Saturday, March 8, 2008

தனிமையின் நிழல் குடை - அகிலன்


பின்
ஓர் இரவில்
துப்பாக்கியின் கண்கள்
அவன் முதுகினில் நிழலெனப்படிந்து
அவன் குரலுருவி
ஒரு பறவையைப் போல்
விரைந்து மறைந்ததாய்
அவன் குழந்தைகள் சொல்லின


தமிழ்சூழலை வெற்றுச் சொற்களால், பகட்டால், விளம்பர மிகைப்படுத்தல்களால் நிறைக்கும் மாதிரிகளின் குரல்வளையை / கைவிரலை நெறிக்கத் தோன்றும் அதே சமயத்தில் உண்மைக்கு சமீபமான எழுத்துக்களை கொண்டாடத் தோணுகிறது.தனது வாழ்வை கிசுகிசுப்பான குரலில் ஈரத்தோடு பதிவிக்கும் கவிஞனை இறுக அணைத்துக்கொள்ளலாம். மிகுந்த அன்பும் நெகிழ்வும் கொண்ட வினோத படைப்பு கவிஞனாகத்தான் இருக்க முடியும்.அகிலனின் கவிதைகள் வலைப்பக்கத்தில் படிக்கும்போது ஏற்படுத்திய உணர்வுகளை விட முழுத் தொகுப்பாய் படிக்கும்போது அதன் வீர்யம் சற்று அதிகமாய்த்தான் இருந்தது.

மழையையும், வண்ணத்துப் பூச்சியையும், அன்பையும், நெகிழ்தலையும், துயரையும், வலிகளையும் அழைத்து வந்திருக்கும் இன்னொரு கவிஞன்.இவனுக்கான பின்புலமாய் அலைவுகளுக்குட்பட்ட வாழ்வும், துப்பாக்கி சப்தங்களும், நெருக்கமான மரணங்களும், அந்நியத்தின் இணக்கமற்ற குரூரமும், அடையாளங்களுக்கான தவிப்புகளுமாய் இருந்திருக்கிறது.மொழியில் வாழ்வைப் பொதிந்துவைக்கும் அல்லது பொய்மை/பூச்சுகளைத் தவிர்க்கும் கவிதைகளோடு என்னால் நெருக்கமாக ஒட்டிக்கொள்ள முடிகிறது.உரத்த குரலில் பேசுவது எப்போதும் நிம்மதியின்மையைத் தருகிறது.கிசுகிசுப்புகளாய் சொல்லப்படும் குருதி வாடை கலந்த கவிதைகள் என்னமோ செய்து விட்டுப் போகிறது.

அகிலனின் முதல் கவிதைத் தொகுப்பை மின் நூலாகத்தான் படிக்க முடிந்தது. இக்கவிதைகளை எந்த ஒரு சட்டகத்துக்குள்ளும் நான் அடைத்து வைக்க விரும்பவில்லை.தனி மனிதனின் நுண்ணுணர்வுகளை மொழியாக்கும்போது அதை விமர்சிக்கவோ, இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம் ரீதியிலான மேதாவித் தனங்களை வெளிப்படுத்திக் கொள்ளவோ எனக்கு விருப்பமில்லை. மேலும் இக்கவிதைகளிள் அதிகமாய் விரவி இருக்கும் தன் வயத்தன்மை மிகுந்த பரிவுகளை உண்டாக்கி கவிஞனை மிக நெருக்கமாய் உணரச் செய்துவிடுகிறது.வடிவ நேர்த்தி, ஒழுங்கு, கவித்துவம் என்பதின் மீதான நம்பிக்கைகள் எனக்கு எப்போதும் இருந்திராதது மிக வறட்சியான கவிதைகளையே எழுதத் தூண்டி இருக்கிறது.இக்கவிதைகளில் எனக்குப் பட்ட கச்சிதத் தன்மை படிக்க ஏதுவாகவும் கனவுத் தன்மையை உயிர்ப்பிப்பதாகவும் இருந்தது...

வெயில் சார்ந்த வாழ்வு மழையின் மீது காதலை,ஏக்கத்தை அதிகரித்துப் போகிறது. மழையைப் பற்றி எழுதாதவனை கவிஞனில்லை எனச் சொன்னாலும் அதை புன்முறுவலோடு ஏற்றுக்கொள்ளலாம் மழையின் மீதான நெகிழ்வை அகிலனின் மொழி கதவுகளைப் பிறாண்டும் பிராணி என்கிறது.இப்படிமம் மழையை சக உயிராக நினைக்கும் நெகிழ்வான மனதை கண் முன் நிறுத்துகிறது.வண்ணத்துப் பூச்சிகள், சிட்டுக்குருவிகள், முத்தம், கொலுசு என சன்னமாய் பெய்து கொன்டிருக்கும் மழையை நினைவூட்டும் கவிதைகள் சில பக்கங்கள் தாண்டியதும் குரூரத்தைப் பேசுகிறது. வன்மத்தை, அதிகாரத்தை, நசுக்கப்படுதலை, எதிர்க்கத் திராணியற்று போதலை பேசத் துவங்கியதும் கவிதையின் மொழியில் இறுக்கம் கூடுகிறது.குறிப்பாய் காட்டின் நினைவு என்கிற கவிதை திரும்பத் திரும்ப வாசிக்க வைத்தது.அந்த கச்சிதமான எதிர்ப்பு, மிகக் குறைவான/சன்னமான ஆனால் அழுத்தமான எதிர்ப்பு எல்லாவற்றுக்குமான காரணங்களை சொல்கிறது.

எம்மிடம்
பை நிறையக் கனவுகள் இருந்தன
வேரெதையும் எடுத்துக்கொள்ளவுமில்லை
விட்டுச்செல்லவுமில்லை
கொஞ்சம் விரோதங்களைத் தவிர..
கவிதை மய்யங்களின் சீரான வளர்ச்சி மொழியின் வசீகரத்தைத் தவிர்த்திருக்கிறது தவிர்ப்பது தேவையானதும் கூட. வீர்யமான கவிதைகளுக்கான காலமென இச்சூழலைச் சொல்லலாம் புனைவை நோக்கி நகர வேண்டிய நிர்பந்தத்திலும் நாமிருப்பது அல்லது புனைவின் மீதான விருப்பங்களில் நாமிருப்பது மிகவும் ஆரோக்கியமானது. எழுதப்படாத சொற்களும் தாள்களும் புனையும் தளம் விநோதமானது

தன் பின்னலைத் தளர்த்திய
ஒரு கிழவியின்
சாபத்தின் சொற்கள்
ஊரை நிறைத்தது

பின்பொரு நாள்
பூவரசம் வேலிகளைத்
தறித்தபடியெழும் கோடாரின் கரங்கள்
ஒரு குழந்தையிடமிருக்கக்
கண்டேன்
அம்மம்மாவின் சுருக்குப் பை மிக அழகான கிராமத்து வாழ்வை மிகுந்த ரசனைகளோடு சொல்கிறது
தும்புமிட்டாஸ்காரனின்
கிணுகிணுப்பிற்கு
அவிழ்கிற அம்மம்மாவின்
சுருக்குப் பை போல
அவிழ்ந்து கிளம்புகின்றன
ஞாபகங்கள்
கடவுள், துரத்தப்பட்ட ஆடு, மதங்கொண்ட நிலவு போன்ற கவிதைகள் சிறுகதைக்கான காட்சிகளை உள்ளடக்கியிருக்கிறது.கவிஞனுக்கு இருக்கும் பொது குணமாக கழிவிரக்கத்தையும் குற்றவுணர்வையும் சொல்லலாம் அல்லது மிகுந்த குற்ற உணர்வுகளும், கழிவிரக்கமும், பிரிவும், துயர்களும் மாத்திரமே கவிதை எழுதத் தூண்டுகிறதோ என்னமோ..பிறழ்வில் முடித்திருக்கும் அகிலனிடமிருந்து பிறழ்வின் வசீகரங்களை, பிறழ்வின் மூலமாய் நிகழ்த்தப்படக்கூடிய சாத்தியங்களை, புது மொழிகளை எதிர்பார்க்கலாம் எனத்தான் தோன்றுகிறது.நல்லதொரு கவிதை அனுபவத்தை தந்த அகிலனுக்கு வாழ்த்துக்களும் அன்பும்.

6 comments:

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

அகிலனுக்கு வாழ்த்துக்கள்... கூடவே அய்யனாரின் நெகிழ்ச்சி மிக்க அன்புக்கும்...

Anonymous said...

அகிலனைப் போலவே இருக்கின்றன அவர் கவிதைகளும். எளிமையும் வெளிப்படையும் அன்பிற்கு நெகிழ்தலுமாய். கட்டிறுக்கமான மொழி காலம்கடந்தும் நிற்கும். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நல்லதொரு அறிமுகம் தந்ததற்கு நன்றி.. என்னை உரைநடைகளே அதிகம் ஈர்ப்பதுண்டு ஏனெனில் பாடு பொருளாக தொடர்ந்து வரும் வழக்கமான கருப்பொருள் காரணமாகக்கூட இருக்கலாம். ஆனால் இந்த கருத்துக்கோவை அகிலனின் கவிதைத்தொகுப்பை வாசிக்கத்தோன்றும் வண்ணம் அமைந்துள்ளது. நன்றி வாழ்த்துக்கள்.

ரௌத்ரன் said...

கவிதை குறித்த உங்களது ஆழமான விருப்பத்தை அறியத்தருகிறீர்கள்..மேலோட்டமானகாதல் கவிதைகளையும் அவ்வப்போது காட்டமாக விமர்சிக்கிறீர்கள்...ஆரம்ப நிலை கவிதைகளுக்கு கொஞ்சம் விலக்கு அளித்து கவிதை குறித்த புரிதலை அறியத்தாருங்கள்..(இது வேண்டுகோள் மட்டுமே).த.அகிலன் என்ற புதிய கவிஞரை அறியத்தந்ததற்கு நன்றி..

KARTHIK said...

//இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம் ரீதியிலான மேதாவித் தனங்களை வெளிப்படுத்திக் கொள்ளவோ எனக்கு விருப்பமில்லை//

//அகிலனின் மொழி கதவுகளைப் பிறாண்டும் பிராணி என்கிறது.இப்படிமம் மழையை சக உயிராக நினைக்கும் நெகிழ்வான மனதை கண் முன் நிறுத்துகிறது.//

நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி.

மலைநாடான் said...

அய்யனார்!

அகிலனின் எழுதத்துக்கள் போலவே இயல்பில் அவரும். சன்னதத்தை சன்னமாகச் சொல்லும் இயல்பினன். விலைகொள்ள முடியா இக்கவிஞனின் நிலைகொள்ளல் நிச்சயம் சிகரம் தொட்டமையும். உங்கள் வரிகளுக்கு இனிய அன்பும், அகிலனுக்கு வாழ்த்துக்களும்.
நன்றி.

Featured Post

test

 test