Saturday, May 16, 2009

8.குளம்,இரை,மீன் அல்லது குளம்:இரை:மீன்

வ.வெ.தொ.அ.வெ.கு - 8

குளம்:

மிகச்சிறிய நீச்சல் குளம் அல்லது மிகப்பெரிய நீர்த்தொட்டியினைச் சுற்றி இருக்கைகள் போடப்பட்டிருக்கும் அந்த மதுவிடுதி எனக்குப் பிடித்தமானது.ஆட்கள் இல்லாத முன்னிரவில் போய், கூட்டம் வரத் துவங்கும் நள்ளிரவில் இடத்தை காலி செய்வது என் வழக்கம்.சமீப காலமாய் போயிராததால் பழைய சேச்சிகளைக் காணவில்லை.தென்னிந்திய மனங்களை பித்தம் கொள்ள வைக்கும் உடலழகு சேச்சிகளுக்கே வாய்த்திருக்கிறது.சந்தன நிற தேகம் கொண்டவர்கள் சந்தனக் கீற்றை நெற்றிக்கும் வைத்திருப்பது சின்னக் கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது.தினம் தலைக்கு குளிக்கும் வழக்கத்தையெல்லாம் இவர்களுக்கு வனதேவதைகள் தந்துவிட்டிருக்கக் கூடும்.ஈரக்கூந்தல் பின் முதுகில் தன் தடத்தை பதித்திருக்கும் சுவடுகள் என்னால் எழுத முடியாமல் போகும் மிகச் சிறந்த கவிதைகள்.ஒவ்வொரு முறை போகும் போதும் அந்த நீர்த் தொட்டியின் வெறுமை என்னவோ செய்யும். ”சில மீன்களை அந்நீரில் விடுங்களேன்” என்ற கோரிக்கையை எவரிடமாவது வைக்கலாம் என்கிற எண்ணங்கள் எண்ணங்களாக மட்டுமே ஒவ்வொரு முறையும் தேங்கி விடுகின்றன.மீன்கள் உலவும் தொட்டிக்கு அருகாமையில்,மீன்களை மட்டும் பார்த்தவாறு மீன்களோடு அடியாழம் சென்று, துழாவி, திரும்பி, மீண்டும் மீனின் உலகத்திற்கு செல்ல உதவும் ஊக்கியினை ஒரு மிடறுக் குடித்து, மீண்டும் மீன்களோடு உலாவப் போவது நன்றாக இருக்கும்.எனக்கந்த சூழல் இல்லாமல் போனதால் மீனின் சாயல்களை கண்களில் கொண்டபடி தரையில் உலவும் சேச்சிகளின் விழி மீன்களை மெல்லிய இருளில் தேடிக்கொண்டிருப்பேன்.அது சாத்தியப்படாதபோது, நினைவுகளில் எப்போதும் உலவும் மீன்களுக்கு என்னை இரையாக்கிக் கொண்டிருப்பேன்.சமயத்தில் மீன் எனக்கிரையா? நான் மீனுக்கிரையா? எனக் குழம்பிப் போவேன்.எனக்கான குவளையில் சந்தன நிற சேச்சி தேவதைகள் மதுவை நிரப்பும் நிமிடங்கள் அந்த கணத்தின் சங்கடமான முள் நொடிகள். நெகிழ்வும் கூச்சமுமான அந்த நொடியின் பரவசத்தினை, மீன்கள் என்னை இரையாக்கத் துவங்கும்போது கேலி செய்கின்றன.எனக்காக உயர்த்தப்படும் புருவங்கள் கூட சில சமயங்கள் மிகுந்த நெகிழ்வைத் தந்துவிடுவதும் எனக்கான நெடுங் காத்திருப்புகளைக் கூட நான் சட்டை செய்யாதிருப்பதும் இரு வேறு குழப்பங்களாக என்னைத் தொடர்கின்றன.

இரை:

இந்த நகரம் முழுக்க கொன்றை மரங்கள் பூத்திருக்கின்றன.பச்சை இலைகளையெல்லாம் முழுவதுமாய் விடுவித்து விட்டு,கிளைகள் முழுக்க சிவப்பு நிறப் பூக்களைச் சூடி நிற்கின்றன. திடீரெனக் கொன்றை மரங்கள் எப்படி இந்த நகரத்தின் பிரதான சாலைகளில் வந்தன!என சென்ற வாரத்தில் வியந்து கொண்டிருந்தேன்.ஒரு வருடத்திற்கும் குறைவான காலம்தான் இந்தப் பிரதான சாலைகளில் நான் பயணித்திருக்கவில்லை.”அப்போதில்லாத கொன்றை மரங்கள் இப்போதெப்படி முளைத்தன?” என உரையாடலினியிடம் கேட்டேன்.
“அது பூக்காம இருந்ததால நீ கவனிச்சிருக்க மாட்டியா இருக்கும்!” என்றாள்.
மரங்களை கண்டறிய பூக்களின் முகவரி எனக்கெப்போதும் தேவைப்பட்டிருக்கவில்லை.”இது எப்படி நிகழ்ந்தது?” என என்னைச் சபித்துக் கொண்டிருந்தேன்.வெளிப்பூச்சுகளின் மூலமாய் உள்ளழகை அடையும் துய்ப்புக் குணமெனக்கு எனக் குமுறிக் கொண்டிருந்தேன்.
“வெளிப்பூச்சை வெளிப்பூச்சாகவே அணுகும் மனிதர்களுக்கு மத்தியில் நீ! உள்ளளழகை நோக்கி நகர்வது சற்று ஆசுவாசமானது”என்றாள்.
“ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை!” என்றேன்.
“இலுப்பைப் பூ வா? அதெப்படி இருக்கும் ?”
”மனச மயக்குற வாசனையோட ஒரு மாதிரி கிறங்க வைக்கிற பூ் அது...மரம் வெகு தொலைவில இருந்தாலும் வாசனை முன்னாலயே நம்மகிட்ட வந்திடும்...ஒரு மாதிரி வினோத வடிவத்தில இருக்கும் அந்தப் பூ...என் சிறுவயதில மத்தியான பொழுதில அந்த மரத்தடிப் பக்கம் போக என் பாட்டி அனுமதிக்காது...இலுப்பை மரத்தில வெள்ளை முனி இருக்குமாம்...ஒரு முறை கங்கா அத பாத்து மயங்கி விழுந்துட்டானாம்...இரவில அந்த மரத்தை கடக்கும் போது எனக்குள்ள எப்பவும் ஒரு துணுக்குறல் அப்போ இருக்கும்..ஆனா இப்ப இல்ல :)..ரொம்ப வருசத்துக்கப்புறம் சமீபமா என் அண்ணனோட மலை சுத்துறப்ப அடி அண்ணாமலை பக்கத்துல அந்த மரத்தை பார்த்தேன்...பூக்கள் மண்ணில சிதறிக் கிடந்தது....அதே வாசனை... அதே கிறக்கம்... சில பூக்களை சட்டைப் பையிலெ எடுத்து வந்தேன்...ஊர்லயே தங்கிடுறப்ப நிறைய மரங்களை வீட்டில வளர்க்கனும்.. இலுப்பை, கொன்றை,மகிழம்,பன்னீர் மரம் இதெல்லாம் ஏன் வீட்ல வளர்க்க மாட்டேங்கிறாங்கன்னு தெரில....வீடுன்னா புங்கையும் வேம்பும்தான் இருக்கு.ஆனா நான் இந்த மாதிரி மரங்களத்தான் வளர்க்கப் போறேன்”

........................

”என்னடி பேச்ச காணோம்?”

”உன்ன எனக்கு சுத்தமா பிடிக்காது.ஆனா உன் பேச்சுதான் என்ன உன்கிட்ட தேங்க விட்ருக்குன்னு நெனைக்கிறேன்.சரியான வார்த்தை ஜாலக்காரண்டா நீ!”

”அப்படியா?”

”என்ன நொப்படியா?”

”என்ன எது உங்கிட்ட தேங்கவிட்ருக்குன்னு தெரியுமா?”

”ஒண்ணும் தெரிஞ்சிக்க வேணாம்”

”இதான்..இந்த விலகல்தான்..பசுந்தளிர்களில சிதறும் நீர்த்துளி மாதிரி இருக்க நீ! எல்லாத்தையும் ரொம்ப அளவோட பேச வேண்டியிருக்கு உன்கிட்ட.. கிடைக்கிற எல்லாத்தையும் பயன்படுத்திக்கிற மோசமான குணம் இல்ல....அதான் அதான் உன்ன விலக்க முடியாம இருக்கேன்..”

“போதும் போதும் ரொம்ப கத விடாத”

மீன்: அல்லது குளம் : இரை: மீன்


எனக்காக எவரும் காத்திருக்காதது மதுவிருக்கும்போது ஆசுவாசமாகவும் மதுவில்லாதபோது அபத்தமாகவுமிருக்கிறது.எவை உன்னதம் எனக் குழப்பமாக இருக்கிறது.எப்போதும் தனித்திருக்க சபித்திருக்கப்பட்டவனா? ஆசீர்வதிக்கப்பட்டவனா? என்கிற குழப்பங்கள் வேறு இடை இடையே...எதுவிருப்பினும் இந்த இரவு அற்புதமானது.நெரிசலும்,வாகனங்களும் இல்லாத இந்த நீள,அகல,பிரதான நேர்கோட்டு சாலையில் லேசாய் வியர்த்தபடி நடப்பது நன்றாகத்தானிருக்கிறது.நினைவில் அவளும் பாடலுமாய் இணைந்திருந்தனர்.

”விழியிலே மணி விழியில் மௌளன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்”

இந்தப் பாடலை அவள் திரும்பத் திரும்பத் திரும்பத் த்பம்ருதி பாடச் சொல்லி கேட்டது மிகவும் பிடித்திருந்தது.ஒரே பாடலை தொடர்ச்சியாய் மூன்று மணிநேரம் கேட்கும் கிறுக்கு அவள்.உன் சின்னச் சின்ன கிறுக்குத்தனங்கள் தான் பிசாசே! உன்கிட்ட ஒட்டிக்க வச்சது.. என்பதை எப்போதாவது சொல்ல வேண்டும்.நான் வசிக்கும் பொந்து இருக்கும் குறுகலான சாலைக்குள் நுழைந்ததும்,நள்ளிரவில் நடமாடும் கருப்பு தேவதைகள் அங்கங்கே தென்பட்டனர்.”ஏய் ஸ்வீட்ஹார்ட் வாட்ஸ்ப்” என்ற தேவதைக்கு கையாலாகத என் புன்னகையை மட்டும் தந்துவிட்டு பொந்தில் அடைந்து கொண்டேன்.

16 comments:

மண்குதிரை said...

மிகவும் ரசித்தேன்.

சென்ஷி said...

முதல் கமெண்ட் உங்களுக்கு போட்டு ரொம்ப நாள் ஆச்சு!

அதனால சும்மா இது ;-))

பதிவை படிச்சுட்டு வந்து கும்முறேன்.

சென்ஷி said...

ஓக்க்கேய்ய்ய்ய்ய்ய்..

ஒரே மூச்சுல படிச்சாச்சு :-)

//”விழியிலே மணி விழியில் மௌளன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்”//

நூறாவது நாள் படப்பாட்டு இது!

தமிழன்-கறுப்பி... said...

மலையாளப் பொண்ணுங்க செஞ்சு வச்சு பிறக்கிறாங்க தல இத மட்டும் சொல்லிக்கிறேன்!
;)

கொன்றைப்பூக்கள்,
உரையாடலினி ம்ம்ம்...

காலைப்பணியில் கொஞ்சம் வேலையா இருக்கிறதால அப்புறமா வாறேன்...

Unknown said...

அருமை...!!!!

குப்பன்.யாஹூ said...

அருமை வரிகள்,

கோபிநாத் said...

\மிகச்சிறிய நீச்சல் குளம் அல்லது மிகப்பெரிய நீர்த்தொட்டியினைச் சுற்றி இருக்கைகள் போடப்பட்டிருக்கும் அந்த மதுவிடுதி எனக்குப் பிடித்தமானது.ஆட்கள் இல்லாத முன்னிரவில் போய், கூட்டம் வரத் துவங்கும் நள்ளிரவில் இடத்தை காலி செய்வது என் வழக்கம்\\

இது போல பிராத்தனை கூட்டங்களுக்கு தனிமையில் சென்றதால் என்னோட வன்மையான கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன் ;)

காமராஜ் said...

இப்போதான் மண்டோவின் நூர்ஜஹான் படித்தேன்.
அவர் விவரித்த மான் மார்க் விஸ்கியின் நீட்சியாக
அல்லது எதிராக
நீங்கள் மீன்தொட்டிக்கு அருகிலே அமர்ந்து மது
அருந்துகிறீர்கள். ரொம்ப நல்லாருக்கு அய்யனார்

தமிழன்-கறுப்பி... said...

எனக்கும் இந்த கொன்றைப்பூக்கள் மீதொரு காதல் இருக்கிறது சில நாட்களுக்கு முன்னரும் ஆயில்யனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்...

உரையாடலினியை அடிக்கடி அழைத்து வரவும்...

:)

வால்பையன் said...

சேச்சிகள் ரொம்ப தொந்தரவு பண்றாங்களே!

சோட்டானிகரையிலருந்து மந்திரிச்சு கயிறு வாங்கி அனுப்பட்டுமா?

Joe said...

பிரமாதம்!

//
”விழியிலே மணி விழியில் மௌளன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்”
//

நான் கூட இந்தப் பாட்டை ரொம்ப நல்லா பாடுவேன், ஒரு பக்கியும் கேக்க மாட்டேங்கிதே?

Bharathi said...

/உன் சின்னச் சின்ன கிறுக்குத்தனங்கள் தான் பிசாசே! உன்கிட்ட ஒட்டிக்க வச்சது.. என்பதை எப்போதாவது சொல்ல வேண்டும்/


காதலை இதை விட அருமையாய் சொல்ல முடியாது.

மிகவும் ரசிதேன்

MSK / Saravana said...

சொக்கிப்போனேன்.. கலக்கல்..

இந்த கொன்றை பூ எப்படி இருக்கும்? படம் எதாவது இருந்தால் அடுத்த பதிவில் போடவும்..

உங்கள் பதிவுகளை படித்தப் பின்புதான், அருகிலிருக்கும் நிறைய மரங்களின், பூக்களின் பெயர்கள் தெரியாமல் இருப்பதை அறிகிறேன்..

ஆயில்யன் said...

//சந்தன நிற தேகம் கொண்டவர்கள் சந்தனக் கீற்றை நெற்றிக்கும் வைத்திருப்பது சின்னக் கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது.தினம் தலைக்கு குளிக்கும் வழக்கத்தையெல்லாம் இவர்களுக்கு வனதேவதைகள் தந்துவிட்டிருக்கக் கூடும்.ஈரக்கூந்தல் பின் முதுகில் தன் தடத்தை பதித்திருக்கும் சுவடுகள் என்னால் எழுத முடியாமல் போகும் மிகச் சிறந்த கவிதைகள்///


ரசித்தேன் :))

Osai Chella said...

அய்யனாரின் ஒரு தீவிர வாசகனின் மௌனம்... மரணிக்கிறது இப்போது! எல்லாத்தையும் தோண்டிப் படிக்கிறேன் சமீபகாலமாக! நன்றிகள்!

Ayyanar Viswanath said...

மண்குதிரை,சென்ஷி,தமிழன்,லவ்டேல்,
குப்பன்,கோபி,காமராஜ்,வால்,ஜோ,பாரதி,
சரவணக்குமார்,ஆயில்யன் மற்றும் செல்லா பின்னூட்டங்களுக்கும் வாசிப்பினுக்கும் நன்றி

Featured Post

test

 test