Thursday, January 7, 2010

ஜனவரி 04, 1996

இந்த நாளிற்கானது இது என்றெல்லாம் கடந்த பதினான்கு வருடங்களாய் எதையும் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இறப்பின் கடைசி நொடியிலும் நினைவிலிருக்கும் நாளாகத்தான் இது இருக்கிறது. முதல் இரண்டு மூன்று வருடங்களில் குபுக்கெனப் பீறிட்டக் கண்ணீர் கூட நான்காம் வருடத்திலிருந்து சுரப்பதை நிறுத்திக் கொண்டது. வேறு எதையுமே செய்ய முடியாதென்கிற ஆற்றாமையில் இதைப்போலத்தான் பலகாலமாய் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன். ஆரம்பகாலத்தில் இந்நாளில் கிட்டிய காதலியின் மடி, கையழுத்தம், அரவணைப்பு, ஒரு துளிக் கண்ணீர் போன்றவையெல்லாம் என்றென்றும் நன்றிக்குறியவை. ஒரு போதும் அவளின் திசையறிந்து விடாமலிருக்கும் என் நிலைப்பாடுகளை நீட்டிக்கச் செய்பவை. முத்தங்களை விட அபூர்வமாய் துளிர்க்கும் ஒரு துளிக் கண்ணீரே எப்போதைக்குமான நன்றிக்கடனாய் தங்கிவிடுகிறது.

மெளனங்கள் புதைத்து வைத்திருக்கும் இரகசியங்களின் வெளி மிகவும் அபாயகரமானது. மிகப்பெரும் அதிர்விலும் அபூர்வ நெகிழ்விலும் கூட அவைகள் மெளனங்களை ஒரு போதும் மீற விரும்புவதில்லை. மேலும் அவைகள் அவைகளாகவே இருப்பதினால் மட்டுமே பெரும்பாலான ஒத்திகை வாழ்வுகள் தங்களது ஒப்பணைகளின் மீது மிகப்பெரும் நம்பிக்கையையும் ஆசுவாசத்தையும் வைத்திருக்கின்றன. மின்மினிகளின் சமிக்ஞைகளைப் போன்ற ஏதோ ஒன்றின் மினுக்கிடும் பாதி ஒளியில் எப்போதாவது அவைகள் தத்தமது முகம் பார்த்துக் கொள்ளக் கூடும். அவ்வொளியின் வீச்சில் உண்மையைப் போன்றதொரு வஸ்து செத்து மடிவதை எவராலும் தடுக்க இயலாது.

மரணத்தை அற்பமாக்குவதும் வாழ்வை அற்பமாக்குவதும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய செயல்தாம். இதன் மூலம் அதையும் அதன் மூலம் இதையும் பரஸ்பரம் அற்பமாக்கிக் கொள்ளலாம். மரணம், வாழ்வு இரண்டையும் அற்பமாக்குவது வெகு சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. எப்போதுமிருக்கும் இழப்புகளாகத் தங்கிவிடுவதென்பது எல்லாராலும் முடிவதில்லை. இல்லாதிருத்தல்கள் சிலரால் மட்டுமே சாத்தியமாகின்றன. அவர்கள் எப்போதைக்குமான தங்களின் இருத்தல்களை எல்லாரிடத்தும் ஊன்றிவிட்டு காலத்தோடு தங்களின் பெளதீக இருப்பை கரைத்துக் கொள்கின்றனர். இஃது இன்னொரு வகையில் பிறருக்கு வலிந்து வாழ்தலாய், கூடுதல் சுமையாய் அமைந்துவிடுகிறதுதான் என்றாலும் வாழ்வென்பது ஒருபோதும் பிறருக்கானது இல்லை அது மிகுந்த சுயநலமானது.

0

இந்த வருடத்திற்கான உனது நாளும் சாம்பல் வண்ணத்தையே கொண்டிருந்தது. சொல்ல முடியாத இறுக்கத்தை எப்படியோ ஒவ்வொரு வருடத் துவக்கமும் கொண்டு வந்து சேர்த்துவிடுகின்றன. ஓரளவிற்கு உன் கனவுகள் நம்பிக்கைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றியாகிவிட்டது. நாம் இப்போது வந்து சேர்ந்திருக்கும் உயரங்களின் மிகுதி நீயோ நாங்களோ எதிர்பார்த்திராததுதான். இனிமேல் செய்ய வேண்டியது பெரிதாய் ஒன்றுமில்லை. இதுவரைக்குமான எங்களின் நகர்வுகளின் பின்னால் விசையாக இருந்தது நீதான் என்கிற நம்பிக்கைகள் எப்போதுமிருக்கின்றன. இந்த வருடம் உன் பெயரைச் சூடிய பிஞ்சிடம் பெரியப்பாவைக் கும்பிடச் சொல்லிக் கொண்டிருந்தோம்.

7 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

கங்காவைப் பற்றி சில தகவல்கள் //

இதனைப் படித்தபின் இந்தப் பதிவின் அடர்த்தி இன்னும் கூடியது :(

எப்போதுமிருக்கும் இழப்புகளாகத் தங்கிவிடுவதென்பது எல்லாராலும் முடிவதில்லை. இல்லாதிருத்தல்கள் சிலரால் மட்டுமே சாத்தியமாகின்றன. அவர்கள் எப்போதைக்குமான தங்களின் இருத்தல்களை எல்லாரிடத்தும் ஊன்றிவிட்டு காலத்தோடு தங்களின் பெளதீக இருப்பை கரைத்துக் கொள்கின்றனர். இஃது இன்னொரு வகையில் பிறருக்கு வலிந்து வாழ்தலாய், கூடுதல் சுமையாய் அமைந்துவிடுகிறதுதான் என்றாலும் வாழ்வென்பது ஒருபோதும் பிறருக்கானது இல்லை அது மிகுந்த சுயநலமானது. //

உண்மைதான்.

யாழினி said...

படிக்க ஆரம்பிக்கும்போது இருந்த
மனநிலை இப்ப இல்ல...
சத்தமில்லாத ஒரு அழுகைய
கேட்ட மாதிரி இருக்கு..

chandru / RVC said...

இல்லாமல் ஒரு இடத்தை நிரப்புவது வெகு சிலருக்கே சாத்தியம். கங்காவுக்கு அது கூடியிருக்கிறது :(

குப்பன்.யாஹூ said...

தொடர்பு பதிவுகளை படித்த பிறகுதான் கங்கா (கங்காதரன் ) ஒரு ஆண் பாத்திரம் என்று அறிந்தேன்.

மால்குடி டயஸ் படித்த ஞாபகம்

காஞ்சனை said...

வார்த்தைகள் சொன்னதை விட இப்பதிவினுக்காக தேர்ந்தெடுத்திருக்கும் படம் அதிகம் பேசுகிறது :(

தமிழன்-கறுப்பி... said...

ம்ம்..

MSK / Saravana said...

ம்ம்..

இரண்டாம் பத்தியை திரும்பத்திரும்ப படித்துக்கொண்டிருந்தேன்..

Featured Post

test

 test