Wednesday, July 22, 2009

ப்ரம்மரம் – மோகன்லாலின் உணர்ச்சிக் குவியல்



மலையாளத் திரைப்பட இயக்குனர் blessy யின் இயக்கத்தில் இதற்கு முன்பு ”தன்மாத்ரா” வும் ”காழ்ச்சா”வும் பார்த்திருக்கிறேன்.இரண்டு திரைப்படங்களுமே எனக்குப் பிடித்திருந்தன. ப்ரம்மரம் வந்திருப்பதாய் தெரிந்ததும் நானும் ஆசிப்பும் சனிக்கிழமை மதியக் காட்சிக்கு சென்றிருந்தோம்.மிகப் பெரிய திரையரங்கில் எங்களைத் தனியாய் அமர்ந்து பார்க்க விடாமல் உடன் பத்து பேர் அமர்ந்திருந்தனர்.

மோகன்லால் தன்னுடன் ஏழாம் வகுப்பு சேர்ந்து படித்த நண்பனைத் தேடிக் கொண்டு கோயமுத்தூர் வருகிறார்.கோயமுத்தூர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த ஒரு நாளில் அவரது வருகை நிகழ்கிறது.முரட்டுத் தனமான உருவமும், சந்தேகமான அணுகுமுறையும் அவ்வப்போது அதிரும் பின்னணி இசையும் படத்தின் துவக்க காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்த உதவியிருக்கின்றன.

சிறு வயது மோகன்லாலின் பள்ளி நினைவுகளாக காட்சிகள் விரிகின்றன. பள்ளிப் பொதுப் பணத்தை அலெக்ஸ்,உன்னி எனும் இரு மாணவர்கள் திருடிவிடுகின்றனர்.அதை எண்ணிக் கொண்டிருக்கும்போது உடன் படிக்கும் மாணவி பார்த்துவிடுகிறாள்.ஆசிரியரிடம் சொல்லப்போவதாய் திமிறும் அவளை குளத்தினுள் பிடித்துத் தள்ளி விட்டு ஓடிவிடுகிறார்கள்.அவ்வழியே வரும் மோகன்லால் குளத்தினுள் இறங்கி அச்சிறுமியை தூக்கி கரைசேர்க்கிறான். ஆனால் அச்சிறுமி இறந்துபோகிறாள்.அவளைத் தள்ளி விட்ட மாணவர்கள் மோகன்லால் தான் அச்சிறுமியை தள்ளிவிட்டதாய் பழி சுமத்தி சிறைக்கு அணுப்பி விடுகிறார்கள்.ஏழு வருடம் சிறை தண்டனை அனுபவித்து விட்டு வரும் மோகன்லால் சுற்றத்தாரின் பழிப்பு தாளாமல் ஒரு மலைப்பிரதேசத்தில் விஷ்ணு என்கிற பெயரில் வசிக்கத் துவங்குகிறார்.மனைவி மகள் என சந்தோஷமாய் நகரும் மோகன்லாலின் வாழ்வு ஒரு நாள் நிலைகுலைகிறது.ஒரு திருமணவீட்டில் இறந்துபோன அச்சிறுமியின் தாயார் மோகன்லாலை அடையாளம் கண்டறிந்து தூற்றுகிறார்கள்.தன் மனைவியிடம் மோகன்லால் தன்னுடைய பழைய வாழ்வை சொல்லியிராததால் பிரச்சினை வெடிக்கிறது.அவனொரு கொலைகாரன் என அவன் மகளே அவனிடம் வர பயப்படுகிறாள்.

இப்பிரச்சினையைத் தீர்க்க உண்மையாய் குற்றம் புரிந்த உன்னி கிருஷ்ணனையும் அலெக்ஸையும் தேடி மோகன்லால் கோயமுத்தூர் வருகிறார்.அவர்களை தன் மகளிடம் வந்து அவளின் அப்பா குற்றமற்றவன் என்பதை தெரிவிக்க வேண்டுகிறார்.ஆரம்பத்தில் வர மறுக்கும் உன்னிகிருஷ்ணனை மிரட்டிப் பணியவைத்து தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்துப் போவதுதான் முதல் பாதி கதை.

சாலைப் பயணத்தை களமாக கொண்ட திரைப்படங்கள் இந்தியச் சூழலில் வெகு குறைவு.ஒரு திரைப்படத்தின் பெரும்பாலான சம்பவங்கள் சாலையில் நிகழ்வதாய் காட்டப்படுவதில் நிறைய சிக்கல்கள் இருக்கலாம்.இதற்கு முன்பு நான் பார்த்திருந்த சில தமிழ் படங்களாக மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, அன்பே சிவம் போன்றவற்றை நம் சூழலில் வெளிவந்த சிறந்த On road படங்களாக சொல்லலாம்.ப்ரம்மரத்தில் இரண்டாவது பாதி முழுக்க சாலைப் பயணக் காட்சிகள் தாம்.

முழுக் கதையையும் முதல் பாதியில் சொல்லிவிட்டு எல்லாரும் எதிர்பார்க்க கூடிய ஒரு சோகமான திருப்பத்தை இறுதியில் வைத்துவிட்டு இரண்டாவது பாதியை நகர்த்துவதென்பது மிகச் சவாலான ஒன்று.தேர்ந்த திரைக்கதையாளர்களால் மட்டுமே சம்பவங்களை சுவாரசியமாக்க முடியும் என்பதற்கு blessy ஒரு நல்ல உதாரணம். வெகு சுலபமாய் யூகிக்க கூடிய, சாதாரண முடிவை தன்னுடைய அபரிதமான நடிப்பினால் வேறு தளத்திற்கு நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார் மோகன்லால்.இரண்டாவது பாதியில் விசுவரூபம் எடுக்கும் அவரது நடிப்பு பார்வையாளனைத் திகைப்படைய வைக்கிறது. மோகன்லாலை திரையில் இத்தனை உணர்ச்சிக் குவியலாய் நான் பார்த்ததில்லை.இத்தனை கச்சிதமான உடல் மொழி கொண்ட நடிகனை இந்தியச் சூழலில் பார்க்க மகிழ்வாய் இருந்தது.

தன் மகள் தன்னை கொலைகாரன் இல்லை என நம்பினால் மட்டும் போதும் என இறைஞ்சும் நெகிழ்வான அப்பாவாக முதல் பாதியில் மனதைத் தொடும் மோகன்லாலை விட இரண்டாம் பாதியில் ஒட்டு மொத்தமாக இழந்து போன வாழ்வின் மீதான கழிவிரக்கத்தையும், ஏமாற்றங்களையும் குரூரமாகவும், வன்முறையாகவும்,கேலியாகவும் வெளிப்படுத்தும் மோகன்லாலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.மோகன்லாலின் மனைவியாக இரண்டு காட்சிகளில் மட்டும் பூமிகா வந்திருக்கிறார்.கச்சிதமான ஒளிப்பதிவு சாலைக் காட்சிகளை விறுவிறுப்பாய் படம் பிடித்திருக்கிறது. மிகையோ பூச்சோ இல்லாத, கதைக்கு தேவையான காட்சிகளை மட்டும் நேர்த்தியாய் படமாக்கியிருக்கிறார்கள்.

ஆரம்பக் காட்சியில் நண்பனின் வீட்டு முகவரியை தேடிக்கொண்டிருக்கையில் விலாசம் சொல்லும் பாலியல் தொழிலாளி கதாபாத்திரமும், அவரை கீழே தள்ளி விட்டு வாகனம் விரையும் அக்காட்சியும் தேவையற்றது.Blessy போன்ற இயக்குனர்கள் இது போன்ற அபத்தமான துருத்திக் கொண்டிருக்கும் காட்சிகளை நம்பாமலிருப்பது நல்லது.

இந்த திரைப்படத்தை சிறந்த on road படம் அல்லது சிறந்த பழி வாங்கும் படம் என இரண்டு சட்டகத்திலும் அடைக்க தயக்கமாய் இருக்கிறது.எடுத்துக் கொண்ட கதைக் களத்தை நேர்த்தியாய் சொல்லியிருக்கிறார்கள் என்பதுதான் ஒற்றை வரி விமர்சனமாக இருக்கிறது. ஆனால் blessy போன்ற இயக்குனர்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது நேர்த்தியான படங்களை அல்ல ”காழ்ச்சா” போன்ற கலைப் படைப்புகளைத்தான்.

19 comments:

லேகா said...

அறிமுகத்திற்கு நன்றி அய்யனார்.

நட்புடன் ஜமால் said...

பார்க்கத்தூண்டும் விமர்சணம் ... :)

உங்கள் ராட் மாதவ் said...

அருமையான விமர்சனம். நேரில் படம் பார்த்ததுபோல் இருக்கிறது. நன்று.

anujanya said...

தன்மாத்ரா வேலன் பரிந்துரைத்தும், அவர் குறுந்தகடு கொடுத்தும், என்னால் இதுவரை பார்க்க முடியவில்லை. என் மனைவி பார்த்துவிட்டு அதன் தாக்கத்தில் இரண்டு நாட்கள் இருந்தாள். என்னால் சோகப்படங்களைப் பார்க்க முடியாதது தான் பிரதான காரணமென்று நினைக்கிறேன். 'அழகி' பார்த்துவிட்டே ரொம்ப நாட்கள் அழுது கொண்டிருந்தேன்.

மோகன்லால், அற்புதமான நடிகர். இந்தப் படத்தையாவது பார்க்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது உங்கள் பதிவு.

குலால் படம் பார்த்து விட்டீர்களா? உயிர்மையில் அந்தப் படத்திற்கு சாருவின் விமர்சனம் மிக சுவாரஸ்யமாக இருந்தது.

அனுஜன்யா

Sridhar V said...

பகிர்தலுக்கு நன்றி. கட்டாயம் பார்க்க வேண்டும் என்று தூண்டக்கூடிய பதிவு.

இந்திய மொழிகளில் ராம்கோபால் வர்மாவின் Road ஒரு நல்ல சாலைப் படமாக அந்திருந்தது. அடிப்படையில் அதில் ஒரு ‘மசாலா’த்தனம் இருந்தாலும் பார்க்கக் கூடிய வகையில் அமைந்திருந்தது.

chandru / RVC said...

நல்ல அலசல். மலையாள சினிமா உலகம் சமீபகாலமாய் தமிழ் மசாலா படங்களின் கதையுரிமையைத் தேடித்தேடி வாங்குவதாய் கேள்வி..! :(

குப்பன்.யாஹூ said...

thanks for sharing ayyanar, definitely will watch it soon.

chandru / RVC said...

சமீபத்தில் நான் மதிலுகள் பார்த்தேன். ரெண்டு நாள் இயல்பா இருக்க முடியல.ரொம்பவே பாதிச்சுது.

KARTHIK said...

// மோகன்லாலின் மனைவியாக இரண்டு காட்சிகளில் மட்டும் பூமிகா வந்திருக்கிறார்,//

அறிமுகத்துக்கு நன்றி அய்ஸ்
நானும் பாக்குறேன்.

நேசமித்ரன் said...

ஊருக்கு வரும்போது (இந்தியா ) பார்க்க என்று எழுதி வைத்திருக்கும் படங்களில் ஒன்று கூடியது .கடைசி வரி உண்மைதான் .நன்றி அய்யனார்

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி...


நல்ல நடிகர்கள் இந்தியாவுல இருக்கிறாங்க அண்ணன். இயக்குனர்களும் ரசிகர்களும்தான் அவர்களை சரியா பயன் படுத்தறதில்லைன்னு நினைக்கிறேன்.

கோபிநாத் said...

யப்பா...மோகன்லாலை நீங்களாச்சும் பதிவு போட்டிங்களே!!;)

தேடி பார்த்துவிடுகிறேன் ;)

Ayyanar Viswanath said...

நன்றி லேகா

நன்றி ஜமால்

நன்றி மாதவ்

அனுஜன்யா குலால் இன்னும் பார்க்கவில்லை.விமர்சனம் எதுவும் படிக்கவில்லை.நாளை பார்த்துவிட்டுப் படிக்கிறேன் :)

ஸ்ரீதர் ரோட் படம் கேள்விப்பட்டதோடு சரி.பார்க்க முயலுகிறேன்.

ஆமாம் சேகர் தற்போதைய மலையாள சினிமா ஆரோக்யமாய் இல்லை.மதிலுகள் எனக்கும் பிடித்த படம்தான்

Ayyanar Viswanath said...

நன்றி குப்பன் யாகூ

கார்த்திக் மலையாளப் படங்களையும் விடுவதில்லையா :)

நேசமித்ரன் அங்கு வெளிவந்திருக்குமே?

உண்மைதான் தமிழன்

கோபி லாலேட்டனின் தீவிர விசிறியா நீ :)

நாடோடி இலக்கியன் said...

படத்தை உடனே பார்க்கத் தூண்டுபடி எழுதியிருக்கீங்க ஐயனார்.

//இத்தனை கச்சிதமான உடல் மொழி கொண்ட நடிகனை இந்தியச் சூழலில் பார்க்க மகிழ்வாய் இருந்தது.//

உண்மை,மோகன்லாலின் படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டால் நிறுத்த முடியாது.அவரின் நூற்றுக்கணக்கான படங்களை பார்த்திருக்கிறேன்.85 - 95 வரையிலான காலகட்டத்தில் வெளிவந்த நிறைய படங்கள் மோகன்லாலின் பெஸ்ட் இருக்கிறது.

Jazeela said...

vimarsanathai padiththil padam parkanumnu thonudhu. Veraivil parkirean. //மோகன்லாலை திரையில் இத்தனை உணர்ச்சிக் குவியலாய் நான் பார்த்ததில்லை.// appadi enraal neril unarchi kuviyalai parthirukireergala :-)

MSK / Saravana said...

இதுவரை மலையாள திரைப்படங்களை நான் பார்த்ததே இல்லை தல.

கிருத்திகா ஸ்ரீதர் said...

திரைப்படங்கள் என்றாலே சில அடி தூரம் நகர்ந்து செல்லும் நான் லாலேட்டன் படங்கள் என்றால் மட்டும் எந்த சாக்குப்போக்கும் சொல்லாமல் பார்ப்பதுண்டு.. அது ஆரம்ப காலமோ இல்லை இப்போதையை படங்களோ அந்த வரிசையில் இது மற்றுமொரு கலை ஊற்று. காழ்ச்சா உணர்த்திய பாடங்கள் அதிகம். லால்சலாம் பார்த்துவிட்டு தீப்பட்டியுண்டோ சகவே என்று பிதற்றித்திரிந்த நாட்கள் பல நன்றி அய்யனார் .. பல நல்ல நினைவுகளை மீட்டெடுக்க உதவியுள்ளீர்கள். மற்றுமொரு பெயர் மறந்து போன திரைப்படத்தில் தந்தையாக வரும் லாலேட்டன் சிறிது சிறிதாக தன் நினைவலைகளை இழந்து மறதியின் பிடியில் சிக்கும் ஒரு நோயாளியாக வாழ்ந்து மடிந்து போகும் பாத்திரத்தில் மிகச்சிறந்த மொழியை வெளிப்படுத்தியிருப்பார். மிச்சமிருக்கும் சில சிறு வயது ஞாபகங்களோடே வாழும் அவரது நாட்களை சித்தரித்திருந்த விதம் படம் பார்த்த சில நாட்களுக்கு நம்மை தொந்தரவு செய்த வண்ணமிருக்கும்... (படம் பெயர் மறந்து போய்விட்டது)

உங்கள் ராட் மாதவ் said...

//மற்றுமொரு பெயர் மறந்து போன திரைப்படத்தில் தந்தையாக வரும் லாலேட்டன் சிறிது சிறிதாக தன் நினைவலைகளை இழந்து மறதியின் பிடியில் சிக்கும் ஒரு நோயாளியாக வாழ்ந்து மடிந்து போகும் பாத்திரத்தில் மிகச்சிறந்த மொழியை வெளிப்படுத்தியிருப்பார்.//

படத்தின் பெயர் 'தன்மாத்ற'

Featured Post

test

 test