Sunday, April 19, 2009

கம்யூனிச சிவப்பில் உறைந்திருக்கும் சாமான்யர்களின் இரத்தம் : To Live(1994)



சீன இயக்குனரான ஷாங் யூமு(Zhang Yimou) வின் திரைப்படங்கள் நெகிழ்வையும் அழகியலையும் பிரதானமாகக் கொண்டவை.நான் பார்த்திருந்த அவரின் மற்ற திரைப்படங்களான The Road Home,Red Sorghum திரைப்படங்களைக் காட்டிலும் To live என்கிற இத்திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. அதிகார வர்க்கங்களால் சீர்குலையும் சாமான்யர்களின் வாழ்வை மிகுந்த வலிகளோடு முன் வைக்கிறது இத்திரைப்படம்.மாவோ தலைமையிலான கம்யூனிச அரசினை ஒரு சாமான்யனின் உலகத்திலிருந்து அழுத்தமான காட்சிப் பதிவுகள் மூலம் மிகக் கடுமையாய் விமர்சிக்கிறது.சில காட்சிகளின் அழுத்தம் தாங்கவே முடியாது இடை இடையில் திரைப்படத்தை நிறுத்த வேண்டியும் வந்தது.அழகியலோடு கவித்துமாய் பதிவிக்கப்படும் சுயசரிதைப் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.Forrest Gump, The cindrella man போன்ற ஹாலிவுட் நெகிழ்வுகளில் லேசாய் எட்டிப்பார்க்கும் இயல்பு மிகைகளும் கூட சீனத் திரைப்படங்களில் நாம் காண முடிவதில்லை.சீனத் திரைப்படங்கள் பெரும்பாலும் உணர்வுப் பூர்வமானவை.

இத்திரைப்படத்தில் இரண்டு காட்சிகள் மறக்கவே முடியாத சித்திரமாக மனதில் நின்று போனது.

போரில் பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு வீடு திரும்பும் Xu Fugui ஒரு அதிகாலையில் தான் வாழந்த நகரத்தினுக்கு வருகிறான்.ஓரு சிறுமி வீடுகளின் வாசலில் வைக்கப்பட்டிருகும் வெந்நீர் குடுவைகளை தன் சின்னஞ்சிறு கைகளால் சுமக்க முடியாமல் சுமந்து செல்வதை காண்கிறான்.ஒரு கண நேரத்திற்கு பின்பு அவள் தன் மகள் என்பதை உணர்ந்துகொண்டு ஓடிப்போய் அணைத்துக் கொள்கிறான்.அந்தக் குறுகிய தெரு முனையில் அவன் மனைவி வெந்நீரைக் கொதிக்க வைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து விடுகிறான்.அவள் பெயரைக் கூவியபடியே தலை தெறிக்க ஓடிப்போய் அவளை இறுக அணைத்துக் கொள்கிறான்.இந்தக் காட்சியின் பின்னனி இசை,இருளும் வெளிச்சமுமான அந்த அதிகாலைச் சூழல்,மக்கள் நடமாட்டமில்லாத குறுகிய தெரு,என படு கச்சிதமாக பதிவாக்கப்பட்டிருந்தது.கவித்துவ சினிமா என்பதற்கு இந்த ஒரு காட்சி மட்டுமே போதுமானதாய் இருக்கிறது.
.

சீனா தைவானை வெற்றிக்கொள்ள ஆயுதங்கள் தேவைப்படும் காலகட்டத்தில் இரும்பு மிக அத்தியாவசியமான பொருளாகிறது.மக்கள் அவரவர் வீட்டிலிருக்கும் இரும்பை அரசுக்கு கொடுக்கின்றனர்.தெருக்களில் இரும்பு உலைகள் வைத்து அவற்றினை உருக்கும் பணிகளில் சிறுவர்களையும் ஈடுபடுத்துகின்றனர்.இரண்டு மூன்று நாட்களாய் தூங்காத தன் மகனை வலுக்கட்டாயமாய் தூக்கத்திலிருந்து எழுப்பி வேலைக்கு அனுப்புகிறான் Fugui.அன்று மாலை அவன் மகனின் உடல் மட்டுமே இரத்த வெள்ளமாய் திரும்பி வருகிறது.தூக்க கலக்கம் வண்டியில் விழுந்து அடிபட்டு இறக்க காரணமாய் அமைந்து விடுகிறது.மூடப்பட்டிருந்த வெள்ளைத் துணி விலக்கி இரத்தம் தோய்ந்த தன் மகனின் முகத்தை பார்க்கும் அந்த தந்தையின் கேவல் படத்தை தொடர்ச்சியாய் பார்க்க விடாமல் செய்துவிட்டது

திரைப்படம் 1940 களில் தொடங்கி 1970 ல் முடிகிறது.மாவோ அரசின் வெற்றி,கம்யூனிசத்தின் வளர்ச்சி,தொழிற்சங்க புரட்சிகள்,முதலாளிகள் ஒழிக்கப்படுதல் என திரைப்படத்தினோடு கம்யூனிசத்தின் வளர்ச்சியும்,தேய்வும் பதிவு செய்யப்படுகிறது.கம்யூனிச அரசின் பல்வேறு முடிவுகளை,அதிரடி சட்டங்களை படம் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது. மக்களை மொத்தமாய் அரசினுக்கு அடிமையாக்குதல்,யாரை வேண்டுமானாலும் நிலப்பிரபுக்கள் என அறிவித்து அவர்களை அழித்தல், அனுபவம் மிகுந்த வயதான அரசு ஊழியர்களை அடித்து துரத்திவிட்டு இளம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துதல் என்பன போன்ற பல்வேறு சட்டங்கள் ஒரு சாமான்யனின் வாழ்வை எந்தளவிற்கு சீர்குலைக்கின்றன என்பதைத்தான் இத்திரைப்படத்தில் பதிந்திருக்கிறார்கள்.மக்களிடத்தில் எப்போதும் ஒரு பதட்டமும் பயமும் நிலவி இருந்திருக்கிறது.எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற நம்பிக்கைகள் அவர்களிடம் வேரூன்றிப் போயிருந்திருக்கின்றன.ஆனாலும் மக்கள் மாவோ வை கடவுளாக கொண்டாடி இருக்கிறார்கள்.கம்யூனிச கேண்டீன்கள்,எல்லாருக்கும் போதுமான உணவு,நேர்மையான தலைவர்கள்,புரட்சிகர நல்லிதயம் படைத்த இளைஞர்கள் என்பன போன்ற சாதகமான விதயங்களையும் படம் பதிவு செய்யத் தவறவில்லை.

தன் வாய்ப்பேச முடியாத மகளை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள் Fugui தம்பதிகள்.அங்கு எல்லாருமே மாணவிகளாக இருக்கின்றனர்.அறுபது வயதினுக்கு மேற்பட்ட மருத்துவர்களை அரசாங்கம் வேலையை விட்டு எடுத்து விட்டிருக்கிறது.அந்த செவிலிகளின் வயதும் உருவமும் அவனின் மனைவிக்கு பயத்தை தரவே அனுபவமிக்க மருத்துவரை அழைத்து வருமாறு Fugui யின் மனைவி வற்புறுத்துகிறாள்.தொழிற்சங்க தலைவனான அவள் மகளின் கணவன் சாலையோரத்தில் கழுத்தில் அட்டை மாட்டி கிடத்தப்பட்டிருந்த அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த விரிவுரையாளர் ஒருவரை கண்டுபிடித்து கூட்டி வருகின்றான.அவர் மூன்று நாட்களாய் சாப்பிடாமல் துவண்டு போய் வருகிறார்.செவிலிகள் அவரை பிரசவ அறைக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள் எதற்கும் ஒரு ஓரமாய் இருக்கட்டும் என அவர்களிடத்தில் அனுமதி பெற்று இருக்கையில் அமர வைக்கிறார்கள்.அந்த விரிவுரையாளர் பசி எனவும் போய் பன் ரொட்டிகளை வாங்கித் தருகிறான்.மிகுந்த பசியில் அத்தனை பன்களையும் விழுங்கி விடுகிறார் மருத்துவர்.அதே நேரத்தில் குழந்தையும் பிறந்து விடுகிறது.நல்ல முறையில் பிறந்துவிட்டது என மகிழும்போதே அவள் மகளுக்கு இரத்தப் போக்கு அதிகரிக்கிறது.செவிலிகள் செய்வதறியாமல் திகைக்கிறார்கள்.கொடுத்திருந்த எல்லா பன்களையும் சாப்பிட்டுவிட்டு மூச்சிரைத்துக் கிடக்கும் விரிவுரையாளரை எழுப்பவே முடியாமல் போய்விடுகிறது.அதிக இரத்தப் போக்கேற்பட்டு அவர்களின் மகளும் இறந்து போகிறாள்.


மிகுந்த செல்வந்தனான Fugui தன் சூதாட்டம் காரணமாக எல்லாவற்றையும் இழந்து தெருவிற்கு வருகிறான்.உழைத்து சாப்பிட வேண்டுமென திருந்தும்போது அவனை விட்டு விலகியிருந்த அவளின் மனைவியும் குழந்தைகளும் அவனோடு சேர்ந்து கொள்கின்றனர்.இன்னொரு நண்பனுடன் சேர்ந்து shadow puppet என்றழைக்கப்படும் கலையினை தெருக்களில் நடத்திப் பிழைக்கிறார்கள்.மூளும் போர் அவனையும் அவன் நண்பனையும் இன்னொரு விளிம்புக்கு துரத்துகிறது.Fugui இல்லாத போது ஏற்பட்ட கடுமையான காய்ச்சலால் அவனின் மகள் பேசும் தன்மையை இழக்கிறாள்.அதிர்ஷ்டவசமாய் போரில் மீண்டு வீடு திரும்புகிறவன் மீண்டும் அமைதியான வாழ்வைத் துவங்குகிறான். அரசியல் சூதாட்டங்களில் சட்ட திட்டங்களில் தன் மகனையும் மகளையும் இழக்கிறான்.எஞ்சி இருக்கும் தன் பேரனுடன் கடைசி காலத்தில் மக்களின் கல்லறைக்கு சென்று திரும்புவதோடு படம் நிறைவடைகிறது.

உலகின் எல்லா அரசியல் கோட்பாடுகளும் சிந்தாந்தங்களும் சிந்தனைத் தளத்திலிருந்து அதிகாரத்தினுக்கு நகரும்போது அவை ’மனித’த்தை விழுங்காமல் தன் உருவத்தை வளர்த்துக் கொள்வதில்லை.பெரும்பாலான உலக வரலாறுகள் சாமான்யனின் இரத்தத்தில்தான் எழுதப்பட்டன.அதற்கு சீனாவில் வேரூன்றிய கம்யூனிசமும் விதிவிலக்கில்லை என்பதுதான் இத்திரைப்படத்தின் அடிநாதமாக இருக்கிறது.ஒரு சாமான்யனின் முப்பது வருட வாழ்க்கையின் மூலமாக அத் தேசத்தின் கலை, பண்பாடு, குடும்பம், உறவுகள்,அரசியல் இவற்றைப் பதிவித்திருப்பது தூய சினிமாவிற்கான சரியான உதாரணமாய் இருக்கமுடியும்.

இந்த திரைப்படத்தை சீன கம்யூனிச அரசு தடை செய்தது.ஷாங்க் யூமோ இரண்டு வருடங்கள் திரைப்படங்களை இயக்க தடை விதிக்கப்பட்டார்.

14 comments:

காமராஜ் said...

நல்ல அறிமுகம்
வாழ்த்துக்கள் அய்யணார்
சாயங்காலம் ஆற அமர எழுதுகிறேன்

காமராஜ் said...

நல்ல அறிமுகம்
வாழ்த்துக்கள் அய்யணார்
சாயங்காலம் ஆற அமர எழுதுகிறேன்

குப்பன்.யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றி. இப்பொழுதே பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டாகிற்று.

கம்ம்யுநிச தத்துவம் அற்புதமானது, ஆனால் நமது தேசத்தில் பதவிக்காக கம்யுனிச தத்துவத்தை சிதைத்து விட்டனர்.

தாங்கள் குறிப்பிட்ட மகள் வென்னீர் குடுவை சுமக்கும் காட்சி, எனக்கு மஹாநதி திரைப்படத்தில் கமல் தன் மகளை கல்கத்தாவில் காணும் காட்சியை ஞாபகத்திற்கு கொண்டு வந்தது.

விரைவில் இந்த படத்தை பார்க்க முயலுகிறேன்.

மலையாளத்தில் கூட ஒன்றிரண்டு திரைப்படங்கள் கோம்முநிசம் குறித்து வந்து உள்ளன.

குப்பன்_யாஹூ

அகநாழிகை said...

அன்பின் அய்யனார்,
கடந்த பத்து நாட்களுக்கு முன்பாகத்தான் இப்படத்தை பார்த்தேன். பல உணர்வலைகளை மனதுள் எழுப்பிய படம். மீண்டும் ஒருமுறை பார்க்க நினைத்திருந்தேன். அருமையான விவரணையில் மறுமுறை உடனே பார்க்க செய்திருக்கிறீர்கள். என்னைக்கவர்ந்த காட்சிகளில் நீங்கள் கூறிய சிறுமி தண்ணீர் கொண்டு செல்லும் காட்சி. பேச முடியாத அப்பெண்ணின் முகபாவங்கள், திருமணத்திற்குப் பிறகு புகைப்படம் எடுத்துக் கொள்வது என பல காட்சிகளை சொல்லலாம்.
நல்ல பதிவு. (நீங்கள் திருவண்ணாமலையா ?)

அன்புடன்,
“அகநாழிகை“
பொன். வாசுதேவன்

Unknown said...

Road Home பார்த்திருக்கிறேன். நிச்சயம் இப்படத்தினை பார்க்கத் தூண்டும் விதமாய் இருந்தது உன் விமர்சனம். நன்றி அய்யனார்.

KARTHIK said...

ஒரு நாலுமாசத்துக்கு முன்னாடி இந்தப்படம் பாத்தேன்.தி டோகியோ சிட்டிக்கு பிறகு நான் பாத்த அதிக சோகமான படம் இது.
வரிசையா எல்லாரும் இறந்துகிட்டே இருப்பாங்க.கடைசில அந்த கதானயகியும் இறந்திருவாளோன்னு நெனச்சேன் நல்ல வேல வயசான அவளையாவது பேரனோட சந்தோசமா இருக்குரமாதிரி படத்த முடிச்சரே.

எனக்கு இதைவிடவும் ரோட் ஹோம் ரொம்ப பிடிச்சிருந்துது.
உங்க விமர்சனம் படத்தவிட ரொம்ப நல்லாருங்க.

மு. மயூரன் said...

To Live படம் torrent தேடிப்பார்த்தேன் இல்லை. படம் கிடைத்தால் பார்க்கிறேன்.

சீனாவின் நிலமைகளை படம் சீனாவிலிருந்து பார்க்கிறதா அல்லது மேற்கு/யுரோப்பிலிருந்து பார்க்கிறதா என்பதைப்பொறுத்தே படத்தின் நேர்மை புரியும்.

மாவோவின் ஆட்சிக்கால பிரச்சினைகளை சீனாவின் கொமிண்டாங்க், ஜப்பான் பேரரசுவாத நிலையுடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டிய, அதனூடாக விமர்சிக்கவேண்டிய தேவை உண்டு.

அந்தச் சீன நிலை நின்று சீனக் குடிமக்களின் பிரச்சினைகளை இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்குமானால் மிகவும் போற்றதகுந்தது.


மனித மனத்தில் ஆழமாய்ப் பதிந்துபோயுள்ள perfection நோக்கிய, எல்லோரும் எல்லாமும் பெற்ற சொர்க்கம் பற்றிய கனவுகளின் வீரியத்தை இவ்வாறான கலைப்படைப்புக்கள் அழகாகப் பறைசாற்றி நிற்கின்றன.

ஆட்சி ஒன்று perfect ஆக இருக்க வேண்டும் என்கிற அவாவும் (அப்படி ஒன்று இந்த உலகில் இல்லவே இல்லை என்றபோதும்) அப்படி இல்லாத யதார்த்தத்துடனான முரணும் விமர்சனப்பாங்கான கலைப்படைப்பின் ரசிக்கத்தக்க இயக்கமாக அமைகிறது.

Ayyanar Viswanath said...

நன்றி காமராஜ்

பகிர்வுக்கு நன்றி குப்பன் யாகூ

ஆம் வாசுதேவன் திருவண்ணாமலைதான்
fugui மற்றும் அவரது மகளின் நடிப்பை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமென நினைக்க வைத்துவிட்டீர்கள் ..

நன்றி உமாசக்தி

கார்த்திக் இந்த படத்தை பரிந்துரைக்கலாமென நினைத்துக் கொண்டிருந்தேன் :)

மயூரன்
இத்திரைப்படம் சீனாவின் ஒரு சாமன்யக் குடிமகனின் வாழ்வாகவே நம் முன் விரிகிறது.எதிர்ப்பைக் கூட வலிந்து சொல்லவில்லை.ரணங்களாகத்தான் பதிவித்திருக்கிறார்..பகிர்வுக்கு நன்றி

ரௌத்ரன் said...

ம்..ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு திரைப்பதிவு போல...கைவசம் இப்படமும் உள்ளது...பார்த்துவிடுகிறேன்..Farewell my concubine பார்த்து விட்டீர்களா?

ரௌத்ரன் said...

http://www.torrentportal.com/details/84258/To+Live+(Chinese)(1994)XviD+%5Bvertigo173%5D.torrent.html

இது மு.மயூரனுக்கு..

குசும்பன் said...

//அழகியலோடு கவித்துமாய் பதிவிக்கப்படும் சுயசரிதைப் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை//

கொஞ்சம் தமிழில் என்னா ”மீனிங் ”என்று சொல்லுங்களேன் அய்யனார்!!

படம் பார்கனும் என்ற ஆவல் வருகிறது வீட்டுக்கு வரும் பொழுது எடுத்துக்கிறேன்!

chandru / RVC said...

நல்ல அறிமுகம் அய்யனார். //இந்த திரைப்படத்தை சீன கம்யூனிச அரசு தடை செய்தது.ஷாங்க் யூமோ இரண்டு வருடங்கள் திரைப்படங்களை இயக்க தடை விதிக்கப்பட்டார்.// இப்படி செஞ்சாதான் அது சீனா..!

chandru / RVC said...

போஸ்ட் டைட்டிலை நீங்க சிவப்பு கலர்ல எழுதிருக்கலாம் :)

MSK / Saravana said...

பகிர்ந்தமைக்கு நன்றி தல. பார்க்க முயற்சிக்கிறேன்..

Featured Post

test

 test