Monday, March 22, 2010

விழாக் குறிப்புகள் - 2


சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. அளவில் சிறிய விமான நிலையம் என்பதால் சீக்கிரம் வெளியே வந்து விட முடிந்தது. வெளியேறும் வழியில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். மூன்று மாதத்தினுக்கு முன்பு வரும்போது இப்படிச் சுற்றி வர வேண்டியதில்லை. பெரும்பாலான நவீனப்படுத்தப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் யாவும் நமக்கு மிகப்பெரும் தொல்லையாகத்தான் இருக்கின்றன. சிம் கார்டு மாற்றி வாட்சைத் திருகி சென்னைக் காற்றை ஆழமாய் உள்ளிழுத்தபோது ஒரு சிறிய பரவசம் உண்டாயிற்று. எந்தக் கவலையுமற்று மனிதர்கள் வெற்றுத் தரையில் தலைக்கு கை வைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தனர். திறந்திருந்த இரண்டு ஏர் டெல் கடைக்காரர்கள் இரும்பு நாற்காலியில் சரிந்து ஆழமாய் தூங்கிக் கொண்டிருந்தனர். குளிர் மென்மையாய் பரவியிருந்தது. டாப் அப் செய்ய வேண்டியிருந்ததுதான் என்றாலும் அவர்களின் தூக்கத்தை கெடுக்க மனதில்லாமல் நகர்ந்தேன். மகேந்திரா வேனிலிருந்து கிராமத்து மனிதர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர். தூக்கம் நிறைந்த கண்களோடு வழியெங்கும் தாயகம் திரும்புபவர்களின் உறவினர்கள் காத்துக் கிடந்தனர். இம்மாதிரி சம்பிரதாயங்களான விடைபெறல், வரவேற்றல், கண்ணீர், இதெல்லாம் என்னை சம நிலையில் இருக்க விடாமல் செய்துவிடுமென பயந்தே நான் உறவுகளையும் நண்பர்களையும் விமான நிலையத்தினுக்கு அழைப்பதில்லை. மேலதிகமாய் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வந்துவிடுவதால் பெரிய இடைவெளியோ நெகிழ்வுச் சமாச்சாரங்களோ இருப்பதில்லை.

அங்கிருந்த கடையொன்றில் தேநீரும் தண்ணீர் பாட்டிலொன்றும் வாங்கினேன் அய்ம்பது ரூபாய் கொடுத்ததில் சில்லறையாக ஏதோ திருப்பித் தந்தனர். சென்னை நம்பவே முடியாத அளவினுக்கு விலைகளை உயர்த்திக் கொண்டுள்ளது. டீயைக் குடிக்கவே முடியவில்லை. மோசமானதொரு சுவையிலிருந்தது. உடன் வந்த உயரமான ஜீன்ஸ் பெண் எனக்கு முன்னர் வந்து அதே டீயை ஊதி ஊதிக் குடித்துக் கொண்டிருந்தாள். டீயை எறிந்து விட்டு விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்தேன். திருவண்ணாமலை என்பதால் பேருந்து வசதி சற்று அதிகம்தான். விமான நிலையத்திலிருந்து இறங்கி சாலைக்கு எதிர்புறம் சென்றால் போதுமானது. ஆட்கள் குறைவான பேருந்துகள் தூங்கியபடி வந்து கொண்டிருக்கும். குளிர் காற்று முகத்தில் படபடக்க பயணிக்கும் இந்த நான்கு மணி நேரத்தில் என்னால் எப்போதுமே ஒரு நொடி கூட தூங்க முடிந்ததில்லை. மெல்ல இருள் விலகிக் கொண்டிருக்கும் பின்னிரவைப் பார்த்தபடி வழியில் தென்படும் ஊர்களுக்கு வந்த தருணங்களை, நிகழ்ந்த சம்பவங்களை நினைத்தபடி, நேரம் கடக்கும். இம்மாதிரி தருணங்கள் பகல் கனவில் மூழ்கித் திளைக்க வசதியானது. சமீபத்தில் வந்து கொண்டிருக்கும் பகல் கனவையெல்லாம் எழுதி உங்களை கிச்சுகிச்சு மூட்ட விருப்பமில்லாததால் பகல் கனவு என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறேன்.

திண்டிவனம் தாண்டியபோது இரவு மெல்ல விலகியிருந்தது. பனிப்புகை மூடிய காலை உதித்த முதல் கணத்தை தரிசிக்க முடிந்தது. செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை வரை பிரதான சாலையை ஒட்டிய வயல்கள் வரிசையாய் வந்து கொண்டிருந்தன. பசிய புற்களில்,அடர் பசும் நெற்கதிர்களில் பனி படந்திருந்தது. அதிகாலைப் பனிக்காற்றில் கலந்திருந்த பசுந்தாவரங்களின் வாசம் சுவாசத்தை நிரப்பியது. சாலையை ஒட்டிய குடிசைகள், ஓட்டு வீடுகள், சமீபமாய் கட்டப்பட்ட ஒரே மாதிரியான மெத்தை வீடுகளென சிறுசிறு இடைவெளிகளில் வீட்டின் முகங்கள் வந்து கொண்டிருந்தன. சொல்லி வைத்தாற்போல் எல்லா வீட்டு முற்றத்திலும் அதே நேரத்தில் பெண்கள் சாணம் தெளித்துக் கொண்டிருந்தனர். சாலை ஓரத்தில் குத்துக் காலிட்டு அமர்ந்து கையில் ஒரு குச்சியினை வைத்துக் கொண்டு மண்ணைக் கீறியபடி சிறுவர்கள் மலம் கழித்துக் கொண்டிருந்தனர், அசை போட்டபடி நடக்கும் மாடுகள், புலுக்கை உதிர்க்கும் ஆடுகள், விடியலை அறிவிக்கும் கோழிகள் என கண்களில் பட்டு வேகமாய் மறையும் சாலையோர கிராமக் காட்சிகளை விழுங்கியபடி பயணித்துக் கொண்டிருந்தேன். கீழ் பெண்ணாத்தூரைக் கடந்த போது கருவேல மரங்கள் சூழந்த அந்த ஏரியும் அதனுள் மாலை நேரங்களில் சூரியன் தங்கமாய் மின்னும் பின்னணியில் விளையாடிக் களைத்த சிறு பிராயத்து நாட்களும் நினைவில் வந்தது. மேலும் அவ்வயதில் அக் கிரமத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான சிறு கிராமங்களின் கிணறுகளில் குதித்து கும்மாளமிட்டிருந்ததையும் நினைத்துக் கொண்டேன். பம்பு செட்டு, கிணறை ஒட்டிய பெருமரக் கிளைகள் போன்றவற்றின் மீதேறிக் குதிப்பது மிகப்பெரும் சாகசச் செயலைப் புரிந்த மனநிலையைத் தரும். இந்த மன நிலை இன்னமும் கூட அப்படியேதான் இருக்கிறது. சமீபத்தில் மஸ்கட் சென்றிருந்த போது வாதிபின்காலித் என்கிற இடத்தில் கென்னுடன் ஒரு உயரமான பாறை மீதிருந்தது நீரில் குதித்து புளகாங்கிதமடைந்து கொண்டேன்.

திருவண்ணமலை வந்துவிட்டது. பெரியார் சிலை நிறுத்ததில் இறங்கியதும் பிரம்மாண்டமான பேனர் ஒன்று என்னை வரவேற்றது. புத்தக வெளியீட்டு விழா பேனர் தான் அது. மிக நேர்த்தியான ஓவியத்துடன் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை பறை சாற்றிக் கொண்டிருந்தது. மூன்று சாலைகள் சந்திக்கும் திருவண்ணாமலையின் முக்கிய இடங்களிலெல்லாம் மிகப் பெரிய விளம்பரங்கள் நேர்த்தியான ஓவியத்துடனும் புகைப்படத்துடனும் வைக்கப்பட்டிருந்ததை ஆட்டோவில் செல்லும்போது பார்த்துக் கொண்டேன்.

காலை பத்தரை மணிக்கு வம்சியில் வைத்து பவா வைக் கட்டிக் கொண்டேன். மிகப் பெரிய மலர்ந்த வரவேற்பை ஒவ்வொரு முறையும் அவரிடம் உணரமுடிகிறது. க.சீ.சிவக்குமார் நான்கு நாட்கள் முன்னதாகவே அங்கு வந்துவிட்டிருந்தார். தொடர்ச்சியாக நண்பர்கள் வந்து கொண்டேயிருக்க சுவாரசியமாய் பேச்சும் டீயும் ஓடியபடி இருந்தது. அழைப்பிதழ்களை அணுப்பியபடி, நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தபடி, அந்த நண்பகல் கடந்தது. என் சொந்த வேலை ஒன்றையும் மதியவாக்கில் முடித்துக் கொண்டு நானும் சிவாவும் பிரபஞ்சனை சந்திக்கச் சென்றோம். மதிய உணவை பவாவின் நிலத்தில் அவரின் புதுக் குடிலில் வைத்துக் கொள்ள திட்டமிட்டோம்.

தொடரும்..

8 comments:

ஆயில்யன் said...

//சிம் கார்டு மாற்றி வாட்சைத் திருகி சென்னைக் காற்றை ஆழமாய் உள்ளிழுத்தபோது ஒரு சிறிய பரவசம் உண்டாயிற்று/

உணர்கிறேன் எத்தனை சந்தோஷத்தினை கொடுக்கும் தருணங்கள் :)

//மேலதிகமாய் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வந்துவிடுவதால் பெரிய இடைவெளியோ நெகிழ்வுச் சமாச்சாரங்களோ இருப்பதில்லை.//
ஹம்ம்ம்!

காலை நேர பயணக்காட்சிகள் விவரிப்பு சுவாரஸ்யம் :)

பா.ராஜாராம் said...

சேர்ந்து பயணிக்கிற அனுபவம் தருகிறீர்கள் அய்யனார்.

கோபிநாத் said...

குறிப்புகள் நேரில் காண்பது போலவே இருக்கு...அப்படியே படங்களில் கீழ் அந்த படத்தின் விபரங்களை போட்ட நல்லாயிருக்கும்....;)

ராம்ஜி_யாஹூ said...

கல்ப் air அல்லது எமிரடே ஏற் இல் உங்கள் அருகில் உள்ள இருக்கையில் அமர்து சிம் கார்டை மாற்றிய ஒரு அனுபவம்.

உங்களுடனே மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடந்து வந்த உணர்வு, விழுப்புரம் டெப்போ பஸ்ஸில் திருவண்ணாமலை பயணித்த அனுபவம்.

அருமையான பதிவு, சுவாரஸ்யமான எழுத்து நடை. நன்றிகள் பல அய்யனார்.

Ken said...

வாதிபின் காலித் பாறை மீதிருந்த குதித்ததை விட நம்மாளு போட்டோ எடுக்காம ஏமாத்தினதையும், மிருகம் டைனோசர் தண்ணிக்குள்ள இழுத்ததா நிமிசத்தில் புனைவாக்கின நம்மாளுங்க திறமையையும் சொல்லு :)))))

வாழ்த்துகள் புலி , பார்க்க முடியாத நிகழ்ச்சி கூடவே இருந்த / இருக்கிற உணர்வை உன் எழுத்து தருது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை வரை பிரதான சாலையை ஒட்டிய வயல்கள் வரிசையாய் வந்து கொண்டிருந்தன......//

உங்களின் விவரிப்பில் ஒரு முறை செஞ்சி டூ திருவண்ணாமலை இடையே இருக்கும் எங்க ஊருக்கே போய்ட்டு வந்த உணர்வு.

Ayyanar Viswanath said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே..

Nathanjagk said...

பயணக்குறிப்புகள் நன்று!
// க.சீ.சிவக்குமார் நான்கு நாட்கள் முன்னதாகவே அங்கு வந்துவிட்டிருந்தார்//
இன்னும் அங்கேதான் இருப்பார் என்று நினைக்கிறேன்.
புத்தக ​வெளியீட்டிற்கு வாழ்த்துகள்!

Featured Post

test

 test