Tuesday, January 10, 2012

தமிழ் நாவல்கள்- ஒரு அழகியல் பார்வை பாகம் 1

தமிழ் சிறுகதைகள் எட்டிய உயரத்தை இன்னும் தமிழ் நாவல்கள் எட்டவில்லை என்பது ஒரு சாரரின் கருத்து. இதை முழுவதுமாகவே நிராகரிக்கிறேன். தமிழ் நாவலின் வரலாறு 130 வருடங்களைக் கடந்திருப்பினும் முதல் அறுபது வருடங்களில் எழுதப்பட்ட நாவல்கள் எண்ணைக்கையளவில் மிகவும் சொற்பமானவை. தமிழ் நாவலின் வளர்ச்சி என்று பார்த்தோமானால் அது 1940 திற்குப் பிறகுதான் சீரடைகிறது. ஆக கடைசி எழுபது வருடங்களில் தமிழ் நாவல் சூழலில் நிகழ்ந்திருப்பது நிச்சயம் புலிப் பாய்ச்சல்தான்.

படைப்பாளியாய் எனக்கான தேர்வுகள், அரசியல் பார்வைகள் உண்டெனினும் அவற்றின் தாக்கமில்லாது ஒரு தேர்ந்த வாசகனாய் என் வாழ்வோடு பயணித்த நாவல்களில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இதை ஒரு விமர்சனக் கட்டுரையாக எழுதுவதைக் காட்டிலும் வாசிப்பு மனதின் அனுபவங்களாக எழுதுவதையே விரும்புகிறேன்.

சம காலத்தில் வாசிப்பு என்பது படைப்பிற்கு நிகரான ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. படைப்பையும் வாசகரையுமே பிரதானமாகக் கொள்ள வேண்டிய, படைப்பாளியையே தன் படைப்பின் இன்னொரு வாசகராக மாற்றக்கூடிய சூழல் இது. இச்சூழலின் சுதந்திரத்தைக் கணக்கில் கொண்டு படைப்புகளை முன்னிறுத்தியே இந்தக் கட்டுரையை எழுத விரும்புகிறேன். காலகட்டம், தர வரிசை போன்றவற்றைக் கணக்கில் கொள்ளாது எனக்குப் பிடித்த நாவல்களைப் பகிரும் கட்டுரைதான் இது. ஆகவே எது முதல்? எது இரண்டாவது? என்கிற தொணி இதில் கிடையாது. கால வரிசையையும் கணக்கில் கொள்ளாமல் வெறும் மனப்பதிவாக மட்டுமே இக்கட்டுரையை அனுகக் கோருகிறேன்.

ந்த வருடத்தின் நடு வாக்கில் பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை யை வாசித்து முடித்தேன். சென்ற வருட இறுதியில் வாசிக்க ஆரம்பித்த ஆயிரம் பக்க நாவல் இது. ஒப்பீட்டளவில் இதுவரைக்குமான என் வாசிப்பில் மிக அதிக அளவு காலத்தை எடுத்துக் கொண்ட நாவலும் இதுதான். என்னை ஈர்த்த முதல் விஷயமாகச் சுட்ட விரும்புவது இக் கதை இயங்கும் தளம். அந்நிய நிலப்பிரதேசங்களில் துவங்கி, வரலாற்றுப் பயணமாய் இந்தியாவில் நுழைந்து, தொன்மங்களில் முடிவடையும் நெடிய பயணம்தான் இதன் களம். படைப்பாளி தான் வாழ்ந்த, தான் நன்கு அறிந்த, தளங்களில் மட்டுமே இயங்க வேண்டும் என்கிற என் எண்ணத்தையும் இந்நாவல் மாற்றியமைத்தது. படைப்பு மனதின் எல்லைகள் என நானாகவே நிறுவிக் கொண்ட பல விஷயங்களையும் தாண்டவராயன் கதை தகர்த்தது.

பதினாறாம் லூயி பிரான்சை ஆண்டக் காலக் கட்டத்தில் முதற்கட்டக் கதை சொல்லப்படுகிறது. பல்வேறு வகையான புதிய நிலப்பிரதேசங்கள் துல்லியமாகவும், புனைவாகவும், மாய யதார்த்தமாகவும் நாவலின் நெடிய வழியெங்கும் பதிவாகியிருக்கிறது. மதங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் யாவற்றையும் கதையோடு பின்னிப் பிணைத்திருப்பதும் ஒரு முழு படைப்பிற்கான உத்திரவாதத்தை அளிக்கிறது. ட்ரிஸ்ட்ராம் சதுப்பு நிலப் பெண்ணான எலினார் மீது காதல் கொள்வது- ஒரு மாயக் காட்டில் அவர்களுக்குள் நிகழும் கலவி- அதன் தொடர்ச்சியாய் கண்களை இழந்து விநோத நோய்மையால் பீடிக்கப்படும் எலினார்- அவள் நலம்பெற தேவைப்படும் சிகிச்சைக்காக ட்ரிஸ்ட்ராம் மேற்கொள்ளும் சாகஸப் பயணம் இதான் தாண்டவராயன் கதை. இந்தியாவில் நுழையும் ஆங்கிலேயர்களுக்கு இந்திய செழிப்புகளின் மீது படரும் பேராசை. இந்தியத் தொன்மை வாழ்வு யாவற்றையும் சாக்த, பெளத்த மதப் பின்னணியோடு நிறுவி இருப்பதும் இந்நாவலின் மற்றுமொரு தனித்துவம்.

பா.வெங்கடேசனின் மொழி, அவரின் வரலாறு மற்றும் நிலப்பிரதேசங்களின் மீதான கூர்ந்த அவதானிப்பு இந்நாவலைக் கச்சிதமாய் எழுத வழிவகுத்திருக்கிறது. மேலும் இக்கதையை நிகழ்த்திக் காட்டத் தேவையான அறிதலும், அதற்கான உழைப்பும் வாசிப்பவர்களை பிரம்மிக்கச் செய்து விடுகிறது. இந்நாவலின் அடிநாதம் தீராக் காதல் என்பதாகத்தான் இருக்க முடியும். காதல் மட்டுமே தொன்மங்களில் துவங்கி, நவீனத்தில் கிளைத்து மாயங்களில் திளைக்க முடியும். தாண்டவராயனில் நிகழ்வதும் அதுதான். இந்நாவலுக்கான விரிவான விமர்சனத்தை எழுதி விட வேண்டும் என்கிற பேராசை எனக்கு உண்டு. அடுத்த வருடத்திலாவது அதைச் செய்துவிட வேண்டும்.

சமீபத்தில் படித்த சுவாரசியமான தமிழ் நாவல் தமிழ்மகனின் வெட்டுப் புலி. இரண்டே நாளில் படித்து முடித்த வேகம், நாவலில் இருக்கிறது. திராவிடத்தின் மீதிருக்கும் என் விருப்பமும், பெரியார் சார்புத் தன்மையும் இந்த நாவலை விருப்பத்தோடு படிக்க உதவியிருக்கலாம். தீப்பெட்டி அட்டையிலிருக்கும் சித்திரத்தின் பின்புலம் தேடிப் பயணிப்பது என்பது எத்தனை சுவாரசியமான ஒன் லைனர்! ஒரு நாவல் இம்மாதிரிப் புள்ளியில் துவங்குவது பெரும்பாலான வாசகர்களை ஈர்க்கும். நாவல் உத்தியளவில் இது பிரமாதமான அனுகுமுறை. சரியானத் தகவல்களை, தமிழகத்தின் வரலாறை, புனைவோடு இணைத்துச் சொல்லியிருப்பது இந்த நாவலின் இன்னுமொரு சிறப்பு. புனைவும் வரலாறும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருப்பதாகத்தான் உணர்ந்தேன். எண்பதுகளில் நாவல் தடதடவென முடியும் எல்லையை நோக்கி நகர்ந்தாலும் இதற்கு மேல் விலாவரியாக எழுதத் தேவையில்லை என்பதே என் எண்ணமாகவும் இருக்கிறது.

இலட்சுமண ரெட்டி -குணவதி, தியாகராசன் - ஹேமலதா இவர்களின் பகுதி என்னை வெகுவாகத் தொந்தரவு செய்தது. குறிப்பாய் ஹேமலதா கதாபாத்திரத்தின் கடைசி கால மாற்றங்களும் அதை தியாகராசன் எதிர்கொள்வதும் மீண்டெழுதலின் யதார்த்தம். மேலதிகமாய் இந்த நாவல் முன் வைக்கும் கொள்கைகளின் தேய்வு என்னை அதிர்ச்சியடைவே வைத்தது. ஒரு மாற்று இயக்கமும் அதன் தலைவர்களும் நாளையடைவில் எவ்வாறு பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளத் தேய்வடைகிறார்கள் என்பதிலிருந்து, அவர்களின் சுயலாபம், குடும்ப நலன் என எல்லாப் புள்ளிகளையும் நேரடியாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது. அண்ணாவிலிருந்து அழகிரி வரைக்குமாய் ஒருவரையும் விடாமல் விமர்சித்திருக்கிறது. தலைவர்களின் வாழ்வைத் தவிர்த்து சாமான்யர்களின் நம்பிக்கைகள், கொள்கைப் பிடிப்புகள் நிறமிழந்து போவதையும் இந்த நாவல் சரியாகவே பதிவித்திருக்கிறது. தீவிரக் கடவுள் மறுப்பாளனான தியாகராசன் ஒரு கட்டத்தில் அன்னையைத் தஞ்சமடைவது எத்தனை பெரிய அவலம்! தமிழ் சினிமாவும் தமிழக அரசியலும் இரண்டறக் கலந்தது. அதையும் நாவல் ஒரு பிடிபிடித்திருக்கிறது. பாலச்சந்தரிலிருந்து ரஜினிகாந்த், மணிரத்னம் என எவரையும் விட்டுவிடாத சரித்தன்மையும் நாவலில் இருக்கிறது. திராவிடப் பின்புலத்திலிருந்து வந்த பத்திரிக்கையாளன் நடிகையின் பேட்டிக்கு பணம் பெறும் நிலைக்குத் தள்ளப்படும் காலத் தேய்வையும், இயக்கத்தை உருவாக்கியத் தலைவர்களின் சம காலத் தோற்றத்தையும் சரியாய் பதிவித்திருக்கிறார். புனைவுப் பாத்திரங்களைக் கொண்டு சமகால அரசியலைக் கடுமையாய் விமர்சிப்பதும் இந்த நாவல் முழுக்க நிகழ்ந்திருக்கிறது

இந்திரா,அண்ணா,எம்ஜிஆ​ர், கருணாநிதி என எல்லோர் மீதும் கதையில் வரும் பாத்திரங்கள் கடுமையான விமர்சனங்களை உரையாடலாகச் சொல்லிவிட்டுப் போகின்றன.நெருக்கடிகால மிசாக் கடுமைகளுக்கு காரணமாக இருந்த இந்திராவுடன் அரசியல் கூட்டு வைப்பதை வேதனையாய் பகிர்ந்திருக்கும் ஒரு பத்தி, அரசியல் சதுரங்கத்தின் சாணக்ய புத்தியைச் சரியாய் துகிலுரித்திருந்தது.எண்பது வருட தமிழக வரலாறை, நேரடிப் பெயர்களோடு வெகு இயல்பாய், வரலாற்றுப் பிழையில்லாமல், எந்தச் சார்புமில்லாமல்(பெரியாரைத் தவிர்த்து) , சாதாரண மொழியில் தமிழ்மகனால் சொல்ல முடிந்திருக்கிறது. என் வாசிப்பளவில் தமிழில் இது ஒரு முக்கியமான படைப்பு.

இந்த வருடத்தில் படித்த இன்னொரு மிகச் சிறந்த நாவல் பிரான்சிஸ் கிருபா வின் கன்னி. கவிஞர்கள் நாவலெழுதும் போது மொழி கூடுதல் சிறப்பாகிவிடுகிறது. கன்னியில் என்னை மிகவும் ஈர்த்த விஷயம் அதன் மொழிக் கட்டுமாணம். தவிர இந்நாவலில் பதிவாகியிருக்கும் மென் மனம். அதன் மிக மிக அந்தரங்கமான நுட்பம். எதோ ஒரு புள்ளியில் சட்டெனத் தலைகீழாகும் மனதின் விநோதம். இவை எல்லாமும் இந்நாவலில் உண்டு. சந்தனப் பாண்டியின் மனப் பிறழ்விற்கு காரணமாக அமலாவைச் சொல்வதா? சாராவைச் சொல்வதா? அவனின் சிக்கலான் பேரன்புதான் எல்லாவற்றிற்குமான காரணம் என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறோம். மதங்கள்,சம்பிரதாயங்கள் சாதாரணர்களின் வாழ்வில் நிகழ்த்தும் வன்முறையாகக் கூட இந்நாவலை வாசித்துப் பார்க்கலாம். படைப்பாளியை நன்கு அறிந்திருந்தால் நாவலின் வடிவ அமைப்பை கச்சிதமான ஆட்டோ பிக்சன் எனவும் வரையறுக்கலாம். தேவதேவனும், தாடிக்கார தாத்தனும், கடலும் ,நண்டும் பால்யக் கால அத்தைப் பெண்ணும், பைத்திய வெறுமையும், மிகப்பெரும் வாதையும் நாவல் முழுக்கப் பதிவாகி வாசகர்களை கலைத்துப் போடுகிறது. புனைவிற்கும் நிஜத்திற்குமான ஊடாட்டத்தில் கலங்கித் திரிவது படைப்பு மட்டுமல்ல வாசகரும்தான்..

சில படைப்புகளை எங்காவது யாராவது சொல்லக் கேட்டிருப்போம். பின்பு அதைத் தேடியும் கிடைக்காமல் போனால் அதன் மீது மற்ற எல்லாவற்றையும் விட அதிகமான ஈர்ப்பு இயல்பாகவே படர்ந்து விடும். சம்பத்தின் இடைவெளி எனக்கு அப்படி ஒரு அனுபவத்தைத் தந்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாய் தேடி பிறகு நண்பரொருவரின் முயற்சியால் ஒளி நகலாக இந்த நாவல் என் கைக்குக் கிடைத்தது. மரணத்தின் வாசனையை முழுக்க வாசிப்பவர்களால் நுகர இயலும். சாவு பற்றிய கேள்வி, சாவு பற்றிய வரையறைதான் இந்த நாவல். கதை என தனியாய் சொல்ல இதில் ஒன்றுமில்லை. சிக்கலான மனம் ஒன்று சாவைத் தொடர்ச்சியாக சிந்திக்கிறது. சாவை வார்த்தையாக்கி விட அது வாழ்வைப் போராட்டமாக்குகிறது.

திரும்பத் திரும்ப வாசிக்கும் நாவல்களில் இது முக்கியமானது. ஒரு வகையில் இந்த நாவல் ஒரு வித போதாமையில் முடிந்து போகிறது. மேலும் அது அப்படித்தான் முடியும். சாவு என்பதை இதுதான் என யாராலாவது அத்தனை எளிதில் வரையறைத்து விட முடியுமா என்ன? சம்பத்தைப் பொறுத்தவரை, சம்பத் தேடிக் கண்டடைந்த வரை. அஃதொரு இடைவெளிதான். அவரின் தேடுதல்தான் இச்சிறுநாவல். தத்துவமும், யதார்த்தமும், நவீன வாழ்வின் வெறுமையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த நாவலிது. சுருக்கமாக மரணத்தின் மீதான தியானம் என்கிறார் நாகார்சுனன். கதையின் பிரதான பாத்திரம் தினகரன் என்றாலும் அதை சம்பத்தாகப் புரிந்து கொள்ளும் திறப்பும் வாசகருக்கு இருக்கிறது. சம்பத் தினகரனைப் போலத்தான் வாழ்ந்தார் என அவரை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

காதல் நிமித்தமான தோல்வியொன்றில் மொட்டைமாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள விழைந்த நொடிக்கு முன்னதாக தினகரன் தரையில் தன் சடலத்தைப் பார்க்கிறான்.பயந்து பின் வாங்கி அதைப்பற்றியே யோசிக்கும்போது அந்நொடியில் நிகழ்ந்தவைகளை நிசப்தம் என அர்த்தப்படுத்திக்கொள்கிறான்.பின் ஒன்றிலிருந்து ஒன்றாக சாவு புதுப்புது பரிமாணங்களை அவனுள் நிகழ்த்துகிறது.
1.சாவு என்பது நிசப்தம்,தாங்கொனா நிசப்தம்.
2.சாவு என்பது வாழ்விற்கு கருணா சமுத்திரம்.
3.சாவு என்பவர் கண்காணிப்பாளர்.
4.சாவு மனிதர்களுக்காக காத்துக்கிடக்கிறது. காத்திருத்தல் என்பதைக் கண்டறிந்ததும் தினகரன் சிறிது சந்தோஷப்படுகிறான். அந்த எண்ணமும் நெடுநாள் மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.பின்பொரு தருணத்தில் சாவென்பது இடைவெளி என அவனுக்குப் புலப்படுகிறது.சுருக்கு கயிற்றின் முடிச்சினுக்கு இடையுள்ள இடைவெளி, கழுத்தை நெருக்கி சாவினுக்கு காரணமாய் அமையும்.ஆக சாவென்பது இடைவெளிதான் என தீர்மானமாய் நம்புகிறான். மகிழ்கிறான். என்னால் குழம்பிப் போகத்தான் முடிந்தது.

தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் தொந்தரவு செய்த எழுத்துக்களுள் முதலாவதாக கோபி கிருஷ்ணன் எழுத்துகளையே குறிப்பிட விரும்புவேன். அவர் வறுமையில் வாடினார். அங்கீகாரமில்லாமல் செத்துப் போனார் போன்ற தனிப்பட்ட விஷயங்களால் உருவான மிகை அல்ல இது என்பதையும் தெளிவாகவே குறிப்பிட விரும்புகிறேன். கலைஞன் எப்போதும் கலைஞன்தான். வாழ்வின் வெற்றியும் தோல்வியும் அவனை என்ன செய்துவிட முடியும்? கோபியின் எழுத்துக்களில் தெரிக்கும் அப்பட்டமான நேர்மை என் ஆன்மாவை நேரடியாய் தொடுகிறது. விமர்சனத்தையே வைக்க முடியாமல் போகும் எழுத்து இவருடையதுதான். கோபியின் டேபிள் டென்னிஸ், உள்ளேயிருந்து சில குரல்கள் இவ்விரண்டையும் நாவல் வடிவில் வைத்துப் பேசமுடியும். இரண்டுமே அதனதன் தளத்தில் உச்சமானவை. காமத்தையும், இயலாமையையும் மனப்பிறழ்வையும் இவரால் துணிவாகவும் நேர்மையாகவும் எழுத முடிந்திருக்கிறது.

உள்ளேயிருந்து சில குரல்கள் நாவலில் முதுநிலை உளவியல் படித்த ரவீந்திரனும் ஸ்டெல்லாவும் மனநோயாளிகளைப் பற்றின சமூகத்தின் தவறான புரிதலினை களையும் பொருட்டு ஒரு மனநல காப்பகத்தில் சந்தித்த மனநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்வார்கள்.அய்ம்பத்தி ஒன்பது மன நிலைகள் தனித்தனியாய் சொல்லப்பட்டிருக்கும். 19 காட்சிகளையும் 59 நிலைகளையும் இன்றும் தொடரும் பழமையெனும் தலைப்பில் ஆறு தனித்தனி குறிப்புகளும் சில செய்திகள் சிந்தனைகள் எனும் தலைப்பில் எட்டு குறிப்புகளும் தொகுக்கப்பட்டிருக்கும்.ஒரு ஆராய்ச்சி நூலின் வடிவத்திலும், பல சிறுகதைகளின் வடிவத்திலும், மொத்தமாய் பார்த்தால் நாவலின் வடிவத்திலுமாய் இப்படைப்பை பல விதங்களில் பொருத்திப் பார்க்கலாம்.என்னைக்கேட்டால் கோபியின் ஒட்டு மொத்த படைப்புகளும் ஒரே நாவலின் வெவ்வேறு பக்கங்கள் என்பேன்.

ஏன் மன வினோதங்களையும் இயல்பாய் அங்கீகரிக்கக்கூடாது? எனக்கேட்கும் கோபி சுவாதீனம்,சுவாதீனமின்மை என்கிற பாகுபாடுகள் அற்ற சமூகத்தை உண்டாக்க உதவுவது தனது இலட்சிய கனவு என்கிறார்.மன நோயாளி,பைத்தியக்காரன் என சக மனிதனை அழைப்பது மிகப்பெரிய வன்முறை.மேலும் அவ்வாறழைக்க யாருக்கும் உரிமையும் இல்லை எனும் கோபி இப்படைப்பில் அவ்வார்த்தைகள் புரிதல் நிமித்தமாக கையாண்டதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறார்.

இந்தப் புத்தகத்தை படித்த முடித்தவுடன் இதில் சொல்லப்பட்டிருக்கும் பல நிலைகளில் நான் இருப்பதாக உணர்ந்தேன்.என் குணாதிசயங்களை ஒத்த பல நண்பர்கள் இப்புத்தகத்தில் காணக் கிடைத்தார்கள்.என்னுடைய அபார போலித்தனத்தின் காரணத்தால் சமதளத்தில் இருந்துகொண்டிருக்கிறேன் அல்லது அது போன்ற ஒரு பிம்பத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.அப்படி ஒரு போலி பிம்பத்தை உருவாக்க முடியாதவர்களை சமூகம் ‘பைத்தியம்’ என்கிறது.

நாவலில் சொல்லப்பட்டிருக்கும் 59 நிலைகளில் வரும் எல்லா மனிதர்களின் அடிப்படைப் பிரச்சினையும் பயம்தான். வாழ்வைப் பற்றின பயம்.சமூகத்தினை பற்றின பயம்.அடுத்தவர்களின் மதிப்பீடுகள் பற்றிய பயம். கட்டமைக்கப்பட்டவைகளின் மீதான பயம். புனிதங்களை மீறுவதன் பயம். புனிதங்களாய் இல்லாமல் போனதின் பயம். ஒருகட்டத்தில் மிகுந்த பயங்கள் தாங்காது, தன்னைக் காத்துக்கொள்ளும்பொருட்டு,வன்முறையாளர்களாக சடுதியில் மாறிப்போகிறார்கள் அல்லது சந்தேகிக்கிறார்கள்.தொடர்ச்சியான சந்தேகித்தல் வினோதமான நடவடிக்கைகளுக்கு அவர்களை உட்படுத்துகிறது.சில சந்தேகங்கள் கொலையிலும் சில சந்தேகங்கள் தற்கொலையிலும் முடிந்துபோகின்றன.

உச்ச மனப் பிறழ்வில் சிதறலாய் கொட்டப்பட்ட வார்த்தைக் கோர்வைகள்தான் டேபிள் டென்னிஸ். காமத்தில் உள்ள பால் வேறுபாடுகளைக் களைவது முதல், அன்பை உறவு எனும் விலங்கிட்டுக் கட்டி வைப்பது வரை சராசரி வாழ்வின் எல்லா முரண்களையும் டேபிள் டென்னிஸ் தொட்டுச் செல்கிறது. “ஜான்ஸி உஷாவுக்குத் தெரிந்துவிட்டது.நடுவிலேயே உருவி எறிந்துவிட்டாள்.தங்கள் பொச்சில் மீதியை முடித்தூக் கொள்ள வேண்டுமாம்.வாருங்கள் ஜான்ஸி,தொலைதூரம் சென்று தோழமை வாழ்வைத் துவங்குவோம்.ஸ்தோத்திரம் ஜான்ஸி.தங்கள் கணவரும் உடன் வரலாம்.அவர் என் தோழர்”

எனும் மனதை எப்படிப் பார்ப்பது?

(தொடரும்)

இந்தக் கட்டுரை பண்புடன் இணைய இதழுக்காக எழுதப்பட்டது. அங்கும் வாசிக்கலாம்

3 comments:

ராம்ஜி_யாஹூ said...

அய்யனார்

முன்பு அச்சு ஊடகம் மட்டும் இருந்த பொழுது, பல பத்திரிக்கைகள், புது எழுத்தாளர்களின் கதைகள், கவிதைகளை உடனே பிரசுரம் செய்தது.
ஆனால் புதியவர்களின் நாவல் என்றால் பிரசுரம் செய்ய தயங்கிற்று.
அது ஒரு காரணமோ, நாவல் எழுத்தாளர்களின் எண்ணிக்கை குறைவிற்கு

Jegadeesh Kumar said...

அன்புள்ள அய்யனார்

அற்புதமான கட்டுரை. தங்கள் வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொண்டது பயனுள்ளதாக இருந்தது. தொடருங்கள். அடுத்தடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ராம்ஜி_யாஹூ said...

http://blogs.hbr.org/cs/2012/01/the_business_case_for_reading.html

Featured Post

test

 test