Monday, April 30, 2012

எல்லா நாளும் கார்த்திகை - பவா.செல்லதுரை

பவா வின் சமீபத்திய எல்லா நாளும் கார்த்திகை தொகுப்பிற்கு என் முன்னுரை

  நாடோடியின் பாடல்

 “நான் மீடியாவாய்ஸ்ல எழுதிட்டிருந்த தொடர நிறுத்திட்டேன் அய்யனார்” “ஏன் பவா?”
“எழுதனுமேன்னு கமிட்மெண்டோட எழுத பிடிக்கல. மறுபடியும் எப்ப தோணுதோ அப்ப எழுதிக்கலாம்”

இதுதான் பவா. தன்னை ஒருபோதும் எழுத்தைச் செய்பவனாக மாற்றிக் கொள்ள விரும்பாத கலைஞன். எந்த ஒன்றிலும் ஆத்மார்த்தமாக மட்டுமே ஈடுபடவிரும்பும் எளிய மனம்தான் பவாவினுடையது . ஏன் அதிகம் எழுதுவதில்லை? என்கிற வழக்கமான நுண்ணுணர்வற்ற கேள்விக்கு பவாவின் பதில் மிகவும் சுவாரசியமானது

நான் ஏன் எழுதவேண்டும்? 

ஆனால் ஒன்றை மட்டும் எல்லோரும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எழுதும் காலம்தான் எழுத்தாளருக்கு மிகவும் கொண்டாட்டமானது. அதிலும் எழுத்தைப் பிறருக்காகச் செய்யாமல் ஆழ்ந்த நேசத்தோடும் தனக்கே தனக்கான நெகிழ்வோடும் எழுதுபவர்களுக்கு எழுதும் காலத்தின் மகிழ்வை எளிதில் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. பவா இந்தத் தொடரை எழுத ஆரம்பித்த நாளிலிருந்து முடிக்கும்வரை எழுத்தின் வசீகரப் பிடிக்குத் தன்னைத் தந்திருந்தார். இதை நேரில் பார்த்தும், கட்டுரைகளின் சில பகுதிகளைப் படிக்கும்போதும் உணர்ந்து கொண்டேன். இது கலைஞர்களுக்கே உரித்தான சந்தோஷம். காலையில் எழுந்து கழிவறை செல்வதுபோல எழுத்தைப் பாவிப்பவர்களுக்கு, எழுத்துப் போலிகளுக்கு, எழுத்தைப் பண்டமாய் மாற்றுபவர்களுக்கு வாழ்வில் ஒருபோதும் கிட்டிடாத உண்மையின் தரிசனம். பவா அந்த தரிசனத்தின் உச்சத்திற்கு தன்னைத் தந்துவிட்டிருந்தார்.

பவாவின் எழுத்தை விமர்சகச் சட்டத்திற்குள் வைத்துக் கூறுபோட்டு இது இந்தவகை என நிறுவுவதில் எனக்கு விருப்பமில்லை. தேசங்களற்ற நாடோடியின் பாடல் எந்த ராகத்தில் இருந்தால்தான் என்ன? என்ன மொழியில் இருந்தால்தான் என்ன? அந்தக் குரலின் வசீகரம் அல்லவா நம்மை அடித்துப் போடுகிறது! அந்தக் குரலின் எளிமையல்லவா நம்மை அசைத்துப் பார்க்கிறது! அடிவயிற்றிலிருந்து பீறிட்டெழும் அந்த சாரீரமல்லவா நம்மை கரைய வைக்கிறது! பவா வின் எழுத்து அத்தகையதுதான். பவாவின் எழுத்தை நாடோடியின் பாடலுக்கு நிகராகத்தான் பார்க்கிறேன்.

இந்தத் தொகுப்பில் தமிழின் பல பிரபலங்கள் குறித்த பகிர்வு இருக்கிறது. சமூகத்தால் அடையாளங் காணப்பபட்ட பிரபல கலைஞர்களிலிருந்து பிரபலமல்லாத கலைஞர்கள் வரைக்குமாய் ஏராளமான மனிதர்களைப் பற்றிய முழுமையான பார்வை இருக்கிறது ஆனால் அவர்களை வெற்றி தோல்வி எனப் பிரித்துப் பார்க்காமல், இருமையில் நிறுத்தாமல் கலைஞர்களாய் மட்டுமே அடையாளங் கண்டு பதிவு செய்திருப்பதுதான் இத்தொகுப்பின் மிகச் சிறந்த அம்சம். பவா மனிதர்களை அப்படித்தான் பார்க்கிறார். ஒரு சாமான்யனின் மனம் பவாவின் எழுத்து முழுவதும் தொடர்ந்து இயங்கியபடியே இருக்கிறது.

பவாவின் எழுத்து வாசிப்பவர்களை தடுமாற வைக்கிறது. சதா மூளையின் கட்டுப்பாட்டிலிருக்கும் மனதை சற்றே இடம்பெயர வைக்கிறது. எழுத்தின் வழியே பவா காட்சிப்படுத்தும் உலகில் தன்னை மொத்தமாய் தொலைப்பதும் எல்லா மனங்களுக்கும் நிகழ்வதுதான். இலக்கியம், திரைப்படம், ஓவியம், புகைப்படம் என எல்லாத் துறைகளிலும் மிளிர்ந்த/மிளிரும் கலைஞர்களுடனான தன் அனுபவத்தை சாதாரணனின் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். எல்லோராலும் அறியப்பட்டவர்களின் இன்னுமொரு அறியாதப் பக்கம் பவாவின் எழுத்து வழியே , வாழ்வு வழியே பதிவாகியிருக்கிறது.

  “எந்த மனித மனமும் தட்டையானதல்ல. அது முரண்பாடுகளால் ஆனது. எந்த மனிதனையும் முழுக்கப் புரிந்து கொண்ட சகமனிதனோ, உறவுகளோ நிச்சயம் இல்லை”

இப்படி ஒரு எழுத்தை எதிரிகளற்ற, துவேஷங்களற்ற, போட்டிகளற்ற, பவா மட்டும்தான் எழுத முடியும் மேலும் அவர் கண் வழியாய் நாம் காணும் சித்திரங்கள் அபூர்வமானவை. பிரபஞ்சன் குறித்த கட்டுரையில் பவா எழுதியிருந்த வரிகள் என்னைத் தூங்கவிடாமல் அலைக்கழித்தன.

  “இப்பூமி பரப்பெங்கும் உண்மையான கலைஞர்களின் குரல்கள், லெளகீக வாழ்வின் முன் இப்படித்தான் உள்ளடங்கிபோய்விடுகிறது. மூன்றாந்தர மனிதர்களின் வெற்றி பெருமிதத்திற்கு முன் ஒரு படைப்பாளி ஒடுங்கிப் போவது இந்த புள்ளியில்தான்” “ஒரே மனிதன் ஒட்டுமொத்த மானுட பசிக்கான துயரத்தைப் பாடிக்கொண்டே தன் சொந்த பசிக்காகவும் ரொட்டிகளை தேடவேண்டியிருந்தது”

எழுத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டு ‘பிழைக்க’ வழி தெரியாத ஒட்டுமொத்த எழுத்தாளர்களுக்கான ஆறுதலாகவும் இவ்வரிகள் இருந்தன. படைப்பாளிகளுக்கு தர வேண்டிய முக்கியத்துவத்தை படைப்பாளிகளுக்கு இருக்க வேண்டிய கர்வத்தை ஜெயகாந்தனின் கட்டுரை வழியாய் ஒரு சம்பவத்தின் மூலமாய் பவா நினைவு கூர்கிறார்.

  “இன்னொரு நாற்காலி ஜெ.கே.வின் நெருங்கிய நண்பரும், அப்போதைய பாண்டிச்சேரி சபாநாயகருமான கண்ணனுக்கு. மேடையில் நின்று ஒரு நாற்காலியை எடுக்கச் சொல்கிறார். கண்ணனைப்பார்த்து, பார்வையாளர்கள் மத்தியில் இருந்த ஒரு இருக்கையைக் காட்டுகிறார். கண்ணன் எவ்வித தயக்கமும் இன்றி அதை நோக்கி போகிறார்"

இந்த வரிகளைப் படிக்கும்போது மேலிட்ட கர்வம் ஒரு படைப்பாளிக்கே உரியது. சமீபத்தில் இறந்து போன தன்னுடைய நண்பன் ராஜவேலின் மரணத்தை பவாவின் வார்த்தைகளில் காட்சியாய் காணும்போது துக்கம் மேலிட்டது. தன்னுடைய நண்பன் இறந்து போன துக்கத்தை தாங்க முடியாது வார்த்தைகளில் கொட்டித் தீர்ப்பது என்பது வேறு. ஆனால் பவா தன் நண்பனின் மரணத்தில் அவன் தந்தையின் துக்கத்தைப் பார்த்து பரிதவிக்கிறார். மகனை சாகக் கொடுத்து வாழநேரிடும் தகப்பன்களின் ஒட்டு மொத்த துக்கத்தை வார்த்தைகளாய் கடத்துகிறார்.

  “ஒரு புது வேட்டி போர்த்தி, கால் விரல்களைச் சேர்த்துக் கட்டி, பன்னீர் தெளித்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, இவை அனைத்தையும் தனியாய் அசாத்திய மவுனத்தோடு செய்தவர் ராஜவேலுவின் அப்பா. எங்கள் நாலைந்து பேரின் மூச்சுக் காற்றை உட்கொண்டு அவ்வறை சுவாசித்துக்கொண்டிருந்தது. நான் வயதான அந்தத் தகப்பனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எதன் பொருட்டோ அவரிடம் உறைந்த அந்நேர மவுனம், என்னை பயமுறுத்தியது. எல்லாம் முடிந்து, தன் மகனின் காலடியில் நின்று, படுத்துறங்கும் மகனை ஆசைதீர பார்வையால், முழுமையாய் பருகினார். ‘‘மகனே’’ என ஓங்காரித்து வந்த அக்குரலொலி, அங்கிருந்த எங்கள் எல்லோரையும் அசைத்தது. அதன் பிறகான பத்துப் பதினைந்து நிமிடமும் அவர் தன் மொழியற்ற குரலால், வெவ்வேறு உடல் மொழியால், தன் பிரிவாற்றிய அந்நிமிடம் என் வாழ்வில் வேறெப்போதும் காணக்கூடாதது. பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டு சவங்களாக அப்பாக்கள் வாழும் வாழ்வெதற்கு?”

இந்த வார்த்தைகளின் இந்த வார்த்தைகள் உருவாக்கிய காட்சியின் தாக்கத்தை ஒரு இளந்தகப்பனாய் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஒட்டுமொத்த மனித மனதின் நேர்மையான சாட்சியம்தான் பவாவின் எழுத்து. கந்தர்வனின் நினைவாக எழுதப்பட்ட கட்டுரை பாரதி படத்தின் துவக்கக் காட்சியை நினைவூட்டியது. ஞானராஜசேகரனின் பாரதி திரைப்படம் எனக்குப் பிடித்த படங்களுள் ஒன்று. அத்திரைப்படமும் பாரதியின் மரணத்திலிருந்துதான் துவங்கும். பவாவின் கந்தர்வன் கட்டுரையும் அவரது மரணத்திலிருந்துதான் துவங்குகிறது. கந்தர்வனின் படைப்புலகை இப்படி எழுதுகிறார்

  “மனிதனின் மென் உணர்வுகளைத் தன் படைப்புப் பக்கங்களெங்கும் படிய வைத்துக் கொண்டேயிருந்தவர் கந்தர்வன். கவர்மெண்ட் ஆபீஸ்களின் பழுப்பேறிய கோப்புகளுக்கிடையே கிடந்த இந்த மகத்தான மனிதர்களை அள்ளிக் கொண்டுவந்து நம் முன் நிறுத்தினார் கந்தர்வன்” 

கந்தர்வன் என்கிற படைப்பாளியின் ஒட்டு மொத்த எழுத்து சாராம்சத்தை இப்படி இரண்டே வரிகளில் அதன் உன்னதம் குறையாது பதிவு செய்வதை முக்கியமானதாகப் பார்க்கிறேன். பவா வால் இது சாத்தியப்பட்டிருக்கிறது. 

ஒரு படைப்பாளியைக் குறித்து பதிவு செய்வதென்பது மிகவும் சவாலான விஷயம். பதிவு செய்பவரின் கண்களைப் போலவே அப்படைப்பாளியை பிறர் அனுகுவது கிடையாது. படைப்பும் படைப்பாளியும் நேர்கோட்டில் பயணிப்பவை அல்ல. ஆனால் எல்லாப் படைப்பாளிக்கும் எல்லா படைப்பிற்கும் ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நம்புகிறேன். ஒரு படைப்பாளியைக் குறித்த பதிவு என்பது அந்த ஆன்மாவை நெருங்கினால் கூட எனக்குப் போதுமானது. இம்மாதிரியான ஒரு மனநிலையில் பவாவின் தொகுப்பை வாசித்தவுடன் முழுமையாக நிறைவடைந்தேன். எல்லாப் படைப்பாளிகளின் ஆன்மாவையும் பவா மிக இலகுவாகத் தொட்டிருக்கிறார். அவர்களை அப்படியே எழுத்தாக மாற்றியிருக்கிறார். இக்கட்டுரைத் தொகுப்பை வரலாற்று ஆவணமாகக் கூட மதிப்பிட முடியும். மேலும் இத்தொகுப்பில் பதிவாகியிருக்கும் மனிதர்கள் கலவையானவர்கள். தமிழ் சினிமாவை மாற்றியமைத்த பாலுமகேந்திரா பாரதிராஜா க்களிலிருந்து நவீனத் திரை மொழியின் உச்சங்கள் தொடும் மிஷ்கின் வரைக்குமாய். சிறுபத்திரிக்கை கவிஞன் கைலாஷ் சிவனி லிருந்து எழுத்துப் பேராளுமை ஜெயகாந்தன் வரைக்குமாய் சமூகம் நிர்மாணித்திருக்கும் ‘தகுதி’ ‘அடையாளங்கள்’ குறித்த கவலை ஏதுமற்று படைப்பையும் படைப்பாளியின் கலை மனதையும் மட்டுமே முன்நிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது. இடையே சாமான்ய மனிதர்களின் அசாதரணமான வாழ்வையும் தரிசிக்க முடியும்.

இம்மாதிரியான ஒரு கலவையை பவா வால் மட்டும்தான் உருவாக்க முடியும். ஒரு நீர்வண்ண ஓவியம் பல்வேறு வண்ணங்களைக் கொண்டு குழைத்துக் குழைத்து உருவாவது போல இத்தொகுப்பு உருவாகி இருக்கிறது. 

“ப்ரியமுள்ள பவா, உங்கள் கட்டுரைகளை மீண்டும் ஒருசேர வாசித்திருப்பதால் வாய்த்திருக்கும் இந்நெகிழ்வான மனநிலையில், பாலுமகேந்திரா உங்களிடம் சொன்னது நினைவிற்கு வருகிறது. அதையொட்டி யோசித்துப் பார்த்தால் உண்மையான கலைஞர்கள் அனைவருமே புலிகள்தாம். புலி இறந்த பின்னாலும் அதன் கோடுகள் அழிவதில்லை. போலவே உண்மையான படைப்பாளிக்குப் பிறகும் அவன் படைப்புகள் நிற்கும். நான் உங்களை அப்படித்தான் பார்க்கிறேன் பவா”


என்றென்றைக்குமான ப்ரியங்களுடன்

அய்யனார்விஸ்வநாத்
பிப்ரவரி 28,2012 துபாய்

Wednesday, April 18, 2012

பழி - சில கடிதங்கள்

“விஜி நான் அன்னிக்குப் போனது நீ இன்னொருத்தரோட படுத்திருந்தேன்னு இல்ல. எங்க நான் உன் வாழ்க்கைய பாழாக்கிடுவனோன்னு நினைச்சிதான் போனேன்” விஜி சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தாள். “நல்ல ஜோக் இது. நான் இன்னொருத்தன் பொண்டாட்டின்னு தெரிஞ்சிதானே என்கிட்ட பழகின? ஆரம்பத்துல இருந்தே நான் இன்னொருத்தன் பொண்டாட்டிதானே, அன்னிக்கு ராத்திரி மட்டும் என்ன உனக்கு திடீர் ஞானோதயம்?”

- இது பழி நாவலின் ஒரு பகுதி. ஆனால், பாண்டியில் விஜியை பிரிகையில்,

  “விஜி” என்றேன். மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்தாள். ”நான் போறேன்” ”நீங்க எதுக்கு போகனும்? அது தூங்கி எந்திரிச்சதும், நாங்க கிளம்பிடுறோம்” என்றாள் அதில் தெறித்த விலகலை, சடாரென என்னை யாரோவாய் சித்தரித்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ”எப்படி உன்னால முடிஞ்சது விஜி?” ”தெரில. திடீர்னு எனக்கு எல்லாம் தப்பா நடக்கிறா மாதிரி பட்டது.. ஒருவேளை நீங்க ஊருக்குப் போகாம இருந்திருந்தா இது நடந்திருக்காதோ என்னவோ.. நீங்க இல்லாத முத நாள் இரவு என்னால தூங்க முடியல. ஏதோ ஒரு மயக்கம் உங்க மேல இருந்தது போல. அது அன்னிக்கு தீர்ந்தா மாதிரி இருந்தது… நான் என்ன பண்ணிட்டிருக்கேன்னு யோசிச்சப்ப பயமா இருந்தது… என் மனசாட்சி உறுத்த ஆரம்பிச்சிருச்சி… என் வீட்டுக்காரர் எனக்காகதான் ஒரு கொல பண்ணிட்டு போலிசுக்கு மாட்டாம தலமறைவா சுத்திட்டிருக்கார். நான் என்னடான்னா இன்னொருத்தரோட எந்த குத்த உணர்வுமே இல்லாம ரொம்ப சந்தோஷமா வாழ்ந்திட்டிருக்கேன்னு ஏதோதோ தோண ஆரம்பிச்சிருச்சி… சரியா விடியற்காலைல இந்த மனுசன் கண்ணு முன்னால நிக்குறார்… -

விஜி தானே விலகி போனாள். நான் "பழியை" கிட்ட தட்ட நூறாவது முறை வாசிக்கிறேன். சின்ன உறுத்தல்.

  போதி ராஜா – ஃபேஸ்புக்கில்


அன்புள்ள போதி ராஜா,

எல்லாப் படைப்புகளுக்குமே ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நினைக்கிறேன். தேர்ந்த/ ஆத்மார்த்தமான வாசிப்பின் மூலம் எளிதில் அதை நெருங்கிவிட முடியும் என்பது என் நம்பிக்கை. உங்கள் வாசிப்பும் சுட்டி இருக்கும் விஷயமும் எனக்கு மீண்டும் கதையின் ஆன்மா குறித்தான நம்பிக்கையை வலுப்பெற வைக்கிறது. பழியின் மையமென நான் நினைப்பது இப் பகுதியைத்தான். அடல்டரி யில் ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு கிடையாது. ஒரு பெண் இரு துணைகளோடு வெளிப்படையாக வாழும் சூழல் இங்கு கிடையாது. விஜி கதாபாத்திரம் அப்படி ஒரு சூழலின் தேவையை முன் வைக்கிறது.

தானாக விலகிப் போகும் விஜி எப்படி அய்யனார் மீது பழி போட முடியும்? என்பது உங்கள் கேள்வி. விஜியை நாகராஜூடன் பார்த்தவுடனேயே இவனுக்கு விலகிப் போகும் எண்ணம் வந்துவிடுகிறது. நான் போறேன் என முதலில் முடிவெடுப்பது அய்யனார்தான். தவிர மிடில் க்ளாஸ் பின்னணியில் இருந்து வரும் விஜியிடம் இருவருடன் வாழ்வதற்கான மன தைரியத்தையும் நாம் எதிர்பார்க்க முடியாது. நாகராஜின் சதியில், காலம் தலைகீழாகப் புரட்டிப் போட்ட பின்பு மிகவும் இறுக்கமான/ பக்குவமான விஜி தன் நிலைக்கான காரணங்களாக நாகராஜையும் அய்யனாரையும் பார்க்கிறாள். அவர்களின் மீது வன்மம் கொள்கிறாள். அதிகாரம் கைக்கு வந்தவுடன் முத]லடியாக நாகராஜை அடிமையாக்குகிறாள். எதிர்பாரா விதமாக அய்யனாரை சந்திக்கும்போது அவனையும் கடுமையாக வசைகிறாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவனுக்காய் மடிந்தும் போகிறாள். என் நண்பர் ஒருவர் அரசியல் பிரக்ஞையோடு இந்நாவலை ஆண் மையப் பிரதி என விமர்சித்தார். ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொண்டேன். ஆனால் இதில் பெண்ணிற்கான அக்கறையும் இருக்கிறது என்பதை சற்று நெருங்கி வாசித்தால் அறிந்து கொள்ள முடியும். வரலாறாய் தொடரும் பெண்ணின் துயரங்களுக்கான மீறலை, புதிய திறப்பை பழியில் பதிவு செய்திருப்பதாகவே நினைக்கிறேன். 

உங்களின் தொடர் வாசிப்பிற்கும் அன்பிற்கும் நன்றி


Tuesday, April 17, 2012

இருபது வெள்ளைக்காரர்கள் - முன்னுரை

18 டிசம்பர் 2011 துபாய் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வித சாகஸ மன நிலையில் திளைத்துக் கொண்டிருந்தேன். மனம் எப்போதும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. மிகவதிக உணர்வெழுச்சி என்னை முழுவதுமாய் ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. ஒரு நாளின் வரிசைக் கிரமத்தில் ஒரு நொடியைக் கூட முன் பின் மாற்ற அனுமதிக்காத என்னுடைய நிகழ், மிகுந்த இயலாமையோடு அத்தனை எழுச்சியையும் கொண்டு போய் எழுத்தில் கொட்ட வழிவகுத்தது. அந்தப் பேரெழுச்சியில் எழுதப்பட்டதுதான் ‘பழி’. இரண்டு பக்கங்கள் எழுதினாலே இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தூண்டும் மனதின் அரிப்புகளையெல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டு நூறு பக்கங்கள் எழுதி முடித்தேன். ஆறு மாத மகனும் மனைவியும் ஊரிலிருந்து வந்த பின்னர் மனதின் பரபரப்பு சற்று அடங்கியது. நானும் எழுதியதை தூக்கிப் போட்டுவிட்டு மிக சந்தோஷமாய் மகனின் உலகத்திற்குள் நுழைந்து கொண்டேன். பாதியில் விட்ட பழியை எடுத்துப் படித்த என் மனைவி, அதன் காமத்தையும் வன்மத்தையும் கண்டு மிரட்சியடைந்து இதைப் பிரசுரித்தால் படிப்பவர்கள் உன்னைக் கெட்டவனாக நினைத்துக் கொள்ளப் போகிறார்கள் என பயந்தாள். எழுதியதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதே எனவும் அறிவுறுத்தினாள்.

இடையில் மழைக்காலம் கதைக்கான முடிச்சு மனதில் விழுந்தது. அம்முடிச்சை அப்படியே கொண்டுபோய் பாண்டிச்சேரியில், நான் கடந்து வந்த சூழலில் பொருத்திக் கொண்டு எழுத ஆரம்பித்தேன். ஆனால் அந்தக் கதைக்கு தேவையான மென்மையையும் காதலையும் என்னால் எழுத்தில் கொண்டு வரவே முடியவில்லை. முழுக்க வன்மத்திலும் காமத்திலும் மனம் தகித்துக் கொண்டிருந்தது. எழுதாமல் தீராதிது என உணர்ந்ததும் மழைக்காலத்தை அழித்து விட்டு மீண்டும் பழியை தூசி தட்டி, உத்திகளைப் புகுத்தி, அத்தியாயங்களாய் பிரித்து வலைப்பக்கத்தில் வெளியிட்டேன். சாகஸம், காமம்,வன்மம், பரபரப்பு என வெகுசன வாசிப்பிற்கு தேவையான எல்லா விஷயங்களும் பழியில் இருந்ததால் இணையத்தில் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல புதிய வாசகர்களின் அறிமுகமும் கிடைத்தது. என் வலைப் பக்கத்தைப் பார்த்தாலே விழுந்தடித்துக் கொண்டு ஓடும் பலரையும் இந்நாவல் கட்டிப் போட்டது. போலவே பல விமர்சனங்களையும் எதிர்கொண்டேன். இலக்கிய வாசகர்களிடமிருந்தும், பெரும்பாலான வாசகிகளிடமிருந்தும் கடுமையான விமர்சனங்களையும் பெற்றுக் கொண்டேன். ஆனால் எல்லாத் தரப்பு வாசகர்களும் ஒரு விஷயத்தை ஒத்துக் கொண்டார்கள். அது பழியின் சுவாரசியம். ஒரே மூச்சில் படித்தேன் என்பதுதான் எல்லோருடைய பகிர்வாகவும் இருந்தது.

பழிக்கு கிடைத்த வரவேற்பு தந்த உற்சாகம் அடுத்தடுத்து மழைக்காலத்தையும் இருபது வெள்ளைக்காரர்களையும் எழுத வைத்தது. மழைக்காலம் குறுநாவலில் வரும் மையப் பாத்திரங்களைத் தவிர்த்து பிற எல்லாப் பாத்திரங்களும் நிஜமானவை. இடம்,சூழல், பெயர் என எதையும் மாற்றவில்லை. எழுதித் தீரா சில விஷயங்களின் வரிசையில் காதலுணர்வும், இளமையும்தான் முதலிடத்தைப் பிடிக்கும் போல. என்னால் விட்டு வெளியேறவே முடியாத பொறிதான் மழைக்காலமாக வடிவம் பெற்றது. சில மென் உணர்வுகளை இந்தக் குறுநாவல் அசைத்துப் பார்க்கலாம்.

என்ன எழுதினாலும் அதாகவே, அந்த எழுத்தின் உணர்வாகவே கிடப்பதுதான் என்னுடைய மாபெரும் சிக்கல். இந்த சிக்கல் பிற படைப்புகள் மூலமும் அவ்வப்போது ஏற்படுவதுதான். பழி எழுச்சியையும், மழைக்காலம் காதலுணர்வையும், இருபது வெள்ளைக்காரர்கள் நடுவாந்திரமாக ஒரு மன உணர்வையும் தந்தது. ஒரே நேரத்தில் நெருங்கியும், விலகியும் சஞ்சரிக்கும் மனதை இருபது வெள்ளைக்காரர்கள் உருவாக்கியது. திருவண்ணாமலை சமுத்திர ஏரிக்கரை, இரமணாசிரமம், மலை சுற்றும் பாதை, ஜவ்வாதுமலை அடிவாரம், வனம்,மலை ஓடை, என இடங்களின் மீது புனையப்பட்ட கதைதான் இருபது வெள்ளைக்காரர்கள். இந்தக் கதைக்கான ஆதாரப் புள்ளி நிலப் பிரதேசங்கள்தாம். இந்த இடங்களெல்லாம் என் மனதின் அடியாழத்தில் தங்கிப் போனவை. ஒரு வகையில் இப்பிரதேசங்களில் அலைந்து திரிய முடியாமல் போன ஏக்கத்தின் வடிகாலாகவும் இக் குறுநாவலை அனுக முடியும். மற்றபடி எழுத்தின் மூலம் எழுதுபவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லாமும் எனக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது. இனி கிட்டுபவை எல்லாம் மிகுதியே.

என்னுடன் எப்போதுமிருக்கும் பவா, பார்த்துப் பார்த்து புத்தகத்தை நேர்த்தியாய் கொண்டு வர மெனக்கெடும் ஷைலஜாக்கா, மூன்று நாவல்களையும் சிரத்தையாய் வாசித்துத் தொகுத்த ஜெயஸ்ரீ, நெருக்கடியான பணிகளுடைக்கிடையிலும் அட்டைப் படம் தந்த பினு, வடிமைத்த வம்சி நண்பர்கள் என எல்லோருக்கும் நன்றி சொல்லி மாளாது. என்றென்றைக்குமான என் ப்ரியங்களும் அன்பும்.


அய்யனார் விஸ்வநாத்
ayyanar.v@gmail.com
ayyanaarv.blogspot.com
00971554216250

Monday, April 16, 2012

புத்துணர்வு

பிறந்தநாளுக்கு தொலைபேசி,மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளைப் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி. ஃபேஸ் புக் மூலம் வந்து குவிந்த எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மடல்கள் சற்றுத் திகைப்பூட்டுவதாய் இருந்தன. பொதுவாகவே நான் பரவலான மனிதர்களின் கவனத்தையும் நட்புகளையும் பெற்றிராதவன் என்கிற நம்பிக்கைகள் உள்ளூர உண்டு, அவை பொய்க்கும் தருணங்கள் மிகுந்த உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் தருகின்றன. நானும் என்னைச் சுற்றியுள்ள சமூகமும் சேர்ந்தேதான் பயணிக்கிறோம், யாரும் என்னை விலக்கிவைத்துவிட வில்லை என்பது நிம்மதியையும் ஆசுவாசத்தையும் தருகிறது. இந்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்த அனைத்து நண்பர்களுக்கும் கடமைப்பட்ட வனாகிறேன்.

வியாழன் மாலை கராமா வில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் வெகுநாட்களாக சந்திக்க வேண்டும் என நினைத்திருந்த எழுத்தாளர்கள் ஜெயமோகனையும் நாஞ்சில் நாடனையும் சந்தித்து விட முடிந்தது. கூடுதல் மகிழ்ச்சியாக எழுத்தாளர் ஆபிதீனும் நிகழ்விற்கு வந்திருந்தார். மூவரையும் சந்தித்து உரையாடியது என்னுடைய ஒரே மாதிரியான இந்நாட்களின் ஒரே மாதிரியான எண்ண ஓட்டங்களை சற்று மாற்றியமைப்பதாய் அமைந்தது. ஜெவை முதன்முதலாக சந்திப்பது போன்ற எண்ணமே வரவில்லை. ஒரே பார்வையில் ஒரே புன்னகையில் பனிரெண்டு வருடங்களுக்கு மேலாய் தொடரும் வாசக- எழுத்தாள உறவு தன்னை உயிர்ப்பித்துக் கொண்டது. நான் அதிகம் மறுத்த ,முரண்பட்ட, எழுத்தின் பிரம்மாண்டம் கண்டு திகைத்த, அவரைப் பற்றியே தொடர்ந்து பேசவைத்த ஆளுமை ஜெயமோகன். அவருடனான சந்திப்பை துபாயில் எதிர்பார்த்திருக்கவில்லையெனினும் சந்திக்க நேர்ந்ததை மிக முக்கியமான தருணமாகவே நினைக்கிறேன். 

நாஞ்சில் நாடனின் பேச்சு கச்சிதமாக இருந்தது. சொற்களை நான் எந்த அளவு பயன்படுத்துகிறேன், எழுதுபவனுக்கு சொற்களோடு இருக்க வேண்டிய உறவின் அவசியம் குறித்தெல்லாம் சுய பரிசோதனை செய்து கொண்டேன். சில காலம் ஆங்கில வாசிப்பை தள்ளி வைத்துவிட்டு சிலப்பதிகாரத்தை வாசித்துப் பார்க்க வேண்டும். கம்பனையும் வார்த்தைகளாக சொற்களாக படித்துப் பார்க்க வேண்டும். ஜெயமோகனின் மைய உரையை அவரது தளத்தில் முழுமையாக வாசித்துவிடலாம். உரைக்கு முன்பு திருவண்ணாமலை குறித்தும் பவா.செல்லதுரை குறித்தும் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். எண்பதுகளில் பவாவின் வீடு எத்தகைய முக்கியமான இடமாக இருந்தது என அவர் சொன்னதையெல்லாம் விலாவரியாக பவா என்னிடம் ஏற்கனவே பேசியிருக்கிறார். ஜெயமோகன் உரையில் நண்பர்களோடு பேசிய அந்தப் பொழுதுகள் தன்னுடைய வாழ்வின் மிக முக்கியமான இடம் வகிப்பதாக சொன்னார்.

ஆபிதீன் அவரது எழுத்தைப் போலவே நேர் பேச்சிலும் அசரடித்தார். இன்னொரு முறை அவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து நிறையப் பேச வேண்டும். என்னை தொடர்ந்து வாசிப்பதாக சொன்னார். சற்று நெகிழ்ச்சியாக இருந்தது. எழுதுபவனுக்கு இதை விட வேறென்ன வேண்டும்?

எங்களின் குறும்படமான Road Song அதன் செய்நேர்த்திக்காக பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. பினு மிகுந்த உற்சாகத்தில் திளைக்கிறான். தயாரிப்பாளரான சஜித்திற்கும் படத்தின் நேர்த்தி மிகவும் பிடித்திருக்கிறது. பினு சென்ற மாதம் இங்கு வந்திருந்தபோது தன்னுடைய அடுத்த முழுநீள திரைப்படத்திற்கான ஆயத்தங்களில் சில கதைக் கருக்களை யோசித்து வைத்திருந்தான். நான் எல்லாக் கருவையும் கேட்டுவிட்டு எதற்கும் இருக்கட்டுமே என இருபது வெள்ளைக்காரர்கள் கதையை விலாவரியாக சொன்னேன். கதையை முழுமையாய் கேட்டவன் தரையிலிருந்து ஒரு அடி எம்பிக்குதித்துவிட்டு என்னைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டான். நம்முடைய அடுத்த படம் இதுதான் என்றான். உடனடியாய் சஜித்திற்கும் கதையை சொல்லிவிட்டேன். இந்த வருடக் கடைசியில் திருவண்ணாமலையில் வைத்தே படப்பிடிப்பை துவங்கி விடுவதாய் திட்டமிட்டிருக்கிறான். ஆனால் இருபது வெள்ளைக்காரர்களை படமாக்குவது எளிதான விஷயமாகத் தோன்றவில்லை. பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

இருபது வெள்ளைக்காரர்களை இன்னும் துல்லியமாய் விரிவான ஸ்கிரிப்டாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். முதல் காபியை பினு கையிலேயே கொடுத்துவிட்டேன்தான் என்றாலும் எனக்குத் திருப்தியில்லாமல் மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். புதிர்தன்மை, காமம், வன்மம், அழகியல், கொண்டாட்டம் என எல்லாம் இருந்தாலும் அரசியலையும் பதிவாக்க வேண்டும் என்பது சஜித்தின் விருப்பம். இந்தக் கதையில் இயங்கும் அரசியலின் நாடியை சில படிமங்களாக எழுதி சேர்க்க வேண்டிய வேலையும் இருக்கிறது.

இந்த வருடத்தின் துவக்கத்தில் இரண்டு குறுநாவல்களுக்கான முடிச்சு மனதில் விழுந்தது. முதல் குறுநாவலுக்கு ஓரிதழ்பூ என்ற பெயரையும் தேர்வு செய்துவிட்டேன். சாக்தம் குறித்து இந்நாவலில் எழுதிப் பார்க்கும் ஆசை வந்திருக்கிறது ஆனால் அதற்கான வாசிப்பும் அனுபவமும் என்னிடம் கிடையாது. அனுபவங்கள் இப்போது சாத்தியமில்லை என்றாலும் குறைந்த பட்சம் சாக்தம் குறித்து இன்னும் விரிவாகப் படித்த பின்புதான் நாவலைத் தொடர வேண்டும். இன்னொரு குறுநாவலை சுவாரசியத்தை மட்டும் பிரதானமாக வைத்து எழுதிப் பார்க்க நினைத்திருக்கிறேன். க்ரைம் கதை - இலக்கியப் பிரதி இவ்விரண்டிற்கு இடையிலேயும் நிகழும் விளையாட்டை லேசான கிண்டல் தொணியில் எழுதும் எண்ணம். ஏராளமான க்ரைம் கதைகளும் ஒரு முழு நீள இலக்கிய நாவலும் இந்தக் குறுநாவலில் வரும். இந்தக் குறுநாவலுக்கான வடிவத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறேன். இரு வேறு மொழிநடையை, எழுத்து நடையை கொண்டு வர வேண்டிய சவாலும் கண் முன் நிற்கிறது. இரண்டு குறுநாவல்களிலும் சில அத்தியாயங்களை எழுதிப் பார்த்தேன். அவற்றை இவ்வருட இறுதிக்குள்ளாவது முடித்துவிட வேண்டும். இதற்கு நடுவில் மனைவியின் தொடர் நிர்பந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிடப்பில் கிடக்கும் எம்பிஏ வை முடிக்க வேண்டும்.

எழுத விரும்புபவன் ஏன் எழுத மட்டுமே செய்யக் கூடாது? என்ற பதில் வேண்டாத தொடர் கேள்வியை ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு கிளம்பி காரின் எஞ்ஜினை உயிர்ப்பிக்கும் போது கேட்டுக்கொள்கிறேன். கூடவே இன்று காலை, இலக்கிய சந்திப்பிற்குப் பிறகு, நள்ளிரவிற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, ஜெயமோகனிடம் விடைபெறும் போது அவர் சொன்ன இரண்டு விஷயங்கள் நினைவிற்கு வந்தன. ஒன்று, எழுத்தாளன் வசிக்க கூடாத இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் எழுதுபவனுக்கு எழுதும் மொழி எப்போதும் காதில் விழுந்து கொண்டே இருக்க வேண்டும். இரண்டாவதை விரைவில் நீங்களே அனுபவிக்க நேரிடலாம் அது “இப்போதைக்கு நிறைய எழுதுங்கள் நாற்பது வயதிற்கு மேல் வேண்டுமானால் குவாண்டிட்டியை குறைத்துக் கொள்ளலாம்”

Sunday, April 1, 2012

அ.முத்து கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு

நண்பர்களுக்கு,

எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான அ.முத்து கிருஷ்ணன் துபாய் வருகிறார். சமூகம், சுற்றுப்புறச்சுழல், மனித உரிமைகள், விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், உலகமயமாக்கல் என பல்வேறு தளங்களில் எழுதியும், பேசியும் வரும் அ.முத்துகிருஷ்ணன் ஒரு தீவிரமான சமூக செயல்பாட்டாளராக தொடர்ந்து இந்தியாவெங்கும் சுற்றிவருபவர். கடந்த ஆண்டு இவர் புதுதில்லியில் இருந்து தரை வழியாக 10 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து பாலஸ்தீனத்தின் நிலையை நேரில் கண்டு பதிவு செய்திருக்கிறார். அவருடனான கலந்துரையாடல் ஒன்றை துபாயில் ஏற்பாடு செய்திருக்கிறோம். நண்பர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க அழைக்கிறேன்.

இடம் : சிவ் ஸ்டார் பவன் உணவம், கராமா, துபாய்

நேரம் : ஏப்ரல் 03 ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 7 மணி


தங்களுடைய வருகையை கீழ்காணும் அலைபேசி எண்ணுக்கு உறுதிபடுத்தினால் இரவு உணவு ஏற்பாடு செய்ய உதவியாக இருக்கும்.

அசோக் 050 9142203
அய்யனார் 055 4216250





Featured Post

test

 test