Friday, April 10, 2009

பிரளயனின் பாரி படுகளம்


வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடகங்களை திருவண்ணாமலையில் அவ்வப்போது கண்டதுண்டு.மேடை நாடகமாக இருக்கையில் அமர்ந்து முழுமையாய் பார்த்தது இதுவே முதன்முறை.நிகழ்விற்கு அ.மார்க்ஸ் வந்திருந்தார்.பாண்டிச்சேரி நாடகத்துறை மாணவர்கள் நடித்திருந்த இந்நாடகம் மூவேந்தர்கள் அழித்த பாரி மன்னனின் வாழ்வைப் பேசுகிறது.பாரியின் கதையோடு மூவேந்தர்கள் காலத்தில் மிகுந்திருந்த குடி வேற்றுமைகள் அதன் தொடர்ச்சியாய் நிகழ்ந்த கொலைகள் மற்றும் சொந்த நிலம் சார்ந்த வாழ்வியல் போராட்டங்களை இந்நாடகம் முன்வைக்கிறது.


முதல் காட்சியில் பாரி மன்னனின் மிகும் புகழை விரும்பாத சோழமன்னன் பாரியின் நாடான பறம்பிற்கு ஒற்றர்களை வேவு பார்க்க அனுப்புகிறான்.வேவு பார்க்கச் செல்லும் ஒற்றர்களில் ஒருவனான அனிருத்தன் அங்கிருக்கும் வேடுவர் குலப்பெண் ஆதிரையின் அழகில் மயங்கி அங்கேயே தங்கி விடுகிறான்.திரும்பி வராதவனை விசாரிக்கையில் அவன் தாழ்குடியை சார்ந்தவன் என்பது தெரியவருகிறது.அவன் நண்பனைக் கொண்டே அனிருத்தனைக் கொல்கிறான் காவிரி நாடன்.

அடுத்தடுத்து வரும் காட்சிகள் பாரி மன்னனின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்கின்றன.பாரி தன் மகள்களான அங்கவை சங்கவைகளுடன் ஆட்சி புரியும் காட்சிகள்,பறம்பு நாட்டின் இயற்கை வளங்களை அழித்திடாமல் காப்பதை தலையாய கடமையாகக் கொள்வது, எல்லா உயிர்களுக்குமான பாதுகாப்பைத் தருவது என பாரியின் நல்லாட்சி நேர்த்தியாய் காட்சிப்படுத்தப்படுகிறது.கபிலரின் பாடல்களும் ஆடல் மகளிரின் சிலாகிப்புகளும் பிற திசைகளுக்கும் பாரியின் புகழை கொண்டுச் செல்கிறது.இயற்கை வளமுள்ள நாடும், மிக அழகான பெண்களும் மற்ற பெருநில மன்னர்களுக்கு உறுத்தலாகவே இருந்து வந்திருக்கிறது.அதனோடு பாரியின் புகழும் சேர்ந்து கொள்ளவே மூவேந்தர்களும் ஒன்றிணைந்து அவன் நாட்டின் மீது போர்தொடுத்து பாரியை அழிக்கின்றனர்.

போர் காட்சிகள் மிக நேர்த்தியாய் பதிவு செய்யப்பட்டன.நிலம் சார்ந்த வாழ்வு சார்ந்த கூர்மையான வசனங்கள் ஈழத்தில் நிகழும் அவலங்களை கண்முன் நிறுத்தியது.மண்ணை, இயற்கையை, மக்களை தங்கள் சுய இலாபத்திற்காக அழிக்கும் அதிகார கரங்களுக்கான எதிர்ப்பாகவும் இந்நாடகத்தை நவீன சூழலில் பொருத்திப் பார்க்கலாம்.நாடகத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கவிதைகள்,இசை,வசனங்கள் மாணவர்களின் உடல் மொழி என எல்லாம் எனக்கு நிறைவைத் தருவதாய் இருந்தது.

அ.மார்க்ஸ் மாணவர்களின் நடிப்பை அற்புதமான உடல் மொழி என சிலாகித்தார்.கபிலர் பாத்திரத்தின் பொருத்தமில்லாத உடையலங்காரத்தை நெருடலாக குறிப்பிட்டார்.மேலும் நாடகத்தின் முதல் காட்சி மய்ய நாடகத்தினுக்கு எந்த வகையில் தொடர்புள்ளது என்கிற கேள்வியும் எழுப்பினார்.மொத்தத்தில் நாடகம் நிறைவைத் தருவதாக குறிப்பிட்டார்.
மூவேந்தர்கள் காலத்தில் புரையோடிப்போயிருந்த குடிவேற்றுமைகளை பதிவு செய்யவே முதல் காட்சி அமைக்கப்பட்டிருக்கலாம்.முல்லைக்குத் தேர் கொடுத்ததைத் தவிர நமது பாடபுத்தகங்கள் பாரியை பெரிதாய் பதிவு செய்திருக்கவில்லை.அங்கவை சங்கவை எனப் பெயரிட்டு நம் வேர்களின் மீது மலத்தை அள்ளிப் பூசிய சங்கர் வகையறாக்கள் நிறைந்திருக்கும் இச்சூழலில் இதுபோன்ற நாடகங்களின் மூலம் என்னால் மகிழ்ச்சியடையவே முடிகிறது.

விழாவில் என் தமிழாசிரியரைப் பார்த்தேன் பார்வையாளர்களை கருத்துக்கூற அழைத்தபோது மேடைக்கு சென்று இந்த வயதிலும் கணீரெணப் பேசியது நெகிழ்ச்சியாய் இருந்தது.தலைவன்,தலைவி,தூது, காதல்,காமம், தோழிப் பெண்கள்,பசலைக் கொடி, குவளை மலர்கள் வயல்வெளிகள் என்றெல்லாம் இவரின் குரல் என் பதின்மங்களில் என்னை சங்க காலத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது.தமிழ் செய்யுள் பகுதியை இவரைப் போல் எவராலும் நடத்த முடியாது.சண்முக அருணாசலம் என்கிற இவர்தான் பிரளயனின் சகோதரர்.எனக்கு சங்க காலத்தை அறிமுகம் செய்து வைத்தவருடன் பாரி நாடகம் கண்டது தற்செயலானதாய் இருந்தாலும் மகிழ்வாய் இருந்தது.நாடகம் துவங்குவதற்கு முன்பு ஜெயமோகன் இந்நாடகத்தை கடுமையாய் விமர்த்திருப்பதாக பவா செல்லதுரை சொன்னார்.ஜெயமோகனுக்கு இந்நாடகம் பிடிக்காமல் போனதில் எனக்கு பெரிதாய் ஆச்சரியம் ஒன்றுமில்லை.சிவன் பார்வதி உடலிலிருந்து குமரியை கொற்றவையில் உண்டாக்கிய ஜெமோ விரைவில் தமிழ்நாட்டின் மொழி சமஸ்கிருதம் என்றோ தமிழ் நாட்டை ஆண்டதெல்லாம் பார்ப்புகள்தாம் என்றோ புது வரலாறு எழுதினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.அவர் எதை எழுதினாலும் மண்டையாட்டும் பெரும் மந்தையாட்டுக் கூட்டம் நம் சூழலில் பெருத்திருக்கும்போது எடுக்கும் வாந்தியெல்லாம் அமிர்தம்தான்.

தொடர்புச் சுட்டிகள்

1இந்நாடகம் குறித்தான பதிவர் சந்திப்பின் பார்வை..
2.எஸ்.கருணாவின் பகிர்வு
3.பிரபஞ்சனின் பகிர்வு
4.அருட்பெருங்கோவின் பகிர்வு

14 comments:

சுந்தரவடிவேல் said...

நன்றி !

தமிழன்-கறுப்பி... said...

இதை எப்ப பாத்திங்க அருட்பெருங்கோ எழுதி ரொம்ப நாள் ஆச்சே...

உங்களுடைய பகிர்வுக்கு நன்றி..

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி அய்யனார்.

சந்திப்பு said...

அய்யனார் சுருக்கமாக,நேர்த்தியாக பதிந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

காமராஜ் said...

வலையுலகத்திற்கு ஒரு அற்புதமான அறிமுகம்.
ஒரு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னாள்
அறிவியல் பயணத்தில் ஒரு கேள்வி நாடகமும்,
எகலைவனின் விரல் நாடகமும் தமிழகம்
முழுமைக்கும் காட்சிப் படுத்தப்பட்டது.
இந்தக் கால்நூற்றாண்டில் எவ்வளவோ மாற்றம்
நிகழ்ந்திருக்கிறது, உள்ளும் புறமும்.
இன்னும் நவீன நாடகத்துக்காக வாழும்
பிரளயன் போற்றுதலுக்குரியவர்.

மாதவராஜ் said...

அய்யனார்!

நாடகம் நான் பார்க்கவில்லை. உங்கள் பதிவு சில விஷயங்களைப் புரிய வைத்தது. பிரளயன் எனக்கு நெருக்கமான நண்பர். ஆனாலும் உங்கள் பகிர்வு எனக்கு அவர் நாடகத்தின் மதிப்பைத் தருகிறது. அவரது மற்ற நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த நாடகத்தை பார்க்க வேண்டும். ஜெ.மோவை விடுங்கள்.அவர் அப்படித்தான்..

Ayyanar Viswanath said...

சுந்தரவடிவேல்,தமிழன்,சென்ஷி,
சந்திப்பு,காமராஜ்
மற்றும் மாதவராஜ் பகிர்வுகளுக்கு நன்றி..

ச.தமிழ்ச்செல்வன் said...

இந்த நாடகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டே இதை ஜெயமோகன் குப்பை என்று எழுதியதுதான்.ஜெயமோகன் பாராட்டியிருந்தால் நமக்கு இந்த நாடகத்தின் மீது சந்தேகம் வந்திருக்கும்.

வலைத்தெருவில் பாரிபடுகளம் பற்றி நான் எழுத நினைத்தேன்.எழுதுவேன் நிச்சயம்.நீங்கள் முந்திக்கொண்டீர்கள்.அருமை.

KARTHIK said...

// அங்கவை சங்கவை எனப் பெயரிட்டு நம் வேர்களின் மீது மலத்தை அள்ளிப் பூசிய சங்கர் வகையறாக்கள் நிறைந்திருக்கும் இச்சூழலில் இதுபோன்ற நாடகங்களின் மூலம் என்னால் மகிழ்ச்சியடையவே முடிகிறது.//

பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

//மண்ணை, இயற்கையை, மக்களை தங்கள் சுய இலாபத்திற்காக அழிக்கும் அதிகார கரங்களுக்கான எதிர்ப்பாகவும் இந்நாடகத்தை நவீன சூழலில் பொருத்திப் பார்க்கலாம்// சரியாக அவதானித்துள்ளாய் அய்யனார். ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்நாடகம் நடந்த போது நான் சென்றிருந்தேன். எழுத இயலாத உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தேன். உன் பதிவை வாசித்தது மகிழ்ச்சியடைந்தேன். எனக்கு நாடகத்தில் ஏதோ ஒன்று குறைவது போலவேயிருந்தது. ஜெமோ அப்படி சொல்லியிருக்கக் கூடாது. அதற்காக நீ இப்படி வைவதும் அதிகமே...உன்னால் ஜெமோவை விமர்சிக்காமல் இருக்கமுடியாது. என்னாலும் உன்னை திட்டாமல் இருக்கமுடியாது. உன் பிறந்த நாள் என்பதால் இத்துடன் விட்டுவிடுகிறேன். ;)))))

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யனார்! திருமண நாள் வாழ்த்துக்களும்...(நாளில் என்ன இருக்கிறது என்று ஆரம்பிச்சிடாதே அய்யனார் - Own this day, enjoy yourself - Wish you and your wife a happy and many many years of togetherness - வாழ்க வளமுடன்....)

Ayyanar Viswanath said...

தமிழ்செல்வன்
வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.

உமாசக்தி
உங்களின் அளவில்லா அன்பிற்கு நன்றி..அட்வைஸ் உமான்னு கூப்டலாமான்னு இருக்கேன்:)

குப்பன்.யாஹூ said...

அய்யனார் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. நானே நேரில் உக்காந்து பார்த்த ஒரு உணர்வு ஏற்பட்டது.

அந்த மாணவர்களுக்கு மற்றும் பிரளயனுக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

குப்பன்_யாஹூ

தமிழன்-கறுப்பி... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யனார்.

Unknown said...

அட்வைஸ் உமாவா, அடப்பாவி அய்யனார், நான் ் யாருக்கும்அட்வைஸ் பண்றதில்லை. மனசுக்கு பட்டது சொன்னேன்..நீ எப்படி வேணா கூப்பிட்டுக்கோ..சரி இன்னும் ஜெட் லாக் சரியாகலையா? நல்லா தானே இருக்கே?

Featured Post

test

 test