Thursday, December 13, 2007

இந்த இரண்டு கவிதைகளுக்குமான தொடர்பை புரிந்து கொள்ள முடிகிறதா?

அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய்
இன்றும் ஒரு துயரத்தை சொல்ல வந்தவளை
ஏற்கனவே வெளித் தள்ளி கதவை சாத்தியாயிற்று
மீதமிருக்கும்
இந்த நாய்குட்டிகளின் முனகல்கள் நடுநிசியைக் குலைக்கிறது
பேசாமல் கழுத்தினை திருகிப் போட்டுவிடலாம்
மழையில் ஒண்ட வரும் பூனைக்குட்டியை
காலினால் ஒரு எத்து விடலாம்
யாருமற்ற மோனவெளியிலிருந்தபடி
எவரும் எழுதிடாத ஒரு கவிதையை
இந்த மழை நாளின் இரவிற்குள் எழுதிவிட வேண்டும்..


..............00000000000000000....................

என் வீதிகள் மிக விசாலமானது
மிக மிகத் துப்புரவானது
குருடர்
பிச்சைக்கார சிறார்
வயோதிகன்
சாலையோரத் தொழு நோயாளி
திருடர்
என எவருமில்லை இங்கே..
குளிரூட்டப்பட்ட சிற்றுந்திலமர்ந்தபடி
எங்கிருந்தோ பிடுங்கிவந்து நடப்பட்ட மரங்களையும்
தார்ச்சாலைகளுக்கு நடுவில் பூக்க வைக்கப்பட்டிருக்கும்
பூச்செடிகளையும் இரசித்தபடி
துவங்கும் என் விடியல்கள்
அதே கிரமத்தில் எவ்வித மாறுதலுமில்லாமல்
முடியும் மாலைகள்
நாளைய தேதிக்கான பயங்களோ
பதட்டங்களோ
திட்டமிடல்களோ
முடிக்கப்படவேண்டியவைகளோ
முடியாதவைகளோ எதுவுமில்லை
நாளை நேற்றைய தினத்தை போன்ற
இன்னொரு நாள்தான்

நானொரு பயங்கரமான உலகத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....

16 comments:

குசும்பன் said...

இந்த இரண்டு கவிதைகளுக்குமான தொடர்பு

"..............00000000000000000...................."

நடுவில் ஒயர் போவது போல் அதுதான் இருக்கிறது, ஆகையால் அதுதான் தொடர்பாக இருக்கனும்! என்ன நான் சொல்வது சரிதானே!!!

குசும்பன் said...

"நானொரு பயங்கரமான உலகத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...."

இதை துபாய் மன்னர் ஷேக் கலிபா கேட்டு இருக்க வேண்டும். ஓசை செல்லா சொல்வது போல் உன் ...... அறுத்து காக்காய்கு போட்டு இருப்பார்!!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரொம்பப் பிடித்திருக்கிறது கவிதைகள். அதுவும் முதல் கவிதை... அற்புதம் என்று பழகி நைந்து போன வார்த்தையைத்தான் உபயோகிக்க வேண்டியதாயிருக்கிறது. படித்துவிட்டு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறேன். என்ன சொல்ல, நிஜமாகவே நீங்கள் தமிழ் கூறு நல்லுலகில் ஒரு மிக முக்கியமான கவிஞர்... சுருங்கச் சொன்னால் நான் படித்த வலைப்பதிவு கவிதைகளில் மிகச் சிறந்தது இதுதான்.

எதற்கு தொடர்பு படுத்திப் பார்ப்பது. எந்த ஒன்றையும் இன்னொன்றோடு தொடர்பு படுத்தி, தொடர்பு படுத்தித்தானே நாசமாகப் போனோம்.

நெஞ்சு நிறைந்து சொல்கிறேன். வாழ்த்துக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்கள் விரல்க‌ளை முத்தமிடத் தோன்றுகிறது...

Unknown said...

கழுத்தைத் திருகிப் போட எனக்கும் தோன்றும்; பயங்கர உலகம் எனக்கும் உண்டு. தனிமை விரும்பினாலும் சொற்கள் மற்றவருக்கு(ம்) என்பதால்,

சரி பின்னூட்டமாவே போட்டுடலாம்னு இதோ!

Anonymous said...

nalai matoru nalay ... :(

viky :)

Anonymous said...

First kavithai - thanimai inimai (Which I really need now).
Second kavithai - thanimai kodumai (sort of I have now).

Overall? Your blog name will answer it.

Good one.

கதிர் said...

முதல் கவிதையின் கடைசி மூன்று வரிகள் நம்ம கவிதாயினி ஏற்கனவே எழுதிட்டாங்க! அதுகூட எதோ ஒரு கலீல் ஜிப்ரானோ கப்ரானோ பேருல்லாம் தெரியாது.

இந்த இரவிற்குள் யாரும் எழுதாத கவிதை ஒன்றை எழுதிட வேண்டும்னு அவங்க எழுதிருக்காங்க.

ஏன்யா இந்த மாதிரி காப்பி அடிக்கற பழக்கம்?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/ஏன்யா இந்த மாதிரி காப்பி அடிக்கற பழக்கம்?/

தம்பி, என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. எனக்கும் அந்த வரிகள் படித்த மாதிரி இருந்தது; அதை ஒரு உத்தியாகப் புரிந்து கொண்டேன் (inter-textual reference). அதனாலேயே இந்தக் கவிதை எனக்குக் கூடுதலாகப் பிடித்திருந்தது.

Ayyanar Viswanath said...

சுந்தர்
ஒரு பின்னிரவில் உங்கள் பின்னூட்டம் படித்து மிகவும் நெகிழ்ந்து போனேன் புரிதலுக்கும் அன்பிற்கும் நன்றி

Ayyanar Viswanath said...

குசும்பர்ர்ர்ர் மற்றும் டம்பி

கழுத கற்பூரம் வாசனை இது பத்தி ஏதாவது தெரியுமா? :))

கெக்கேபிக்குனி விக்கி தனிமை விரும்பி

நன்றி

கதிர் said...

//கழுத கற்பூரம் வாசனை இது பத்தி ஏதாவது தெரியுமா? :))//

கழுத கற்பூரம் பத்திலாம் எனக்கு தெரியாது, ஆனா உன்ன பத்தி எனக்கு நல்ல்ல்ல்லாவே தெரியும்.

கதிர் said...

ஜ்யோவ்ராம் சுந்தரும், அய்யனாரும் ஒரே ஆள் என்று சற்று முன் குசும்பர் போனில் சொன்னார்!
அது உண்மையா அய்ஸ்?

ஹரன்பிரசன்னா said...

முதல் கவிதையைப் போன்ற கருத்துடைய கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக 'மழையில் ஒண்ட வரும் பூனைக்குட்டி' என்கிற பிரயோகம். ஒரே எண்ணங்கள் இப்படி நேர்வது மிக இயல்பு. உங்களின் மற்ற கவிதைகளைவிட இது சுமாரானது என்பது என் எண்ணம்.

ஹரன்பிரசன்னா said...

எனக்குப் புரிந்த இந்த இரண்டு கவிதைகளுக்குமான தொடர்பு, நீங்கள் இழந்த உலகம் என்பது. ஆனால் ஒரு விசித்திரம், எப்படி இரண்டு உலகங்களையும் கவிதை என்கிற படைப்பு இணைக்கிறது என்று யோசிக்கலாம்.

ரௌத்ரன் said...

//என் வீதிகள் மிக விசாலமானது
மிக மிகத் துப்புரவானது
குருடர்
பிச்சைக்கார சிறார்
வயோதிகன்
சாலையோரத் தொழு நோயாளி
திருடர்
என எவருமில்லை இங்கே..
குளிரூட்டப்பட்ட சிற்றுந்திலமர்ந்தபடி
எங்கிருந்தோ பிடுங்கிவந்து நடப்பட்ட மரங்களையும்
தார்ச்சாலைகளுக்கு நடுவில் பூக்க வைக்கப்பட்டிருக்கும்
பூச்செடிகளையும் இரசித்தபடி
துவங்கும் என் விடியல்கள்
அதே கிரமத்தில் எவ்வித மாறுதலுமில்லாமல்
முடியும் மாலைகள்
நாளைய தேதிக்கான பயங்களோ
பதட்டங்களோ
திட்டமிடல்களோ
முடிக்கப்படவேண்டியவைகளோ
முடியாதவைகளோ எதுவுமில்லை
நாளை நேற்றைய தினத்தை போன்ற
இன்னொரு நாள்தான்

நானொரு பயங்கரமான உலகத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....//

அப்போ புரியல..பிடிக்கல...இப்போ புரியவும்..பிடிக்கவும்..பயமுறுத்தவும்செய்யுது அய்யனார்...

Featured Post

test

 test