Wednesday, September 7, 2011

இருபது வெள்ளைக்காரர்கள் – காட்சி பத்து மற்றும் காட்சி ஒன்று

தொண்டையிலிருந்து வயிறு வரை தீப்பற்றி எறிந்தது. தாகம் தாகம் அப்படி ஒரு தாகம். மண்டை விண்ணென தெறித்தது எழுந்து கொண்டேன். நிசப்த இருள் எங்கும் இருந்தது. நிலா சமவெளியைத் தாண்டி மலைகளுக்காய் சென்று கொண்டிருந்தது. தண்ணீரைத் தேடினேன். கண்களுக்குத் தட்டுப்படாததால் ஓடையை நோக்கிப் போனேன். நீரில் இறங்கி நின்று கொண்டு கைகளால் அள்ளி அள்ளி நீரைக் குடித்தேன். தாகம் மெல்ல அடங்கியது. மேலே எழுந்து கூடாரத்திற்காய் நடந்தேன். ஏதோ கால்களை இடற பொத்தென விழுந்தேன். தடுமாறி எழுந்து பார்த்தால் ஒரு உடல் மடங்கிக் கிடப்பது போல் தெரிந்தது. போதை அதிகமாகி விழுந்து கிடக்கிறார்களா? என நினைத்தபடியே அருகில் போய் குனிந்து பார்த்தேன். அது ஒரு பெண்ணுடல். வளைந்து கிடந்த உடலை சிரமப்பட்டு விலக்கி முகம் பார்த்தேன். ஜோன். துணுக்குற்று, தட்டி எழுப்பினேன். உடலில் ஒரு அசைவும் இல்லை. பயத்தோடு மூக்கின் அருகில் விரல் வைத்துப் பார்த்தேன். ஐயோ மூச்சு வரவில்லை. சற்றுக் கவனமாய் பார்த்ததில் வலது மூக்கிலிருந்து இரத்தம் கோடாய் இறங்கி காய்ந்து போயிருந்தது. அதிர்ச்சியில் இதயம் துடிக்க ஆரம்பித்தது. பயந்து போய் கூடாரத்தை நோக்கி ஓட ஆரம்பித்தேன். சப்தமெழாமல் படுக்கையில் போய் படுத்துக் கொண்டேன். கண்களை மூட முடியவில்லை. பைத்தியம் பிடிப்பது போலிருந்தது. மெல்ல வெளியே வந்தேன். காலுக்கருகில் ஒரு புட்டி கிடந்தது. எடுத்துத் திறந்து மடமடவென குடித்தேன். எரிந்து எரிந்து தலை சுற்றியது. போய் பொத்தென படுக்கையில் விழுந்தேன்.

திடீரென இருபது வெள்ளைக் காரர்களும் என்னைத் துரத்த ஆரம்பித்தார்கள். திக்கே தெரியாத இருளில் அலறியபடி ஓடினேன். எப்படியோ பிரதான சாலைக்கு வந்துவிட்டேன். சாலையோர மின் விளக்குகளில் இருந்து மஞ்சளாய் வெளிச்சம் தார்சாலையின் மீது விழுந்து கொண்டிருந்தது. ஓடிவந்த திசைக்காய் திரும்பிப் பார்த்தேன். யாரையும் காணோம். சற்று சமாதானமானேன். தொலைவில் ஒரு பாழடைந்த கட்டிடம் தென்பட்டது. அதை நோக்கி நடந்தேன். நெருங்க நெருங்க ஒரு பிரம்மாண்டக் கதவு தென்பட்டது. காற்றில் அசைந்து அசைந்து விநோத சப்தமொன்றை அது எழுப்பிக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்தேன். திடீரென கதவை யாரோ அடித்துச் சாத்தினார்கள். தம் மென்ற சப்தத்தோடு கதவு மூடியதும் கடும் இருள் சூழ்ந்தது. கண்கள் இருளுக்குப் பழகும் வரை அசையாமல் நின்று கொண்டிருந்தேன். சற்று நேரத்திற்குப் பின்பு ஒரு நீளமான சந்து புலப்பட்டது. குனிந்து பார்த்ததில் அந்தத் தரை சிவப்பு நிறத்தில் மினுமினுத்துக் கொண்டிருந்தது. சந்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

No comments:

Featured Post

test

 test