Thursday, January 1, 2015

காக்கா முட்டை - துபாய் திரைப்பட விழா -2

kaakaa_muttai

தனுஷ் மற்றும் வெற்றி மாறன் கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் காக்கா முட்டை. இயக்குனர் மணிகண்டனின் முதல் திரைப்படம். இதுவரை திரைப்பட விழாக்களில் மட்டும் திரையிடப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் அடுத்த மாதம் திரையங்குகளில் வெளியிடப்படுமாம். மால் ஆஃப் எமிரேட்ஸின் எழாவது திரையரங்கம் கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது. சொற்ப தமிழ் முகங்களையும் அதிக அளவில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர் முகங்களையும் காண மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தைகளுக்கான சினிமாப் பிரிவில் இடம்பெற்றிருந்ததால் அரங்கில் சில குழந்தைகளையும் பார்க்க முடிந்தது. நம் மொழி திரைப்படத்தை வெளிநாட்டு ஆட்களுடன் சேர்ந்து பார்ப்பது அலாதியான அனுபவம்தான்.
தமிழில் கடைசியாய் வெளிவந்த குழந்தைகளுக்கான படமெது என யோசித்துப் பார்த்தேன். உடனடியாய் எதுவும் நினைவிற்கு வரவில்லை. தமிழில் எல்லோருக்கும் தெரிந்த ஒரே குழந்தைகள் திரைப்படம் அஞ்சலிதான். அசமஞ்சமாக எனக்கும் அத்திரைப்படம்தான் நினைவிற்கு வந்தது. அஞ்சலி திரைப்படம் வெளிவந்தபோது திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் பள்ளிக் கூடத்தின் வழியாகவே அத்திரைப்படம் காண்பிக்கப்பட்டது. கிராம்புற பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள், ட்ராக்டரில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்து திரையரங்கில் திரைப்படத்தைக் காண்பித்தார்கள். நானும் அப்படித்தான் பார்த்தேன். மல்லி, பசங்க மற்றும் நாசர் நடிப்பில் வெளிவந்த கண்ணாடி என தொடங்கும் ஒரு படம் என ஒன்றன் பின் ஒன்றாக சில படங்கள் நினைவிற்கு வந்தன. ஆனால் அவை யாவுமே குழந்தைகள் சினிமா கிடையாது. இதுவரை தமிழில் குழந்தைகளை மையமாக வைத்து திரைப்படங்கள் வந்திருக்கின்றனவே தவிர குழந்தைகளுக்கான சினிமா என்ற ஒன்று நிகழவேயில்லை. இப்படி ஒரு வெற்றிடப் பின்புலத்தில் காக்கா முட்டைத் திரைப்படம் குழந்தைகள் சினிமா என்பதற்கான நியாயத்தை ஓரளவிற்குப் பூர்த்தி செய்திருக்கிறது.
kakkamuttai_2
காக்கா முட்டை திரைப்படம் சென்னை கூவம் ஆற்றை ஒட்டிய சேரிப்பகுதியில் குறிப்பாக திடீர் நகரில் வசிக்கும் இரண்டு சிறுவர்களின் சில நாட்களைப் பற்றி பேசுகிறது. அண்ணன் தம்பிகளான இருவரும் காகத்தை ஏமாற்றிவிட்டு அதன் முட்டையைத் திருடிக் குடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பதால் மற்ற சிறுவர்களிடம் காக்கா முட்டை எனும் அடைமொழிப் பெயரைப் பெற்றவர்கள். அண்ணன் பெரிய காக்கா முட்டை, தம்பி சின்ன காக்கா முட்டை. இதில் தம்பி தன் அம்மாவை வெறுப்பேற்ற தன் பெயரை சின்ன காக்கா முட்டை என்றே அழைத்துக் கொள்கிறான். காக்கா முட்டை சகோதரர்களின் தந்தை ஜெயிலில் இருக்கிறார். தாய் பட்டறையில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்துகிறார். தாயால் சிறுவர்களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப இயலாமல் போகிறது. இருவரும் பள்ளிக்குப் போகாமல் அருகிலிருக்கும் ரயில் தண்டவாளத்திற்குப் போய் கூட்ஸ் ரயிலில் இருந்து கீழே விழும் கரியை சேகரித்து கடையில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயை குடும்ப செலவிற்கு தருகிறார்கள். இவர்களுடன் தந்தை வழிப் பாட்டியும் ஒரு நாயும் அந்த மிகச்சிறு வீட்டில் வசிக்கிறார்கள்.
இவர்கள் வழக்கமாய் காக்கா முட்டையை திருடிக் குடிக்கும் மிகப் பெரிய அரச மரம் ஒரு நாள் வெட்டப்படுகிறது. அங்கிருந்த காலி இடம் ஆக்ரமிக்கப்பட்டு பீட்ஸா ஹட் கடை கட்டப்படுகிறது. அந்தக் கடையின் பிரம்மாண்டமும் அங்கு வந்து பீட்ஸா அருந்தும் மனிதர்களையும் காக்கா முட்டை சகோதரர்கள் வியப்பாய் பார்க்கிறார்கள். அதே நேரத்தில் அரசு இலவசமாய் தரும் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றுக்கு இரண்டாய் அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்கின்றது. தொலைக்காட்சியில் பீட்ஸா விளம்பரத்தைப் பார்க்கும் சிறுவர்கள் பீட்ஸாவை எப்படியாவது ருசித்துப் பார்த்துவிட விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் அதனால் ஏற்படும் அபத்த விளைவுகளும்தான் இத்திரைப்படத்தின் கதை.
தமிழில் வெளிவந்த விளிம்பு நிலை மனிதர்கள் குறித்தான சினிமாக்களில் வெளிப்படும் மிகைப்படுத்தப்பட்ட பொதுத் தன்மைகள் எதுவும் இத்திரைப்படத்தில் கிடையாது. சமீபத்தில் மெட்ராஸ் திரைப்பட இயக்குனர் ரஞ்சித் ஒரு பேட்டியில் பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் பேசப்பட்ட சென்னை மொழி ”கய்தே” ”கஸ்மாலம்” போன்ற சொற்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. அதுவே வட சென்னையின் மொழியாக பிறரால் நம்பப்பட்டது. ஆனால் வடசென்னையில் அவ்வார்த்தைகளை யாருமே பிரயோகிப்பதில்லை என்றார். அவை தமிழ் சினிமாக்களில் மட்டுமே இடம்பெறுகின்றன எனவும் ஒரு குறிப்பிட்ட பகுதியை சார்ந்த சினிமா அதன் அசல் மொழி குறித்து கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை என்பது மாதிரியாகவும் அவரின் பேச்சு சில ஆழமான விஷயங்களை தொட்டுச் சென்றது. வெற்றிமாறனும் தனுஷும் வட்டார வழக்கில் கவனமுள்ளவர்கள் என்பது அவர்களின் முந்தைய படங்களான பொல்லாதவனும் ஆடுகளமும் நமக்கு நிரூபித்திருந்தன. எனவே இருவரின் கவனத்தோடு உருவான காக்கா முட்டையின் மொழியும் கதை சொல்லப்பட்ட முறையும் பாவணைகளை உடைத்து யதார்த்ததிற்கு சமீபமாக வெளிப்பட்டிருக்கிறது. திரைப்படத்தின் களமாக வறுமையும் துயரும் இருக்கிறதுதான் என்றாலும் அதை மிகக் கிண்டலாக கேலியாக அத்தனை வெள்ளந்தித்தனத்தோடு படமாக்கியிருக்கிறார்கள். குழந்தைகளின் கள்ளங் கபடமற்ற உலகம் மிகச் சரியாய் பதிவாகியிருக்கிறது. இரண்டுச் சிறுவர்களும் அபாரமாக நடித்திருக்கிறார்கள். இவர்களின் தாயாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் நடித்த பெண்ணா இது! என வியக்க வைக்கும் அளவிற்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறுவர்களின் பாட்டி மற்றும் நைனாவாக நடித்திருக்கும் ரமேஷ் போன்றோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
குழந்தைகளைப் படிக்க வைக்க இயலாத ஒரு சமூகத்தினர் சென்னையின் மையப் பகுதியில், சுழித்தோடும் சாக்கடைக் கழிவு நதிக்கு அருகாமையில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாத நம் அரசு வீட்டிற்கு இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்குகிறது. இம்மாதிரி அபத்தங்களை கொதிப்பாக, பிரச்சாரமாக சொல்லாமல் மிக இயல்பாக சொல்லியிருப்பதில் இத்திரைப்படம் தனித்துவம் பெறுகிறது. தங்களுக்கு வாய்த்த வாழ்வைப் பற்றி சதா புகார் கூறிக்கொண்டிருக்காமல் அவ்வாழ்விலும் கிடைக்கும் உயிர்ப்பான தருணங்களில் கதாபாத்திரங்கள் நிறைந்து தளும்புகின்றன.
வர்க்க வித்தியாசம் உலகம் முழுக்க பொதுவான ஒன்று. பணம், நிறம், மொழி போன்றவை இந்த ஏற்றத் தாழ்வுகளுக்கான அடிப்படை காரணங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியா அளவிற்கு மலைக்கும் மடுவிற்குமான வர்க்க வித்தியாசங்கள் மற்ற நாடுகளில் அரிதாகத்தான் காண முடியும். இந்த வர்க்க பேதம்தான் இத்திரைப்படத்தின் அடிநாதமாக இருக்கிறது. அதே சமயத்தில் மேல்தட்டு மனிதர்களைப் பார்த்து கீழ்தட்டு மக்கள் வெறுப்பும் வன்மமும் அடையா வண்ணம் தம் விளிம்பு வாழ்வின் சவால்களை, ரகசியங்களை, வியப்புகளை, காக்க முட்டை திரைப்படம் மிக மென்மையானதொரு மொழியில் பதிவு செய்கிறது.
திரையிடலில் இயக்குனர் மணிகண்டனும் கலந்து கொண்டார். படம் பார்த்து முடிந்த பிறகு அவருடன் பார்வையாளர்கள் மிக ஆர்வமாய் உரையாடினார்கள். பெரும்பாலானவர்களின் கேள்வி அச்சிறுவர்களைக் குறித்தே சுழன்றது. மணிகண்டன் இத்திரைப்படத்தை சென்னை திடீர் நகரில்தான் படம் பிடித்திருக்கிறார். பெரும்பாலும் அங்கு வசிக்கும் மக்களையே படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார். பல பகுதிகளை இரவில் படிம்பிடித்ததாகக் கூறுகிறார். ஆரம்பத்தில் சிறுவர்களிடம் வேலை வாங்கக் கடினமாக இருந்ததென்றும் போகப்போக அவர்கள் படத்தோடு ஒன்றிப்போனதையும் தெரிவித்தார். கதையைப் போலவே நிஜத்திலும் சிறுவர்கள் இறுதிக் காட்சியில்தான் பீட்ஸா உணவையே முதன்முறையாய் ருசித்தார்களாம். நிஜத்திலும் அவர்களுக்கு பீட்ஸாவின் சுவை பிடிக்கவில்லை என தெரிவித்தார். பின்பு பார்வையாளர்களிடமிருந்து தொடர்ந்து காக்கா முட்டை போன்ற நல்ல படங்களைக் கொடுங்கள் தமிழ் சினிமா மசாலா உலகிற்குள் போய் விடாதீர்கள் என்பன போன்ற தமிழ் சூழல் சார்ந்த வேண்டுகோள்கள் இயக்குனருக்கு விடுவிக்கப்பட்டன. இயக்குனரும் தமிழில் நல்ல படம் பண்ண ஆட்கள் இருக்கிறார்கள்தாம் ஆனால் தயாரிப்பாளர்கள் தாம் இல்லை என இந்த காக்காமுட்டை எதிர்கொண்ட தயாரிப்புச் சிக்கல்களைப் பகிர்ந்து கொண்டார். வெற்றிமாறனும் தனுஷூம் இத்திரைப்படம் உருவாவதற்கு முக்கியமான காரணங்களாக இருந்திருக்கிறார்கள். மணிகண்டன் அவர்களுக்கு தன் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
kaakaa_muttai_3
தமிழில் மாற்று சினிமாக்கள் வெளிவரும் சூழல் எப்போதுமே இருந்தது கிடையாது என்பது ஓரளவிற்கு உண்மையான வாதம்தான். பார்வையாளர்கள் இன்னும் தயாராகவில்லையா அல்லது திறமையான திரைப்பட ஆளுமைகள் உருவாகவில்லையா என்பது போன்ற விவாதங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதாம் இருக்கின்றன என்றாலும் தமிழில் நல்ல சினிமாக்கள் வெளிவர என்றுமே வணிகரீதியிலான தடை இருந்தது கிடையாது. இந்த நல்ல சினிமாவிற்கான கூறுகளை பார்வையாளர்களும் படைப்பாளிகளும் சேர்ந்தேதான் வரையறுக்க வேண்டும். அதிநாயக பிம்பங்களை, துதிமனப்பான்மைகளை சினிமாவில் இருந்து முற்றாக களைந்தால் மட்டுமே தமிழில் தொடர்ந்து நல்ல சினிமாக்கள் வர வாய்ப்பிருக்கிறது. பார்வையாளர்களை அத்தகைய பிடிகளில் இருந்து வெளிவரச் செய்ய ஆழமான விமர்சனங்கள் மற்றும் சினிமா குறித்தான விரிவான பார்வைகள் உதவலாம். அத்தகைய சூழல் சமூக வலைத்தளப் பரவலாக்கம் மூலம் உருவாகி வருவதாகவே நம்புகிறேன். இது ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தி விடும் என்பதை விட தமிழ் சினிமாவில் நிறைந்திருக்கும் அபத்தங்களை ஓரளவிற்கு குறைக்கும் என எதிர்பார்க்கலாம். காக்கா முட்டை போன்ற திரைப்படங்கள் இந்நம்பிக்கையை வலுப்படுத்துவதாக அமைகின்றன.
இத் திரைப்படம் வணிக ரீதியிலாகவும் தமிழ் நாட்டில் வெற்றிபெற நம் வாழ்த்துகள்.

மேலும்

No comments:

Featured Post

test

 test