Saturday, December 26, 2009

தனிமை இசைத்த குறிப்புகள் சில…- தமிழ்நதி

அன்புள்ள அய்யனாருக்கு,

உனது கவிதைக்கு முன்னுரை எழுதித் தரும்படி கேட்டிருந்தாய். பழகிய வடிவங்கள் முன்னுரையிலும் சலித்துவிட்டன. அதிலும், நண்பன் ஒருவனைப் படர்க்கையில் விளித்து எழுதுவதில் சிரமம் இருக்கிறது. நண்பன் மீதான அபிமானம் அவனது கவிதைகள் மீதான அபிமானமாகாது என்பதை நீயும் அறிவாய். எனினும்,

அவஸ்தைகள்
எதுவுமற்ற கவிஞன்
சூல்கொண்ட மேகத்தை
கலைக்கும் புயலைப்போல
தேர்ந்தெடுத்த சொற்களைக்கூட
இரக்கமற்ற பேனாவைக் கொண்டு
அழிக்கிறான்…
வசீகரமிழந்த சொற்கள்
மெல்ல உதிர்க்கின்றன
கவிதைக்கான வேட்கையையும்
இருத்தலின் நம்பகத்தன்மையையும்.
என்ற உனது சொற்களை வாசித்த பிற்பாடு கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. ‘சூல்கொண்ட மேகத்தைக் காற்று கலைப்பது’மழையின் பொருட்டே என நீ அறியமாட்டாயா?

எழுத்துள் நுழைய முயலும் வாசகனை-வாசகியை வழிமறித்துப் பேசி, முன்முடிவுகளுடன் உள்ளே அனுப்பிவைக்கிற செயலாக முன்னுரை எழுதுவதென்பது சிலசமயங்களில் எனக்குத் தோன்றியிருக்கிறது. அதை அறிமுகம் என்றும் நுழைவாயில் என்றும் சொல்கிறார்கள். அதிலும் கவிதையானது அதை எழுதுபவர்களுக்கு நெருக்கமானதும் அந்தரங்கமானதும்கூட. மனதின் நுண்ணிய வரிகளால் நெய்யப்பட்ட மெல்லிய பட்டுத்துகில் அது. அதை அனுபவிக்க மட்டுமே முடியும். முன்னுரை, விமர்சனம் என்ற பெயரில் அதை உதறி விரித்து உரசிப் பார்ப்பது கொஞ்சம் குற்றவுணர்வைத் தருகிறது.

உன் கவிதைகளை மனதொன்றி முழுவதும் வாசித்தேன். ஒரு வகைமைக்குள் மட்டும் சிக்கிவிடாமல் தனிமை, உறவுகளின் பிரிவு, பிழைப்பின் பொருட்டு நிலம் பிரிந்த துயரம், காதல், காமம், சுயவிசாரணை மற்றும் எள்ளல், கழிவிரக்கம், மாயத்துள் விழுத்தி மயக்கும் கற்பனாவுலகம், சமூகத்தின் போலித்தனங்கள் குறித்த கசப்பு, இயற்கை, நெகிழ்ந்து கரைதல், எழுத்தெனும் பிடிமானம் எனப் பரந்துபட்ட தளங்களில் உன் கவிதை உலவியிருப்பது பிடித்திருந்தது. உபரியாக வாசிக்கும்போது தென்படாத கவித்துவத்தை தொகுப்பாக வாசித்தபோது உணரமுடிந்தது. இல்லாவிட்டாலுமென்ன? முதல் தொகுப்பு பெறும் ‘மன்னிப்பு’க்கு நீயும் உரித்துடையவனே. இன்றைக்குத் தமிழிலக்கியப் பரப்பிலே கவிஞர்கள் என்று அழைக்கப்படும் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நீயும் இணைந்துவிடும் ‘விபரீதத்தை’முன்மொழிவதில் எனக்கொன்றும் தயக்கமில்லை. என்னை வழிமொழிந்து சொல்வது அவரவர் பாண்டித்தியத்தையும் விருப்புவெறுப்பையும் வட்ட-சதுரச் சார்பு நிலைகளையும் கவிதை குறித்த மனச்சித்திரங்கள் மற்றும் வகுத்திருக்கும் வரைவிலக்கணங்களைப் பொறுத்தது.

அவரவர்க்கான மொழியைக் கண்டடையும் அலைச்சல் பொதுவாக முதல் தொகுப்புகளில் துருத்தித் தெரியும். உன்னுடைய கவிதைகளில் ஏதோவோர் ஒருங்கிணைந்த மொழியமைவு கூடியிருப்பதாக நான் உணர்ந்தேன்.

நாம் படித்த கவிதைகள் நமக்குள்ளிருந்தபடி நாமறியாதபடி நம்மை இயக்கிக்கொண்டிருக்கின்றனவோ என்று உன்னுடைய சில கவிதைகளை வாசிக்கும்போது நினைத்துக்கொண்டேன். நீ சிலசமயங்களில் பிரேம்-ரமேஷ் ஐ, கல்யாண்ஜியை, கலாப்ரியாவை, ஏன் என்னைக்கூட (ஆற்றின் உட்பரப்பு – நதியின் ஆழத்தில்) நினைவுபடுத்துகிறாய்.
காதலெனும் சொல்லின் மீதேறி காமத்தளத்தில் சென்று இறங்கும்- ‘விழி மூடிப் பால் குடிக்கும்’ பாசாங்குப் பூனைகளைப் பற்றி எழுதியிருந்தாய்.

ரகசியங்களைத் தெரியும்படி புதைத்துவைப்பதின்
பின்னாலிருக்கும்
குறுகுறுப்புகள்
தெரியாமலில்லை
மறுத்தலின்
ஒளிதலின்
புரியாமலிருப்பது போன்ற
பாவனைகளின்
அரசியலெல்லாம்
கண்டுபிடித்தலின்
தேடுவதன்
கிறங்குவதன்
மீதிருக்கும் வேட்கைகள்தான்
என்பது எனக்கும்
தெரியும்.
---
பசிகொண்ட உடல்கள்
தேவதைகளின் வடிவமேற்று
ஆளரவமற்ற இடங்களில்
சக உடல்களைத் தின்றுதீர்க்கிறது
---
எல்லாக் காதல் கவிதைகளும்
ஓர் அறியாத பெண்ணின் ஆடைகளை
உரித்துப்
பார்ப்பதற்காக மட்டுமே எழுதப்படுகின்றன.
ஆண்-பெண்களின்
ரகசியமறியும் கருவி
என்பதைத் தவிர
காதல் கவிதைகள் குறித்துச் சொல்ல
எதுவுமில்லை.
---

‘காதலின் மீது உனக்கேன் இத்தனை காழ்ப்புணர்ச்சி?’என்று நான் கேட்கப் போவதில்லை. ‘காதல் உலகத்தை ஒரு நொடியில் அழகாக்கிவிடுகிறது, மனிதர்களைக் கனியச்செய்கிறது’ என்று நான் சொன்னால் அதை நீ ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. நான் கேட்பதெல்லாம், ‘காதல் என்பது காமத்தைச் சென்றடையும் வழியென’எத்தனை தடவைதான் எழுதுவாய் என்பது மட்டுமே. ‘கூறியது கூறல்’என்றுன்னைக் குற்றம் சொல்லப்போகிறார்கள்.

சாதாரண வழிசெல்லும் வார்த்தைகள் கடைசி வரியில் திடும்மெனக் கவிதையாகிவிடுவதை பல சமயங்களில் உணர்ந்தேன். ‘நேற்றுப் பெய்த மழை’என்ற கவிதையில் ‘நீ மழை பெய்ததாய் என்னிடம் சொல்லியிருக்க வேண்டாம்’என்று முடியும்போது உள்ளுக்குள் துயரமழையொன்று அடித்துப் பொழிய ஆரம்பித்தது. மழைக்கென ஐந்து கவிதைகளை தந்துவிட்டபோதிலும், பெரும்பாலான உன் கவிதைகளில் ஒரு வரியாவது மழையின் சில்லிப்பில் சிலிர்க்கத்தான் செய்கிறது.

பெண் ஈயம், பித்தளை, கட்டுக்களுடைத்து வெளிவரல்,
விளிம்பின் மொழி, சம உரிமை, இட ஒதுக்கீடு எல்லாவற்றின் மீதும்
மது நுரை பொங்கப் படர்கிறது
உடல் மட்டும் தனக்கான கட்டுக்களுடைத்து
நடனமிடத் துவங்குகிறது.
என்ற வரிகளினூடாக, எல்லாவிதமான ஒப்பனைகளும் கலைந்து சுயம் வெளிப்படும் தருணம் மதுவருந்தியிருக்கிறபோதே சாத்தியம் என்பதைச் சொல்வதற்கு முற்றிலும் தகுதியானவன்தான் நீ.

‘மய்யம்’என்ற பகுதியுள் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் பலவற்றுள் மாயா யதார்த்தவாதம் என்ற சித்து விளையாட்டை வாசிக்க நேர்ந்தது. நீலிகளும் தேவதைகளும் சாத்தான்களும் கடவுளரும் வெகு சாதாரணமாக உலவும் - மூத்திரமும் குருதியும் ஸ்கலிதமும் அளவுக்கதிகமாக வழியும் - கவிதைகளை நான் அவசரமாகக் கடந்தேன். ஒரே சமயத்தில் அதியதார்த்தத்தினுள்ளும் அதிமாயத்தினுள்ளும் உலவுவது, உனக்கு மட்டுமே சாத்தியம் அய்யனார். வகைதொகையில்லா சில உரையாடல்கள், உண்மைகளைப் பேசுதல், கண்டறிதல் மற்றும் எழுதுதல், மதுவிடுதி நடனப்பெண் ஈயம் மற்றும் பித்தளை போன்ற பின்னவீனத்துவ நினைவுபடுத்தல்களுடன் கூடிய தலைப்புகளுடனும் வழக்கம்போல ஒரு ஒவ்வாமையை உணர்ந்தேன்.

ஜெயமோகன்களைப் படிக்காதேவெனத் திட்டி
கோபியைக் கொடுத்திருந்தேன்
வந்தவுடன் பிடிக்கவில்லையெனத் திருப்பிக் கொடுத்தாள்
“ஏன்?”என்றதற்கு
முனகலாய்ப் பதில் வந்தது
“அசிங்கமாய் இருக்கு”
எது அசிங்கமென்றதற்குப் பதில் எதுவும்
சொல்லாமல் போய்விட்டாள்
நான் பாலகுமாரனைக் கொடுத்திருந்தால்
இன்றிவளை முத்தமிட்டிருக்கலாமென
நினைத்துக்கொண்டேன்
என்று சராசரிப் பெண்களின் வாசிப்பு ரசனையைச் சாடியிருந்தாய். ஆண் அறிவுஜீவி என்னும் மிதப்பு அதிலிருந்ததைக் கவனித்தேன். பாலகுமாரனை வாசிக்கும் பெண்கள் எல்லாம் இழுத்தவுடன் வந்து நெஞ்சில் விழுந்து முத்தம் கொடுக்குமளவிற்குக் கவிழ்ந்துபோகக்கூடியவர்களா என்ற எண்ணமும் எனக்குள் வந்துபோனது. மறுவளமாக, கோபியைப் படிக்கிறவர்கள் உறுதியானவர்கள்! ம்! சிலசமயங்களில் நம்மையறியாமலே நமது கசடுகளை வெளியில் கொட்டிவிடுகிறோம் என்று தோன்றுகிறது. நீ என்ன சொல்கிறாய்?

உண்மையைச் சொன்னால், உனது தொகுப்பை நான் கொஞ்சம் அசிரத்தையாகவே வாசிக்க ஆரம்பித்தேன். இணையத்தில் கொட்டிக்கிடக்கிற கவிதைகள் தந்த மிரட்சி அந்த அசிரத்தையைத் தந்திருக்கலாம். ஆனால், தேறக்கூடிய (எனது அளவுகோலில்) சில கவிதைகளை நீ எழுதியிருப்பதாக வாசித்து முடித்ததும் உணர்ந்தேன். ‘நாள்தோறும் நிறம் மாறும் தேவி’என்ற கவிதையில் கணந்தோறும் தளும்பும் பெண்மனதையும் அவளது மிகமெதுவான தந்திர விலகலையும் அழகாகச் சொல்லியிருந்தாய்.

‘வெறுமை கசப்பு வெறுப்பு மற்றும் தனிமை’, ‘பொதுப்படுத்தி மகிழ்தல்’ போன்ற ‘வெறும்’கவிதைகளைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

முன்மாதிரிகளின்
பிரமாண்டங்களில்
ஒன்றுமில்லாததாகிறது
கிளர்ந்தும் திரண்டும் எழும்
அடர்த்தியற்ற வடிவமற்ற
உள்ளெழுச்சிகள்
இருப்பினும்…
தினம் பூக்கும்
பூக்கள்
எதை நிரூபிக்கிறது
பூத்திருத்தலைத் தவிர்த்து?
முன்மாதிரிகளின் பிரமாண்டங்களைக் கண்டு நீ மிரட்சியடைய வேண்டியதில்லை. மேலும், பிரமாண்டம் என்பதன் வரையறைதான் என்ன? எழுதும்போது நீ உன்னளவில் உள்மனதுள் பூக்கிறாய். எழுது… எழுது… அதுவொன்றே நமக்குப் போதும்.

நட்புடன்
தமிழ்நதி
01-10-2009

12 comments:

குப்பன்.யாஹூ said...

nice munnurai by Tamilnadhi.

Thanks to Tamilnadhi

Thanks ayyanaar, bavaa for sharing this to us

மண்குதிரை said...

தங்கள் மூன்று புத்தகத்திற்கும் வாழ்த்துக்கள்.

தமிழ்நதியின் அணிந்துரையும் நன்று.

வாழ்த்துக்கள்

சென்ஷி said...

முத்திரைக் குறிப்புகள்..... சுவாரஸ்ய அய்யனாரின் எழுத்துக்களை வாசிப்பதைப் பற்றிய தமிழ்நதியின் கருத்துக்கள் அதிசுவாரசியமானவையாக இருக்கிறது..

செல்லமாக தலையைத் தட்டி இப்படியில்லைடா என்ற தோழமை உணர்வு தமிழ்நதியின் எழுத்துக்களில் விரவிக்கிடக்கிறது. பாசாங்குகளற்ற அல்லது பாசாங்கு வெறுக்கும் மனங்களால் சாத்தியப்படும் சிலவை இங்கு மீண்டும் காணக்கிடைக்கிறேன்.

பகிர்விற்கும் பதிந்தமைக்கும் நன்றி தமிழ்நதி மற்றும் அய்யனார்

அன்புடன் அருணா said...

முன்னுரையே பொக்கிஷமாக இருக்கிறது!வாழ்த்துக்கள் பூங்கொத்துக்களுடன்!

மிதக்கும்வெளி said...

புத்தகங்களுக்கு வாழ்த்துக்கள். புத்தகங்களைப் படிக்கவில்லை என்பதால் முன்னுரை குறித்து இப்போதைக்கு ஏதும் சொல்ல இயலவில்லை. தம்பி டீ இன்னும் வரலை ((-

நேசமித்ரன் said...

அதியதார்த்தத்தினுள்ளும் அதிமாயத்தினுள்ளும் உலவுவது, உனக்கு மட்டுமே சாத்தியம் அய்யனார்.

முத்திரை வரிகள் சென்ஷியின் சொற்களை வழி மொழிகிறேன்

மீண்டும் வாழ்த்துகள் அய்யனார்

ரௌத்ரன் said...

வாழ்த்துக்கள் அய்யனார் :))

நந்தா said...

புத்தக திருவிழாவில எழுத்தாளார் கையாலயே புத்தகம் வாங்க முடியுமா? :)

ஓய் வர்ரதா ஐடியா ஏதாவது இருக்கா சொல்லும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் பாலகுமாரனைக் கொடுத்திருந்தால்
இன்றிவளை முத்தமிட்டிருக்கலாமென
நினைத்துக்கொண்டேன்என்று சராசரிப் பெண்களின் வாசிப்பு ரசனையைச் சாடியிருந்தாய். ஆண் அறிவுஜீவி என்னும் மிதப்பு அதிலிருந்ததைக் கவனித்தேன். பாலகுமாரனை வாசிக்கும் பெண்கள் எல்லாம் இழுத்தவுடன் வந்து நெஞ்சில் விழுந்து முத்தம் கொடுக்குமளவிற்குக் கவிழ்ந்துபோகக்கூடியவர்களா என்ற எண்ணமும் எனக்குள் வந்துபோனது. மறுவளமாக, கோபியைப் படிக்கிறவர்கள் உறுதியானவர்கள்! ம்! சிலசமயங்களில் நம்மையறியாமலே நமது கசடுகளை வெளியில் கொட்டிவிடுகிறோம் என்று தோன்றுகிறது. //

:))))))

செல்வநாயகி said...

வாழ்த்துகள் அய்யனார்

அனைவருக்கும் அன்பு  said...

தமிழ் நதியின் முன்னுரை ..........பாராட்டுக்குரியது
ஒரு நூலில் முன்னுரை என்பது ஆசிரியரின் புகழ் மாலையாக இல்லாமல் .

வாசகனுக்கு படைப்பின் சுருக்கமாக இருக்க வேண்டும் ..........

அதை சரியாக சிறப்பாக செய்து இருக்கிறார் ..........

அவரின் எழுத்துகளில் அவரையும் உங்களையும் அடையாள படுத்திவிட்டு செல்லுகிறார்.........

ரசித்தேன் ..........

மேலும் நண்பருக்கு .............எழுத்து என்பது நம் உணர்வுகளின் வடிகால் என்பதற்கு அப்பாற்பட்டு காலத்தின் பதிவு என்பது மிகசரியாக இருக்கும் ..............நீங்கள் எதை பதிவு செய்கிறீர்கள் பெனின் மீது உங்களின் கசப்பா ?

நீங்கள் பதிவு செய்வது பெண்ணின் மேல் உங்களின் கசப்புகளையும் , கால்புகளையுமா ? theriyavilla

அனைவருக்கும் அன்பு  said...

தமிழ் நதியின் முன்னுரை ..........பாராட்டுக்குரியது
ஒரு நூலில் முன்னுரை என்பது ஆசிரியரின் புகழ் மாலையாக இல்லாமல் .

வாசகனுக்கு படைப்பின் சுருக்கமாக இருக்க வேண்டும் ..........

அதை சரியாக சிறப்பாக செய்து இருக்கிறார் ..........

அவரின் எழுத்துகளில் அவரையும் உங்களையும் அடையாள படுத்திவிட்டு செல்லுகிறார்.........

ரசித்தேன் ..........

மேலும் நண்பருக்கு .............எழுத்து என்பது நம் உணர்வுகளின் வடிகால் என்பதற்கு அப்பாற்பட்டு காலத்தின் பதிவு என்பது மிகசரியாக இருக்கும் ..............நீங்கள் எதை பதிவு செய்கிறீர்கள் பெனின் மீது உங்களின் கசப்பா ?

நீங்கள் பதிவு செய்வது பெண்ணின் மேல் உங்களின் கசப்புகளையும் , கால்புகளையுமா ? theriyavilla

Featured Post

test

 test