Thursday, January 8, 2009

அடர்நீலத் தீற்றல் கொண்ட பறவை



நேற்றும் எமிரேட்ஸ் சாலையை ஒட்டியிருக்கும் ஏரிக்குப் போய் வெகு நேரம் காத்திருந்து திரும்பினேன்.அந்தப் பறவை வரவே இல்லை.சென்ற வருடம் அதை இங்குதான் சந்தித்தேன்.சாம்பல் நிற உடலும்,வெள்ளை நிற இறக்கைகளும் கொண்ட பறவை அது.இறக்கைகளுக்கு உட்புறத்தில்,தூரிகையால் பட்டைக் கோடிழுத்ததைப்போல அடர் நீலத்தில் ஒரு தீற்றல் இருக்கும்.நீரிலிருந்து அப்பறவை மேலெழும்பும்போது,அதன் உட்புற நீலம் நில நீரில் பிரதிபலித்தது. குளிர்கால சாயந்திர சூரியனோடு அந்தப் பறவையின் பறத்தல்களை, படபடப்புகளை பார்த்துக்கொண்டிருக்க ரம்மியமாய் இருந்தது. எவ்வளவு முயற்சித்தும் என்னால் அந்தப் பறவையின் பெயரைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அப்பறவையை மிகக் கவனமாய் அவதானித்து அதன் முழுவிவரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என இந்தக் குளிர்காலத்திற்காய் காத்திருந்தேன்.

சிறுவயதிலிருந்தே என்னை இந்தப் பெயர்கள் அறிந்து கொள்ளும் வியாதி பாடாய் படுத்தி வருகிறது.கண்ணில்படும் மரம்,செடி,பறவை,விலங்கு,ஊர்வன,நெளிவன என அத்தனைக்கும் பெயர் தெரிய வேண்டும். இல்லையெனில் மண்டை வெடித்து விடுவது போலிருக்கும்.இந்தப் பிடிவாத பழக்கத்தால் நான் வாழ்வில் இழந்தைவைகளை பட்டியலிட ஆரம்பித்தால் அது இச் சிறுகதையை சலிப்பான குறுநாவலாக மாற்றிவிடும்.அதனால் எனக்கெப்படி இந்த பழக்கம் வந்தது என்பதை மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் கதைக்குத் திரும்புகிறேன்.

என் தந்தை வழிப் பாட்டிக்கு மூலிகை வைத்தியம் தெரியும். திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் என் பாட்டியின் பெயர் மிகவும் பிரபலம். அவள் மூலிகைகள் சேகரிக்கச் செல்லும்போது என்னையும் உடன் அழைத்துப் போவாள். குறுங்காடுகள், ஏரிக்கரைகள், வயல் தோப்புகள், மரங்கள் அடர்ந்த மலையடிவாரங்களென நானும் என் பாட்டியும் மூலிகைகளைத் தேடி அலைவோம்.என் பாட்டிதான் எனக்கு எல்லா செடி கொடிகளின் பெயர்களையும் சொல்லித் தந்தாள். நூற்றுக்கும் அதிகமான மூலிகைச் செடிகளின் பெயர்கள் எனக்கு மனப்பாடமாகியிருந்தன.எந்தச் செடியினைப் பார்த்தாலும் அதன் பெயரை உடனே சொல்லிவிடுவேன்.இரண்டு இலைகள் ஒரே போல இருந்தாலும் அவைகளுக்கிடையிலான துல்லியமான வேறுபாடுகளை கண்டறியும் அளவிற்கு என்னைத் தயார்படுத்தியிருந்தாள்.மேலும் வழியில் தென்படும் மரங்கள்,பறவைகள் என எல்லாவற்றின் பெயரையும் அவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.என் பாட்டிக்கு எல்லாவற்றினுக்கும் பெயர் தெரிந்திருந்தது அல்லது இவளாகவே புதிது புதிதாய் பெயர்களையும் வைத்திருக்கக்கூடும். ஆனால் கடைசி வரை விஷத்தை முறிக்கும் இலைச்செடியின் பெயரை மட்டும் சொல்ல மறுத்துவிட்ட்டாள்.சிலவற்றின் பெயர்களை வெளியில் சொன்னால் அது பலனளிக்காமல் போய்விடும் என்கிற நம்பிக்கைகளும் என் பாட்டியிடம் இருந்தன.மொத்த விஷமுறிவு இலைகளையும் அவள் பச்சிலை என்கிற ஒரே சொல்லால் குறிப்பிட்டாள்.ஆனால் தேள் கடிக்கும்,பாம்பு கடிக்கும் வெவ்வேறு இலைகளைத் தரவேண்டும்.

இவ்வாறு துவங்கிய என் பெயர் அறிதல் பழக்கம் பதின்மங்களில் வியாதியாய் மாறத் துவங்கியது. கண்ணில் படும் எல்லாப் பெண்களின் பெயர்களும் எனக்குத் தெரிந்தே ஆகவேண்டும் என்கிற எண்ணங்கள் முதலில் எழ ஆரம்பித்தன.என் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவிகள் வரை எல்லா பெண்களின் பெயரும் எனக்கு மனப்பாடமாகி இருந்தன.இனிஷியல் பிசகாமல் எதிர்ப்படும் ஒவ்வொரு பெண்ணின் பெயரையும் துல்லியமாய் சொல்வேன். இதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளை சொல்ல ஆரம்பித்தால் அது மிகவும் சலிப்பானதொரு நாவலாக மாறிவிடும் அபாயமிருக்கிறது. மேலும் நானொரு சிறுகதையை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதையும் அடிக்கடி எனக்கு நானே சொல்லிக்கொள்வதன் மூலம் என்னுடைய கவனமும் உங்களுடைய கவனமும் பிசகிவிடாமல் இருக்கலாம்.

பின்பு என் பிரச்சினைகள் குறித்து நானே தீர்க்கமாய் சில முடிவுகள் எடுத்தேன்.ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தேன். மனிதர்கள் அதிகமாய் புழங்கும் இடங்களைத் தவிர்த்தேன்.சராசரி மனிதனுக்கு நிறைவையும்,மகிழ்ச்சியையும் தரக்கூடிய எல்லாச் செயல்களிலும் விலகித் தனித்திருந்தேன்.நகரம் சார்ந்து வாழத் தொடங்கிவிட்டதால் கண்ணில் தென்படும் பறவைகள்,மரங்கள் எல்லாம் எனக்கு ஏற்கனவே அறிமுகமாகி இருந்தன.பெண்கள் கண்ணில் படாதபடி மட்டும் மிகவும் தற்காப்பாய் என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன்.இரண்டு வரியில் என் தகவமைப்பை மாற்றிக்கொண்டதை நான் எழுதியிருந்தாலும் அதற்குப் பின்னால் உள்ள என் சிரமங்கள், இழப்புகள் உங்களுக்குப் புரியுமென நம்புகிறேன்.

இந்த நாட்டிற்கு இடம் பெயர்ந்த பிறகு அலுவலகத்திலும் வீட்டிலுமாய் அடைந்து கிடைக்க இணையம் உதவியது.எழுத்து போல ஒன்று என் கைவசமானதும் ஏகப்பட்ட நண்பர்கள் கிடைத்தார்கள்.குறிப்பாய் பெண்களுக்கு என் எழுத்து மிகவும் பிடித்தது.எந்த ஒன்றினை விட்டு விலகியும் பதுங்கியுமாய் இருந்தேனோ அந்த ஒன்று எழுத்து வடிவங்களில் என்னுடன் பேச ஆரம்பித்தது.இறுக்கமாய் அடைக்கப்பட்ட குப்பிகளிலிருந்து பீறிட்டெழும் மதுவைப் போல பெண்களின் எழுத்துக் குரல்கள் என்னில் மிகப்பெரும் பொங்குதல்களை சாத்தியமாக்கிக் காட்டின.அடைந்த என் நெடுந்தனி வாழ்வின் புதுவித சன்னல் திறப்பு என மகிழ்ந்து போனேன்.இந்த மகிழ்ச்சியையும் நீடிக்க விடாமலிருக்க அவள் என் உலகத்தில் பிரவேசித்தாள்.வினோத எண்கள் மற்றும் குறியீடுகளைப் பெயர்களாக வைத்துக்கொண்டு என்னை அணுகினாள்.என் எழுத்துக்கள் பித்த நிலையின் துவக்கமெனவும் எழுதுபவனுக்கோ, தொடர்ச்சியாய் படிப்பவனுக்கோ மன நிலை பிறழலாம் எனவும் எச்சரித்தாள்.நான் அவள் பெயரை சொல்லும்படி வலியுறுத்தினேன்.அவள் பிடிவாதமாய் மறுத்தாள்.என் இயல்பு நிலை மீண்டும் குலைந்து போனது.நான் அவளை விடாது வற்புறுத்தினேன். கெஞ்சினேன். கத்தினேன். மிரட்டினேன்.கடைசியில் பெருங்குரலெடுத்து அழுதேன்.அவள் மிகவும் பிடிவாதமாக தன் பெயரைச் சொல்ல மறுத்து விட்டாள்.

கிட்டத் தட்ட எழுபத்தெட்டு நாட்களாக தொடர்ச்சியாய் நான் அவளையே சிந்தித்தேன்.அவள் இருக்கும் இடம் குறித்தும் என்னால் எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை. பறவையின் நகர்வுகளைப் போல அவள் பிரவேசங்களிலும், விடைபெறல்களிலும் எவ்வித தடயங்களும் மீதமிருக்கவில்லை.கடைசியில் அவளொரு வினோதப் பறவை என நம்பத் துவங்கினேன்."எந்தப் பறவைக்குத் தெரியும் தம் பெயர் இன்னதென்று?" எனவே நானே அவளுக்கொரு பெயர் சூட்டினேன்.பின்புதான் என் உலகம் சம நிலைக்குத் திரும்பியது.இந்த அலைக்கழிப்பிற்கு பிறகு அவளுடனான என் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டேன்.

சென்ற ஒரு வருடமாகத்தான் மீண்டும் பறவைகள் பக்கம் திரும்பியிருக்கிறேன். குளிர்காலங்களில் இந்த நாட்டிற்கு நெடுந்தொலைவிலிருந்து பெருமளவு பறவைகள் வரும்.சாலையோரப் புல்வெளிகள், பூங்காக்கள், கார்னீஷ்கள், ஏரிகள்,கோட்டைச் சுவர்களென பறவைகள் எல்லா இடங்களிலும் கூட்டமாய் சிறகடித்துக் கொண்டிருக்கும்.தினம் ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்வேன்.வடிவம்,நிறம்,அலகு இவற்றைக் கொண்டே அப்பறவையின் பெயர்,திசை எல்லாவற்றையும் சொல்லிவிடலாம்.கண்முன் நகரும் ஒவ்வொன்றின் பெயரையும் சன்னமாய் உச்சரித்தபடி பார்த்துக்கொண்டிருப்பேன். புதிதாக ஒரு பறவையை பார்க்க நேரிடின் பரபரப்படைவேன்.அதன் பறக்கும் விதம், வடிவம் என எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொள்வேன்.அது சாப்பிடும் முறை, அதன் பிரத்யேக குணாதிசயங்கள் இவற்றையும் கவனமாய் குறிப்பெடுத்துக் கொள்வேன்.இணைய தளங்கள் அல்லது பறவை ஆராய்ச்சியாளர்களை பாடாய் படுத்தி அப்பறவையின் பெயரைத் தெரிந்துகொள்வேன்.சென்ற வருடத்தில் இந்த அடர் நீலத் தீற்றல் கொண்ட பறவையை சரியாய் புகைப்படமெடுக்காமல் விட்டுவிட்டேன்.கடந்த ஒரு வருடமாக இந்த அடர் நீலத் தீற்றல் கனவிலும் நினைவிலுமாய் மின்னிக் கொண்டிருக்கிறது.இந்த வருடத்தில் எப்படியும் இதன் பெயரைக் கண்டறிந்து விட வேண்டும்.

ஒருவேளை இந்தக் குளிர்காலத்தில் அப்பறவை வராவிடின் இன்னொரு பறவைக்கும் நானே பெயர்சூட்ட வேண்டி வரலாம். ஆனாலும் என் பாட்டியினைப் போல நான் இன்னமும் பொருத்தமான பெயர்களை வைக்கக் கற்றுக் கொள்ளவில்லை. மேலும் பெயர்கள் கிளைக்கும் வேர்கள் திகைத்த பின்னர்தான் நான் பெயர் சூட்ட முனைகிறேன்/முனைவேன். அதுவரையிலும் வேரெங்கிலாவது உயிர் கொண்டிருக்கும் அடையாளங்கள் என்னை நோக்கி வரும் வரையிலும் நான் காத்துக் கொண்டிருப்பேன் அல்லது தேடிக்கொண்டிருப்பேன்.

சில குறிப்புகள்...

1.அந்தப் பெயர் சொல்ல விரும்பாத பறவைக்கு/பெண்ணுக்கு நான் வைத்தப் பெயர் உரையாடலினி.

2.இந்த ஒரு பிரதி முந்நூற்று அறுபத்தேழு சிறுகதைகளுக்கான கருவைக் கொண்டிருக்கிறது. அல்லது இப்பிரதியிலிருந்து இன்னும் முந்நூற்று அறுபத்தேழு சிறுகதைகள் எழுதப்படலாம்.

3.இப்பிரதியிலிருந்து "குறியீட்டு வடிவினளுடன் நிகழ்ந்த எழுபத்தெட்டு நாள் உரையாடல்கள்" என்கிற தலைப்பில் ஒரு நாவல் எழுதப்படலாம்.அதன் பக்க அளவு பரவலாய் எல்லோராலும் பயமுறுத்தப்படும் அசோகவனம் நாவலை விட அதிகமாக இருக்கலாம்.

19 comments:

மாதவராஜ் said...

நண்பரே!

இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்திருக்கிறேன்.
உங்கள் எழுத்து நடையில் மயங்கி நிற்கிறேன்.
ஆளரவமற்ற ஒற்றையடிப்பாதையில், பனையோலைகளின் சலசலப்புகளுக்கு ஊடே காதலின் நிறம் விரிந்த பிரதேத்தில் சஞ்சரித்து திரும்புகிறேன்.
வாழ்த்துக்கள்.
இனி இங்கு தொடர்ந்து வருவேன்.
இது சிறுகதையுமல்ல, நாவலுமல்ல.
ஆனால் அதற்கான தடங்களும் இருக்கின்றன.
இன்னும் சஞ்சரிப்பேன்.
//எழுத்து போல ஒன்று என் கைவசமானதும் ஏகப்பட்ட நண்பர்கள் கிடைத்தார்கள்.//

என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ரௌத்ரன் said...

ஆனா ஒன்னுங்க...எனக்கு எப்பெல்லாம் பைத்தியம் பிடிச்சுடுமோன்னு பயம் வரும்போதொல்லாம் உங்க வலைப்பக்கம் வரேன்...கொஞ்சம் சரியான மாதிரி ஆகிடும்.

புனைவுல உல்ட்டாவா வந்துருக்கறத பார்த்தா கொஞ்சம் பயமாயிருக்குங்க....

கோபிநாத் said...

;))))

Anonymous said...

நல்லாயிருக்கு அய்யனார் சார் :-)

sy said...

Ithu Karpanaya allathu unmaya?

அபி அப்பா said...

அய்ஸ்! அவளா இவ! அப்ப கற்பனையா? நல்லா இருக்கு எழுத்து ஓட்டம்!

anujanya said...

இந்த வருடத்தின் (ஹீ ஹீ இதுவரை) உங்களின் சிறந்த பதிவு. சான்சே இல்ல அய்ஸ்.

Vintage stuff.

பாட்டி பொதுவாக விஷ முறிவு மூலிகைகளுக்குப் பெயர் வைக்காதது போலவே ஒரு காரணமாய் அவள் பெயர் தெரியாமல் இருக்கலாம். குறுநாவல், நாவல், அசோக வனம் என்று அனாவசியமாக வம்பிழுக்கிறீர்கள் :)

ஒரு கோணத்தில் சந்தோஷ் வென்று விட்டான். மாமன் போல் வழவழ வாசிப்பில்லாமல், மாமனையும் தன்போல் பறவைகள் பின் ஓட வைத்துவிட்டான் :)

நல்ல வாசிப்பின்பம் அய்ஸ். நிச்சயம் மீள் வாசிப்பு செய்வேன். இந்த பார்ம் தொடரட்டும்.

அனுஜன்யா

கிருத்திகா ஸ்ரீதர் said...

இதுவும் புனைவுதானா :)

தமிழன்-கறுப்பி... said...

பயமாயிருக்கு தல...
ஏன்னா உங்க பதிவுகளை படிக்காம இருக்க முடியறதில்லை...!

தமிழன்-கறுப்பி... said...

சீக்கிரம் ஒரு நாவலை எழுதுங்க தல நான் வாசிச்சு தூங்க முடியாமல் இருக்கிற முதல் நாவல் உங்களோடதா இருக்கணும்...

Krishnan said...

அன்பு நண்பரே இடைவெளி - எஸ்.சம்பத் படிக்க விருப்பம், புத்தக சந்தையில் கிடைக்க வில்லை. தங்கள் விமர்சனம் பார்த்தேன், என்னுடைய email id jeyashreeravi@gmail.com-இக்கு அனுப்ப முடியுமா ? தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

MSK / Saravana said...

அட்டகாசம் தல.. உங்களால மட்டும் எப்படித்தான் இப்படி எழுத முடியுதோ..

MSK / Saravana said...

// தமிழன்-கறுப்பி... said...

சீக்கிரம் ஒரு நாவலை எழுதுங்க தல நான் வாசிச்சு தூங்க முடியாமல் இருக்கிற முதல் நாவல் உங்களோடதா இருக்கணும்...//

ரிப்பீட்டு.. :)

Ayyanar Viswanath said...

மிக்க நன்றி மாதவராஜ்..உங்கள் பதிவுகளை தொடர்ச்சியாய் வாசித்துக்கொண்டுதானிருக்கிறேன் விரிவாய் மடலிடுகிறேன்..

நன்றி ரெளத்ரன் :)

கோபி,சுந்தர்,புனிதா மற்றும் அபிஅப்பா நன்றி

Ayyanar Viswanath said...

நன்றி அனுஜன்யா

சந்தோஷிடம் சொல்லி விடுகிறேன் :)

நம்பிடுங்க கிருத்திகா :)

தமிழன் நாவல் எழுதும் எண்ணம் மட்டும்தான் இருக்கிறது :) எழுதிடலாம் நன்றி...

கிருஷ்ணன் மடல் பாருங்க

நன்றி சரவணக்குமார்

Krishnan said...

நண்பரே மடல் பார்த்தேன், மிக்க நன்றி. புத்தக சந்தை சென்றீர்களா ?

Unknown said...

அற்புதமான பதிவு அய்யனார். பறவைகள், பெண்கள், செடி, கொடிகள் என இயற்கையோடு இயைந்து வாழ்கிறீர்கள்...பெயரா முக்கியம் அய்யனார்...பறவைக்கு அதன் தன்மையும், மரங்களுக்கு அதன் குளிர்ச்சியும், நிழலும், பெண்களுக்கு பேச்சும் சிரிப்பும் என எல்லாம் அதனதன் இயல்புகளில் இருந்துவிட்டுப் போகட்டுமே...எனக்கு நேரதிர் திசையில் நீங்கள்...நான் பெயர்களை நினைவில் நிறுத்திக் கொள்ளாதவள்..உரையாடிலினி படிக்கும் போதே நினைத்தேன்..பின்னணி இருக்குமென்று..;)))
அய்யனார்...புத்தகக் கண்காட்சியில் சில புத்தகங்களை வாங்கினேன்..(கோபிகிருஷ்ணன் படைப்புக்கள் சிலவற்றையும் வாங்கியுள்ளேன்). வம்சியில் திருமதி ஷைலஜாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது உங்களைப் பற்றியும் பேசினோம்..நீங்கள் பவாவை அன்று மாலை சந்தித்தது பற்றியும் கூறினார்கள்...

இராம்/Raam said...

அருமை... :)

chandru / RVC said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு இணையம் வருகிறேன். தனிமையின் இசைக்குள் வரலாமா?
நீங்க உள்ள விட்டாலும் விடலைனாலும் இந்தாங்க கமெண்ட்- fantastic post...!

Featured Post

test

 test