Tuesday, May 8, 2012

வழக்கு எண் 18/9

இரானிய இயக்குனர் மக்பல்ஃப் ம் பாலாஜி சக்திவேலும் ஒரு டீக் கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிறுவன் டீக் கடைக்காரரைப் பார்த்து மிகவும் அதட்டலாய் “ஒரு பன்னு கொடுய்யா” எனக் கேட்கிறான். மக்பல்ஃப் அந்த சிறுவனை உற்றுப் பார்த்துவிட்டு இந்தச் சிறுவனின் பின்னால் போனால் ஒரு பிரமாதமான கதை கிடைக்கும் என்கிறார். பாலாஜி சக்திவேல் மக்பல்ஃப் சொன்னதை சரியாக புரிந்து கொண்டதின் விளைவுதான் வழக்கு எண் 18/9. சாலையோர மனிதர்களின் பின்னால் அலைந்து/ஊடுருவி அவர்களின் வாழ்வை மிகச் சரியாகப் புரிந்து கொண்டாலொழிய இம்மாதிரிப் படம் நிகழ சாத்தியமேயில்லை. தமிழ் சினிமா காட்சிப் படுத்த வேண்டிய முக்கியமான விஷயங்களாக நான் நினைப்பவற்றுள் சாலையோர மனிதர்களின் வாழ்வும் ஒன்று. உதிரிகள், விளிம்புநிலை மனிதர்கள் மீதான கவனம் தமிழ் சினிமா படைப்பாளிகளுக்கு ஏற்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய மற்றம். சினிமாவும், இலக்கியமும், இன்ன பிற கலைகளும் சமூகத்தின் கண்ணை/ பார்வையை கூர்மையாக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. கேளிக்கை என்பதற்கான அருஞ்சொற்பொருளை மழுங்கியவை என மாற்றிய பெருமை, நம் தமிழ் சினிமா வணிகர்களுக்கு உண்டுதான் என்றாலும் அவர்களை ஒரு நிமிடமேனும் வெட்கமடையச் செய்யும் திராணி இந்தப் படத்திற்கு இருக்கிறது.

பாலாஜி சக்திவேலின் முதல் படமான சாமுராய் நிறையவே சினிமாத்தனங்கள் மிகுந்திருந்த சராசரிப் படம். ஆனால் இன்னபிற வணிக சினிமாக்களை விட சற்றே மேம்பட்டதாக இருந்தது. இரண்டாவதும், சங்கர் தயாரித்து ஜென்ம சாபல்யம் அடைந்து கொண்டதுமான காதல் தமிழின் மிக முக்கியமான சினிமா. நுணுக்கங்களும் விவரணைகளும் பின்னிப் பிணைந்த மிக உயிரோட்டமான படம். காதலின் வெற்றிக்குப் பிறகு குறைந்தது மதுரையை மையமாக வைத்து அதே சாயலில் ஐம்பது சிறுபடங்கள் வந்திருக்கும் ஆனால் காதல் திரைப்படத்தை மிஞ்சும் /நெருங்கும் அசலான மதுரைப் படம் ஒன்றைப் பிறரால் தர முடியாமலேயே போனது. மூன்றாவது படமான கல்லூரி எனக்கு பிடிக்கவில்லை. யதார்த்தவாதம், நேர்த்தியான கதாபாத்திர சித்தரிப்புகள் என நல்ல சினிமாவிற்கான பல விஷயங்கள் இருந்தும் தமிழ் நாட்டில் நிகழ்ந்த ஒரு மாபெரும் அவலத்தை ஆந்திராவில் நிகழ்த்திக் காட்டி படைப்பாளியின் ஆளுமை மீதான அவநம்பிக்கை உருவாக காரணமாக இருந்தது அந்தப் படம். பாலாஜி சக்திவேல் சில வருட இடைவெளிக்குப் பிறகு தந்திருக்கும் வழக்கு எண்ணை காதலின் இரண்டாம் பாகமாக அனுகலாம். காதல் பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்திய அதே உணர்வை,பாதிப்பை இந்தப் படமும் ஏற்படுத்தியிருக்கிறது.

இரு வேறு துருவங்களின் வாழ்வு, முக்கியமாய் பதின்மர்களின் உலகம் மிகக் கவனமாகக் கையாளப்பட்டுள்ளது. இளம் பிராயத்தில் பெண் மீது ஆணுக்கு ஏற்படும் ஈர்ப்பு, வறுமையின் எதிர்காலமாகவும் பணக்காரத்தனத்தின் வாயூரிசமாகவும் இருக்கின்றது. வசதி படைத்த நவீன வாழ்வும், ராட்சத்தனமாய் வளர்ந்திருக்கும் தொழில்நுட்பங்களும் முதலில் தேடிப் பிடித்துக் கொல்வது மனிதனின் நுண்ணுணர்வுகளைத்தான். ஒரே உணர்வின் வெளிப்பாட்டை இரு வேறு சூழல்கள் தீர்மானிக்கும் விதத்தை யோசித்துப் பார்த்தால் மெல்லிய பயம் படர்வதை தடுக்க முடியவில்லை. ஆர்த்தியின் வழியாய், ஜோதியின் வழியாய் தத்தமது மகளை பார்த்துக் கொள்ளும் தகப்பன்களின் பதட்டத்தை யாரால் குறைத்து விட முடியும்?


கிட்டத்தட்ட அழிந்தே போன கூத்துக் கலையின் சிறு எச்சமாய் சின்னசாமி கதாபாத்திரத்தை இத்திரைப்படம் மீட்டெடுத்திருக்கிறது. பெண் வேடமிடும் பதின்மர்களின் சாயல் அனைத்தையும் முழுமையாய் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். நிச்சயம் இந்த சின்னசாமி ஏதோ ஒரு கிராமத்தில் பெண் வேடமிட்டு கூத்தில் நடித்தவனாகத்தான் இருந்திருக்க வேண்டும். வேலுவை தனியாக சந்தித்து “உனக்கு பொய் பேச வராது மொதலாளி தொரத்திட்டான்னா எங்க போவ, அதான்யா நான் அப்புடிப் பேசினேன் எதையும் மனசில வச்சிக்காதய்யா” என மருகும் காட்சியை இன்னும் சில வருடங்களுக்கு என்னால் மறக்கவே முடியாது. அந்தக் காட்சிக்கு முத்தாய்ப்பாய் “இவ்ளோ காச வச்சிட்டு நான் என்ன பண்ணுறது இந்தாடா” என பணத்தை நீட்டும் வேலுவின் கண்களின் வழியே நேயத்தின் மாபெரும் விழுதுகளைப் பார்க்க முடிந்தது.

மிகக் குரூரமான பால்யத்தையும் மிக மோசமான அனுபவங்களை மட்டுமே வாழ்க்கையாகவும் கொண்ட வேலுவிற்கு முதலில் கிடைக்கும் அன்பு அல்லது பிடிமானம் ரோஸியினுடையது. நைந்த அக்கைகளைப் பிடித்து நிற்பவன் நிலத்தில் காலூன்றி இன்னொரு மெலிந்த பெண்ணின் கைகளைப் பிடித்துக் கொண்டு பறக்க நினைக்கிறான். இவர்களை அதிகார வர்க்கக் கழுகுகள் கொத்திக் கொத்தி விரட்டியடிக்கின்றன. நைந்த சிறு பறவைக்கும் கூரிய அலகிருப்பதை கழுகுகளுக்கு சொல்வதுதான் இறுதிக் காட்சி. மீறல்களும்,கிளிஷேவும் அங்கங்கே எட்டிப் பார்க்கிறதுதான் என்றாலும் பெரிய அளவில் உறுத்தல்கள் இல்லாமல் மிகச் சரியாகவே இக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. அரசியல் புரிந்துணர்வோடு சாதிய வேர்களையும் சரியாய் தொட்டுப் போயிருக்கிறது.

அங்காடித் தெருவில் கால்களை இழந்த பெண்ணை வண்டியில் உட்கார வைத்துத் தள்ளிக் கொண்டு போகும் ஆணின் சித்திரமொன்று படத்தின் இறுதிக் காட்சி என்ன என்பதை பூடகமாக உணர்த்தும். இந்தப் படத்திலேயும் கண்ணிழந்த பெண்ணும் ஆணுமாய் அவ்வப்போது திரையைக் கடந்து போவதை வைத்து இறுதிக் காட்சியை யூகிக்க முடிகிறது( சிலப்பதிகார காலத்து உத்தியாயிற்றே) க்ளைமாக்ஸிற்கு சற்று முன்பிலிருந்து படத்தை துவங்கி, முன்னும் பின்னுமாய் கதையை சொல்லி, விவரணைகளாலும் நெகிழ்வுகளாலும் படத்தை நிரப்பி, அநீதியால் கலங்க வைத்து, ஆழமான நம்பிக்கையோடு படத்தை முடிப்பது நல்ல திரையாக்கம்தான். parallel சினிமாக்களுக்கு இது மிகவும் பழக்கமான வடிவம். நல்ல படங்கள் என அறியப்பட்ட பெரும்பாலான படங்கள் இந்த வடிவத்தைத்தான் கையாண்டிருக்கின்றன. தமிழிலும் இதே வடிவத்தில் சினிமாக்கள் வர ஆரம்பித்திருப்பதை நல்ல மாற்றம் எனக் கருதினாலும் சற்றே அலுக்க ஆரம்பித்திருப்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இப்போது மீண்டும் மக்பல்ஃபிற்கு வருவோம். ஒரு வேளை மக்பல்ஃப் இதேக் கருவை சினிமாவாக்கியிருந்தால் வேலுவிற்கு சிறைத் தண்டனை கிடைப்பதோடு படத்தை முடித்திருப்பார். சமூகத்தின் அவலத்தை பதிவு செய்ய நினைத்தின் நேர்மையான வெளிப்பாடு என்பது அந்த மட்டிலேயே நின்று போகிறது. மாறாய் இங்கு ஜோதியின் விஸ்வரூபம் முழுக்க சினிமாத்தனத்திற்காக சேர்க்கப்பட்ட இனிப்பு மட்டுமேதான். ஆனாலும் ஜோதியின் பழி வாங்கலுக்கான நியாயமான காரணங்கள் படம் நெடுக சொல்லப்பட்டிருக்கின்றன. அந்தக் கவித்துவ நியாயங்கள்தாம் படத்தைத் தாங்கி நிற்கின்றன.

16 comments:

Unknown said...

மக்பல்ஃப் உடன் ஆரம்பித்து அவரை வைத்து முடித்து உள்ளிர்கள்.

அருமை

Prince said...

Heard that the climax was the fact and the film was developed based on that.

ய‌சோத‌ர‌ன் said...

உங்க‌ள் விம‌ர்ச‌ன‌த்தை ப‌டிக்கும் பொழுது ச‌ரியாக‌வே விம‌ர்சித்திருப்ப‌தாக‌ என் உள் உண‌ர்வு சொல்கிற‌து, இன்னும் பார்க்க‌வில்லை... நிச்ச‌ய‌மாக‌ பார்க்க‌வேண்டும்.... ந‌ன்றிக‌ள் ப‌ல‌.

ய‌சோத‌ர‌ன் said...
This comment has been removed by the author.
ய‌சோத‌ர‌ன் said...
This comment has been removed by the author.
தமிழ்நதி said...

அந்தப் படத்தைப் பற்றி நிறையப் பேர் சொல்லிவிட்டார்கள். ஆயிரக்கணக்கான படங்களைப் பார்த்திருக்கும் உன் வாயால் கேட்ட பிறகு... பார்த்தேயாக வேண்டும்.

ராம்ஜி_யாஹூ said...

உங்கள் விமர்சன நடை அருமை

Anonymous said...

உங்கள் விமர்சனம் படித்ததும் படம் மொக்கையாகத்தான் இருக்கும்னு நினைச்சேன். பரத்வாஜ் ரங்கன் விமர்சனம் அதை உறுதிப்படுத்தியது. :)

Unknown said...

வழக்கு எண் :18/9 படத்தை பாராட்டி எழுதிய எல்லா பத்திரிகை நண்பர்களுக்கும் , மீடியா நண்பர்களுக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி . - லிங்குசாமி

Unknown said...

வழக்கு எண் :18/9 படத்தை பாராட்டி எழுதிய எல்லா பத்திரிகை நண்பர்களுக்கும் , மீடியா நண்பர்களுக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி . - லிங்குசாமி

Unknown said...

[வழக்கு எண் :18/9 படத்தை பாராட்டி எழுதிய எல்லா பத்திரிகை நண்பர்களுக்கும் , மீடியா நண்பர்களுக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி . - லிங்குசாமி]

M.S.Jawahar said...

இன்னும் பத்து வருடங்களுக்கு இந்த படத்தின் அசை போடல் கண்டிப்பாக இருக்கும்!!!. படம் பார்த்ததிலிருந்து அந்த வேலு முகம் என்னை விட்டு அகல மூன்று நாட்களானது !!!

M.S.Jawahar said...

எதற்கெடுத்தாலும் ஈரானிய, மெக்சிகன் படங்களை உதாரணத்துக்கு தேடும் அறிவு ஜீவிகளின் வேலையைக் குறைத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்!
Bravo Mr.lingusamy

அனைவருக்கும் அன்பு  said...

விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன மேலும்.................வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்கள் பதிவைப் பற்றி இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.நேரமிருப்பின் பார்க்கவும்
http://blogintamil.blogspot.in/

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்கள் பதிவைப் பற்றி இன்றைய வலைசரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருப்பின் வருகை தரவும்
http://blogintamil.blogspot.in/

Featured Post

test

 test