிவன் சண்டே(ANY GIVEN SUNDAY-1999) படத்தை வெகு நாட்களுக்கு முன்பு பார்த்திருந்தேன்.நேற்று சித்தார்த்துடன் சக் தே இந்தியா படம் பார்த்தபோது அல்பசினோவிற்கும் ஷாரூக்கானுக்குமான ஒற்றுமைகளை யோசித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு விளையாட்டு அணியின் பயிற்சியாளர் பணி மிக மிக சிக்கலானது.விளையாட்டின் வெற்றி தோல்விகள் நாடு,கவுரவம், தேசப்பற்று (நம்மைப் பொறுத்தவரை நம்முடைய தேசப்பற்றை தோற்று விட்டு வரும் விளையாட்டு வீரர்களிடம்தான் காண்பிப்போம்) சார்ந்து இருப்பதால் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் விளையாட்டை அதன் சுதந்திரத்தோடு வீரர்களால் விளையாட முடிவதில்லை.உணர்ச்சிகளின் இடையூறு வந்துவிடும்போது வெற்றிக்கான வாய்ப்புகள் குறைந்து போகிறது.இந்த சமயத்தில் ஒரு பயிற்சியாளரின் பணி முக்கியப் பங்கு வகிக்கிறது.எனி கிவன் சன் டே, சக் தே இந்தியா திரைப்படங்கள் பயிற்சியாளரை முன் வைக்கிறது.அவர்களின் தனித்திறமைகள் வெற்றிக்கு எத்தனை பக்க பலமாய் இருக்கும் என்பதை இரண்டு படங்களும் பேசுகிறது.


மியாமி ஷார்க் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர்(கோச்) அல்பசினோ.இருபது வருடங்களாக (அந்த அணி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து) அவர்தான் கோச்.அவரின் உணர்ச்சிகரமான பேச்சுகளும் விளையாட்டு வியூகங்களும் வெகுவாய் போற்றப்படுபவை.அந்த அணி உரிமையாளர் இறந்த பிறகு அவரது மகள் கேமரூன் டையாஸ் பொறுப்பிற்கு வருகிறார்.டையாஸின் அத்துமீறல்கள்,அணி வீரர்களுக்கிடையேயான அரசியல்,விமர்சகர்களின் குத்தல்கள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு அந்த அணியை முன்னனியில் கொண்டு வருவதற்காக உழைப்பவராய் அல்பசினோ.வெகு நேர்த்தியான நடிப்பு, உடைந்த குரலில் சத்தமாய் பேச யத்தனிக்கும் காட்சிகளில் மனிதர் அசத்துகிறார்.ஆலிவர் ஸ்டோன் படங்களைப் பொறுத்தவரை படத்தில் வேகத்திற்கு எவ்வித குறையும் இருக்காது.பரபரப்பாய் ஒரு காட்சியை எடுக்க இவரிடம் கற்றுக் கொள்ளலாம்.சிறந்த உதாரணம் JFK.

அல்பசினோ வின் உற்சாகமூட்டும் புத்துணர்வூட்டும் வசனங்கள் இந்த படத்தின் முக்கிய ப்ளஸ்..SEE IT BEFORE DO IT நேரடியான மிக முக்கியமான தாரக மந்திரம் விளையாட்டைப் பொறுத்த வரை இதுதான்.



ஷிமிட் அமீன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் சக் தே இந்தியா படம் இந்திய சூழலில் மாறுபட்ட ஒரு படம்.லகான் தான் முன்னோடி என்றபோதும் மகளிர் ஹாக்கியை களமாய் தேர்ந்தெடுத்ததிற்கு பாராட்டியே ஆக வேண்டும்.பதினாறு பெண்களை தேர்வு செய்த குழுவிற்கு பிரத்யேக பாராட்டு அத்தனை பெண்களும் அட்டகாசமாய் பொருந்துகின்றனர்.எனக்கு மிகவும் பிடித்திருந்த துரு துரு பெண் கோமல் செளதாலா என்ற கதாபாத்திரத்தில் வரும் சித்ராஷி ரவாட் என்கிற பதினேழு வயதான இந்த பெண்தான்.தேசிய அளவில் விளையாடிய ஹாக்கி வீரர் என்பதும் இந்த கதாபாத்திரம் மிளிர காரணமாய் இருந்திருக்க கூடும்.

ஷாரூக்கானின் நடிப்புத் திறமைகளை கண்டெடுத்த சொற்பமான படங்களில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.இறுக்கமான முகத்தோடு கொந்தளிப்பான கதாபாத்திரம் ஷாரூக்கானுக்கு (திக்கி திக்கி பேசாதிருப்பது மிகப்பெரிய ஆ(மா)றுதல்)ஒரே ஒரு கோல் தவறியதற்காக தோல்விக்கு தள்ளப்பட்ட அவமானத்தை சந்திக்க நேர்ந்த கபீர் கான் கதாபாத்திரம் ஷாரூக்கானுக்கு ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டு வரும் ஷாரூக்கான் மகளிர் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்கிரார்.ஒற்றுமை இல்லாத பெண்களிடமும் எவ்வித லட்சியங்களுமில்லாத அசோசியேசனிடமும் கிடந்து அல்லாடுகிறார்.பெண் சார்ந்த பிரச்சினைகள், பெண்ணினால் உருவாகும் பிரச்சினைகள், உற்சாகமே இல்லாத அணி என ஷாருக்கானுக்கு சவாலான பிரச்சினைகள் அதிகம்.எல்லாம் மீறி ஜெயிப்பது சுகம்.

ஹாக்கி என்ற விளையாட்டு முற்றிலுமாய் புறக்கணிக்கப் படுவதின் கோபங்கள்.மகளிர் விளையாட்டு என்றாலே எழும் எள்ளல்கள்களுக்கான எதிர்ப்பை சரியாய் பதிவித்திருக்கிறார் இயக்குனர்.தன்னம்பிக்கையை புகுத்துவதென்பது சிரமமான பணி அதற்கான தாரக மந்திர சொற்களெதுவும் இப்படத்தில் பயன்படுத்தாது ஒரு குறை.மிகக் கடுமையாக நடந்து கொள்ளும் கோச்சாக மட்டும்தான் ஷாரூக்கான் சித்தரிக்கப்படுகிறார்.இருப்பினும் பெண் என்றால் மட்டமா என்கிற தொணியில் வீரர்களின் உணர்ச்சிகளை தூண்டி வெற்றி பெறுவது மிக இயல்பான மற்றும் சிறப்பான யுக்தி.விளையாட்டைத் தவிர வேறெதும் திணிக்காததும் நேர்கோட்டில் படத்தை கொண்டு சென்றிருப்பதும் பாராட்டப்பட வேண்டியது.

இறுதியில் இந்திய அணி ஹாக்கி உலககோப்பையை வென்று வருவது சினிமாத்தனமாய் இருந்தாலும் கைத்தட்டத்தான் தோன்றிற்று.

Monday, September 10, 2007

எழுதிச் செல்லும் விலங்கு



தலை வெடித்து விடும் போலிருக்கிறது.ஒரே சீராய் சென்று கொண்டிருக்கும் நாட்களிலிருந்து பிறழ்ந்து என்றாவதொரு நாள் ஏற்படும் சிறு மாற்றத்தைக் கூட ஏற்றுக்கொள்ள நான் தயாராய் இல்லை.ஆனால் வாழ்கிழிய சொல்லிக்கொள்வேன் ஒரே மாதிரியாய் இருக்க விரும்புவதில்லையென. மாற்றங்களை விரும்புபவனாய் நானே புனைந்து கொண்டதெல்லாம் எத்தனை அபத்தம்!எதுவும் மாறாதிருப்பது மிகவும் ஆசுவாசமானது.நிம்மதியாய் உள்ளிழுத்து விடும் காற்றைப் போன்றது.இன்றைய என் உணவிலோ, பயணத்திலோ, உறக்கத்திலோ எந்த மாற்றங்களும் இல்லாதிருப்பதும் நாளை இதே போன்ற ஒன்றினை என்னால் செய்ய முடியுமென்ற நம்பிக்கையோடு தூங்க செல்வதும் லேசில் யாருக்கும் வாய்ப்பதில்லை.
----------***----------------
பொதுப்பரப்பில் உலவுவதுதான் எத்தனை அசெளகரியம்..எனக்கான தனித்தன்மை குலைந்து போகிறது..தனித் தன்மையென்பது முன்பிருந்ததா?இப்போதிருக்கிறதா என்பதெல்லாம் தனிக்கதை இருப்பினும் என் இருப்பு பொதுப்படுகிறது ..ஜிகினா துணிகளை சுற்றியபடி இந்த மேடையில் நான் ஆடிக்கொண்டிருப்பதில் எனக்கு முன்பிருந்த வசீகரம் இப்போதில்லை.எல்லாக் கருமத்தையும் தலைமுழுகி விட்டு எங்காவது ஓடிவிடலாமா?
----------***----------------
எந்த ஒரு நொடி எனக்கான எல்லாக் கிளைத்தல்களையும் துண்டித்துவிட தூண்டுகிறதென்பது இதுவரை தெரியவில்லை.அந்த ஒரு நொடியை அந்த கணத்தில் வெறுக்க நேரிட்டாலும் பிறகெப்பாவது யோசிக்கையில் கிளைத்தல்களை அவ்வப்போது துண்டிப்பது செழிப்பான வளர்ச்சிக்கு உதவுமென்பதில் சந்தேகமில்லை.ஆனால் இந்த செழிப்பான வளர்ச்சி மட்டும் உன்னை எங்கிட்டுச் செல்லப்போகிறது என்பதற்கு என்னிடம் பதில்கள் இல்லை.பொதுவாய் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம் நின்று கொண்டிருப்பதை விட சென்றுகொண்டிருப்பது மேலென….இதை யார் சொன்னது கல்யாணியா?
----------***----------------
சரியாய் தூங்காமல போன அடுத்த நாள் மதியம்..அரைப்போதையும் முழுசாய் தெளிந்த நள்ளிரவு..விடுமுறை நாளில் விழித்துக்கொண்ட அதிகாலை..இந்த மூன்று பொழுதுகளிலேயும் எழுதப்படும் கவிதை எல்லாருக்கும் பிடித்து தொலையலாம்.
மனம்
அகம்
உள்
வெளி
லூசி
பைத்தியமாதல்
----------***----------------
இந்த மனம் தொலைந்த கிறுக்கல்களுக்கு கீழ்கண்டவைகளை காரணமாய் சொல்லலாம்
1.புத்தகங்கள்
2.திரைப்படங்கள்
3.குடிகார நண்பர்கள்
4.பெண்கள்
5.துரோகிகள் (பெண்களுக்கடுத்து ஏன் துரோகிகள் என எழுத தோன்றுகிறது?)
6.முதுகில் குத்துவோர்
7.காறி உமிழ்வோர்
8.தோழிகள்
9.காதலிகள்
10.பழைய காதலி
11.புதிய காதலி
12.என்றைன்றுக்குமான காதல்
13.பல்வேறு புரிதல்களுடனான அன்பு
14.பன்முகம் கொண்ட உண்மை
15.ஜார்ஜ் லூயி போர்ஹே
16.பெண்ணியம்
17.விளிம்பு
18.மய்யம்
19.கூர்முனை
20.முன் தீர்மானங்கள்
21.கட்டவிழ்ப்பு
22.அலைவு
23.பிறழ்வு
24.எதுவுமில்லாது போதல்

அத்தோடு

கொக்கிகள் தளர்த்தப்படும் ப்ரா
----------***----------------
இதிலிருந்து மீண்டு வருவதற்கான மீட்சிகள் இவையென இதைத் துய்த்து கொண்டிருப்பவர்களால் சொல்லப்படுகிறது.

1.யாரையவது நேசி
2.அன்பு நிஜமானது
3.வாழ்வு நிஜமானது
4.காதலி / காதலிக்கப்படு
5.கல்யாணம் செய்து கொள்
6.பிள்ளை பெற்றுக்கொள்
7.சம்பாதிப்பதை சேமி
8.லோன் போடு
9.வீடு கட்டு
10.ஆபிசுல எவளாவது மாட்னா செட்டப் ஒண்ணு வச்சிக்கோ
11.என்ஜாய் லைஃப் மாமா!
----------***----------------
எல்லாவற்றையும் எழுதிக்கொண்டிருக்கிறது என் விலங்கு
----------***----------------

Wednesday, September 5, 2007

இதும் அதும் எதும் எப்படியுமில்லா



இந்த விருட்சத்தைப் போலில்லை நான்
வேரூன்றி உயர்ந்து கிளைத்து
வெயில் வாங்கி நிழல் தந்து
எதுவுமில்லை

இந்த புல்லினைப் போலவுமில்லை
பசிய தளிராய் பனித்துளியின் இருப்பிடமாய்
பூனைகளின் தண்ணீரை சேகரித்தபடியுமாய்
இதுவுமில்லை

மழைக்காலங்களில் காட்டு மர இடைவெளிகளில்
வழிந்தோடும்
சிற்றோடை போலவுமில்லை
பெருகி படர்ந்து வழிந்து சுழித்து குறுகி நெளிந்து
சருகு முதல் சாக்கடை வரையாய் ஒன்று சேர்த்து வழிந்தபடி
இப்படியுமில்லை

பிறகெப்படி?

இதுவும் அதுவும் எதுவும்
இப்படியும் எப்படியுமில்லா
ஒரு மனிதனைப் போலிருக்கிறேன்

Sunday, September 2, 2007

மனம் பிறழ்ந்த வழிப்போக்கனின் தொடர்புகளற்ற குறிப்புகள்


0 ------- 1-------------0
உன்னிடம் பேச வேண்டுமென்பது என் நெடுநாளைய விருப்பம்.இத்தனை நாட்களாக பேசிக்கொண்டிருப்பதுதான் என்ன? பேச்சுதானே?விடாத பேச்சு..எழுத்தும் குரலுமாய் எத்தனை பேச்சுக்கள்!..இரவு, பகல், மதியம், விடியல், பின்னிரவு என எந்த பொழுதில்தாம் நாம் பேசிக்கொள்ளவில்லை?இதை தவிர்த்து எப்போதும் உரையாடல்கள் ஓடிய படியே இருக்கும் தறிகெட்ட நினைவு.செவிகளில் இடைவிடாது எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் பேச்சொலிகள்.சதா உன்னை தொடர்ந்தபடி இருக்கும் மனதின் நினைவு,நினைவின் அலைவு, அலைவின் பிறழ்வு, பிறழ்வின் மய்யம் நீ! நீ மட்டும்தானென்பதை நான் சொல்லித்தான் அறிந்துகொள்ள வேண்டுமா?

ரத்த வாடைகளுடன் உயிரொன்றை சிதைக்கும் சொற்கள் இவையாய் இருக்ககூடும் என்பதைப் பற்றிய அக்கறையோ தயாரித்தல்களோ என்னிடம் எப்போதும் இருப்பதில்லை.மேலும் அந்த சூழலில் தோன்றும் உணர்வுகளை அந்தந்த சூழலில் தோன்றும் வார்த்தைகளை கொண்டு வெளிப்படுத்துதல்தானே நேர்மையானதாய் இருக்கமுடியும்.உன்னிடம் பேசும்போது நான் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில்லை என்னை அப்படியே விட்டுவிடுகிறேன். சொற்கள் தாமாகவே தன்னை வெளிப்படுத்துகின்றன.நீ தந்த இந்த சுதந்திரம் உன் மீதான என் நம்பிக்கைகளை மிகவும் வலுப்படுத்துவதாயிருக்கிறது.

சந்தேகித்தல்களை வெறுத்தவன் நான்.என் சகோதரனைப்போல் எதிர்ப்படும் எல்லா முகங்களிலேயும், பேசப்படும் எல்லா சொற்களிலேயும் புத்தரின் தரிசனங்களைத்தான் கண்டுகொண்டிருந்தேன். இந்த பேய் எப்போது பிடித்தது என தெரியவில்லை.மனிதர்களை மனிதர்களாக மட்டும்தான் இப்போதெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது.இந்த சொல் வெளிப்படும் உள்மனம் எத்தனை அழகானது/அபத்தமானது என்பது குறித்த பின் விவரணைகளை யோசிக்கத் தொடங்குகிறேன்.இந்த பின் விவரணை குறித்து என் அருகாமைத் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவள் மிகவும் பயந்துபோனாள்.இப்படி யோசித்தால் மகிழ்ச்சியின் ஊற்றுக் கண் மொத்தமாய் மூடிக்கொள்ளும் என்றும் எப்போதும் சந்தேகத்துடன் நீ வாழ்வது உனக்கும் மற்றவர்களும் எத்தனை ஆபத்தானதென்பது என்றும் உனக்கு புரியவில்லையா என்றாள்.சொல்லப்போனாள் ஒரு உண்மையான உள்மனத்தை மிகச் சரியாய் புரிந்துகொள்வது எத்தனை அற்புதமானதென்பது அவளுக்குப் புரியவில்லை.நடிப்பதோ பாசாங்கு செய்வதோ மிகவும் சலிப்பை ஏற்படுத்துவதாய் இருக்கிறது.எத்தனை மனிதர்கள்? எவ்வளவு நம்பிக்கைகள்? ஒவ்வொருத்தனாய்/ஒவ்வொன்றாய் தன் பாதுகாப்புணர்வை,தன் சார்ந்த உலகங்களை மிக குரூரமாய் நிரூபிக்க நேரிடும் கணங்களை,நேரடியாக சந்திப்பது எவ்வளவு வலி நிறைந்தது என்பது உனக்கு தெரியுமா?

எனக்கு பின்நவீனம் பிடித்துப்போனது இந்த சந்தேகித்தல் கூற்றினால் மட்டும்தான் என்றால் அதில் பொய்யில்லை.வரலாற்றை அப்படியே ஏற்றுக்கொண்ட என் பாடப்புத்தகங்களின் அறிவையும் நம்பிக்கைகளையும் சில/பல பிரதிகள் உடைத்துப்போனது.பாரதியின் பிம்பத்தை சிதைத்த ஒரு பிரதியை படிக்க நேர்ந்தபோது கதறிஅழத் தோன்றியது.இது ஏன் பொய்யாய் இருக்க கூடாது என வேண்டிக்கொண்டேன்.இறந்த ஒரு கலைஞனை விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லாமல் இருந்து வந்தது.ஆனால் உனக்கொன்று தெரியுமா இப்போதெல்லாம் புதைக்கப்பட்ட குழிகளை தோண்டுவதில் ஏனோ எனக்கு குரூரமாய் ஒரு திருப்தி வந்து நேர்கிறது.இதை குரூரம் என சொல்வதில் கூட உடன்பாடில்லை கடன் என்றோ அத்தியாவசியமென்றோ தவிர்க்கமுடியாதது என்றோதான் சொல்லத் தோன்றுகிறது.பெருங்கதையாடல்களால் மூடப்பட்டிருக்கும் இந்த தமிழ்பரப்பை ஏன் ஒட்டு மொத்தமாய் தீக்கிரையாக்க கூடாது?வெறும் சிறுகதையாடல்களை கொண்டு மட்டும் இந்த இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தைய சரித்திரப் பொய்களை கட்டவிழ்த்துவிட முடியுமென்பதில் எனக்கு நம்பிக்கை போய்விட்டது.

தமிழொரு நீச மொழி என்ற பெரியாரின் புத்தகங்களையும் தமிழ் பேச முடியாத அளவிற்கு மிக கடுமையான மொழி என்ற ஓசோவின் பிரசங்கங்களையும் நாம் ஏன் பாடப்புத்தகங்களாகவோ அரசியலின்/சமூகவியலின் அடிப்படை சித்தாந்தங்களாகவோ மாற்றிவிடக்கூடாது?

0 ------- 2-------------0

என் தந்தையின் கடையில் சிங்கத்தின் படம்போட்ட சுவர் படமொன்று நினைவுக்கு வருகிறது அதன் அடியில் 'நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்' என எழுதப்பட்ட வாசகங்களை என் சிறுவயதில் அடிக்கடி படித்துக்கொள்வேன்.நானே என் கைப்பட 'அரசியல் பேசாதீர்' என எழுதியும் வைத்ததாய் நினைவு.அரசியல் ஒரு சாக்கடை கல்லெறிந்தால் மேலே தெறிக்கும் என எவனோ ஒரு புனிதன் சொன்னதுதான் என் சிறு பிராயங்களில் வேத வாக்காய் இருந்து வந்தது.அந்தப்புனிதன் யாரென்று தெரியவில்லை இப்போது மட்டும் அவனை அடையாளம் கண்டு கொண்டால் எத்தனை வயதாகியிருப்பினும் அவனை செருப்பாலடிப்பேன்.இந்த புனிதர்கள் நமக்கே தெரியாமல நம் சன்னல்களை மூடிவிடுவது எத்தனை அபத்தம்?போகிற போக்கில் சொல்லப்படும் வார்த்தைகள் வழிவழியாய் மரபின் தடம்பிடித்து வரும் ஒரு சாமான்யனை எவ்வித நிலைக்கு தள்ளிவிடுகிறது என்பது என் அரசியலறிவினை நோக்கினாலே உனக்கு புரிந்துவிடும்.

நம்மால் முடிந்த வரை இந்த புனிதர்கள் மீதும் நல்லவை என சொல்லப்படுபவைகள் மீதும் சேறுவாறி அடிப்போம் மிக மிக ஒழுங்கான புனிதன் என்றால் அவன் மீது உன் உதிரப்பெருக்கு காலத்தில் பயன்படுத்திய நாப்கின்களை கொண்டு அவன் முகத்தில் உதிர ஓவியம் ஒன்றினை வரைவதற்கான சாத்தியக்கூறுகளையும் முயன்று பார்ப்போம்.

அன்பு செலுத்துதல் என்பது என்னைப்பொருத்தவரை நாமாக புனைந்து கொள்ளும் ஒரு அசட்டு பிம்பம்.அன்பையெல்லாம் யார்மீதும் செலுத்த முடியாது.அன்பென்பது அவரவரிடத்தில் இருப்பது என்பதையே நான் மிகுந்த தயக்கங்களோடுதான் ஒத்துக்கொள்கிறேன்.நாம் அனைவரும் இரை தேடி அலைந்த ஆதி மிருகங்களின் வழித்தோன்றல்கள் மட்டும்தான் நாகரீகத்தின் சிதைவுகளில் குடும்பம்,அமைப்பியல்,விஞ்ஞானம் என பல்வேறு கூறுகளாய் சிதைந்த மனித மனம் கடைசியில் இறுகி இயந்திர மிருகங்களாகிவிட்ட இச்சூழலில் நீ சொல்லிக்கொள்ளும் அன்பென்பதின் சரியான பெயர் சுயநலமாய் மட்டும்தான் இருக்கமுடியும்.உன்னுடைய சுயநலத்தின் விழைவுகள்தான் உன்னுடைய பாரம்பரியமும், வழித்தோன்றல்களும், விதிமுறைகளும், கட்டமைவுகளும்.மற்றபடி தன்னலமில்லா தொண்டு என்பதோ தியாகம் என்பதோ பொதுநலம் என்பதோ தமிழகராதியிலிருந்து நீக்கப்படவேண்டிய வார்த்தைகள்.

எனக்கொரு அறிவு சீவி தோழியிருந்தாள் என் பழைய காதலியை தவிர்த்து என் நிர்வாணத்தை யாரும் அறிந்ததில்லை ஆனால் பேசிய இரண்டாம் மணி நேரத்திற்குள் இருவரும் தத்தம் ஆடைகளை களைந்தெறிந்து விட்டோம்.எவ்வித பாசாங்குகளும் இல்லாமல் பழகினோம்.கண்ணாடியில் தத்தமது பிம்பம் பார்த்து பேசுவது போலத்தான் உணர்ந்தோம்.அவளோடு பழகிய தொன்னூற்றெட்டு நாட்களும் நான் எவ்வித ஆடைகளும் அணிந்து கொள்ளவில்லை அவளும் அப்படியே ஆனால் ஒரு நாள் எல்லாம் சலித்துபோனது மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு அவள் எங்கேயோ போய்விட்டாள்.உண்மை உவப்பைத் தரும் அதே வேளையில் மிகுந்த சலிப்பையும் தந்துவிடும்.உண்மை சீக்கிரம் அலுத்துப்போவது அதன் இயல்பாயிருக்க முடியாது ஆனால் புனைவிலும்,அழகியலிலும்,பொய்யிலும், பாசாங்கிலும் ஊறித் திளைத்த நம் தமிழ்மனம் உண்மைத் தன்மையில் வெளிறிப்போகிறது.நிர்வாணத்தில், கனவின் கைப்பிடியை நெகிழ விட்ட வெட்டவெளியில், தனக்கான பயங்களின் பிறழ்வில் உண்மை மிகுந்த வெறுமைகளோடு சலிப்புகளை பதிவிக்கிறது. இருப்பினும் உண்மையை நேசிக்க ஆரம்பி.உண்மை மட்டுமே உண்மையானது.

தமிழ்சினிமாக்களில் தொப்புள்களாய்,பாதிபிதுங்கிய முலைகளாய் ஒதுங்கிய மாராப்புகளாய் பார்த்துப் பழகிய பெண்ணுடல் திடீரென எல்லாவற்றையும் அவிழ்த்தெறியும்போது ஒரு முகச்சுளிப்பு வந்து படர்வதை என்னால் மறுக்கமுடியவில்லை. மறைமுகமாய் நிர்வாணத்தின் மீது வெறுப்பை அல்லது ஈடுபாடின்மையை புனைந்து கொள்ள உள்மனதிற்கு ஊக்கிகளாக இருந்தது தமிழ்சினிமாவும் புனிதர்களும் மட்டும்தான்.இப்போது பார் உச்ச கட்டம் என்பது அவள் தன் பிராவின் ஊக்குகளை கழட்டும்போதே எனக்கு நேர்ந்துவிடுகிறது. இதே போன்ற அணுகுமுறைதான் அரசியலிலும் கலையிலும் வாழ்வியலிலும் பொதுவாய் தமிழ் பேசப்படும் இடங்களிலெங்கும் நிகழ்கிறதென்பதை நான் சொன்னாள் நீ என்னை மனம் பிறழ்ந்தவன் எனத் தூற்றுவாயா? …..

Saturday, September 1, 2007

வகைத் தொகையில்லா சில உரையாடல்கள்-5



நேற்றைய பிற்பகலில் பச்சை விளக்குகள் மினுங்க
ஆங்கிலத்தில் என் திரையில் தோன்றிய
தமிழெழுத்துக்கள்
என் இடுகைகளை தவறாது படித்துவிடுவதாகவும்
பின்னூட்டமிட்டால் எங்கே இந்தப் புனிதர்கள்
தன்னைத் தவறாய் புரிந்துகொண்டுவிடுவார்களோ
என பயந்து
பின்னூட்டத்தை தவிர்ப்பதாகவும் சொல்லிற்று

சாயந்திரத்தில் தமிழில் வந்த தமிழெழுத்துக்கள்
மார்பும் தொடையும் தரையில் அழுந்த
படுத்திருந்த பகற்பொழுது விழித்தெழுந்து
ஈரமான கழிவறையின் சன்னல்களைத் திறந்து
வெளியிலலைந்து
பின் சோர்ந்து
திரும்பி வந்து சமைத்ததாய் சொல்லிற்று

பிற்பகலில் சொல்லிவைத்தாற் போன்ற புன்னகையை
எவ்வித தயக்கங்களுமில்லாமல்
தந்துவிட முடிந்தது

சாயந்திரத்தில் சொற்கள் புறப்பட்டு வந்த திசையினை
மட்டுமல்லாது
சொற்கள் உருவான உருவத்தையும்
அணைத்துக் கொள்ளத் தோன்றிற்று

வகைத் தொகையில்லா சில உரையாடல்கள்-4



அதிரும் இசைத் துணையுடன்
போதையில் உலவும் இந்த/எந்த கண்களும்
என் முலைத் தீண்டாமல் போவதில்லை

ஆறு வயது வரை என் அம்மாவின் முலைகளில்
பாலருந்திக்கொண்டிருந்தேன் எனும் சொற்றொடர்களை
என் மேல் குற்றங்களைத் தெளிக்க
எத்தனிக்கும் தருணங்களில்
அம்மா பயன்படுத்துவாள்.

இப்போதும் என் முலைகளின்
துணையோடுதான் உணவருந்துகிறேன்
இந்த மார்பு கச்சை
உள்ளாடைகள்
அறை வாடகை
நாப்கின்கள்
பவுடர்
லிப்ஸ்டிக்
அத்தோடு காண்டம்களையும்
வாங்க முடிவது
பெருத்து விம்மிய
என் முலைகளைக் கொண்டுதான்

போதையிலோ/போதையில்லாமலோ
உலவும் எந்தக் கண்களும்
என் முலைத் தீண்டாமல் போவதில்லை

வகைத் தொகையில்லா சில உரையாடல்கள்-3



காதல் கவிதை எழுதுபவர்களை தூக்கிடலாம்
என்கிற என் கோரிக்கையை
நீ மிகுந்த சினங்களோடு மறுத்தாய்
கவிதையின் புனித தன்மைகள் குறித்த
உனது சிந்தனைகளின் மீது
நான் மூத்திரம் பெய்ய விரும்புகிறேன் கதிர்

எல்லா காதல் கவிதைகளும்
ஓர் அறியாத பெண்ணின் ஆடைகளை
உரித்துப் பார்பதற்காக மட்டுமே எழுதப்படுகின்றன

ஆண்/பெண் களின் ரகசியமறியும் கருவி
என்பதைத் தவிர
காதல் கவிதைகள் குறித்துச் சொல்ல எதுவுமில்லை

இதயத்திற்கு மேலே சுரக்கும்
முலைக் கண்களின் வெளிப்பாடன்றி
காதல் கவிதைகளென்பது
வேறெதுவுமில்லை நண்பா

ஒரு பெண்ணைக் கிளர்த்த
கவிதை எழுதுவதைக் காட்டிலும்
அவளை வன்புணர்வது
பின் நவீன கடவுளர்களின் யுகத்தில்
புனிதமென்று கொண்டாடப்படும்

இந்த பழைய
கசங்கிய
வெளிறிய
நமுத்த
நாற்றமெடுத்த
ஆடைகளைக் காட்டிலும்
நிர்வாணமென்பது
எத்தனை சுதந்திரம்..!!

வகைத் தொகையில்லா சில உரையாடல்கள்-2



என்னுடலில் உன் இதழ் தீண்டா இடங்கள்
ஏதேனும் மிச்சமுள்ளாதா?
என்ற என் கேள்விக்கு மிகுந்த வெட்கங்களோடு
இல்லையெனும் விதமாய்
நீ தலைகவிழ்ந்து தலையசைத்தாய்
உன்னுடலில் என் இதழ் தீண்டா இடங்கள் பற்றி கேட்டபோது
ச்சீய் என வெட்கி மறுத்தாய்

நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா
அப்படியே போயிருப்பினும்
இத்தனை சீக்கிரம் வேறொருவனை
திருமணம் செய்துகொண்டிருக்க வேண்டாம்
அப்படியே செய்துகொண்டிருப்பினும்
இத்தனை சீக்கிரம் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டிருக்க வேண்டாம்
அப்படியே பெற்றுக்கொண்டிருப்பினும்
அவளுக்கு அபர்ணா எனப் பெயர் வைத்திருக்க வேண்டாம்

இப்போது பார்
அ வில் தொடங்கும் பெயர் வைத்திருக்கிறாயே
என மகிழ்ந்து
வழக்கத்திற்கதிகமாய்
இந்தப் பின்னிரவிலும்
என் கண்ணாடி குவளையில்
இன்னும் மதுவை நிரப்புகிறேன்.

வகைத் தொகையில்லா சில உரையாடல்கள்-1




சிவனுக்கு அந்தி அலங்காரங்கள் ஓய்ந்து
நடையை சாத்தியபின்
பின்னிருந்த நந்தவன பூச்செடி மறைவின்
இடுக்குகளில் அமர்ந்தபடி
நீ வேறொருவனுடன் போவது குறித்தான
துயரங்களை சொல்லிக்கொண்டிருந்தாய்..
போவதென முடிவாகிவிட்டபின்
அப்படியே போயிருக்கலாம் ஸரயூ..
என் கன்னத்தில் முத்தமிட்டிருக்க வேண்டாம்

என் பாடலை கடைசியாய் கேட்க முளைத்த
உன் ஆசைகளை நிறைவேற்றும் விதமாய்
கண்கள் மூடி
பைரவி துணையோடு பாடிக்கொண்டிருந்தேன்
ஒரு வெளியில் உன் முகம் தேடி அலைந்த என் பாடல்
தன் துயரங்களை முடித்துக்கொண்டு
உன்னைத் தேடியபோது
நீ அருகிலில்லை
எப்போதோ சென்றுவிட்டிருந்தாய்..

உன் தகப்பனுக்காக என்னை துறந்தாய்
உன் கணவனுக்காக உன்னுடலை விற்றாய்
உனக்கென நீ என்ன செய்தாய் ஸரயூ?

என் நேற்றைய தோழி சொன்னாள்
எந்த ஒரு அன்பையும் நிராகரிக்க முடிவதில்லையென்று
அதில் நிரம்பி வழியும் அபத்தங்கள் உனக்குப் புரிகிறதா ஸரயூ?
எது அன்பென்பதே புரியாத வெளியில்
எங்கிருந்து வந்தன நிராகரிப்பும் ஏற்றுக்கொள்ளலும்?..

அன்பைப் பற்றிய வியாக்கியானங்கள்
எதுவும் சொல்லும் மனோநிலையில் நான் இப்போதில்லை ஸரயூ
ஒருவேளை புகாரியையும் சேதுக்கரசியையும்
நேசிக்கமுடியுமென்கிற என் நெகிழ்தலின் கணத்தில்
உன்னிடம் சொல்லவருவேன்
அன்பிற்கான வரையறைகளை

Featured Post

test

 test