Saturday, November 10, 2007

பெயர் மறந்துபோன அந்தப் பையனும் கருணையின் சாயல்களற்ற கண்களைக் கொண்ட பூங்குழலியும்



அந்தப் பையன் இரண்டாவது ஷிப்டில் வந்து மிகுந்த தயக்கங்களோடு என் பைக் சாவி கேட்டான்.ஏதோ அவசர வேலையிருப்பதாகவும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாகவும் சொன்னான்.நான் அப்போது கருப்பு நிற சுசுகி பைக் வைத்திருந்தேன்.எனக்கு மிகப் பிடித்தமான வண்டி.அதை வைத்திருந்த நான்கு வருடங்களில் எனக்கெந்த விபத்தும் நேரவில்லை.எவ்வளவு குடித்தாலும் அந்த பைக் என்னை எந்த சிக்கலுமில்லாமல் வீட்டில் சேர்த்துவிடும் என்ற நம்பிக்கையும் எனக்கிருந்தது.அவன் கேட்ட விதம் பிடித்திருந்ததால் தயங்காமல் சாவி கொடுத்தேன்.தரக்கட்டுப்பாடு பிரிவில் பரிசோதகனாக வேலை பார்த்தான் அந்தப் பையன். அதற்கு முன் அவனிடம் பேசியது கூட இல்லை மேலும் அவன் ஒரு அப்ரண்டிஸ் பையன் என்பதாலும் அவன் என்னிடம் பேசவோ, நான் அவனிடம் பேசிக்கொள்ளவோ சந்தர்ப்பம் வாய்த்ததில்லை.இரண்டு மணி நேரம் கழித்து ஆனந்த் வந்தான்.ஆனந்த் தரக் கட்டுப்பாடு பிரிவிலும் நான் உற்பத்தி பிரிவிலும் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தோம்.

அந்தப் பையனை ரொம்ப நேரமாக காணவில்லை இந்த பக்கமாக வந்தானா?எனக்கேட்டதற்கு என்னிடம் பைக் வாங்கிப்போன தகவலை சொன்னேன்.ஆனந்த மிகவும் கோபப்பட்டான் வேலை நேரத்தில் இப்படிப் போவதற்கு எப்படி அனுமத்தித்தேன் என்றும் பைக் வேறு கொடுத்தா அனுப்புவது என்றும் சத்தம் போட்டான்.மேலும் அந்தப் பையன் ஆறு மாதத்திற்கு முன்புதான் பைக்கில் விழுந்து வாறினான் என்ற தகவலையும் சொன்னான்.தொடையிலும் நடுமுதுகிலும் ப்ளேட் வைத்திருப்பதாயும் எந்த வாகனத்தையும் ஓட்டக்கூடாது என்றும் அவன் சொன்ன தகவல்கள் சின்ன அதிர்ச்சியை வரவைத்தது.ஷிப்ட் முடிய 1 மணி நேரம் இருக்கும்போது வந்தான்.தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டபடி சாவியை கொடுத்தான்.நான் எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்டேன்.அவன் திரும்பி வந்ததே போதும் என்ற மனநிலை அப்போது வந்துவிட்டிருந்தது.

நான் பணிபுரிந்த நிறுவனம் சுற்றுச் சூழல் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளில்(ஐஎஸ் ஓ 14001 & 18001) சான்றிதழ் வாங்க விரும்பியது. அதற்கான பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.பணிப்பாதுகாப்பு சம்பந்தமாக எங்கள் நிறுவன மருத்துவமனைக்கு தொடர்ச்சியாய் செல்ல வேண்டி வந்தது.மருத்துவமனை மருந்தகப் பிரிவில் பூங்குழலி வேலை பார்த்தாள். அவளிடம் சில தகவல்களைப் பெற வேண்டி இருந்தது.பெண்கள் இருக்கும் சூழலில் பணிபுரிவது மிகுந்த சந்தோஷமான ஒன்று. ஆனால் எனக்கந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இயந்திரவியல் துறை என்பதாலும் அதிலும் உற்பத்திப் பிரிவு என்பதாலும் என் பணியிடங்களில் பெண் வாசனையே இல்லாதிருந்தது.(இந்தியாவில் கடைசியாய் பணிபுரிந்த நிறுவனத்தில் மட்டும் விஜயலட்சுமி இருந்தாள்.சக ஆணை விட சக பெண்ணுடன் பணிபுரிவது பல விதங்களில் இணக்கமானது.தொழில்நுடப விவரங்கள்,பணிகுறித்தான தகவல்களை சுலபத்தில் ஒரு பெண்ணிடமிருந்து வாங்கிவிடலாம் (என் சமீபத்திய நண்பர் அடிக்கடி சொல்வதுபோல ஒட்டுகாஜ் அல்லது ஓசிகாஜ் அடிப்பது சுலபம்))

ஆனால் பூங்குழலியிடமிருந்து நான் தகவல்கள் வாங்க சற்று சிரமப்பட வேண்டியிருந்தது.அரைமணி நேரத்திற்கொருமுறை கேண்டீன் போக வேண்டியிருந்தது.அவளின் பிறப்பு,வளர்ப்பு எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.என் பைக் நிறம் அவளுக்குப் பிடித்தமானதாய் இருந்தது. என்னை இதற்கு முன்பு பார்த்திருப்பதாகவும் சொன்னாள்.( என் வீடு மருத்துவமனைக்கு சமீபமாய் இருந்தது) பொதுவாய் லொட லொட பெண்கள் மேல் எனக்கு ஆர்வம் இல்லை.அதுவும் சாப்பாடு, சினிமா, ஊர், காலேஜ், வேலை என்பது தவிர்த்து வேறெதுவும் தெரியாத பெண்களிடம் பேச என்ன இருக்கிறது? ஒரு வழியாய் அவளிடம் தகவல்களைப் பெற்றுக்கொண்டு திரும்பினேன் அதற்குள் அவளின் தொலைபேசி எண் என் தொலைபேசி எண் எல்லாம் கைமாறிவிட்டிருந்தது.ஒரு முறை வீட்டிற்கும் வந்து போனாள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் அவள் அந்தப் பையனை பற்றி கேட்டது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.அவள் அந்தப் பையனை காதலிப்பதாக சொன்னாள்.நான் ஆனந்திடம் இதுபற்றி சொன்னேன். உங்காளு பார்யா கலக்குறான்! என்றதற்கு அவன் சிரித்துக்கொண்டான்.அந்த பையனை அதற்கு பிறகு வேறு மாதிரி பார்க்க ஆரம்பித்தேன்.ஒரு ஆண் ஒரு பெண்ணால் காதலிக்கப்படுவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததது.அந்த ஆண் அதற்குப் பின் வேறுமாதிரி ஒரு வடிவத்தினை அடைகிறான்.ஒரு ஹீரோயிச தோற்றம் அவனுக்குப் பொருந்திவிடுகிறது.பின்பு அந்த நிறுவனத்திலிருந்து விலகிவிட்டு சென்னை போய் விட்டேன்.ஆனந்திடமிருந்து மட்டும் அவ்வப்போது தொலைபேசி அழைப்புகள் வரும்.பின்பு அதுவும் நின்றுபோயிற்று.மூன்று மாதங்கள் கழித்து ஊருக்குப் போனேன் மருத்துவமனையை கடந்து சொல்லும்போது பூங்குழலி நினைவில் வந்தாள் அவளோடு அந்த பையனும் நினைவில் வந்து போனான்.

சாயந்திரம் ஆனந்த் வீட்டுக்கு வந்தான்.மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.அந்த பையன் சூசைட் பண்ணிக்கினான் மச்சி! என ஆனந்த சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.திடீரென்று இரண்டு வாரமாய் ஆளை காணவில்லை என்றும் அவனை செங்கல்பட்டில் ஒரு லாட்ஜிலிருந்து அழுகிய உடலாய் அவன் பெற்றோர் கண்டுபிடித்ததாயும் ஆனந்த் சொன்னது என்னை உறைய வைத்தது.சில நிமிடங்கள் எதுவும் பேசமுடியவில்லை அவன் தாமதமாய் வந்த தருணத்தில் அவனை கடிந்து கொள்ளாமல் விட்டது இப்போது ஆசுவாசமாக இருந்தது.எதற்காகவென்று கேட்டதற்கு காதல் விவகாரம்தான் வேறென்ன எழவு! என இறுகிய முகத்தோடு சொன்னான்.அந்த பையன் மிக மெதுவாய் பேசுவான், உயரமாய், சிவப்பாய், அழகாய் இருப்பான்,என்ன சொன்னாலும் கேட்பான்,எதிர்த்தே பேசமாட்டான்,ரொம்ப நல்ல பையன் என ஆனந்த அடுக்கிக்கொண்டே போனான்.
இந்தப்பெண் அவனை கழட்டி விட்டுட்டு வேறொருத்தனோட சுத்த ஆரம்பிச்சிட்டா! பையனால தாங்க முடியல அதான் இப்படி பண்ணிட்டான்
என்றான்.

ஏனோ உலகத்தின் அத்தனை பெண்கள் மீதும் வெறுப்பாய் வந்தது.ஒரு வழியாய் அவனை தேற்றி அனுப்பி வைத்து விட்டு தனிமையில் புதைந்து கொண்டேன்.அந்தப் பையனின் நினைவுகளிலிருந்து என்னை மீட்டெடுக்க முடியாத கணமொன்றில் பூங்குழலியை பார்க்கப்போனேன்.அவள் அப்போதுதான் கிளம்பிக்கொண்டிருந்தாள் என்னை எதிர்பார்க்காததினால் மிக அதிக வெளிப்படுத்துதல்களுடனே வரவேற்றாள். என்னால் புன்னகைக்க முடியவில்லை. எப்படியிருக்கிறாய்? என்பதற்கு பதில் சொல்லாமல்
அந்த பையன் சூசைட் பண்ணிகிட்டானாமே தெரியுமா?
என்றதற்கு தெரியும் என்றாள்.மேலும் சுத்தப் பைத்தியக்காரத்தனம்!அவன மாதிரி அடிமுட்டாள் எவனுமில்லை என்றாள்.அப்போது அவள் கண்களை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தேன் அதில் கருணையின் சாயல்களைக் கூட காணமுடியவில்லை.அவளின் குரலில் குற்ற உணர்வின் த்வனி எட்டிப்பார்க்கக் கூட இல்லை.எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு வந்துவிட்டேன்.

அதற்குப் பின் நான் பூங்குழலியை பார்க்கவோ பேசவோ இல்லை. எங்களிருவருக்கும் பொதுவான நண்பர்களும் இல்லாததால் அவளைப் பற்றி கேள்விப்படாத நிம்மதியும்
கிட்டியது.எப்போதாவது லாட்ஜில் வாலிபர் தற்கொலை!அழுகிய உடல் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்பு என்ற செய்திகளை நாளிதழில் படிக்கும்போது மட்டும் அந்தப் பையனும் பூங்குழலியும் நினைவில் வந்து போவார்கள்.இப்போது தமிழ் நாளிதழ்களை படிக்கும் பழக்கத்தையும் விட்டாயிற்று.

24 comments:

காயத்ரி சித்தார்த் said...

கதை நல்லாருக்குங்க அய்யனார்..

//அவன் தாமதமாய் வந்த தருணத்தில் அவனை கடிந்து கொள்ளாமல் விட்டது இப்போது ஆசுவாசமாக இருந்தது.//

என்னவோ இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு. :)

கோபிநாத் said...

\\பொதுவாய் லொட லொட பெண்கள் மேல் எனக்கு ஆர்வம் இல்லை.அதுவும் சாப்பாடு, சினிமா, ஊர், காலேஜ், வேலை என்பது தவிர்த்து வேறெதுவும் தெரியாத பெண்களிடம் பேச என்ன இருக்கிறது? \\

ம்ம்...கூடிய சீக்கிரம் இதற்கான பலனை அனுபவிப்பீர்கள் ;))

முரளிகண்ணன் said...

உங்களின் இந்த பதிவை முழுவதும் படித்துவிட்டேன்

ஜே கே | J K said...

கதை நல்லா இருக்கு.

மஞ்சூர் ராசா said...

கதை சொல்லியிருக்கும் விதம் ஒரு சிலரை நினைவுப்படுத்துகிறது.

ஆனால் நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.

நாகை சிவா said...

//இப்போது தமிழ் நாளிதழ்களை படிக்கும் பழக்கத்தையும் விட்டாயிற்று.
//

இங்க ஒரு வருசம் ஆச்சு.. அனுபவமா இல்லை கற்பனை தானா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் அய்யனார். சிறுகதை, புதினம், கவிதை என எதை எழுதினாலும், உங்கள் மொழி ஒரு ப்ளஸ் பாயிண்ட். அதுவே பாதி வேலையைச் செய்துவிடுகிறது.

இப்படியே போனால், உங்கள் ர‌சிகனாகவே அகிவிடுவேன் போலிருக்கிறது.

chandru / RVC said...

வழக்கம் போல நல்லாருக்குங்க அய்யனார்.அது சரி,எப்படிங்க உங்களுக்கு நேரம் கெடைக்குது?

Anonymous said...

கதை நன்றாக உள்ளது.

\\பொதுவாய் லொட லொட பெண்கள் மேல் எனக்கு ஆர்வம் இல்லை.அதுவும் சாப்பாடு, சினிமா, ஊர், காலேஜ், வேலை என்பது தவிர்த்து வேறெதுவும் தெரியாத பெண்களிடம் பேச என்ன இருக்கிறது? \\

ம்ம்...கூடிய சீக்கிரம் இதற்கான பலனை அனுபவிப்பீர்கள் ;))

கோபிநாத்திற்கு நிறைய அனுபவம் போல பு.சா பெண்களுடன் பழகி :)

Ayyanar Viswanath said...

காயத்ரி நன்றி

கோபி வள்ளியோட கேள்விதான் எனக்கும் நிறைய அனுபவமோ :)

முரளி இந்த பதிவ முழுசா படிச்சதுக்கு நன்றி

தேங்க்ஸ் ஜேகே

Ayyanar Viswanath said...

மஞ்சூர்

செய்திதாள்களில் நாம் அடிக்கடி சந்திக்க நேரிடும் மனிதர்களைத்தானே சொல்கிறீர்கள் :)

புலி ஆன்லைன்ல படிக்கிறதில்லையா?
நிஜமான கற்பனை அல்லது கற்பனையான நிஜம்

சுந்தர்
எழுதப்படுபவை எல்லாம் பிடித்திருப்பது மிகவும் மகிழ்வைத் தருகிறது.இப்போதைக்கு உங்கள் அன்பிற்கு நன்றிகள் மட்டும் சொல்லிக்கொள்கிறேன்

Ayyanar Viswanath said...

ஆர்விசி
நேரத்துக்கென்னங்க நிறைய இருக்கு..சொல்லப்போனா சரியா பயன்படுத்திக்கிறது இல்லைன்னு கூட சொல்லலாம்

வள்ளி அது என்னங்க பு.சா பெண்கள்?புதுசா இருக்கு :)

Anonymous said...

//வள்ளி அது என்னங்க பு.சா பெண்கள்?புதுசா இருக்கு :)
//

பு.சா ஆண்களுக்கு மட்டுமே புரியும், பு.சா பெண்கள் என்பது... ;)

Ayyanar Viswanath said...

பு.சா பெண்கள் அப்படின்னு ஒண்ணு கிடையவே கிடையாதுன்னு எங்க தல சொல்றாரே :D

Anonymous said...

//பு.சா பெண்கள் அப்படின்னு ஒண்ணு கிடையவே கிடையாதுன்னு எங்க தல சொல்றாரே :D//

உங்க தல தானே, அவருக்கு இதே வேலையா போச்சி,வேற ஒன்னும் சொல்லறதுக்கில்ல. :)

நிலா said...

அய்யனார் மாமா ஆனந்தவிகடன்ல உங்கள புகழ்ந்து தள்ளியிருக்காங்க. பொண்ணு தேடரப்போ ரொம்ப வசதியா இருக்கும் , :P

வாழ்த்துக்கள் மாமா

Ayyanar Viswanath said...

நிலா கண்ணு

அப்படி இன்னா கண்ணு எழுதி இருக்காங்க ..:)
நம்ம பக்கம் பார்த்து பொண்ணுங்க தலதெறிக்க ஓடுது..இந்த லட்சணத்துல ரெஃப்ரன்ஸ் வேரயா :))

வாழ்த்துக்களுக்கு நன்றி குட்டி

ஆடுமாடு said...

வாழ்த்துகள் தோழரே...இந்த வார விகடனில் உங்கள் வலைப்பதிவு பற்றிய மேட்டர். உங்கள் எழுத்துக்களுக்கான அங்கீகாரம். வாழ்த்துகள் மீண்டும்.

ஆடுமாடு said...

வாழ்த்துகள் தோழரே...இந்த வார விகடனில் உங்கள் வலைப்பதிவு பற்றிய மேட்டர். உங்கள் எழுத்துக்களுக்கான அங்கீகாரம். வாழ்த்துகள் மீண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அய்யனார்,
வாழ்த்துக்கள்.
கதைக்கும் உங்கள் பதிவு பற்றி விகடனில் வந்ததற்கும்.
கவிதைகள் கட்டுரைகள் கதைகள் என்று நிறைய அழகா எழுதி இருக்கார்னு வந்திருக்கு.:))

அற்புதமான நடை,
அழகான அலசல்....
ஹ்ம்ம்ம்ம்
ஏதோப்பா நானும் உங்களை மிட் செய்திருக்கேன்.ஞாபகம் வச்சிக்கோங்க:))

பாரதி தம்பி said...

படிச்சு முடிக்கிற வரைக்கும் கதைன்னு தோணவே இல்லை. கமெண்ட்ஸ் ஏரியால காயத்ரியோட கமெண்ட்டை படிச்சப்பிறகுதான் லேபிளைப் பார்த்தா சிறுகதைன்னு போட்டிருந்தது. கதைக்குப் பின்னால ரொம்ப நெருக்கமான அனுபவம், இருக்கோ..?

Anonymous said...

முதலில் ஆ.வியில் வந்தமைக்கு என் வாழ்த்துக்கள் அய்யனார்.

//நம்ம பக்கம் பார்த்து பொண்ணுங்க தலதெறிக்க ஓடுது..இந்த லட்சணத்துல ரெஃப்ரன்ஸ் வேரயா //

அவங்க தானா ஒடலை. உங்க பி.ந தான் அனேகமா அவங்களை ஓட வெச்சிருக்கும். வேணும்னா கதிரைக் கேட்டுப் பாருங்க. :))

இந்த கதையைத் தனித்துப் படிக்கும் போது ஓ.கே. ஆனால் படிக்கும் போது இதே போன்று காதலில் தோல்வியுற்று தற்கொலையில் முடிந்த உங்கள்து இதற்கு முந்தைய கதையின் சாயல் மனதினுள் உருவெடுப்பதை என்னால் தடுக்க முடியவில்லை.

இந்தக் கதை என்னைக் கவர்ந்தது நடு நடுவே சொல்லி இருக்கும்

//அவன் தாமதமாய் வந்த தருணத்தில் அவனை கடிந்து கொள்ளாமல் விட்டது இப்போது ஆசுவாசமாக இருந்தது.//

என்பது போன்ற முத்தாய்ப்புகள்தான். கதை என்னைப் பொறுத்த வரை ஆர்டினரிதான்.

புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையிருப்பதால்தான் பட்டவர்த்தனமாய்ச் சொல்லி இருக்கிறேன்.

Ayyanar Viswanath said...

இரண்டு முறை வாழ்த்திய தோழர் ஆடுமாடு,அன்பின் ஒட்டு மொத்த குத்தகைக்காரர் வல்லிம்மா, ஆழியூரான் மற்றும் நந்தாவிற்கு நன்றிகள்..

குசும்பன் said...

இது போல கதைகள் உனக்கு அருமையாக வருகிறதுய்யா!

அப்புறம் அது இன்னா பு.கா பெண்கள்?

Featured Post

test

 test