Sunday, August 20, 2017

குளி சீன் நாயகிகளின் கரைச்சல்கள்கன்யகா டாக்கீஸ் படப் பெயரை சில வருடங்களுக்கு முன்பே பல விருதுப் பட்டியல்களில் கண்ட நினைவு. சென்ற வாரம்தான் பார்க்க வாய்த்தது. எதிர்பார்த்திருந்த அளவிற்கு முழுமையான படம் இல்லை என்றாலும் மிக முக்கியமான பின்னணியைக் கொண்ட படம். இயக்குனர்  உளவியலில் சற்றுத் தேர்ந்திருந்தால்  - குறைந்தபட்சம் ஃப்ராய்டியல் அளவிற்காவது- சிறப்பானதாக வந்திருக்கும். ஆனாலும் இதுவரை திரையில் பேசாத சிக்கலைப் பேசும் வகையிலும் சில நல்ல தருணங்களைக் கொண்ட வகையிலும் முக்கியமான திரைப்படமாகிறது.

மலையாள சினிமா கலைப்படைப்புகளால் அறியப்பட்டதைக் காட்டிலும் சாஃப்ட் போர்ன் எனப்படும் சீன் படங்களால்தான் வெகுசனப் பரப்பில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அதிகம் அறியப்பட்டது. இன்று சன்னி லியோனிற்கு திரண்ட கூட்டம் திடீரென்றெல்லாம் உருவாகிவிடவில்லை. இந்தக் கூட்டத்தின் முந்தின தலைமுறை  அன்று  ஷகிலாவிற்காக திரையரங்குகளில் கூடியது. கேரள சூப்பர் ஸ்டார்களின் திரையுலக எதிர்காலத்தையே ஒன்றுமில்லாததாக்கும் வலிமை ஷகிலாவிற்கு இருந்தது. அழகிற்கு எந்தப் பஞ்சமும் இல்லாத கேரளத்தில் காமத்தின் பஞ்சம் மட்டும் எப்போதும் இருக்கிறது.

 போர்ன் படங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் சுருங்கிவிட்டபின்பு அதை வெளியிட மட்டுமே இருந்த கன்யகா டாக்கீஸ் மாதிரியான திரையரங்கங்களின் தேவை முடிவிற்கு வருகிறது. கடந்த பத்து வருடங்களில்  ஆயிரக் கணக்கில் திரையரங்குகள் கேரளத்திலும் தமிழகத்திலும் மூடப்பட்டன. இதில் ஐநூறாவது 90 களில் கோலோச்சிய போர்ன் படங்களுக்கான பிரத்யேகத் திரையரங்குகளாக இருக்கலாம்.

குய்யாலி மலைக் கிராமத்தின் கன்யகா டாக்கீஸும் இப்படித்தான் கட்டுப்படியாகாமல் மூடப்படுகிறது. அதன் முதலாளியான ஆலேன்சியருக்கு வேறு சில குடும்பப் பிரச்சினைகளும் தொடர்ந்து நெருக்கடியைத் தரவே - மனைவியையும் இழந்த அவர் - தியேட்டரை சர்ச் சிற்கு எழுதிவைத்துவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறுகிறார். இது ஒரு கதை.

டாக்கீஸ் இருந்த இடத்தில் புதிதாக தேவாலயம் கட்டப்படுகிறது. ஒரு பாதிரியார் கிராமத்திற்குள் வருகிறார். அவர் எதிர்கொள்ளும் சிக்கல் இன்னொரு இழையாக சொல்லப்படுகிறது.

மூன்றாவது இழை அதே கிராமத்தைச் சேர்ந்த லேனாவின் பிரச்சினைகளைப் பற்றியது. லேனாவின் மிகப் பிரமாதமான நடிப்பால் இந்த இழையே என்னை அதிகம் ஈர்த்தது. ஹோம் நர்ஸாகப் பணிபுரிவதாக தந்தையிடம் சொல்லிக் கொண்டாலும் உண்மையில் லேனா ஒரு போர்ன் நடிகை. சந்தர்ப்பவசத்தால் இந்த துறைக்குள் தள்ளப்படுகிறாள். மாமாக்களாலும் ஏமாற்றுக்காரர்களாலும் வறுமையாலும் சூழப்பட்ட அவளது வாழ்வு இப்படியாகிறது.

பாதிரியாருக்கு போர்ன் பட நாயகிகள் எழுப்பும் போலி விரகதாப ஒலிகள் காதுக்குள் கேட்க ஆரம்பிக்கின்றன. பக்திமானான அவர் அதைக் கேட்டமாத்திரத்தில் நடுங்க ஆரம்பிக்கிறார். லேனாவின் குளி சீன் காட்சித் துண்டு ஒன்றை அவள் ஊர் இளைஞர்கள் பார்த்துவிடுகிறார்கள். நள்ளிரவில் அவள் வீட்டின் முன்பு சூழந்து கொண்டு பைக்கில் ஹார்ன் அடித்தும் அவளை வர்ணித்துமாய் அவமானமடைய வைக்கிறார்கள். அவள் அடுத்த நாள் ஊரைவிட்டு வெளியேறுகிறாள். பாதிரியார்  மனநல நிபுணர்களை நாடியும் பிரச்சினை தீராமல் தியேட்டர் முதலாளி ஆலேன்சியரை வரவழைக்கிறார். இருவருமாய் ஒரு பயன்படுத்தாத அறையைத் திறக்கிறார்கள். அதிலிருந்து ஏராளமான பெண்களின் விரகதாப ஒலிகள் கேட்க ஆரம்பிக்கின்றன. படம் முடிந்து போகிறது.

திரைப்படத்தில் இடையூடாக சில விஷயங்கள் பதிவாகின்றன. குய்யாலி கிராமத்தின் இளம் பெண்கள் ஆண்களுடன் ஓடிப் போகிறார்கள். அந்தக் குடும்பம் அவ்வளவு துக்கத்தையும் அவமானத்தையும் அடைகிறது. ஆலேன்சியரின் இரண்டு பெண்களுமே ஓடிப் போகிறார்கள். ஆலேன்சியரின் மனைவி அந்தத் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள்.

காமமும் ஏமாற்றமும் பிணைந்தே இருக்கிறது. தன் உடலைக் காட்சிப் பொருளாக்க வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்படும் பெண்களின் போலி விரகதாப ஒலிகள் கடவுளின் கருவறை எங்கும் எதிரொலித்தபடி இருக்கின்றன. இதை எதிர்கொள்ள முடியாத நொய்ந்த மனங்கள் சிதைவுற்றும் ஓடிஓளிந்துமாய் தங்களின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்கின்றன.

Thursday, August 17, 2017

கண் விழிக்கும் நீலக் கண் ட்ராகன்


கேம் ஆஃப் த்ரோன் ஆர்யாவின் அதிரடியோடு துவங்கி நம்மை பரவசத்தில் ஆழ்த்தினாலும் இந்த  ஏழாவது சீசன் வழக்கத்தை விட வேகமாக செல்கிறது. சில சமயம் ஏன் இவ்வளவு அவசரம் என்றும் கூட தோன்றுகிறது. இராஜாங்க அரசியல், குடும்பங்களின் கதைகள், அரசியல் நுட்பங்கள், தத்துவார்த்த உரையாடல், நிதானமான குடி, கொப்பளிக்கும் காமம் என எதுவுமே இல்லாமல் கதைச் சுருக்கமாகவே ஆறு பகுதிகளும் கடந்து போயின. ஆம் கசிந்த ஆறாவது பகுதியையும் நேற்று பார்த்துவிட்டேன். உறைபனிக் காலத்தின் பயமும்,  ஆர்மி ஆஃப் டெட் குறித்த அச்சங்களும் வெறும் பேச்சாகவே  ஆறு சீசன்களும் முன் வைத்ததால் இந்த சீசனில் அவற்றைக் காட்சிப் படுத்த மெனக்கெடுகிறார்கள் போல. 

விண்டர் ஃபால் மீண்டும் புத்துணர்வு பெறுகிறது. ஜான் ஸ்நோ வடக்கின் அரசனாகிறான். சக அரச குடும்பங்களை ஒன்றிணைக்கிறான். நெடிய துயரங்களை அனுபவித்த சான்ஸா, ப்ரான் மற்றும் ஆர்யா அனைவரும் தங்களின் கூட்டிற்குத் திரும்புகிறார்கள். நிஜமாகவே இந்தக் காட்சிகள் மிகுந்த மன உவப்பைக் கூட்டின. ஜானும் ஆர்யாவும் சந்திக்க நேர்ந்திருந்தால் அந்தக் காட்சி இன்னும் உருக்கமாக இருந்திருக்கும். ஆர்மி ஆஃப் டெட் - ஐ தகர்க்க ஜான் டனேரிஸைத் தேடிப் போகிறான். தன்னுடைய குடும்பத்தையே நிர்மூலமாக்கிய செர்ஸியைப் பழி வாங்கும் எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மக்களைக் காப்பதே பிரதானப் பணி எனும் நோக்கில் ஒரு முழுமையான அரசனாய் ஜான் ஸ்நோ மிளிர்கிறான்.

டனேரிஸின் எழுச்சி தொடர்ச்சியாய் கிளர்ச்சியூட்டுகிறது. முழுமையாய் வளர்ந்து நிற்கும் தன் இராட்சத ட்ராகன்களோடு அவளின் ஆதி இருப்பிடமான ட்ராகன்ஸ்டோனை வந்தடைகிறாள். அங்கிருந்து காய்களை நகர்த்தி ஐயர்ன் த்ரோனை அடையும் நோக்கில் தன் ஆலோசகர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபடுகிறாள். செர்ஸியின் எதிரிகளை ஒன்று திரட்டுகிறாள். அனைவரும் நிபந்தனையின்றி டனேரிஸிற்கு ஒத்துழைப்பு நல்குகிறார்கள். டிரியனின் திட்டப்படி காஸ்டர்லி ராக் கோட்டையை முற்றுகையிடுகிறார்கள். ஆனால் அது மிக எளிமையாக அவர்களுக்கு கிடைக்கிறது. ஜேமியும் செர்ஸியும் திட்டமிடுதலில் இரண்டடி முன்னால் இருக்கிறார்கள். செழிப்புமிக்க ஹை கார்டனை வீழ்த்தி அவர்களின் செல்வங்களைக் கொள்ளையடித்து வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனைத் திரும்பச் செலுத்தி ”லானிஸ்டர் ஆல்வேஸ் பேஸ் பேக்” என்பதை நிரூபிக்கிறார்கள். 

ஒலன்னாவை விஷம் அருந்தி மரணிக்கப் பணிக்கும் ஜேமிக்கு அவளொரு ரகசியத்தைச் சொல்கிறாள். ஜோஃப்ரிக்கு விஷம் வைத்தது தாம் தானென்றும் இந்த இரகசியத்தை நீ அவசியம் செர்ஸியிடம் சொல்ல வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டு நிறைவாய் செத்துப் போகிறாள். ஓலன்னா, டனேரிஸிடம் ”எல்லாவற்றுக்கும் ஆலோசனை கேட்டுக் கொண்டிருக்க நீ ஒன்றும் ஆடில்லை, ட்ராகன்” என அறிவுறுத்துகிறாள்.

ஆலோசனைகளால் அலுப்புறும் டனேரிஸ் நேரடியாய் களத்தில் இறங்கி தானொரு ஆடில்லை ட்ராகன் என உணர்த்துகிறாள். ட்ராகன் கக்கும் நெருப்பு ஆற்றில்  லானிஸ்டர் படைகள் எரிந்து சாம்பலாகின்றன. ஜேமி தன் உயிரைப் பொருட்படுத்தாது டனேரிஸைக் கொல்லப் பாய்கிறான். ட்ராகன் அவன் மீது நெருப்பை உமிழ்கிறது. தக்க சமயத்தில் ப்ரான் ஜேமியின் உயிரைக் காப்பாற்றுகிறான். 

செர்ஸியை மணக்க விரும்பும் இரோன் அவள் மகளுக்கு விஷம் வைத்த சாண்ட் ஸ்னேக் பெண்கள் மீது போர் தொடுக்கிறான் ஒபராவும் நைமீரியும் போரில் மடிகிறார்கள். எல்லாராவையும் டையீனையும் சிறைப்பிடித்து வருகிறான். அவர்களால் யாராவும் கைது செய்யப்படுகிறாள். செர்ஸி தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறாள். 

ஜோரா, சிட்டாடலில் சாமின் முயற்சியால் குணமாகி மீண்டும் டனேரிஸிடம் வருகிறான். ஜோராவின் ஆரம்பகால துணையில்லாமல் டனேரிஸ் இன்றொரு மாபெரும் சக்தியாய் உருவாகி இருக்கவே முடியாது. டனேரிஸிற்கு ஜோராவின் மீதிருக்கும் அன்பு அப்படியே இருக்கிறது. அவனைத் தன்னோடு இணைத்துக் கொள்கிறாள்.

ஜான் ஸ்நோ திரும்பத் திரும்ப வொயிட் வாக்கர்ஸ் குறித்தும் பிணப்படைகளைக் குறித்தும் டனேரிஸிடம் சொல்கிறான். நம்மை நோக்கி மிகப்பெரும் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது உண்மையில் செர்ஸி ஒரு பிரச்சினையே இல்லை என்பதுதான் அவன் தரப்பு. அனைவரும் ஒன்று திரண்டு இந்த ஆர்மி ஆஃப் டெட்டை எதிர்க்க வேண்டும் என்கிறான். ஆனால் இதை எப்படி நம்ப வைப்பது எனத் திணறுகிறான். இறுதியாய் ஒரே ஒரு வொயிட் வாக்கரை சிறைப் பிடித்து செர்ஸியின் முன்பு நிறுத்தினால் அவள் நம்புவாள் என முடிவு செய்கிறார்கள். இதற்கிடையில் டிரியன் ஜேமியை கிங்க்ஸ் லாண்டில் ரகசியமாய் சந்திக்கிறான். டேவோஸ் ராபர்ட் ப்ராத்தியனின் பாஸ்டர் மகனான கெண்ட்ரியை அழைத்து வருகிறார். டேவோஸ், கெண்ட்ரி,ஜோரா மற்றும் ஜான் ஆகியோர் ஒரு வொயிட் வாக்கரை சிறைப்  பிடிக்கக் கிளம்புகிறார்கள்.


எல்லைச் சுவரை வந்தடையும் ஜான் குழாமினருடன் அங்கு சிறைப் பிடிக்கப் பட்டிருக்கும் ஹவுண்ட் குழாமினர் இணைந்து கொள்கிறார்கள் அனைவரும் சுவரைக் கடந்து பனிப் புதைவிற்குள் செல்கிறார்கள். ஜான் ஏற்கனவே ஆர்மி ஆஃப் டெட்டைப் பார்த்திருக்கிறான். அதன் பயங்கரம் என்ன என்பது அவனிற்குத் தெரியும் . ஆனால் அப்படி ஒன்று இருப்பதை ஒருவரும் நம்பவில்லை என்பதாலேயே இந்த குருட்டு முடிவை எடுக்கிறான். அது மிகப்பெரும் நெருக்கடியில் தள்ளுகிறது. பிணப் படை  இந்தக் குழுவினரை சூழ்ந்து கொள்கிறது.  திக்கு முக்காடிப் போகிறார்கள். இனி தப்பமுடியாது அனைவரும் சாக வேண்டியதுதான் என்ற நிலை வரும்போது டனேரிஸ் தன் ட்ராகன் மீது பறந்து வருகிறாள். ட்ராகன் நெருப்பைக் கக்கியும் பிரயோசனமில்லை. பிணப்படைகள் சாம்பலில் இருந்து மீண்டு வருகின்றன. நைட் கிங் எனப்படும் பிணங்களின் தலைவன் சக்தி வாய்ந்த அம்பை ஒரு ட்ராகன் மீது செலுத்தி அதை வீழ்த்துகிறான். டனேரிஸ் திகைத்துப் போகிறாள். ஒரு பெரிய மலையைப் போல ட்ராகன் பனித்தரையில் வீழ்ந்து மூழ்கிப் போகிறது. ஜானைத் தவிர மற்றவர்களை ட்ராகன் மீது ஏற்றிக் கொண்டு டனேரிஸ் தப்பிக்கிறாள். ஜான் கடுமையாக சண்டையிட்டு நீரில் மூழ்குகிறான். அனைவரும் அகன்றதும் உயிர் பிழைத்து மேல் வருகிறான். டனேரிஸ் எல்லைச் சுவரில் நின்று கொண்டு ஜான் வருவானா என துக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள். உடல் முழுக்க காயங்களோடு நினைவு தப்பி ஒரு குதிரையின் மீது ஜானின் உடல் வந்து சேர்கிறது.

பிணப் படையினர் பனியில் புதைந்திருந்த ட்ராகனை சங்கிலிகளால் பிணைத்து மேலே இழுத்துப் போடுகிறார்கள். நைட் கிங் தன் மந்திரக் கோலை ட்ராகன் மீது வைக்கிறான். ட்ரகனின் கண் நீலமாய் திறந்து கொள்கிறது. இதோடு ஆறாம் பகுதி நிறைவடைகிறது.

ஆக பிணப்படையில் இன்னொரு ஆளாய் ட்ராகன் மாறிவிடும். ஏற்கனவே வலிமையான வொயிட் வாக்கர்ஸ் களுக்கு இன்னொரு இராட்சத பலம் வந்து சேர்ந்திருக்கிறது. இனிதான் நிஜமான ஆட்டம்.

பார்த்து முடித்த பிறகு எனக்கு இப்படித் தோன்றியது. ட்ராகனோடு ஜானையும் நைட் கிங் கைப்பற்றி அவனையும் பிணமாக உயிர்த்தெழச் செய்திருக்க வேண்டும். எப்போதும் அவர்களைக் குறித்தே அச்சம் கொண்டிருந்த ஜான் இப்போது அவர்களின் படைத் தளபதியாய் மாறி இருக்க வேண்டும். ஜான் தலைமையில் ஆர்மி ஆஃப் டெட் ஐயர்ன் த்ரோனைக் கைப்பற்ற வந்தால் எப்படி இருக்கும்?! டனேரிஸோடு செர்ஸி, ஆர்யா, சான்ஸா,யாரா, ப்ரைய்ன் என அனைத்துப் பெண்களும் ஒன்று திரண்டு ட்ரியன் ஆலோசனைப்படி ஜேமி மற்றும் ப்ரான் முன்னெடுப்பில் ஒரு குழுவும் ஜான் ஸ்நோ மற்றும் நைட் கிங் தலைமையில் ஆர்மி ஆஃப் டெட்டும் எதிர் எதிரே மோதிக் கொண்டால் ரகளையாக இருக்குமல்லவா?

ஆனால் அப்படி நேராது. ஜான் ஸ்நோவும் டனேரிஸும் அனைவரையும் அழித்துவிட்டு திருமணம் செய்து கொண்டு ஒன்றாய் ஐயர்ன் த்ரோனில் அமர்வார்கள். அவர்களின் பிள்ளைகள் வருவர்கள். எங்கிருந்தாவது ஒரு லானிஸ்டர் எதிரி முளைப்பான். மீண்டும் பிணம் உயிர்த்தெழும் இது ஒரு தொடர் சங்கிலியாய் செல்லும் என்பதே என் யூகம்.Wednesday, August 16, 2017

பல்ப் : 1.உன் நாவலை நீ எழுது

பல்ப். இதுதான்  தலைப்பு. இச்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் குறுநாவல். ஏன் எப்போதும் குறுநாவல் என்றால், உலகளாவிய சமகால எழுத்து மற்றும் கலைச்சூழலை பின்நவீனச்சூழல் எனக் கருதுகிறேன். இச்சூழல் எல்லா அதிகாரங்களுக்கும் எதிரானது. எனவே அதிகாரத்தை முன் நிறுத்தும் எந்த ஒன்றும்  சமகாலத்தைச் சேர்ந்தவை இல்லை. ஆபத்தானவையும் கூட. நம் சூழலை, பண்பாட்டு வெளியை பெருங்கதையாடல்கள் எனச் சொல்லப்படுகின்ற பெரும் மதங்கள்தாம் ஆள்கின்றன. இங்கே விளிம்பிற்கோ அல்லது சிறுதெய்வங்களுக்கோ  இடமே இல்லை. இலக்கியத்தில்  நாவல்கள் என்பவையும் இத்தகைய அதிகாரத்தின் கூறுகளை உள்ளடக்கியிருக்கின்றன. அவற்றை உடைப்பதே சமகால எழுத்தின் முக்கியப் பணி. ஆகவே நான் சிறுகதையாடல்கள் எனக் கருதப்படுகின்ற குறுநாவல்களை எழுதுகிறேன். பிரான்சில் இவ்வடிவத்தை நாவெலா என்கிறார்கள். நாவெலா வே இனி வரும் சமூகத்தின் இலக்கிய முகமாக இருக்கும். அங்கு யாரும் இப்போது நாவல்கள் எனச் சொல்லப்படுகின்ற மிகப் பழைய பிரதியை எழுதுவதில்லை. பிரான்சிற்கு அடுத்தபடியாக தமிழில் இவ்வடிவத்திற்கு முக்கியப்பங்கு என்னால் ஆற்றப்பட்டுக் கொண்டிருப்பதை அனைவரும் அறிவர்.  ஒருவேளை நீங்கள் புது வாசகராக இருந்தால் ஒரு தகவலுக்காக இதைச் சொல்கிறேன். இந்த விளக்கம் வீண் ஜம்பத் தொணியில் எழுதப்பட்டிருப்பதாய் உங்களுக்குத் தோன்றினாலும் பரவாயில்லை. சில உண்மைகளை பட்டவர்த்தனமாய் சொல்லிவிடுவது என் இயல்பு மேலும் உண்மை எந்தத் தொணியிலும் எழுதப்படலாம் என்பது என் நிலைப்பாடு. பின் நவீனம் எது உண்மை என்பது குறித்தும் பல கேள்விகளை, அய்யங்களை எழுப்புகிறது. அதைத் தொடர்ந்து போனால் இந்த நாவல் கோட்பாட்டாளர்கள் தமிழில் எழுத முயன்ற நாவல்களைப் போலப் பரிதாபமாக இருக்கும். நானொரு புனைவெழுத்தாளன். எனவே இந்த விளக்கத்தை இங்கே நிறுத்திவிட்டு கதையைத் தொடர்கிறேன்.

ஓரிதழ்ப்பூவைப் போல அல்லாமல் பல்ப் குறு நாவலை ஒரே மூச்சில் எழுதிவிடுவதுதான் திட்டம். ஒரே நேரத்தில் எழுத்தாளனாகவும் குமாஸ்தாவாகவும் இருந்து தொலைய வேண்டியிருக்கும் சாப யதார்த்த வாழ்வைப் புறந்தள்ளிவிட்டுத்தான்  இந்த அசாதாரண திட்டத்தில் இறங்கினேன். மகத்தான உழைப்பைச் செலுத்தி எழுதிக் கொண்டிருக்கும்போது  தடாரென நின்று போனது. இதில் ஒரு இலக்கியப் பெண் எழுத்தாளர் வருகிறார். அவர் இந்த கதைக்குள் ஒரு நாவலை எழுதுகிறார் ( அவருக்கு அரசியல் பிரக்ஞை இல்லை. என்னைப் போல் குறுநாவல் எழுதாமல் இன்னமும் நாவல்தான் எழுதுகிறார்) அந்தப் பெண் எழுத்தாளரின் நாவலை என்னால் எழுத முடியவில்லை என்பதுதான் பிரச்சினை. பெண் எழுத்தாளர் எழுதும் நாவலை ஆணாகிய நான் எப்படி எழுத முடியும்? எழுதி எழுதிப் பார்த்தும் பெண் மொழி சித்திக்கவேயில்லை. பெண் எழுத்தாளர் என்ன எழுதவேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதாவது அந்த நாவல் என்ன என்பது எனக்குத் தெரியும். ஆனால் எழுதும் மொழிதான் சரிப்படவில்லை. இதற்குள் இன்னொரு ஆண் எழுத்தாளரும்  வருகிறார். அவர் ஒரு பல்ப் எழுத்தாளர். அவர் எழுதுவது pulp என்றாலும் கூட அவர் எழுதும் கதைகளை எல்லாம் நானே எழுதிவிட்டேன். நானொரு தூய இலக்கிய எழுத்தாளனான இருந்தாலும் சற்று  சிரமப்பட்டு அவற்றை எழுதிவிடமுடிந்தது. ஆனால் இலக்கிய வகைமையிலே எழுதும் இலக்கிய எழுத்தாளரான பெண் எழுதுவதை என்னால் எழுத முடியவில்லை. என் பிரச்சினையை உங்களுக்கு புரியும்படி சொன்னேனா? புரியவில்லையெனில் தயவுசெய்து சொல்லாததையும் புரிந்துகொள்ளுங்கள். இது எவ்வளவு பெரிய சிக்கல் என்பதை இன்னொருவர் புரிந்துகொள்ளாதவரை எனக்கு மாபெரும் சிக்கல்தாம். 

எவ்வளவு முயன்றும் சுத்தமாய் எழுதவே வராமல் போன ஒரு பகலில் என் நெடுநாள் ஸ்நேகிதியைத் தேடிக் கொண்டு அவள் வீட்டிற்குப் போனேன். கண்கள் விரிய வரவேற்றவள் வரவேற்பரையில் அமரச் சொன்னாள். அவள் வீட்டுப் படுக்கையறை தவிர்த்து நான் எங்குமே அமர்ந்தது கிடையாது. ஒரு கட்டத்தில் அவள் என்னைப் படுக்கையறைக்குள் அனுமதிப்பதை நிறுத்தியவுடன் அவள் வீட்டிற்கு செல்வதையும், அவளைச் சந்திப்பதையும் நிறுத்திவிட்டேன். அமராமல் நின்று கொண்டே என் பிரச்சினையைச் சொன்னேன். சற்றுக் குழம்பினாள். யோசித்தாள். பின்பு சொன்னாள்.

 "உன் நாவலை நீ எழுது!" 

அவளுக்கு சிறுபத்திரிக்கை வாசிப்பு உண்டு. இரண்டு மூன்று நல்ல கதைகளையும் எழுதியிருக்கிறாள். அவையெல்லாமும் அவ்வார்த்தைகளுக்குப் பின்னிருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

"மொக்க போடாதே கதைய நான் சொல்றேன் நீ எழுத மட்டும் செய்"  

மாட்டேன் என்றாள். 

"நீ எழுத மறுப்பதற்கு நல்லதா ஒரே ஒரு காரணம் சொல், நான் போய்டுறேன்" 

“உனக்கும் எனக்கும் ஏதோ இருப்பதாக ஏற்கனவே இங்கு கிசுகிசு ஓடிக் கொண்டிருக்கிறது. போதாததிற்கு ஒரே நாவலை சேர்ந்து எழுதினால் போச்சு. வெறும் வாய்களுக்கு அவல் கிடைத்தது போலாகும்” என்றாள். 

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

“அட! உன்னையும் என்னையும் வைத்து கிசுகிசுக்க வெல்லாம் செய்கிறார்களா? குஜாலாக இருக்கிறதே. இதற்காகவே அவசியம் இந்நாவலை நாம் இருவரும் சேர்ந்து தான் எழுத வேண்டும்” என மகிழ்ச்சியில் கத்தினேன். 

அவள் முறைத்துக் கொண்டே சொன்னாள். 

“உன்னை யாரும் வேசையன் என வசைய மாட்டார்கள்.  ஆனால் என்னை வேசி என்பார்களே” 

நான் சற்று யோசித்தேன். அவள் சொல்வதும் சரியெனப் பட்டது. யாருமே சீந்தாத மொழியில் எழுத்தாளராக இருப்பதன் துயரங்களின் தொடர்ச்சிதாம் இவையெல்லாமும் என்பதும் புரிந்தது. திரும்ப வந்துவிட்டேன். வரும் வழியில் எங்களைப் பற்றி யாரெல்லாம் கிசுகிசுத்திருப்பார்கள் என யோசித்துப் பார்த்தேன். என் எதிரிகள் ஒவ்வொருவராய் நினைவில் வந்தார்கள். நிச்சயம் எல்லோரும் வயிறெறிந்திருப்பார்கள். சந்தோஷமாக இருந்தது. என் எதிரிகள் ஒவ்வொருவரின் முகத்தையும் பதம் பார்க்க விருப்பம்தான் என்றாலும் திருப்பி அடித்துவிடுவார்களே என்ற பயம்தான் அதை தடுத்து வைத்திருக்கிறது. மாறாய் இம்மாதிரி வகையில் அவர்களை எரிச்சலூட்டுவது எனக்குப் பிடித்திருக்கிறது. 

அதற்கடுத்த நாள் என்னுடைய இன்னொரு ஸ்நேகிதியைத் தேடி பக்கத்து நகருக்குப் போனேன். நாங்கள் எப்போதுமே பொதுவிடத்தில்தான் சந்தித்துக் கொள்வோம். என்னுடைய ஒரே வாசக நண்பி. எங்களுக்குள் தூய்மையான நட்பு இருந்தது. சந்தர்ப்பம் கிடைத்துமா? என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஏனெனில் இதுவரைக்குமே அவள் சந்தர்ப்பத்தை உருவாக்கித் தரவில்லை. எனக்கு சந்தர்ப்பத்தைத் துய்த்துத்தான் வழக்கம். உருவாக்கத் துப்பு கிடையாது. நன்றாக எழுதுவாள். இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறாள். (வாசகி என்றாய்? என அப்பாவித்தனமாகக் கேட்காதீர்கள். குறைந்தது ஐந்து கவிதைத் தொகுப்பு வரை வெளியிட்டவர்கள்தாம் தமிழில் வாசகர்கள்) அவளிடம் இந்நாவல் பிரச்சினையைச் சொன்னேன். நாவலின் களம் என்ன? எனக் கேட்டாள்.

 "லெஸ்பியன்" என்றேன். 

ஒரு டீ கடையில் அமர்ந்துதான் பேசிக் கொண்டிருந்தோம். அவள் எதுவும் பேசாமல் எழுந்துபோய் டீ போடுபவரிடம். 

"அண்ணே அந்த க்ளாசில சுட்தண்ணி புடிங்க" என்றாள். 

அவரும் கொதிக்க கொதிக்க சுடுநீரை க்ளாசில் பிடித்துக் கொடுத்தார். என்னிடம் வந்தவள். 

"மூஞ்சிலயே ஊத்திருவேன் ஓடிடு" என்றாள். எனக்கு திக் கென்றாகிவிட்டது. இவள் எப்போது எழுத்தாளரானாள்? இன்று வரை வாசகி என்றல்லவா நம்பிக் கொண்டிருந்தேன். எதையும் பேசாமல் திரும்ப வந்துவிட்டேன். 

ஒருவேளை நாவலின் களத்தை அவளிடம் சொல்லியிருக்க கூடாதோ? கேடுகெட்ட இந்த தமிழ்மொழியில், தமிழ்சூழலில், இப்படி ஒரு நாவலை நான் அவசியம் எழுதத்தான் வேண்டுமா என யோசிக்க யோசிக்க ஆத்திரமாய் வந்தது. சிலர் இணையத்தில் நன்றாக எழுதுகிறார்கள். அவர்களிடம் இன்பாக்ஸில் கேட்டுப் பார்க்கலாமா? என்கிற யோசனை எழுந்தது. ஆனால் எதையோ கேட்கப் போய் எசகுபிசகாக எதையாவது புரிந்துகொண்டு குச்சியை கையிலேயே பிடித்துக் கொண்டு ஆன்லைனில் நிற்கும் போலிஸ்காரர்களிடம் கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டால்? அய்யோ நினைக்கவே திகிலாக இருந்தது. அந்த நினைப்பை அப்போதே கைகழுவினேன். 

எதுவுமே பிடிக்காமல் விட்டேத்தியாய் சில நாட்கள் சுற்றிக் கொண்டு திரிந்தேன். என் பழைய நண்பன் ஒருவன் என்னைப் பார்க்க வந்திருந்தான். கூடவே என்னுடைய மிகப் பழைய நண்பனான ஜானியை ஒரு அட்டைப் பெட்டியில் போட்டுக் கொண்டு வந்திருந்தான். 

“நண்பா இந்தா, உனக்கு என் பரிசு” என ஆதூரமாய் கட்டித் தழுவித் தந்தான். மகிழ்ச்சியாய் வாங்கிக் கொண்டேன். 

“இப்போது என்ன செய்கிறாய்? எனக் கேட்டான். ஒரு நாவல் எழுதிக் கொண்டிருப்பதாய் சொன்னேன். 

”என்ன தலைப்பு?”

“ Pulp”  

”குண்டு பல்பா? அத வச்சி இன்னாபா கத”  என்றவனிடம்  

”இல்ல நண்பா இது எல்இடி பல்ப் பத்தின கத” என அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னேன். .

அவன் வழக்கம்போல் புதிராய் என்னைப் பார்த்துவிட்டு எழுந்து போய்விட்டான். 

அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்தேன். ஒரு லிட்டர் சிவப்பு லேபிள் புட்டி. எடுத்து வெளியில் வைத்தேன். வழக்கமாய் உள்ளே ஜானி அமர்ந்திருப்பான். ஆனால் இன்றோ புட்டிக்குள் சிவப்பு நிறத்தில் ஒரு பெண் அமர்ந்துகொண்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். 

ஆச்சரியமாய் இருந்தது 

“அட இதற்குள் நீ எப்படி வந்தாய்?” எனக் கேட்டேன். 

“தெரியல. ஆனா உன்  நாவலில் வரும் பெண் மொழியை எழுதப்போறது நான் தான்” என்றாள். 

வாழ்வு ஒன்றும் அவ்வளவு மோசமில்லை என ஆனந்தக் கூக்குரலிட்டபடியே அவளை ஆரத் தழுவிக் கொண்டேன். 


- மேலும்

Tuesday, August 15, 2017

பல்ப்


இனிமேலாவது இலக்கிய இதழ்கள் வெளியிடும் கதைகளின் வடிவில் சிலவற்றை எழுத  வேண்டும்.  அதை அந்தந்த இதழ்களுக்கு அனுப்பி வெளியிடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதேச் சூழலில் புழங்கும் பத்து நபர்கள் கொண்ட  இலக்கிய எழுத்தாளர் குழாமில் பதினோராவது ஆளாக இணைந்து கொள்ள வேண்டும். இவர் இந்த வழி வந்தவர். இவரே பின்நவீன யுகத்தின் புதுக் கதை சொல்லி போன்றப் புகழாரங்களை  வென்றெடுக்க வேண்டும் போன்ற ஆசைகளெல்லாம் எனக்கும் இருக்கிறதுதான் . ஆனால் எப்போதுமே இருக்கும் குரங்குப் புத்தி அதைச் செய்ய அனுமதிப்பதில்லை. அது இப்படித்தான் ப்லாக்கில் உட்கார்ந்துகொண்டு  குறுநாவலை எழுதச் சொல்கிறது. போகட்டும் இவ் விளையாட்டை கடைசியாய் இந்த ஒரே ஒரு முறை ஆடிவிட்டு நிறுத்திக் கொள்வோம்.

பல்ப். அடுத்த குறுநாவலின் தலைப்புதான்.

பல்ப் நாவலின் முடிச்சு ஐந்து வருடங்களுக்கு முன்னால் மனதில் வந்து விழுந்தது. அதே வேகத்தில் சில அத்தியாயங்களை எழுதிப் பார்த்தேன். இந்த நாவல் கீழ்கண்ட தளங்களில் இயங்குகிறது.

1. இது ஒரு நாவல் எழுதுவதைப் பற்றிய நாவல்.
2. பல பல்ப் நாவல்களின் தொகுப்பு.
3. பல்ப் நாவலாசிரியர்கள் குறித்தும் அதை எழுதுவது குறித்துமான நாவலாக இது இருக்கும்.
4. இலக்கிய எழுத்து மற்றும் எழுத்தாளர்களைப் பற்றியும் இந் நாவல் பேசுகிறது
5. இலக்கிய எழுத்து மற்றும் பல்ப் எழுத்து இரண்டையும் எதிர் எதிரே வைத்து விளையாடும் ஆட்டமாக இது இருக்கும்.
6. இந்த இரண்டு வகை எழுத்தின் போலித்தனங்களைக் குறித்துப் பேசும் நாவலாக இது இருக்கும். மேலும்  ஒட்டு மொத்த எழுத்தாளர்களின் போலித்தனங்களைக் குறித்து பேசும் நாவலாகவும் இருக்கும்.


குழப்பமாக இருக்கிறதல்லவா. சரி இப்படி வைத்துக் கொள்ளலாம். இது எழுதுபவர்களைப் பற்றிய மற்றும் எழுதுவதைப் பற்றிய நாவல்.

“அப்படியென்றால் போலிகளைப் பற்றிய போலித்தனங்களைப் பற்றிய நாவலா?”

தெரியாது. ஆனால் ஒரு உண்மை என்னவெனில் இந்நாவலுக்கு
ஆரம்பத்தில் போலி எனத் தலைப்பு வைக்கத்தான் நினைத்தேன். ஆனால் அது போளி எனவும் நம் அறிவார்ந்த சமூகத்தில் புரிந்து கொள்ளப்படும் என்பதால் பல்ப் எனும் ஆங்கிலப் பெயரையே வைத்துக் கொண்டேன். தமிழ் சினிமாவைப் போல தமிழ் நாவல்களுக்கு வரியும் கிடையாது விலக்கும் கிடையாது என்பதால் எந்த மொழியிலும் தலைப்பு வைத்துக் கொள்ளும் சுதந்திரம் எழுதுபவருக்கு இருப்பது பாக்கியம்தான் அல்லவா!

எழுத்தாளர்களைப் பற்றிய நாவல் என்பதால் பல சமகால எழுத்தாளர்களின் சாயலை இந்நாவலில் பார்க்க முடியும். அவை யாவும் கற்பனையே. உண்மையென நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நீங்களே பொறுப்பு.

Sunday, August 13, 2017

விக்ரம் வேதா - ஈரோயிச கோராமை


விடுமுறையிலிருந்த இருபது நாட்களில் ஒரு திரைப்படத்தைக்  கூடப் பார்க்கவில்லை. மொத்தமாகவே ஓரிரு மணி நேரங்கள்தாம் தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்திருந்தேன். இந்த நான்கு நாட்களில் அதை நேர் செய்தேன். கேம் ஆஃப் த்ரோன் - ஏழாவது சீசனின் நான்கு பாகங்கள், ட்ராவலர்ஸ் அண்ட் மேஜிசியன்ஸ், கன்யகா டாக்கீஸ், மர்மர் ஆஃப் த ஹார்ட் எனக் கலந்து கட்டிப் பார்த்துவிட்டு கடைசியாய் நேற்று இரவு தூங்கப் போவதற்கு முன்பு விக்ரம் வேதாவைப் பார்த்தேன். முதல் காட்சியிலிருந்து கடைசிக் காட்சி வரை நிறைந்திருந்த ஈரோயிசம் பயங்கரமாய் அலுப்பூட்டியது. கதையை முன் பின்னாக சொன்ன விதமும் ஓரிரு புத்திசாலித்தனமான திருப்பங்களும் என்னை ஈர்த்தன. டிப்பிகல் விசேவை விட மாதவனைப் பிடித்திருந்தது. காதாபாத்திர உருவாக்கமும் நடிப்பும் கச்சிதம்.

மற்றபடி இதே பாணியில் சொல்லப்பட்டுவிட்ட  போலிஸ்  என்கவுண்டர் வட சென்னை தாதாக்கள் குண்டர்கள் கஞ்சா கேங்க்ஸ்டர் சரக்கு குத்துபாட்டு டமால் டுமீல் அசால்ட்பாடிலாங்க்வேஜ் தெறிமாஸ்டைலாக்குகள் பஞ்சுகள் கத்தி இரத்தம் எண்ணூர் பழையபேக்டரி செண்டிமெண்ட் புத்திசாலிபோலிஸ் படுபுத்திசாலிரவுடி வுமனை ஈக்வலாக காட்ட முயற்சித்தல் கழுத்தறுத்தல் போட்டுவிடுதல் பதினாறுகொல பதினெட்டுஎன்கவுண்டர் லட்சலட்ச பணக்கட்டுகள் ஏராளமான சாவுகள் தெரிந்தவன் சாவும்போது சோகப்படுதல் அடியாட்கள் விசுவாசம் துரோகம் பழி பழிக்குப்பழி சர்வைவல் ஆப் த ஃபிட்டஸ்ட்  நோ நல்லவன் நோ கெட்டவன் எல்லாம் நல்லவன் இல்லன்னா எல்லாம் கெட்டவன் சம்பளம் அதிகமென்பதால் ஈரோவை ஈரோவாகவே வைத்திருத்தல். மற்ற எல்லாரையும் கெட்டவர்களாக்குதல் ...கெட்டவன் நல்லவனாதல் நல்லவன் கெட்டவனாதல் நாம நல்லவன்னு நினைச்சிட்டு செய்யுறது கெட்டது....இப்படியே போய்க்கொண்டிருந்தபோது கொஞ்சம் திகிலாகி ஹலோ குடும்பமே என்னதான் சொல்ல வரீங்க என்றே திரையைப் பார்த்து கேட்கவேண்டியதாயிற்று. பத்து நிமிட டமால் டுமீல் டிஷ் டுஷ் க்குப் பிறகு படம் முடிந்ததும், உஸ்ஸ்ஸ் ஹப்பாடா என்றிருந்தது.

விஜய்க்கென அஜித்கென தனித்தனியாய் உருவாகும் ஒரே மசாலா இப்போது விஜய்சேதுபதிக்கெனவும் கோலிவுட்டில் உருவாக்கப்படுகிறது. அதே மசாலாதான் ஆனால் அசால்ட் பாடி லாங்க்வேஜ் இருக்கனும். பஞ்ச் குறைவா இருக்கனும், எப்படி இயல்பா இருக்கான் பாருய்யான்னு சொல்ல வைக்கனும். அவ்வளவுதான் படம் ஹிட்.

போரடிக்குது மிஸ்டர் விசே.


1. போலிஸ் தனிப்படை அமைச்சி வேதா கும்பல போட்டு தள்ள நெனைக்கிற அளவுக்கு அவரும் அவர் கும்பலும் என்னா பண்ணாங்கன்னு தெரியல. வட சென்னை பேக்ட்ராப்ல கெத்தா ஒருத்தன் நடக்கிற மாதிரி காம்ச்சாவே கேங்க்ஸ்டர் தானோ ?

2. சேட்டா பல வருஷமா அப்படியே தான் இருக்கார். அவர போலிஸ் என்னான்னு கூட கேக்குறதில்ல

3.ஏரியா லீட் சேட்டா- அப்புறம் ஏன் சோட்டா கஞ்சா சப்ளையர் ரவி வேதா கேங்குக்கு 20 பர்சண்ட் தரனும்?

4. பணம் திருப்பிக் கெடைச்ச பிறகு ஏன் கேங்க் வார்? சேட்டாவுக்கும் வேதாவுக்கும் கேங்க் வார் வர்ரதுக்காக சொன்ன காரணம் பயங்கர மொக்க.

5. ரவி போலிஸ வாங்குற அளவுக்கு கெத்தா? - ஒரு சீன் கூட வைக்கலியே

இப்படி அடுக்கடுக்கா படத்துல பயங்கர ஓட்டைகள். எழுத போர் அடிக்குது.  விசேவின் மாதவனின் ஈரோயிசத்தால படம் தப்பிக்குது. இதை க்வாண்டின் டரண்டினோ படத்தோடலாம் ஒப்பிட்டு ஃபேஸ்புக்கர்கள் புளகாங்கிதம் அடைஞ்சாங்களாமே? அப்படியா!


Thursday, August 10, 2017

உதிரி

இந்த விடுமுறை வழக்கத்திற்கு மாறாகத்தான் இருந்தது. சொல்லி வைத்தார்ப்போல ஒரே மாதிரியான நட்பு சந்திப்புகள், தொலைபேசி அழைப்புகள் என எதுவும் இல்லை. எப்படித் தோன்றியதோ அப்படி இருந்தேன். மரியாதை நிமித்தம், வழமை நிமித்தம் போன்ற எந்த நிமித்தங்களாலும் என் இயல்பை மாற்றிக் கொள்ளாமல் இருந்தது எனக்கே ஆச்சர்யமாகக் கூட இருந்தது. திடீர் பயணங்கள் எதிர்பாராத சந்திப்புகள் நிகழவும் வாய்ப்பாக இருந்தது. நன்றாக ஊர் சுற்றியது இன்னும் விசேஷம்.

இரமணாசிரமப் பகுதிகளில் உலவிக் கொண்டிருந்தபோது ஓரிதழ்ப்பூவின் காட்சிகள் வந்து வந்து விழுந்து கொண்டிருந்தன. ஒரு விதப் பரவச உணர்வில் திளைத்திருந்தேன். இதுதான் அந்த விபத்து நிகழும் இடம். இதுதான் துர்க்காவின் பூக்கடை . புனைவில் வந்த ஏற்கனவே இருக்கும் அந்த டீக் கடையில் ஏலக்காய் மணக்க டீக் குடித்தேன். செங்கம் சாலையில் நடந்து, வலது புறச் சந்தில் திரும்பினால் கொஞ்சம் தூர்ந்து அடையாளம் மாறிப் போயிருந்த பலாக்குளம். என் பதின்மத்தில் அக்குளம் மினுமினுக்கும். பெருமூச்சோடு கருமாரியம்மன் கோவிலுக்கு வந்தேன். புற்று மாரியம்மன் என அதன் பெயர் மாறியிருந்தது. புற்றுகள் சீரமைக்கப்பட்டு செயற்கையாக இருந்தது. அது ஒரு ஆடி வெள்ளிக்கிழமையின் காலை. தெய்வீக மணம் கமழ நடுத்தர வயதுப் பெண்கள் கோவிலில் நிரம்பியிருந்தனர். ஒரு பெண் கூழ் கொடுத்தார். இன்னொருவர் பொங்கல் உருண்டையைக் கையில் திணித்தார். அங்கையின் துர்க்காவின் மலர்ச்செல்வியின் சாயல்களில் யாருமில்லை. இரமணாசிரமத்தில் நாகலிங்கப் பூ மரங்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தேன். வாசம் இருந்தது. மரங்களில் ஓரிரு பூக்களிருந்தன. முன்பு அப்பூவின் மயக்கும் வாசம் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும். இப்போதில்லை. கருத்த இரமணர் சிலையைப் பார்த்துப் புன்னகைத்தேன். என் கதையில் அவர் வருவதை விரும்பியிருப்பாரா எனத் தெரியவில்லை. தியான அறையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பின்பு ஆசிரமக் குடியிருப்புப் பகுதிகளில் வேர்களின் பிடிப்பில் நின்றிருக்கும் ஆலமரங்களைப் பார்த்து வந்தேன்.  இந்தப் பயணம் முழுமையடைய இந்தக் காலை ஒன்று மட்டுமே போதும் என இருந்தது.

அவ்வளவுதான் அலைந்து திரிந்து இன்னும் கருத்து ஊர் திரும்பியாயிற்று. இந்தப் பாதுகாப்பான பொந்தில் வந்து ஆசுவாசத்தோடு அடைந்து கொண்டேன். நேற்று இங்கிருக்கும் வானொலியில் ஆவணப்படங்கள் குறித்துப் பேசினேன். இரவு ’கேம் ஆஃப் த்ரோனின்’ இரண்டு பகுதிகளைப் பார்த்தேன். அப்புனைவின் நினைவுகளோடு தூங்கிப் போனேன்.

இலக்கிய வாழ்வைப் பொறுத்தவரை - அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?!-  நான் நம்பி இயங்கும் தளத்தைப் பொறுத்த வரை, எந்தக் குழுவிலும் பதுங்காத, எந்த முத்திரையும் விழுந்துவிடாத, எதன் சாயல்களும் இல்லாத நானாய் இருந்துவிட்டாலே போதும் எனத்தான் தோன்றுகிறது. சில தருணங்களை அப்படிக் கடக்க முடியாதுதான் என்றாலும் இந்தத் தொலைவு என் விருப்பம்போல் இயங்க என்னை அனுமதித்திருக்கிறது. முன்பு எப்போதுமே விரும்பியிராத இத்தொலைவை இப்போது முத்தமிடுகிறேன். உதிரியாய் இருப்பதே இருப்பு. தேவதேவன் பாணியில் சொல்லப் போனால் உயிரின் சுபாவம் உதிரி.

Tuesday, July 11, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் முப்பத்தி ஒன்று

"தீதிலிருந்து நன்மைக்கு 
இருளிலிருந்து ஒளிக்கு 
இறப்பிலிருந்து பெருநிலைக்கு”வேட்டவலம் பஸ் ஸ்டாண்டிலேயே இறங்கிக் கொண்டேன். லாரி என்னை உதிர்த்துவிட்டு பை பாஸ் ரோட்டிற்காய் திரும்பியது. இறங்கி நடக்க ஆரம்பித்தேன். கை வலிக்க ஆரம்பித்திருந்தது. பள்ளிக்குப் போகும் பிள்ளைகள் சாலையை நிறைத்திருந்தார்கள். புளிய மரத்தடி பேருந்து நிறுத்தத்தில் வழக்கம்போல ரமா தன் மகளோடு நின்று கொண்டிருந்ததை தூரத்திலேயே கவனித்து விட்டேன். அவசரமாய் திரும்பி வந்த வழியே நடக்க ஆரம்பித்தேன். அவள் என்னைப் பார்த்துவிடக் கூடாது. தலையைக் குனிந்து கொண்டே நடந்தேன். பின்னால் வண்டியின் ஹார்ன் சப்தம் கேட்டது. பல்லைக் கடித்தேன். சனியன் அவளாகத்தான் இருக்கும். திரும்பினால், அவளேதான்.

காலை ஊன்றி நின்றிருந்தாள். என்னைப் பார்த்து சிரிக்கவில்லை.

“ வண்டில வந்து உக்காரு ” என்றாள்.

நீ போ என முறைப்பாய் சொன்னேன்.

வந்து உக்கார் என அழுத்தமாய் சொன்னாள். மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போலப் போய் அமர்ந்தேன். வண்டியைக் கிளப்பினாள்.

”யாராவது பாக்கப்போறாங்க” என இரைந்தேன்.

”குடிச்சிட்டு தெருவில விழுந்து கெடக்கும்போது இந்த எண்ணம் வந்தா பரவால்லடா “

அமைதியானேன். அவள் ஒன்றும் பேசவில்லை. கோரிமேட்டுத் தெரு வழியாய் வண்டி தண்டராம்பட்டு சாலையை அடைந்தது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்  என் வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்தினாள். இறங்கிக் கொண்டேன்.

இனி வேட்டவலம் ரோடு வழியாய் போகவே கூடாது என நினைத்துக் கொண்டே உள்ளே போனேன்

ரமா பின்னாலேயே வந்தாள். அம்மா, ரமாவைப் பார்த்து சிரித்தாள்.

”வா ரமா, இவன எங்க புடிச்ச?” என்றாள்.

”தொர என்ன பாத்துட்டும் பாக்காத மாதிரி நைசா திரும்பிப் போனாரு இழுத்துட்டு வந்துட்டேன்”

அவளை முறைத்தேன்.

அவளே கேட்டாள்

“சாவுலாம் நல்ல படியா முடிஞ்சதா ”

”ம்ம்”

”பாவம் அந்த அக்கா, இனிமேலாச்சும் நல்லா இருக்கட்டும்”

நான் எதுவும் பேசவில்லை. அவளே தொடர்ந்தாள்.

”ரவி, நேத்துதான் அம்மா மொத்த கதையும் எனக்கு சொன்னாங்க. நீ அந்த பொண்ண டைவர்ஸ் பண்ணிடு.., ஊர் உலகத்துல பொண்ணா இல்ல, நல்லதா நாம பாப்பம்.”

எனக்கு கோபமும் ஆத்திரமும் பொங்கியது. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

வாசலில் யாரோ கூப்பிட்டார்கள். அம்மா போனாள்.

”பூக்காரம்மா வீட்டுக்காரரா.., ஓ வாங்க வாங்க” என்றாள்.

யாரென்று எட்டிப் பார்த்தேன். சாமி

ஏனோ திடீரென நிம்மதி படர்ந்தது. கண்டிப்பாக இவனிடம் சரக்கு இருக்கும்

”வா சாமி” என்றேன்

ரமா எழுந்து நின்றாள்

அட உக்காரும்மா என்றபடியே சாமிநாதனும் உள்ளே வந்து அமர்ந்தான்.

”வாத்தி நீ கெளம்பு. வா என்னோட”.

அதற்காக காத்திருந்தேன்.

போலாம் சாமி என எழுந்து கொண்டேன்.

”போய் பட்னு கால்ல வூந்திரு”

”யார் கால்ல?”

”உம் பொண்டாட்டி கால்லதான்”

”என்ன ஒளற்ற சாமி”

”உம் பொண்டாட்டி எங்கூட்லதான்யா இருக்கா, வந்து சமாதானமா பேசி கூட்டிட்டு வந்துரு”

எனக்கு திகைப்பாய் இருந்தது.

”அவ எப்படி உங்கூட்ல?”

”நேத்து ஏரில வூந்து சாவப் போயிருக்கா.  நல்ல வேளையா வீட்லயும் நானும் அங்க இருந்தோம். பேசி கூட்டி வந்து வீட்ல வச்சிருக்கோம்”

”அவ என்ன சாவடிக்க பாக்குறா சாமி. அவளைப் போய் கூப்டு வந்து என்ன பன்றது.., சாவறதா?”

”வாத்தி, உனக்கு தெரியாதது இல்ல. ஆயிரம்  இருந்தாலும் இந்த வாழ்க்கய வாழ்ந்துதான ஆவனும்.., அதோட இல்லாம. சின்ன பொண்ணு.., உலகம் தெரியாது.., நாமதான் சொல்லித்தரணும்., ”

 சாமி பேசிக் கொண்டே போனான்.

சாமி இவ்வளவு பொறுப்பாய் பேசுபவனா என எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. அம்மா அவன் பேச்சில் கரைந்தாள்.

”நான் வரேன்., நான் வந்து அவள கூட்டிட்டு வரேன்., ரமா நீயும் வா போகலாம்.,, என எழுந்தாள்.

நான் உள்ளே போய் படுத்துவிட்டேன்.

மூவரும் வெளியே வந்தபோது சரியாய் அங்கையின் அம்மாவும் அப்பாவும்  வந்து சேர்ந்தார்கள்.

சரியான நேரத்துல வந்தீங்க என்றான் சாமி

”இருங்க வாத்தியையும் கூப்டு போய்டலாம். எல்லாத்தையும் பேசினா தீர்த்திட முடியாதா என்ன!”

உள்ளே வந்தவன் என்னை எழுப்பினான். நான் பலமாய் மறுத்துவிட்டேன்.

”அவ வர்ரதுல எனக்குப் பிரச்சின இல்ல. போய் கூட்டி வாங்க”

என திரும்பிப் படுத்துக் கொண்டேன்.

சாமி வெளியே வந்தபோது ஒரு ஆட்டோ வந்து நின்றது. துர்க்காவும் அங்கையும் அதிலிருந்து இறங்கினார்கள்.

வாசலில் இருந்த கும்பலைப் பார்த்து அங்கை தயங்கி துர்க்காவின் விரல்களைப் பிடித்துக் கொண்டாள்.

துர்க்கா  நின்றிருந்தவர்களைப் பார்த்து

“உள்ள போய் பேசலாம் ” என்றாள்

இருக்கைகள் அனைவருக்கும் போதாது. ரமா உள்ளே போய் பாய் கொண்டு வந்து தரையில் விரித்தாள்.

சாமி என்னை வந்து எழுப்பி, ஒம் பொண்டாட்டியே வந்துட்டா எனச் சொல்லிச் சிரித்தான்.

நம்ப முடியாமல் எழுந்து வெளியில் வந்தேன்.

பாயில் அங்கையும் துர்க்காவும் அமர்ந்தார்கள். மற்றவர்களையும் உட்காரச் சொன்னார்கள்.

துர்க்கா பேச ஆரம்பித்தாள்.

”நடந்தது நடந்து போச்சு. யாருக்கும் எந்த கோபதாபமும் இல்லாம இத அப்படியே முடிச்சுக்கலாம்”

அம்மா பதறினாள். முடிச்சுக்கலாம்னா?

”உங்க புள்ளைக்கு வேற பொண்ண பாருங்கம்மா”

”என்னம்மா இப்படி சொல்ற.,” என்ற அம்மாவின் குரலை மீறி

அங்கையின் அப்பா சத்தமாய் கத்தினார்.

“ நீ யாரு இத சொல்ல”

துர்க்கா அவருக்காய் திரும்பி நிதானமாய் சொன்னாள்.

“இனிமே இவளுக்கு எல்லாம் நான் தான். இவள பெத்து வளத்தீங்க அதுக்கு ஒரு கும்பிடு போட்டுக்கறேன். இனிமே இவள பத்தின கவல உங்களுக்கு வேண்டாம்.”

அங்கையின் அம்மா மெளனமாக இருந்தாள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. துர்க்காவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் இரவில் மட்டுமல்ல பகலிலும் அம்மனைப் போலவே தான் இருந்தாள்.

துர்க்கா என்னை நிமிர்ந்து பார்த்து.

“ரவி நீ யார வேணா கல்யாணம் பண்ணிக்கலாம். அதுல இவளுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லன்னு எழுதி கொடுத்திடுறோம். ஒரு பேப்பர் எட்த்தா”

”அதுக்கு அவசியம் இல்ல.., அங்கைக்கு எது சரின்னு படுதோ அதைப் பண்ணட்டும் ”

எனச் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே போய்விட்டேன்.

அங்கை, அவள் அம்மாவைப் பார்த்துச் சொன்னாள்,

“நான் இவங்களோட கொஞ்ச நாள் இருக்கம்மா”

அங்கையின் அம்மா எழுந்து கொண்டாள்.

அவளின் அப்பா கத்த ஆரம்பித்தார்,

“ என்னா வேல பாத்துட்டு என்னா திமிரா இருக்கா பார்”  என்றபடியே அங்கையை அடிக்கப் பாய்ந்தார்.  அங்கையின் அம்மா அவரை இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

ரமா தன் மகளின் பள்ளிப் பேருந்து வந்துவிடும் எனச் சொல்லியபடியே   கிளம்பினாள்.

துர்க்கா, சாமியிடம் சொன்னாள்

”நாங்க வெளியூர் போறம். அப்புறமா வருவோம். நீ வீட்டையும் கடையையும் பத்திரமா பாத்துக்க”

சாமிக்கு திகைப்பாய் இருந்தது. மறைத்துக் கொண்டே சரியென தலையாட்டினான்.

ரவியின் அம்மாவிடம் அங்கையும் துர்க்காவும் சொல்லிக் கொண்டு வெளியே வந்தார்கள். அரச மரத்தடி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பேருந்து புறப்படத் தயாராய் நின்று கொண்டிருந்தது.

துர்க்கா, அங்கையைப் பார்த்துக் கேட்டாள்.

“அந்த பஸ்ஸ  உன்னால புடிக்க முடியுமா.?”

அங்கை தீவிரமாய் முடியும் என்றாள்

இருவரும் பேருந்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்.


- முற்றும்ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் முப்பது


”அசதோமா ஸத் கமய
தமஸோமா ஜ்யோதிர்கமய
மிருத்யோர்மா அமிர்தம் கமய ”


 ”நீ சாப்ட்டு கெளம்பிடு”

நிமிர்ந்து பார்த்தேன். அமுதா அடுப்பைப் பற்றவைத்துக் கொண்டே என்னைப் பார்க்காமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தாள். ஈரக் கூந்தல் ஜாக்கெட்டின் பின்புறத்தை நனைத்திருந்தது.

எழுந்து அவள் அருகில் போனேன். அடுப்பருகில் உட்கார்ந்திருந்தவளை கைப்பிடித்து மேலே இழுத்தேன். எழுந்தவளை அணைத்துக் கொண்டு சொன்னேன்

”இன்னிக்கு காலைலதான் நான் புதுசா பொறந்த மாதிரி தோணுச்சி., விடிகாலைல பெஞ்ச மழையில என் துக்கம் எல்லாம் போய்டுச்சி., இனிமே எனக்கு எல்லாம் நீதான்.., உன்ன விட்டு எங்கயும் போவப்போறதில்ல”

”சொன்னா கேள் ரவி. எனக்கு நேத்து ஒரு ராத்திரி உன்னோட இருந்தது வாழ்நாள் முழுக்க போதும்.., நீ வாழ வேண்டிய பையன்.., கெளம்பு”

”நான் எங்க போவேன். எல்லாமும் அடைஞ்சு போச்சு. இனி எனக்கு வாழ ஒரு பிடிமானமும் இல்லங்கிறப்பதான் இது நடந்தது. இத விட மாட்டேன்”

எனப் பிடியை இறுக்கி முரட்டுத்தனமாய் அவளை முத்தமிட்டேன்.

என்னை விலக்கித் தள்ளி நின்று கொண்டாள்.

”நான் வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கை எல்லாம் பீ முத்திரத்த அள்ளி அள்ளியே போய்டுச்சி. நீ வேற புதுசா உள்ள வந்து அதே குழிக்குள்ள தள்ளாத ரவி”

”என்ன சொல்ற?”

”உனக்கு புரியலையா எனக்கு இந்த குடும்ப வாழ்க்கை வேணாம். நல்லவேளையா குழந்தைங்க எதுவும் பொறக்கல. பொறக்கற மாதிரியும் எதுவும் நடக்கல. அப்படியே நான் போய்டுறேன்”

”எங்க போவ நீ., யார் இருக்கா உனக்கு?”

”எனக்கு நான் போதும் ரவி. காரியம் முடிஞ்சதும் இந்த வீடு, இருக்கிற கொஞ்ச நெலம் எல்லாத்தையும் வித்துட்டு எங்காய்ச்சும் போய்டுவேன்”

”எங்காச்சும்னா எங்க? ஏன் இப்படி உளற்ற., உனக்கு இந்த ஊர்ல என்னோட இருக்க கூச்சமா இருக்கும்., நாம இங்க இருந்து போய்டலாம்., கீழ்பெண்ணாத்தூர்ல ஒரு வீடு எடுத்து தங்கிக்கலாம். என் ஸ்கூல் பக்கமா., நாம ரொம்ப நல்லபடியா ஒரு வாழ்க்க வாழலாம் அமுதா.., ப்ளீஸ் ”

”போதும் ரவி. போதும். எனக்கு நானா மட்டும் வாழ ஆசையா இருக்கு. சின்ன வயசுல இருந்தே ரொம்ப தூரம் ரயில்ல போகனும்னு ஆச தெரியுமா? ஆனா இதுவரைக்கும் நான் ரயில்ல கால் கூட வச்சதில்ல.”

”நான் கூட்டிப் போறேன் அமுதா. உனக்கு என்னல்லாம் பிடிக்குமோ எனக்கு என்னலாம் பிடிக்குமோ எல்லாத்தையும் சேந்து பண்ணலாம்.”

”சொன்னா புரிஞ்சிக்க ரவி. நீ போய் உம் பொண்டாட்டி கால்ல விழுந்து வீட்டுக்கு கூட்டிப் போய் நல்ல படியா வச்சுக்க. அம்மாவ பத்திரமா பாத்துக்க. பத்து நிமிசம் அப்படி உக்கார். சாப்டு கெளம்பிடு”

பதிலையும் எதிர்பார்க்காமல் அமுதா அடுப்பருகில் போய் உட்கார்ந்து கொண்டு தீயை அதிகப்படுத்தினாள்.

அவள் குரலிலிருந்த உறுதி என்னை நிலை குலைய வைத்தது. எதுவும் பேசாமல் வீட்டிலிருந்து வெளியே வந்து செருப்பைப் போட்டேன். ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கிளம்பினேன்

ரவி என்றபடி வெளியில் வந்தவளிடம்

சாவு வீட்டுக்கு வந்துட்டு சொல்லிட்டுப் போவ கூடாது என்றபடி அவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் நடந்தேன்.

என் வாழ்க்கை அவ்வளவுதான்  எனத் தோன்றியது. போய் மூச்சு முட்ட அந்த மூத்திர ஒயின்ஷாப்பில் குடித்து மட்டையாக வேண்டும் என்கிற வெறி வந்தது. பேருந்து நிறுத்தத்திற்கு வந்து விட்டிருந்தேன். அரை மணி நேரம் நின்றும் பேருந்து வரும் வழியைக் காணோம். ஒரு மண்பாடி லாரி என்னைக் கடந்தது. வெறி பிடித்தவன் போல அதன் பின்னே ஓடினேன். மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்ததை ஓட்டுனர் தாமதமாய் கவனித்து வண்டியை நிறுத்தினான். பாய்ந்து ஏறிக் கொண்டேன். இதயம் உடைந்துவிடுவது போல திம் திம் என அதிர்ந்தது. இன்னோரு கையயும் ஒட்ச்சுக்கணுமா என  அவன் என்னை திட்டிக் கொண்டே வண்டியைக் கிளப்பினான்.

0

அங்கை கண்  விழித்தபோது துர்க்கா தயாராய் காபி போட்டு வைத்திருந்தாள். எழுந்து பல் துலக்கிவிட்டு வந்து அந்தக் காபியைக் குடித்தாள். ஒரே ஒரு அறைதான். அதை ஒட்டினார்போல் தடுப்புச் சுவர் மட்டும் வைத்த சமையலறை. வீட்டிற்குப் பின்னால் தனியாக கழிவறையும்  குளியலறையும் இருந்தன. ஏதோ அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்த உணர்வு அங்கைக்குத் தோன்றியது. இத்தனைக்கும் நேற்று இரவு மட்டும்தான் அங்கு தங்கியிருந்தாள். சொல்ல முடியாத பிணைப்பை எப்படி முதல் சந்திப்பிலேயே சங்கமேஸ்வரனிடம் உணர்ந்தாளோ அப்படி ஒரு பிணைப்பை துர்க்காவிடமும் கண்டாள். அவளிடம் கோவில் சிலைகளின் சாயல் இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். சாகப்போன தன்னை காக்க வந்த தெய்வமாக அவளை நினைத்தாள். அவள் அணைப்பு அத்தனை ஆதூரமாக இருந்தது. யாரோ அருகில் வருவதை உணர்ந்துதான் நேற்று அவள் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டாள்.

 ஏரிச் சரிவிலிருந்து இறங்கி வந்த சாமி நாதன் துர்க்காவைப் பார்த்து திகைத்தான்.

” இங்க என்ன பன்ற, ஒடம்பு சரியில்லன்னு வீட்ல படுத்திருந்த”

துர்க்கா அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு,

“ ஏரில வூந்து சாவலாம்னு வந்தேன்” எனச் சொல்லி சிரித்தாள்

அங்கை  திடுக்கிட்டு நெஜமாவா எனும்படிப் பார்த்தாள்.

”நெசந்தான் நானும் இங்க சாவலாம்னுதான் வந்தேன்”

சாமி அவளைப் பார்க்காமல்  மெதுவாய் சொன்னான்.

“நீ சாகறதுக்கு முன்னாடி என்ன கொன்னுட்டு அப்புறம் சாவு. இந்த ஈனத்தனமான வாழ்க்கை  நீ  எனக்கு போட்ட பிச்சதான”

துர்க்கா எதுவும் பேசவில்லை. அங்கைக்காய் திரும்பி

இவரு என் வூட்டுக்காரு என்றாள்.

அங்கை சாமியைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள். சாமி அங்கையை அப்போதுதான் சரியாகப் பார்த்தான்.

“நீ ரவி வாத்தியார் சம்சாரந்தானே?”

அங்கை மருண்டாள்.

”உன் போட்டவ வீட்ல பாத்தனே., இங்க இன்னாமா பன்ற?”

துர்க்கா இடையிட்டாள்

”யாரு ரவி?”

”அட அன்னிக்கு உன்ன பாத்து மெரண்டு ஓடினானே”

துர்க்காவிற்கு நினைவு வந்தது.

“ஓ ராம்சாமி வாத்தியார் மொவன்”

”அவனேதான்”

”அதான் எங்கயோ பாத்த மாதிரியே இருக்கேன்னு நினைச்சுட்டு இருந்தன்.., இவ்ளோ லட்சணமான பொண்டாட்டிய கூட பாத்துக்காத அவன்லாம் இன்னா மனுசன்”

”அவனுக்கு ஏதோ கிறுக்கு. ஆனா சரியாய்டுவான். சரி கெளம்புங்க போலாம். இருட்டப் போவுது”

சூரியன் மேற்கில் இறங்கியிருந்ததை இருவருமே கவனிக்கவில்லை. மறுபடியும் கொண்டுபோய் ரவி யிடம் விட்டு விடுவார்களோ என அங்கைக்குப் பயமாக இருந்தது. தயக்கமாய் எழுந்து கொண்டாள்.

துர்க்கா சாமிக்காய் திரும்பி

“நாங்க வீட்டுக்கு போறோம். நீ இவங்க வீட்டுக்கு போய் அங்கை எங்களோட இருக்குன்னு சொல்லிடு. பயப்பட வேணாம்னு பாத்து பதமா சொல்லிட்டு வா”

சாமி, அங்கையிடம் அவள் வீட்டு முகவரியை வாங்கி கொண்டான். அரசு கலைக்கல்லூரி வரை ஒன்றாய் நடந்து போனார்கள். பிறகு சாமி அங்கை வீட்டிற்காய் நடக்க ஆரம்பித்தான். இவர்கள் தேனிமலைக்காய் நடக்க ஆரம்பித்தார்கள்.  இருட்டத் துவங்கியிருந்தது. துர்க்கா கறி சாப்பிடுவியாம்மா என்றதற்கு அங்கை தலையாட்டினாள். வழியில் கோழிக்கறி வாங்கிக் கொண்டாள்.  வீட்டை அடைந்தார்கள்.

வூடு சின்னதுதான் உனக்கு புடிக்குமோ இன்னாவோ என்றபடியே துர்க்கா பூட்டைத் திறந்தாள். அங்கை அவள் தோளில் கை போட்டு அணைத்து சிரித்தாள்.

துர்க்கா பரபர வென சமையலை ஆரம்பித்தாள். அவள் எதுவும் கேட்காமலேயே அங்கை நடந்த கதை மொத்தத்தையும் சொன்னாள்.  அவளின் சிறு பிராயம் முதல் இன்று மதியம் நடந்தது வரை ஒன்றுவிடாமல் சொன்னாள். துர்க்காவிற்கு அவள் கதைகளைக் கேட்க கேட்க அழுகை முட்டியது. தன் இள நிழலாய் அவளிருந்தாள். ரகசியமாய் கண்களைத் துடைத்துக் கொண்டு. சாப்பாடு ஆய்டுச்சி சாப்டுடலாம் என்றாள்.

கறிக்குழம்பின் மணம் அந்தச் சிறுவீட்டை நிறைத்தது. அஙகையும் துர்க்காவும் தட்டு நிறைய கறியையும் சோறையும் வாரிப்போட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள். அவர்களின் மொத்த துக்கமும் உணவாய் தட்டிலிருந்தது. அள்ளி அள்ளி சாப்பிட்டார்கள். வயிறும் உள்ளமும் நிறைந்ததில் அங்கை,

என் வாழ்நாளில இப்படி ஒரு ருசியான சாப்பாட்ட சாப்டதில்ல என்றாள்.

துர்க்கா  சிரித்துக் கொண்டே அவளின் தட்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டு  பின் வாசலுக்குப் போனாள். தட்டிலிருந்த எலும்புகளை வாரி ஜீஜீஜீ என நாயைக் கூப்பிட்டு அதற்கு வைத்தாள். கையைக் கழுவிக் கொண்டு உள்ளே வந்தாள். அங்கை அதற்குள் பாயை விரித்திருந்தாள். இருவரும் படுத்துக் கொண்டார்கள். முன் கதவையும் பின் கதவையும் திறந்துவிட்டிருந்தார்கள். வெக்கை இல்லை. குளுமையாய் காற்று வீசியது.

“பக்கத்துல எங்கயோ மழ பெய்யுதுன்னு நினைக்கிறேன்” என்றாள் அங்கை.

“ம்ம் பெய்யும்”  என்றபடியே துர்க்கா உறங்கிப் போனாள்.

அங்கையும் தூக்கத்திலாழ்ந்தாள்.

காலையில் சமையல் செய்யும் ஓசைதான் அங்கையை எழுப்பியது. எழுந்து காபிக் குடித்துக் கொண்டிருக்கும்போது சாமி வந்தான். துர்க்கா அவனைப் பார்த்து

“குளிச்சிட்டு வா சாப்டுட்டு கடைய போய் தொற” என்றாள்

சாமி அவளையே பார்த்தான்.

“ஏன் அந்த சாமியாரு இல்ல?”

”அவரு வூட்டுக்கு போய்ட்டாரு”

சாமிக்கு சகலமும் புரிந்தது போலிருந்தது. வேறு எதுவும் கேட்காமல் பின் வாசலுக்குப் போய் குளித்தான். உள்ளே வந்து இட்லியையும் நேற்று மீந்திருந்த கறிக்குழம்பையும் சாப்பிட்டான். கடை சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

துர்க்கா அவனை நிறுத்திச் சொன்னாள்,

“வாடின பூவ காளியம்மன் கோவிலுக்கு கொடுத்திரு. நான் ஜோதி மார்கெட் போய்ட்டு உதிரி வாங்கிட்டு கடைக்கு வரேன்”

சாமிக்கு உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது. கடைசியில் அவள் தன்னை மன்னித்தே  விட்டாள். வெளியே வெயில் சுத்தமாய் இல்லை. மேகம் அடர்ந்திருந்தது. சாலையில் யாரோ பேசிக் கொண்டார்கள்.

“ரெயில்வே கேட்டுக்கு அந்தாண்டலாம் மழயாம்.., விடிகால்ல வேளனந்தலு, ஆவுரு கிட்ட லாம் ஊரப்பட்ட மழையாம்.., ”

இன்னொருத்தர் சொன்னார். ” அப்ப  இங்கயும் வரும். ”

சாமி உற்சாகமாய் நடக்க ஆரம்பித்தான்.

- மேலும்

Monday, July 10, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து ஒன்பது

சாமி பூக்கடையைச் சுற்றிச் சுற்றி வந்தான். வழக்கமாய் காலை ஏழு மணிக்கெல்லாம் துர்க்கா வந்து கடையைத் திறந்துவிடுவாள். இன்றோ மணி ஒன்பதாகப் போகிறது. இதுவரை அவளைக் காணோம். இன்னிக்கு என்னாச்சின்னு தெரியலயே என முனகிக் கொண்டான். வீட்டிற்குப் போய் பார்க்கலாம் என நடக்க ஆரம்பித்தான். ரமணாசிரம நூலகத்தை ஒட்டியுள்ள இறக்கமான சாலை  நடக்க ஏதுவாக இருந்தது. இந்தச் சாலையில் மட்டும் இன்னும் மரங்கள் இருக்கின்றன. காலை வெயில் தெரியாத அளவிற்கு மரங்கள் அச்சாலையை மூடியிருந்தன.  மயிலின் அகவலோசை அந்த அமைதியை அவ்வப்போது கிழித்துக் கொண்டிருந்தது.  தாமரை நகர் வேலைக்குச் செல்லும் மனிதர்களால் அடர்ந்திருந்தது. இருசக்கர வாகனங்களின் ஓசை சாலையை நிறைத்தது. வெயில் முகத்தில் வந்து இறங்க சாமி மிக சோர்வாய் உணர்ந்தான்.

நேற்று சாயந்திரம்  ரவியின் வீட்டிலிருந்து மிதமாய் இறங்கினான். நடந்து நடந்து மலை சுற்றும் பாதையிலிருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்காய் வந்தான்.  அங்கு எந்தக் காலத்திலும் காற்று அவ்வளவு குளுமையாய் இருக்கும். கிளை விரித்துப் படர்ந்திருந்த  கல்யாண முருங்கை மரத்தடியில் துண்டை விரித்துப் படுத்துவிட்டான். சாமி இந்த நகரை நடந்து நடந்தே தேய்த்தான். அவனால் அரை மணி நேரம் ஒரு இடத்தில் இருக்க முடியாது. கிட்டத்தட்ட உயிருக்குப் பயந்துதான் திருவண்ணாமலைக்கு வந்தான். அன்று அதிகாலை சங்கராபுரத்திலிருந்து இவர்களைச் சுமந்து வந்த லாரி தேனிமலையில் இறக்கிவிட்டது. அவன் ஆயா வீடு நினைவிற்கு வரவே துர்க்காவுடன் முதலில் அங்குதான் போனான்.அங்கு அவனை உட்காரச் சொல்லக் கூட யாருமில்லை. துர்க்கா அதை எதிர்பார்க்கவும் இல்லை. அவளாக அக்கம் பக்கம் விசாரித்து காலியாக இருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தாள். கழுத்தில் போட்டிருந்த தாலி மட்டும்தான் தங்கம். அதை யோசிக்காமல் போய் விற்றுவந்தாள். இந்த வேலைதான் என்றில்லாமல் எல்லா வேலையையும் செய்தாள். ஒரு கடை வைத்து உட்கார்ந்த பிறகுதான் வாழ்வு நிமிர்ந்தது. சாமி அப்போதும் ஊரைச் சுற்றி வந்தான். இதோ இன்றளவும் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

முகத்திலறையும் சூரியனை ஒரு கையால் மறைத்துக் கொள்ள முயன்றபடியே வேக வேகமாய் நடந்து வீட்டை நெருங்கினான்.  கதவு சாத்தியிருந்தது. வாசல் கூட்டவில்லை. வெளியூர் எங்காவது போய்விட்டாளா என யோசனையாய் அருகில் வந்தவன் கதவில் பூட்டு இல்லை என்பதை கவனித்தான். துர்க்கா துர்க்கா என அழைத்தபடியே கதவை வேகமாய் தட்டினான். உள்ளே அவள் வரேன் என மெல்ல முனகும் ஓசை கேட்டது.

“இன்னா ஒடம்பு கிடம்பு சரியில்லயா, கதவ தெற மே”

 கதவு திறந்தது

துர்க்கா சிவந்த விழிகளுடன் கதவைத் திறந்துவிட்டு மீண்டும் போய் படுத்துக் கொண்டாள்.

”என்னா ஒடம்புக்கு?”

”ஒண்ணுல்ல. அந்த மாடத்துல அம்பது ரூபா இருக்கு எடுத்துட்டு போ ”  எனச் சொல்லிவிட்டு திரும்பி படுத்துக் கொண்டாள்.

சாமி ஒரு கணம் அவமானத்தில் கூசினான். பின்பு சகஜநிலைக்குத் திரும்பி விளக்கு மாடத்தில் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியேறினான். முதன் முறையாய் அவள் மேல் பரிவு எழுந்தது. தன்னை நினைத்துக் குறுகினான்.  அதற்குள் தண்டராம்பட்டு சாலையைத் தொட்டு விட்டிருந்தான்.  சிற்றுண்டிக் கடை ஒன்றைப் பார்த்து நின்றான். உள்ளே நுழைந்து பத்து இட்லிகளையும் நான்கு வடைகளையும் கட்டிக் கொண்டான். வீட்டிற்குத் திரும்பி நடந்தான். வீட்டின் கதவு திறந்திருந்தது. துர்க்கா எழுந்துவிட்டிருந்தாள். இவன் திரும்பியதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

சாமி இட்லிப் பொட்டலத்தை நீட்டினான். துர்க்கா எதுவும் பேசாமல் வாங்கி அதைப் பிரித்து ஒரு வட்டிலில் ஐந்து இட்லிகளையும் இரண்டு வடைகளையும் போட்டு அவனிடம் நீட்டினாள்.  அவளும் கீழே  உட்கார்ந்து கொண்டு அந்த இலையிலேயே சாம்பார் ஊற்றி சாப்பிட ஆரம்பித்தாள். நேற்று மதியமும் இரவும் அவள் சாப்பிட்டிருக்கவில்லை.  இருவரும் எதுவும் பேசாமல் உண்டார்கள். சாப்பிட்டதும் சாமி எழுந்து கொண்டான். கட இன்னிக்கு தெறக்கலயா என மட்டும் கேட்டான். துர்க்கா இல்லை என தலையசைத்தாள்.

அப்ப ரெஸ்ட் எடு எனச் சொல்லியபடி வெளியேறினான்.  நடக்கையில்  ஏதோ ஒரு நல்லதைச் செய்ததைப் போன்ற உணர்வு அவனிற்குள் தோன்றி மறைந்தது.

அவன் போனதும் துர்க்கா கதவை அடைத்தாள். பாயை விரித்துப் போட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள்.  இப்படி ஒரு துக்க உணர்வை அவள் வாழ்நாள் முழுக்க அனுபவித்ததில்லை. தன்னை திடமானவளாக தைரியமானவளாகத்தான் நினைத்துக் கொள்வாள். அதன் படி நடந்தும் கொள்வாள். நேற்று  அகத்திய மாமுனியை ஆட்டோவில் ஏற்றிவிட்ட பிறகு ஏனோ அவள் மனம் அதற்கு முன்பில்லாத பாரத்தை உணர்ந்தது. நினைவு முழுக்க அவரோடு நடந்த முதல் காட்டுக் கலவியே நிறைந்திருந்தது. ஒன்றன் பின் ஒன்றாய்  இதேப் பாயில் நிகழ்ந்த கலவிகளையும் நினைத்துக் கொண்டது. எவ்வளவு ஆழமான உறவது. மாமுனி அத்தனை பரிசுத்தமானவராக இருந்தார். அவரோடு முழுமையாய் முயங்கினாள். முழுமையாய் வாழ்ந்தாள். பத்து நாட்கள் இருக்குமா? தான் இழந்த எல்லாமும் தனக்குத் திரும்பி வந்து விட்டதாய் உணர்ந்தாள்.

இந்த நொடி வரை சாமிநாதனை அவள் மன்னிக்கவில்லை. அவனோடு படுக்கவும் இல்லை. அந்தத் தெருவின் எல்லா காமக் கண்களையும் அவள் அசாதாரணமாகக் கடந்தாள். அவளுக்கு யாரைப் பிடித்திருந்ததோ அவர்களோடு கூடினாள். ஆனாலும் அவர்களை தூரத்திலியே வைத்திருந்தாள். மாமுனியைத்தான் முதன் முறையாய் வீட்டிற்குள் அனுமதித்தாள். அவரின் அமைதியும் களங்கமின்மையும் அவளிற்குள்  உறைந்திருந்த ஒரு மென்மையை கண்டறிந்தது. காதலுணர்வு என்பதை முதன் முறையாய் உணர்ந்தாள். அதில் மூழ்கியும் திளைத்தாள். பத்தே நாட்களில் எல்லாம் போனது. துர்க்காவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பெருங்குரலில் உடைந்து அழுதாள். சூரிய வெப்பம் ஓடுகளில் இறங்கி அவ்வீட்டைத் தகிக்கச் செய்தது. உயிர் வாழ்வதின் மீது அவளுக்கு முதன்முறையாய் அலுப்பு தோன்றியது. அப்படியே உறங்கிப் போனாள்.

0

அங்கை கண்விழித்தபோது நேரம் உச்சியைக் கடந்திருந்தது. யாரும் அவளை எழுப்பவில்லை. நேற்று முழுக்கத் தூங்கியிருக்கிறாள். முந்தின நாள் பின்னிரவில் வீட்டிற்கு வந்து படுத்ததுதான். அப்படி ஒரு தூக்கம். நேற்று மதியம் விழிப்பு வந்ததும் எழுந்து போய் குளித்துவிட்டு லேசாய் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்டாள். இரவு முழுக்கத் தூங்கி இதோ இன்றையப் பகல் முழுக்கத் தூங்கியும் சோர்வும் அசதியும் அவளை விட்டு நீங்கவில்லை.  வீட்டில், அமைதி இருளைப் போல நிரம்பி இருந்தது. உடல் வலி தாங்க முடியாததாய் இருந்தது. சிரமப்பட்டு எழுந்து போய் குளித்தாள். குளிர் நீர் பட்டதும் மனம் சற்று சாந்தமானது. வெகு நேரம் குளித்தாள். முந்தா நாள் நிகழ்ந்த சம்பவங்கள் யாவும் மீண்டும் மனதில் வந்து உட்கார்ந்து கொண்டு தலையை அழுத்தின. அங்கைக்கு ஏனோ மீண்டும் சமுத்திர ஏரிக்கரைக்குப் போக வேண்டும் போலிருந்தது. அவளும் சங்கமேஸ்வரனும் கலவிய மரத்தடியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. குளியலறையில் இருந்து வெளியே வந்தாள். உடையணிந்து கொண்டாள். வாசல் கதவு மூடியிருந்தது. அப்பா வேலைக்குப் போய்விட்டிருப்பார். தம்பி பள்ளிக்கூடத்திற்கு. அம்மா கடைக்கு ஏதாவது போயிருக்கலாம். வந்ததும் சொல்லிவிட்டுப் போகலாமா என யோசித்தாள். ஆனால் அதுவரை காத்திருக்க முடியாது. அங்கை உள்ளே போய் தம்பியின் நோட்டிலிருந்து ஒரு தாளை கிழித்தாள். கோவிலுக்குப் போகிறேன் என எழுதி கதவிடுக்கில் வைத்துவிட்டு கதவை மூடிவிட்டு கிளம்பினாள்.

உச்சி வெயில் மண்டையில் இறங்கியது. நேற்று மதியம் லேசாய் சாப்பிட்டிருந்ததோடு சரி. வயிறு எரிந்தது. பசியிலும் சோர்விலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. மயங்கி விழுந்துவிடுவோமோ எனப் பயந்தாள். மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தாள். சமையலறையில் சாதம்,  ஈயக் குண்டானிலிருந்து அகலக் கிண்ணத்தில் கஞ்சி வடிந்து கொண்டிருந்தது. நிமிர்த்தினாள். சூடு ஆறியிருந்தது. அம்மா நேரத்திலேயே போய் இருக்க வேண்டும். கையினாலேயே சாதத்தை எடுத்து வடிந்திருந்த கஞ்சிப் பாத்திரத்தில் போட்டு கரைத்துக் குடித்தாள். காலி வயிறு சப்தம் எழுப்பியது. நிதானமாய் குடித்துவிட்டு சாதத்தைக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு முன்பு போலவே வெளியே வந்தாள். தகிக்கும் வெயிலை அவள் பொருட்படுத்தவில்லை பத்தடி நடந்ததும்தான் செருப்பு போடாமல் வந்ததை தார்ச்சாலை நினைவுபடுத்தியது. திரும்பி வீட்டிற்குப் போக அலுப்பாக இருந்தது. சாவப் போகும்போது செருப்பெதுக்கு என வாய்விட்டு சொல்லிக் கொண்டாள். உண்மையாகவேவா சாகப் போகிறோம் என மனதிற்குள் கேட்டுக் கொண்டாள். திடீரென சாவின் மீது ஆசை வந்தது. செத்துதான் போனால் என்ன?  ஒரு வேளை சங்கமேஸ்வரனும் அங்கிருப்பானோ? நேற்றுப் போனவன் இன்று வரும் என்னை ஆசையாய் கட்டிக் கொள்வானில்லையா திடீரென அவள் மனம் துள்ளியது. தானும் இதே சாலையில் வேகமாய் வரும் ஒரு வாகனத்தின் முன்பு விழுந்து செத்து விடலாம் என முடிவு செய்தாள். ஆனால் ஆனால் அதற்கு முன்பு அந்த இடத்தை ஒரு முறை பார்த்து விட வேண்டும். அங்கை சமுத்திர ஏரிக்கரையை நோக்கி நடந்தாள்.

0

துர்க்கா மூச்சிற்காக ஏங்கினாள். அவ்வளவு பெரிய நீர்ப்பரப்பு மற்ற ஆண்களைப் போலவே அத்தனை ஆசையுடன் அவளை விழுங்கப் பார்த்தது. கால்களை உதறி உதறி நீரின் மேற்பரபரப்பிற்கு வந்து மீனைப் போல வாயைத் திறந்து காற்றிற்கு ஏங்கினாள். ஆனால் நொடிக்கும் குறைவாய் அவள் உடலை நீர் உள்ளே இழுத்தது. தண்ணீரை மேலும் குடித்தாள். உடல் வீங்க வீங்க மேலே வரும் வழிகளனைத்தும் அடைத்துக் கொண்டன. கடைசி சுவாசத்திற்கான வாய்ப்பு அறுபட்டபோது துர்க்காவிற்கு விழிப்பு வந்தது. அலறி எழுந்தாள். வியர்வையில் குளித்திருந்தாள். அணிந்திருந்த ஜாக்கெட் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தது.  அறை தகித்துக் கொண்டிருந்தது. எழுந்து போய் அடைந்திருந்த கதவுகளைத் திறந்தாள். துண்டை எடுத்து முகத்தை துடைத்தாள். அணிந்திருந்த உடைகளை கழட்டிப் போட்டு துண்டைக் கட்டிக் கொண்டு பின் வாசலுக்குப் போய் குளித்தாள்.

என்ன மாதிரியான கனவிது. அந்த நீர்ப்பரப்பு அவ்வளவு பெரிதாய் இருந்தது. அதை எங்கேயோ பார்த்திருக்கிறோம். யோசிக்க யோசிக்க அது சமுத்திர ஏரி என்பது அவள் நினைவிற்கு வந்தது.  ஒரு அடர்ந்த மழைக்காலத்தில் அவள் அங்கு போயிருக்கிறாள். அந்தப் பரந்த நீர்பரப்பை லேசான பயத்தோடு பார்த்து வந்திருக்கிறாள். பூக்கடை வைத்தபிறகு அவள் உலகம் சுருங்கிப் போனது. கடையையும் வீட்டையும் தாண்டி எங்கும் போவது கிடையாது.  ஏனோ இன்று அவளுக்கு அங்கே போக வேண்டுமெனத் தோன்றியது. குளித்து விட்டு வந்ததும் உடையணிந்து கொண்டாள்.  தலைவார பொறுமையில்லாமல் கூந்தலை உதறி பெரிய கொண்டை போட்டுக் கொண்டாள். சாந்து பொட்டை மட்டும் வைத்துக் கொண்டு வெளியில் வந்தாள். கதவை சாத்தி எரவாணத்தில் சொருகி வைத்திருந்த செருப்பை இழுத்து கீழே போட்டு காலில் அணிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள். வெயில் உக்கிரமாய் இருந்தது.  பசி வயிற்றைக் கிள்ளியது பொருட்படுத்தாமல் நடக்க ஆரம்பித்தாள். தாமரை நகர் தாண்டி, அரசுக் கல்லூரிக்கு குறுக்கில் நடந்து சமுத்திர ஏரி செல்லும் சாலைக்கு வந்து சேர்ந்தாள். இடைப்படும் கிராமத்தில் நிறைய மரங்களிருந்தன. வெயிலின் உக்கிரம் தெரியவில்லை. ஏரிக்கரை அடிவாரப் பாதையில் அடர்ந்த மரங்கள் துவங்கும் இடத்திற்கு வந்ததும் அவள் மனம் சமாதானமாகியது. உயர்ந்த மரங்களின் குளுமையும் காற்றும் அவள் பசியை மட்டுப்படுத்தியது. மெதுவாய் நடக்க ஆரம்பித்தாள். கிளைகள் விரித்துப் படர்ந்திருந்த அரச மரமொன்று முதலில் வந்தது. இந்தச் சரிவில் ஏறிப்போய்  நீர்ப்பரப்பை வெயிலில் பார்க்க அலுப்பாய் இருந்தது. மரத்தடியில் கொஞ்ச நேரம் படுத்திருந்து விட்டு மாலையானதும் ஏரி மீது ஏறலாம் என்கிற நினைப்பில் அரசமரத்தடிக்காய் சென்றாள்.

அரசம் பழங்கள் மண்ணில் உதிர்ந்து கிடந்தன. ஏராளமான பறவைகளும் கிளிகளும் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. எறும்பில்லாத இடமாய் பார்த்து அமர்ந்தவள் சுற்று முற்றம் பார்த்தாள். யாரும் கண்ணிற்குத் தென்படவில்லை. தொலைவில் ஆடுகளும் மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. முந்தானையை அவிழ்த்து தரையில் போட்டுப் படுத்துக் கொண்டு கண் மூடினாள். அவ்வளவு நிம்மதியாக இருந்தது. தூக்கத்தில் விழ இருந்தவளை வெடித்த அழுகைக் குரலொன்று அடித்து எழுப்பியது. அரண்டு எழுந்தவள் அழுகை வந்த மரத்தின் பின்புறத்தை நோக்கி நடந்தாள். அங்கை மண்ணில் குப்புற விழுந்திருந்தாள். அவள் துக்கம் அழுகையாய் வெடித்திருந்தது. பதறிய துர்க்கா ஓடிப்போய் அவளைத் தூக்கினாள்

யார் யார் மா நீ ? ஏன் இங்க வந்து கிடக்குற என்றவளை அங்கை நிமிர்ந்து பார்த்தாள்.  துர்க்காவின் அகலப்பொட்டும் ஆகிருதியான உடலும் அவளை என்னவோ செய்ய அம்மா எனக் கதறியபடியே அணைத்துக் கொண்டாள். துர்க்கா அவளை அணைத்தபடியே மண்ணில் அமர்ந்தாள். அவளை வாரி மடியில் போட்டுக் கொண்டு முதுகை நீவினாள். அழதாடா அழாதடா எனத் தட்டினாள். அங்கை தன் வாழ்நாளில் உணர்ந்திராத வெதுவெதுப்பை சமாதானத்தை உணர்ந்தாள். எழ மனமில்லாமல் எழுந்து அமர்ந்தாள். துர்க்கா அவள் கூந்தலைக் கோதி மண்ணைத் தட்டிவிட்டு புடவையில் ஒட்டி இருந்த மண்ணையும் தட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். அங்கை மீண்டும்  அவள் மடியில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

துர்க்காவிற்கு அந்தப் பெண் மீது அளவில்லா வாஞ்சை தோன்றியது. அடிக்கடிப் பார்த்த முகமாகத்தான் இருந்தது. அவளிடம் எதுவும் கேட்கத் தோன்றவில்லை.

“உனக்கு என்னனாலும் அம்மா இருக்கண்டா.., அம்மா இருப்பண்டா எப்பவும்..”

 என்றெல்லாம் சொல்லி அவளைத் தேற்றிக் கொண்டிருந்தாள். அங்கை படாரென எழுந்தாள்.

“நான் இங்க  சாகலாம்னுதான் வந்தன்.   ஏன்னு தெரியல உங்களப் பாத்ததும் சாகிற எண்ணம் போய்டுச்சி. உங்களோடவே  வந்து இருந்துடவா?”

”வந்துடு தங்கம். சத்தியமா சொல்றேன் என்னோட வந்துடு. எனக்கும் யாருமே கெடையாது “

துர்க்காவும் உடைந்தாள். இருவரும் அணைத்துக் கொண்டார்கள்.

ஏரிச்சரிவிலிருந்து ஒரு உருவம் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அங்கைதான் முதலில் கவனித்து யாரோ வராங்க எனச் சொல்லியபடி அணைப்பிலிருந்து விலகினாள்.

துர்க்கா திரும்பிப் பார்த்தாள். சாமிநாதன் சிவப்புத் துண்டை தலைக்கு தலைப்பாகயாய் கட்டிக் கொண்டு வெயிலில் குளித்தெழுந்து வந்து கொண்டிருந்தான்.

- மேலும்


Saturday, July 8, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து எட்டு


காலையில் எழுந்து வேளானந்தல் போய் கொண்டிருந்தேன். நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து வந்த அம்மா,

" அமுதா ஊட்டுக்கார் செத்துட்டார்டா. போய்ட்டு வந்துரு. பக்கந்தான் வேளானந்தலாம். நம்ம ஆவூர் மாமா வூட்டதாண்டி. என்னால முடில நீ போய்ட்டு வந்துரு" எனப் படுத்துவிட்டாள்.

நானும் நிறைப் போதையில் இருந்தேன். சாமி அப்போதுதான் கிளம்பிப் போயிருந்தார். வீட்டு ஹாலிலேயே குடித்து விட்டு போட்டிருந்த நான்கு குவாட்டர் பாட்டில்கள் சிதறிக்கிடந்தன. நான் ரகசியமாய் வீட்டில் குடிப்பேனே தவிர இப்படி வெளிப்படையாய் குடித்தது இதுவே முதன் முறை. இனிமேல் ரகசியமாய் இருந்து என்னாகப் போகிறது என்கிற வெறுப்பு. சாமி ஏதோதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் பழைய வாழ்க்கை. சிறு பிராயம். மூங்கில் துறைப்பட்டுக் கதை. துர்க்காவை மணமுடித்த கதை. பாண்டல வாழ்க்கை. அவர் கொடிகட்டிப் பறந்தது. பின் வீழ்ந்தது. என எல்லாமும் சொல்லிக் கொண்டிருந்தார். இடையில் பெரியசாமி செத்தாரா பொழச்சாரா என்கிற கேள்வியை மட்டும்தான் கேட்டேன். அவன் பொழச்சதனாலதான் எங்கள யாரும் தேடி வரல என்றார் சாமி.

துர்க்காவிற்கு அங்கை பரவாயில்லை எனத் தோன்றியது. அங்கை ஒரு பூச்சி. ஏதேதோ பகற்கனவுகளில் மூழ்கியிருந்த பேதைப் பெண். நான் மட்டும் சரியாக இருந்திருந்தால் அவள் எனக்காக உயிரையே கொடுத்திருப்பாள். எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டேன். சில நாட்கள் போகட்டும். மெதுவாய் போய் அவள் காலில் விழுந்து கெஞ்சியாவது திரும்ப இந்த வீட்டிற்கு கூட்டி வந்துவிட வேண்டும். இந்தக் குடி எழவு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுத்தமாய், மிகத் தூய்மையாய் ஒரு வாழ்வை வாழ்ந்துவிட வேண்டும். என் நேற்றை திரும்பிப் பார்க்க எனக்கே கூசியது.

 அதிகாலையிலே போதை சுத்தமாகத் தெளிந்தது. கைவலி இல்லை. கழுத்தில் மாட்டியிருந்த கயிறை அறுத்துவிட்டேன். உடை மாற்றிக் கொண்டு வேளானந்தல் கிளம்பினேன். இந்தக் கையை வைத்துக் கொண்டு பஸ் ஏறிப் போவது சிரமம். அரச மரத்தடி ஆட்டோ ஸ்டேண்டிற்குப் போனேன். என்னோடு ஐந்தாவது வரை படித்த சங்கர் அங்கிருந்தான். என்னைப் பார்த்து

"இன்னா வாத்தி" என சிரித்தான்.

"வேளானந்தல் போய்ட்டு வரலாமா அமுதாக்கா வூட்டுக்காரர் செத்துட்டார் டா"

அவன் பரபரப்பானான்.

"அய்யோ எப்ப?"

நேத்து எனச் சொல்லி முடிப்பதற்குள் ஆட்டோவைக் கிளப்பி இருந்தான். ஏறி அமர்ந்து கொண்டேன். வேட்டவலம் சாலையில் ஆட்டோ விரைந்தது. சங்கர் மெதுவாகக் கேட்டான்.

" கைல ன்னா கட்டு? "

"கீழ வூண்டண்டா"

" குட்ச்சிட்டு வண்டில இருந்து வூண்டியா? இன்னாபா ரொம்ப குடிக்கறன்னு கேள்விபட்டேன்."

  ம்ம். ஆமாடா."

"  உனுக்கு இன்னா கொற? கவுர்மெண்ட் வேல. கண்ணுக்கு லெட்சணமா பொண்டாட்டி. சொந்த வூடு. அப்புறம் இன்னாடா?

"ஒண்ணும் இல்லடா. ஏதோ கிறுக்கு. வுடு. "

"ம்ம். எல்லாம் அப்படித்தான் பேசிக்கிறாங்க. நீ சின்ன வயசுல இருந்தே பட்ச்சுகினே இருப்ப. அதான் இப்படி. "

"எப்படி?"

" ஹாங் லூசாயிட்ட இல்ல அத சொன்னேன்."

 எனக்கு சிரிப்பு வந்தது. ஃப்ரியா வுட்றா டேய் என்றேன் 

"சரி சரி கைல ஏதாவது வச்சிருக்கியா?"

"   என்னது?"

" இல்லடா நீ எப்பவும் சரக்கும் கையுமாதான் இருப்பன்னு சொல்லிகிட்டாங்க. சாவுக்கு வேற போறம் அதான்" என இளித்தான்.

 ரெயில்வே கேட்டை வண்டி தாண்டி இருந்தது.

" கைல இல்லடா போற வழில வாங்கிக்கலாம்."

நல்லவேளையாக கடை எதுவும் திறந்திருக்கவில்லை. அப்புறம் பாத்துக்கலாம்டா நீ ஓட்டு என்றேன். வேளானந்தலுக்குள் வண்டி நுழைந்தது. மிகச் சிறிய கிராமம். சாவு வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் எதுவுமில்லை. சாவு மேளம் உக்கிரமாய் இருந்தது. பாட்டுக்கார லட்சுமி உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தாள். பத்துப் பதினைந்து பெண்கள் முதுகை சேர்த்தணைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். அமுதாக்கா பிணத்தின் தலை மாட்டில் உட்கார்ந்திருந்தாள். பெயருக்கு கூட அவள் அழுததாய் தோன்றவில்லை. எங்களை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. வாங்கி வந்திருந்த மாலையை பிணத்தின் கழுத்தில் போட்டேன்.

அமுதாக்கா எழுந்து வந்து வா என்றாள். அம்மாவுக்கு முடில என்றேன். நீ வந்ததே பெரிசு என புன்னகைக்க முயன்றாள். மேளம் அடிப்பவர்களிடம் போய் பத்து ரூபாய் கொடுத்தேன். பறை உக்கிரமாய் ஒலிக்க ஆரம்பித்தது. பாடை கட்டும் ஏற்பாடுகளை யார் பார்க்கிறார்கள் என விசாரித்தேன். ஒருவர் அதற்கான முயற்சியில் இருந்தார். அவரிடம் இருபது ரூபாய் தாளொன்றை நீட்டினேன்.

அவர் பூ வோணும் சார் கொஞ்சம் தென்னங்கீத்து வேணும் என்றார்.

சங்கரை அழைத்து இருநூறு ரூபாய் கொடுத்தேன். அவனுக்கு கோட்டர் வாங்கிக் கொண்டு பூ வாங்கி வரச் சொன்னேன். இளிப்பாய் நகன்றான்.

அந்த ஓட்டு வீட்டிற்குள் போய் கத்தியைத் தேடி எடுத்துக் கொண்டு தோப்பிற்குப் போனேன். மரம் ஏறத் தெறிஞ்சவங்க யாராவது இருக்கீங்களா என்றதற்கு இரண்டு இளைஞர்கள் முன் வந்தனர். போய் தென்னங் கீற்றுகளை வெட்டி வந்தோம். பாடை தயாரானது. சங்கர் பூக்கூடையை கொண்டு வந்து கொடுத்து விட்டு ஆட்டோவில் போய் படுத்துக் கொண்டான்.

பிணம் கிளம்பியது. கழியின் முன் பாகத்தைத் தாங்கிக் கொண்டு சுடுகாடு போனோம். குழி தயாராக இருந்தது இறக்கி வைத்துவிட்டு சடங்குகளை கவனித்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். அமுதாக்கா வீட்டை நீரால் கழுவி இருந்தாள். அங்கிருந்த சிறு திண்ணையில் அமர்ந்து கொண்டேன். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. உடன் யாருமே இல்லை. எல்லோருமே கிளம்பிப் போயிருந்தார்கள். சங்கரிடம் மேலும் ஒரு நூறு ரூபாய் தாளைத் தந்து போய்விடச் சொன்னேன். அம்மாவிடம் நாளை வருவதாய் சொல்லச் சொன்னேன். அதற்குள் அமுதாக்கா குளித்திருந்தாள். என்னையும் குளிக்கச் சொன்னாள். அணிந்திருந்த உடையோடு போய் தலைக்கு நீரூற்றிக் கொண்டேன். ஒரு புது வேட்டியை எடுத்து வைத்திருந்தாள். கட்டிக் கொண்டு வெறும் உடம்போடு வாசலில் அமர்ந்தேன். அமுதாக்கா யாரையோ அழைத்து பால் வாங்கி வரச் சொன்னாள். ஏழு மணி வாக்கில் எவர் சில்வர் டம்பளரில் டீ வந்தது . களைத்திருந்தேன். டீயை அமிர்தமாய் குடித்தேன்.

அமுதாக்காவும் ஒரு புதுப்புடைவையை அணிந்து கொண்டு உலை வைத்திருந்தாள். இருள் அடர்ந்து வந்தது. எந்தப் பிடிமானமும் இல்லாமல் இவள் எப்படி இத்தனை வருடம் வாழ்ந்தாள் என்கிற எண்ணம் வந்து போனது. எட்டு மணி வாக்கில் சுடச்சுட சாதத்தையும் குழம்பையும் எடுத்து வந்து வாசலில் வைத்தாள். அவளையும் சாப்பிடச் சொன்னேன். சேர்ந்து சாப்பிட்டோம். சாவு வீட்டின் காமம் துலக்கமாய் என்னுடலில் ஏறியது. குண்டு பல்பு வெளிச்சத்தில் அமுதா ஒளிர்ந்தாள். வெளியே பாய் கொண்டு வந்து போடச் சொன்னேன். அவள் மறுத்து உள்ளே வந்து படுக்கச் சொன்னாள். ஒரு புதுப் பாயை அந்தச் சிறுவீட்டின் நடுவில் விரித்து தலையணைகளைப் போட்டாள். சாவு வீட்டுப் பூ வாசம் இன்னும் மீதமிருந்தது. உடலளவிலும் மனதளவிலும் நான் நசுங்கி இருந்தேன்.

வாசல் கதவைத் தாழிட்டுவிட்டு,  தன் புடவையைக் களைந்து விட்டு என்னருகில் வந்து படுத்துக் கொண்டாள். நான் மிக மெதுவாய் மிக ஆழமாய் அவள் உதடுகளில் முத்தினேன். அவ்வளவு தவிப்போடும் அவ்வளவு ஆசையோடும் என்னை ஏந்திக் கொண்டாள். அதுவரை எனக்குப் பழகிய உடல்கள் யாவும் உடலின் பழக்கங்களைப் போலவே இல்லை. அத்தனை புத்தம் புதிதாய் ஒரு கதவு திறந்தது. உடலின் மாய வெளி எங்கள் இருவருக்குமாய் திறந்து கொண்டது. அத்தனை துக்கங்களையும் அதுவரைக்குமான இழப்புகளையும் நாங்கள் பறிமாறிக் கொண்டோம். ஒரு தேவ ரகசியம் உடைந்து எங்களை எங்களுக்கே புதிதாய் அறிமுகப் படுத்தியிருந்தது. என் எல்லா பாவங்களும் அவள் உதட்டு நீரில் கரைந்தன. நான் மேலும் மேலும் எழுந்தேன். கரைந்தேன். அவளுடலில் தஞ்சமடைந்தேன். வறண்டு போன அவளின் உணர்வுகளனைத்தும் துளிர்த்தன. ஆழ்ந்த கலவிக்குப் பிறகு எங்களின் வெற்றுடல்கள் ஓய்ந்தன.

அதிகாலையில் கூரையின் மீது மழைத்துளி விழுந்த சப்தம்தான் என்னை எழுப்பியது. அப்படி ஒரு உறக்கம். என் வாழ்நாள் முழுக்கத் தூங்கியிராத உறக்கம். பால்யத்திற்குப் பிறகு அவ்வளவு ஆழமாய் போதையில்லாது உறங்கியிருக்கிறேன்.  மின்னல் வெட்டியது. படுத்த வாக்கிலேயே அவ் வெளிச்சத்தில் அமுதாவின் முகம் பார்த்தேன். அவள் அசையாமல் தூங்கிக் கொண்டிருந்தாள். யுகங்களாய் தீர்ந்திரா அலைவுறல்களின் முடிவு அவள் முகத்தில் துலக்கமாய் தெரிந்தது. இனி எழவே போவதில்லை என்பது போல் உறங்கிக் கொண்டிருந்தாள். நான் அதைக் கலைக்காது அந்த வீட்டின் மிகப் பழைய பின்  கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தேன். மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. இருள் விலகியிருக்கவில்லை. இடுப்பில் இருந்த வேட்டியையும் அவிழ்த்தெறிந்து விட்டு மழையில் போய் நின்றேன். உடல் சிலிர்த்து சிலிர்த்து அடங்கியது. நானொரு புதுப் பிறப்பெடுத்தேன்.

- மேலும்

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தேழு

" ஐயோ என்ன விட்டுடு"

என்கிற சாமிநாதனின் கதறலை துர்க்கா பொருட்படுத்தவில்லை. தரையில் மல்லாந்து கிடந்தவனின் மார்பில் இன்னொரு முறை ஆத்திரம் மிக மிதித்தாள். அவன் மார்பெலும்புக்கூடு உடைந்திருக்கலாம். சாமிக்கு நெஞ்சு அடைத்துக் கொண்டது. செத்தோம் என நினைத்ததுதான் அவன் கடைசி நினைவு. ஏற்கனவே போதையின் பிடியில் இருந்தவன் சுத்தமாய் மயங்கினான். மரண பயம் உறைய இன்னொரு மூலையில் பெரியசாமி மண்டை உடைந்து கிடந்தார். இரத்தம் வழிந்து அவர் அணிந்திருந்த சட்டையின் நிறத்தை மாற்றியிருந்தது. அவர் மண்டையைப் பிளந்த உலக்கை துர்க்காவின் கையில் இருந்தது. போதைக்கு அவள் தன்னை முழுமையாய் ஒப்புக் கொடுத்திருந்ததால் பச்சாதாபங்கள் காணாமல் போயிருந்தன. திருட்டுத் தாயோலிங்களா என ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தவளின் மூச்சிரைத்தது. உலக்கையை எறிந்துவிட்டு வெளித் திண்ணையில் போய் அமர்ந்து கொண்டாள். அக்கம் பக்கம் இருந்தவர்கள் வீட்டை நோக்கி வர ஆரம்பித்தார்கள். இவர்கள் போட்ட சப்தம் கேட்டு சற்றுத் தொலைவில் இருந்த பெரியசாமி கவுண்டர் வீட்டு விளக்குகள் சடாரென எரிந்தன. நான்கைந்து பேர் ஓடி வந்தார்கள். இவள் ஒரு பிசாசைப் போல வெளியே அமர்ந்திருந்ததைப் பார்த்து சந்தேகித்து உள்ளே ஓடினார்கள். அய்யய்யோ எனக் கத்தியபடியே பெரியசாமியைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தார்கள். கார எட்றா கார எட்றா எனக் கத்தினார்கள். கவுண்டர் வீட்டுப் பெண்கள் சூழ்ந்து கொண்டு கதற ஆரம்பித்தார்கள். அந்த இரவு அலங்கோலமாய் கிடந்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை.

 சாமிநாதனை யாரோ எழுப்பிப் பார்த்தார்கள். அவன் மயங்கி இருந்தான். செத்துட்டானா என சந்தேகித்து மார்பில் காதை வைத்துக் கேட்டார்கள். உசிரு இருக்குது. இவனையும் வண்டில தூக்கி போடுங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போங்க என்பதைக் கேட்க யாருமில்லை. வண்டி ஏற்கனவே மருத்துவமனையை நோக்கி விரைந்திருந்தது. துர்க்காவை கவுண்டர் வீட்டுப் பெண்கள் உலுக்கிக் கொண்டிருந்தனர். என்னாச்சின்னு சொல்லுடித் தேவ்டியா முண்ட என அவர் கன்னத்தில் பளார் பளாரென அறைந்தார்கள். துர்க்கா உறைந்திருந்தாள். அவளை யாரும் எதுவும் செய்துவிட முடியவில்லை. திருட்டு முண்ட குடிபோதையில இருக்கு என ஆத்திரத்தில் அவளை ஓங்கி அறைந்தார்கள். துர்க்கா அப்படியே சரிந்தாள். 

 ழைய பெட்டியில் ஒன்றையும் தேற்ற முடியாத ஆத்திரத்தில் வெளியே வந்த சாமிநாதன் நேராய் பெரியசாமி கவுண்டர் வீட்டு முன்பு போய் நின்றான். அவர் வெளியில் எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்தார். இவனைப் பார்த்து முன்பு போல சிரிப்பதில்லை. என்ன சாமி எனப் பொதுவாக கேட்டார். சாயந்திரம் வீட்டுப் பக்கம் வாங்க, உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசனும் எனச் சொல்லிவிட்டு பதிலைக் கூட எதிர்பாராமல் வீட்டிற்குப் போனான். துர்க்கா இன்னும் எழவில்லை. அவள் உறங்கும் கோலம் பார்த்ததும் இவனிற்குள் ஆத்திரம் முசுமுசுவென மூண்டது. இவ ஆங்காரத்த மொதல்ல அடக்கனும். சாமியின் மூளை தீவிரமாக யோசித்தது. கட்டிலுக்கு கீழே வைத்திருந்த விஸ்கி பாட்டிலகளில் ஒன்றை வெளியே இழுத்து, மூடியைத் திருகி அப்படியே வாயில் சரித்துக் கொண்டான். வெளியில் போய் உட்கார்ந்து கொண்டான். 

துர்க்கா அவன் அரவம் கேட்டு விழித்தாள். அவளின் தினசரியைத் துவங்கினாள்.சாமி மெதுவாக குடித்தான். சமையல் ஆனதும் உள்ளே வந்து சாப்பிட்டான். மீண்டும் வெளியில் போய் அம்ர்ந்து கொண்டான். துர்க்கா அவனைப் பொருட்படுத்தவில்லை. வீட்டு வேலைகளில் மூழ்கி இருந்தாள். மதிய சாப்பாட்டை ஒரு தூக்கில் போட்டுக் கொண்டு போய் அப்பாவிற்கு கொடுத்து விட்டு வந்தாள். அசதியில் மீண்டும் போய் கட்டிலில் படுத்துக் கொண்டாள். நான்கு மணி வாக்கில் பெரியசாமி வந்தார். 

இன்னா சாமி ஒரு மாதிரி இருக்கயே என்றபடியே திண்ணையில் அமர்ந்தார். சாமி அதுவரை மனதிற்குள் தீட்டிக் கொண்டிருந்த கணக்கை செயல்படுத்த ஆரம்பித்தான். 

இன்னிக்கு பவுர்ணமி காளி அப்படியே முழுசா எனக்குள்ள வந்து உட்கார்ந்திருக்கா அவள அமைதிபடுத்தத்தான் கொஞ்சம் போல குடிச்சேன் என்றபடியே திரும்பி பின்னால் வைத்திருந்த புட்டியை எடுத்து, தயாராய் வைத்திருந்த டம்ப்ளரில் கொஞ்சம் போல ஊற்றி பெரியசாமியிடம் நீட்டினான். குடிங்க என்றான். பெரியசாமி தயங்கினார். பொழுதோடவா என்றார். அட அடிங்க ஒண்ணும் ஆவாது என்றான். அவர் வாங்கி வாயில் சரித்துக் கொண்டார். நல்லாருக்கே என்றவரிடம் ஸ்காட்ச் என இளித்தான். இன்னொன்னு போடுங்க என்றபடி இரண்டாவது ரவுண்டை அதிகமாய் ஊற்றிக் கொடுத்தான். அதையும் வாங்கி ஒரெ மூச்சில் இழுத்தார். 

 சாமி தெம்பானான் அவன் நினைத்ததை விட இவர் பெருங்குடிதான். தொண்டையைக் கனைத்துக் கொண்டே 

 "கேக்குறேன்னு தப்பா நினைச்சுகாதீங்க இவ்ளோ சொத்துக்கும் வாரிசே இல்லாம இருக்கே என்னன்னாவது யோசிச்சீங்களா?" 

" எல்லாரும் கேக்குற கேள்விதான் சாமி, ஆனா என்ன செய்ய? காலம் கடந்திருச்சே., அவளுக்கும் ஒரு பொண்ணுக்கு மேல பொறக்கல..,"  

"சரி அதுல போய் என்ன இன்னொன்னு கட்டுங்க"  

"அட போய்யா., இந்த வயசுல  போய் " 

"என்னா வயசு போங்க. ஆள் பாக்க கிண்ணுதான இருக்கீங்க" 

 பெரியசாமி க்ளாசை நீட்டினார். இன்னொன்னு போடு. 

  சாமி ஆவலாய் நிரப்பிக் கொடுத்தான். அதையும் ஒரே மூச்சில் இழுத்து விட்டு எழுந்து போய் காறித் துப்பிவிட்டு வந்தார். 

 சாமி,  துர்க்கா எனக் கத்தினான். 

தூங்கிக் கொண்டிருந்தவள் அரண்டு எழுந்து வெளியில் வந்தாள். அவளைப் பார்த்ததும் சாமி இளித்தான். 

"கட்ச்சிக்க ஏதாவது எட்த்தாமே., அதிசியமா கவுண்டர் நம்மூட்டுக்கு வந்திருக்கார்" 

சேலையை சரியாகப் போடாமல் வந்து நின்றதால் துர்க்காவின் முலைகள் பளிச்செனத் தெரிந்தன. பெரியசாமி அவளை அப்போதுதான் முதன் முறையாய் பார்ப்பதுபோல அவ்வளவு ஆசையாகப் பார்த்தார். அவர் பார்வையை உணர்ந்து அவசரமாய் துர்க்கா உள்ளே திரும்பிப் போனாள். காய்ந்த மல்லாட்டை இருந்தது. அதை வறுத்து எண்ணெய் மிளகாய்த்தூள் போட்டு ஒரு தட்டில் கொண்டு வந்து வைத்தாள். பெரியாசாமி கொஞ்சம் அள்ளி வாயில் போட்டுக் கொண்டார். காரம் மூளையை எட்டியதும் ஹா என்னம்மா இருக்கு என்றார். 

 சாமி அடுத்த ரவுண்டை ஊற்றியபடியே 

"எல்லாம் நம்ம ட்ரைனிங்தான். அருமையா சமைப்பா, அத விட அருமையா குடிப்பா. போதையாயிட்டா அத விட அருமையா என்ன மேல தூக்கி போட்டுட்டு பண்ணுவா" 

எனச் சொல்லியபடி பெருங்குரலில் சிரித்தான். முகத்தை சுளித்த துர்க்கா அவசரமாய் உள்ளே போனாள். பெரியசாமிக்கு போதை ஏறியிருந்தது. அவன் சொன்னதைக் கேட்டதும் குறும்பாய் சிரித்தார். 

"உன்ன மட்டும்தான் பண்ணுவாளா?" என்றார். 

"உங்களுக்கும் வேணுமா?" என நேரடியாக ஆரம்பித்தான். 

அவர் லேசாக தடுமாறினார். 

"இதுல போய் என்ன கவுண்டரே. உள்ள போங்க" என்றான். 

பெரியசாமிக்கு உடல் முறுக்கியது எழுந்து உள்ளே போனார். துர்க்கா கட்டிலில் அமர்ந்திருந்தவள் எழுந்தாள். என்ன வேணும் என்றாள். நீதாம்மே என ஆசையாய் அவள் மீது பாய்ந்தார். துர்க்கா இதை எதிர்பார்திருந்தாள். மேலே வந்து விழுவதற்குள் ஒதுங்கிக் கொண்டாள். கட்டிலில் போய் விழுந்தவர் சுதாரித்துக் கொண்டு எழுந்தார். 

"இத பாரு நீ இப்ப இருக்கிறது என் வூடு. இன்னும் உனக்கு என்ன வோணும்னு கேளு தரேன். நான் யார்னு தெரியுமில்ல" 

என மீசையை நீவினார். 

 துர்க்கா நிதானமாய் சொன்னாள். "என் வூட்டுக்காரனுக்கு புத்தி பிசகிடுச்சி. உங்க மரியாதைய காப்பாத்திகிட்டு வெளிய போய்டுங்க" என்றாள். 

 பெரியசாமி ஆத்திரமானார். என்னடி பெருசா பத்தினி வேசம் போடுற என எழுந்து அவளைப் பிடித்து இழுத்து கட்டிலில் தள்ளி மேலே படர்ந்தார். துர்க்கா அவரைப் பிடித்து தள்ளினாள். தடுமாறியவரை எட்டி உதைத்தாள். கட்டிலிலிருந்து கீழே விழுந்தவரால் எழ முடியவில்லை. சத்தம் கேட்டு சாமி உள்ளே ஓடிவந்தான். துர்க்காவிற்கு ஆத்திரம் முற்றியிருந்தது. 

"அடத் தேவ்டியாபையா கட்ன பொண்டாட்டியவா கூட்டி கொடுக்கிற?" எனக்கத்தியபடியே அவன் மீது பாய்ந்தாள். சாமி அவளை மடக்கினான். அதே நேரம் பெரியசாமி சுதாரித்துக் கொண்டு எழுந்து  பின்புறமாய் அவள் சேலையை உருவி கைகளை பின்னால் வளைத்துக் கட்டினார். சாமி இன்னொரு பாட்டிலைத் திறந்து அவள் வாயில் ஊற்றினான். துர்க்கா முரண்டு பிடிப்பதை நிறுத்தியிருந்தாள். நிதானமாய் குடித்தாள். மயங்கியதைப் போல் உட்கார்ந்தாள். சாமி கள்ளச் சிரிப்புடன் வெளியேறினான். பெரியசாமி துர்க்காவை கட்டிலில் தள்ளி, பாவாடையே மேலே ஏற்றினார். அவள் அழகின் பிரம்மாண்டம் பார்த்த உடனேயே அவருக்கு கழண்டது. ஏற்கனவே பெரிய போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்ததால் உடல் விதிர்த்திருந்தது. அவளைத் தொடக் கூட இயலாமல் வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு வெளியேறினார். 

துர்க்கா கைகளை விடுவித்துக் கொண்டாள். சேலையை அணிந்து கொண்டாள். சமையலறைக்குப் போய் மூலையில் வைத்திருந்த உலக்கையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். சாமி அடுத்த ரவுண்டை பெரியசாமிக்கு ஊற்றிக் கொண்டிருந்தான். வந்து நின்றவளை இருவரும் கவனிக்கவில்லை. துர்க்கா உலக்கையை ஓங்கி பெரியசாமி மண்டையில் நச்சென இறக்கினாள். அலறக் கூட இயலாமல் அதிர்ச்சியில் சரிந்தார். சாமி மிரண்டான். அடுத்த அடி இறங்குவதற்குள் சுதாரித்து திண்ணையில் இருந்து இறங்கி ஓடினான். அவள் உலக்கையை எறிந்தாள். முதுகைப் பலமாய் தாக்கி தலைக் குப்புற விழுந்தான். 

சப்தம் வெளியில் கேட்கும் என யூகித்தவள் ஒரு கையால் பெரியசாமியின் தலைமுடியையும் இன்னொரு கையால் சாமியின் தலைமுடியையும் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து உள்ளே போட்டாள். பெரியசாமி எழுந்து கொள்ள முயன்றார். சாமி கூப்பாடு போட்டான். துர்க்கா மீண்டும் வெளியில் போய் விழுந்து கிடந்த உலக்கையை எடுத்து வந்து பெரியசாமி தலையில் இன்னொரு பலமான அடியை இறக்கினாள். அவர் முழுமையாய் மயங்கினார். சாமி தவழ்ந்து வந்து அவள் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.  

"போதைல புத்தி பிசகிடுச்சி மன்னிச்சு வுட்ரு" எனக் கதறினான். கால்களாலேயே அவனை விலக்கியவள். மார்பில் ஓங்கி மிதித்தாள். உலக்கையை வயிற்றில் இறக்கினாள். வலி தாங்க முடியாமல் மல்லாந்தவனின் மார்பில் இன்னொருமுறை ஆழமாய் மிதித்தாள். 
அவன் மூர்ச்சையானதும் உலக்கையை எறிந்துவிட்டு வெளியில் போய் அமர்ந்து கொண்டாள்.

அதிகாலையில் சாமிக்கு நினைவு திரும்பியது. ஒரு கணம் என்ன நடந்தது எனப் புரியாமல் விழித்தான். மெல்ல மெல்ல அந்த நாளின் சம்பவங்கள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தன. உடலை அசைக்க முடியவில்லை அடிவயிறும் நெஞ்சும் அப்படி வலித்தது. எழுந்து நின்றான். சமையலறைக்குப் போய் தண்ணீர் எடுத்துக் குடித்தான். பெரியசாமியைக் காணவில்லை. அவர் பிழைப்பது கடினம் எனத்தான் தோன்றியது. அவராகவே போயிருக்க வாய்ப்பில்லை. யாராவது வந்திருக்க வேண்டும். அவசரமாய் வெளியில் போனவன் திண்ணையில் சரிந்து கிடந்த துர்க்காவைப் பார்த்தான். செத்துப் போய்விட்டாளோ என்ற பய எண்ணம் அவனிற்குள் எழுந்தது. மெல்ல அருகில் போய் மூக்கில் விரல் வைத்துப் பார்த்தான். சுவாசம் இருந்தது. அவளைச்
 சப்தம் போடாமல் உலுக்கினான். உள்ளே ஓடிப்போய் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து அவள் முகத்தில் அடித்தான். மூன்றாவது தண்ணீர் விசிறலுக்கு எழுந்து கொண்டாள்.

எதிரில் நின்றிருந்தவன் மீது பாயத் தயாரானாள். சாமி அவள் பாதங்களில் விழுந்தான்.

"மொத மொறையா புத்தி பிசகி தப்பு பண்ணிட்டேன். மன்னிச்சிரு" எனக் கதறினான்.

துர்க்கா சற்று சாந்தமானாள். சாமி தொடர்ந்தான்.

"கவுண்டனுக்கு என்னாச்சின்னு தெர்ல ஆனா பொழைக்கிறது கஷ்டம்னு தோணுது. விடிஞ்சதுன்னா நம்மள பொலி போட்ருவானுங்க" என நடுங்கினான்.

துர்க்கா எழுந்தாள். கூந்தலை உதறி முடிந்து கொண்டாள். வெளியில் எட்டிப் பார்த்தாள். தூரத்து வீடுகளில் லைட் எரிந்தது. தீர்மானமாய் உள்ளே வந்து இரண்டு மஞ்சள் பைகளில் கிடைத்ததெல்லாம் எடுத்து நுழைத்தாள். வா போகலாம் என அவனை இழுத்துக் கொண்டு பின்புறமாய் வெளியேறினாள். வயல்களில் புகுந்து பிரதான சாலை வந்தனர். நடந்தே சங்கராபுரத்தை அடைந்த போது கிழக்கு வெளுக்க ஆரம்பித்திருந்தது. ஒரு பால் லாரி ஹார்ன் அடித்துக் கொண்டு வந்தது. துர்க்கா ஓடிப்போய் நடு சாலையில் நின்றாள். வண்டி நின்றது இருவரும் ஏறிக்கொண்டார்கள். சாமி, வண்டி எங்கப் போவுது என விசாரித்தான். ஓட்டுனர் திர்ணாமல போவுது என்றார்.

சாமி முகத்தில் சாந்தம் படர்ந்தது. அயற்சியில் துர்க்கா கண்களை மூடிக் கொண்டாள்.

 - மேலும்

Thursday, July 6, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தாறு

’எழுந்து வூட்டுக்கு போம்மா’

அசையாமல் அமர்ந்திருந்த அங்கையற்கன்னியை காவலுக்கு இருக்கும் முதியவர் வேண்டிக் கொண்டிருந்தார்.

மான் தன்னைச் சுற்றிக்கொண்டிருக்கும் கொசுக்களை காதால் விரட்டியபடி படுத்திருந்தது. எங்கும் இருள். திக்பிரம்மைப் பிடித்தவளாய் மானிற்கு சமீபமாய் அங்கை மண்ணில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்.

ஆசிரமத்தின் வாயிலைப் பூட்டியிருந்தார்கள். அங்கையை வெளியே அனுப்பிவிட்டால் காவலுக்கு இருப்பவரும் போய் படுத்துக் கொள்வார். அவளை அவருக்குப் பல வருடங்களாய் தெரியுமென்பதால் மிக சமாதானமாகவும் அன்பாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். அவள் அசையவில்லை. இருந்துவிட்டுப் போகட்டும் எனப் போய் படுத்துக் கொள்ளவும் முடியாது. அதிகாலையிலேயே தியான அறையைச் சுத்தம் செய்து பூஜை செய்ய ஆட்கள் வந்துவிடுவார்கள். இவளைப் பார்த்தால் தன்னுடைய வேலை போய்விடும். முதியவர் இதையெல்லாம் சொல்லி மன்றாடிப் பார்த்தார். ஆனால் அங்கை எங்கேயோ காணாமல் போயிருந்தாள். அவளுக்குத் தன்னைச் சுற்றி நிகழ்வதெதுவும் பிரக்ஞையில் இல்லை.

அங்கைக்கு கண்ணில் நீர் வழிந்தபடி இருந்தது. உடலும் மனமும் மொத்தமாய் வெதும்பிப் போய் இருந்தன. ஒரு பூவின் ஆயுளை விடக் குறைவானதாய் இருந்தது அவள் வாழ்க்கை. நினைக்க நினைக்க ஆற்றாமையாய் இருந்தது. இன்று மதியம் பனிரெண்டு மணி வாக்கில்தான், இதே இடத்தில்தான் சங்கமேஸ்வரனைப் பார்த்தாள். முன்னிரவில் எல்லாமும் முடிந்து போயிற்று. காலங்களைக் கடந்து வந்து சேர்ந்தவன் அரை நாளிற்குள் முற்றுப் புள்ளியாகிவிட்டான். அங்கை வெடித்து அழுதாள்.

வளும் ரவியுமாய்த்தான் சங்கமேஸ்வரன் உடலை மடியில் தாங்கிக் கொண்டார்கள். ஆட்டோவில் இன்னும் இரண்டு பேர் உடன் ஏறினார்கள். சங்கமேஸ்வரன் தலை இவள் மடியில் இருந்தது.  அவன் முகத்தில் வலியின் சுவடே தெரியவில்லை. அவ்வளவு நிச்சலனமாய் இருந்தது. மானு மானு எனக் கதறியபடியே அவன் முகத்தைத் தட்டினாள். நெஞ்சில் பலமாய் அறைந்தாள். ஒரு சலனமும் இல்லை. பயத்தின் விஷ நகங்கள் அவள் நெஞ்சில்  ஆழமாய் கீற ஆரம்பித்தன. ரவி ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அரசு மருத்துவமனை அருகாமையில்தான் இருந்தது. விரைந்த ஆட்டோ ஐந்தே நிமிடத்தில் மருத்துவமனையை எட்டியது. உடன் வந்த இருவர் அவசரமாய் கீழே இறங்கி சங்கமேஸ்வரனைத் தூக்கிக் கொண்டு ஓடினர். அங்கை வாயிலிலே நின்றுவிட்டாள். எல்லாமும் முடிந்ததை அவள் உணர்ந்திருந்தாள். அவனின் சலனமே இல்லாத தூங்கும் முகம் அவளுக்கு எல்லாவற்றையும் உணர்த்தியது. ரவி அங்கையை இழுத்துக் கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவிற்குப் போனான். பைக்கில் இருந்து விழுந்துட்டோம் எனச் சொல்லி அவளை இருக்கையில் இருத்தி மருந்து போட வைத்தான். அங்கைக்கு சில சிராய்ப்புகளைத் தவிர ஒன்றுமில்லை. ரவியின் இடது கை வீங்கி யிருந்தது. அசைக்க முடியாத அளவிற்கு வலி. அவனை அட்மிட் செய்து கொண்டார்கள். அங்கை அதையெல்லாம் கவனிக்காது வெளியே வந்தாள்.

சங்கமேஸ்வரனை தூக்கிக் கொண்டு ஓடியவர் வெளியே நின்று கொண்டிருந்தார். இவளைப் பார்த்ததும் நெருங்கி வந்து

“உசிரு நிக்கலமா அப்போவே பட்டுனு பூட்டு கீதுமா” என்றார்.

அங்கை அப்படியே நின்றுவிட்டாள். அவளுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தான் என்றாலும் உள்ளுக்குள் ஒரு நப்பாசை இருந்தது. அவர் அவளைத் தொட்டு உலுக்கி

”அவரு உங்க வூட்டுக்கார்ரா? யாரண்டயா சொல்லனுமா? ”

என ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார். அங்கை அப்படியே நடக்க ஆரம்பித்தாள்.

”த., இந்தாம்மா.., ம்மா.., ”

என அவர் இவளை விதம் விதமாக கூப்பிட்டுப் பார்த்து ஓய்ந்தார். அங்கைக்கு காதுகள் அடைத்துக் கொண்டன. கண்கள் இருட்டின. கால்கள் மட்டும் நடந்து கொண்டிருந்தன. மனம் எண்ணம் எல்லாமும் உறைந்து போயிருந்தது. மழையால் ஊரே நசநசத்திருந்தது. கிழிந்த உடைகளோடும் தலைவிரி கோலத்தோடுமாய் பஜாரை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். இருள் கவிய ஆரம்பித்திருந்தது. வாகன நெரிசல் காமராஜர் சிலையருகில் அதிகமாக இருந்தது. அங்கை பிரதான சாலையின் நடுவில் அசைந்து அசைந்து நடந்து கொண்டிருந்தாள். இரு சக்கர வாகனங்களின் ஒலிப்பான்கள் அலறின. ஒரு பேருந்து அவளுக்கு வெகு சமீபமாக வந்து நின்று பாங்க் என அலறியது அப்படியே மல்லாக்க விழுந்தவள். சுய நினைவை இழந்தாள். யாரோ அவளைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். சற்று முன்பு மருந்திட்ட அதே செவிலியர் குழாமிடம் அவளைச் சேர்த்தனர். அவளைத் திட்டிக் கொண்டே ரவிக்கு அருகில் இருந்த ஒரு படுக்கையில் அவளைக் கிடத்தினார்கள். முதலுதவிகளை ஆரம்பித்தார்கள்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அங்கை கண் விழித்தாள்.  இடது கையில் குளுகோஸ் ஏறிக் கொண்டிருந்தது. எழுந்து உட்கார்ந்தாள். தனக்கு நேர்ந்த சகலமும் கண் முன் ஓடியது. சாதாரணமாய் திரும்பியவள் பக்கத்துப் படுக்கையில் இருந்தவனை உற்றுப் பார்த்தாள். அது ரவி. அவனும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் கையில் கட்டு போடப்பட்டிருந்தது. மெல்ல நரம்பில் ஏறிக் கொண்டிந்த ஊசியைப் பிடுங்கினாள்.  சகலத்திற்கும் காரணமான ரவியைத் தன் கைகளால் கொன்று தீர்த்துவிடும் வெறி அவள் நரம்புகளில் ஏறியது. படுக்கையிலிருந்து இறங்கியவளின் உடலில் அசாத்திய வலு குடியேறியிருந்தது. மெல்ல நடந்து போய் அவனுக்கு அருகில் அமர்ந்தாள்.

அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். யார் இவன்? ஏன் அவளுடைய வாழ்வில் நுழைந்தான்? எதற்கு அவளைப் பார்த்து வெருண்டும் மருண்டும் ஓடினான். அவள் தன்னை அவனுக்குத் தர தயாராகத்தான் இருந்தாள். தன் புள்ளி மான் கனவுகளை அப்படியே விட்டுவிட்டு அவனோடு சேர்ந்து வாழ விரும்பியும் இருந்தாள். பாவி  அவளின் அருகாமைக்கு கூட வரவில்லை. அங்கை வைத்த கண் வாங்காமல் ரவியையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். போதையில் துவளும் அவன் உடல் நினைவில் வந்து எரிச்சலையும் ஆத்திரத்தையும் இரட்டிப்பாக்கியது. அவனை கைகளால் நெறித்துக் கொல்வதே சரியாக இருக்கும். அவளின் இருப்பு அவன் நினைவை அசைத்துப் பார்க்க மெல்லக் கண் விழித்தான்.

எனக்கு ஒண்ணும் இல்ல அங்க என்றான்.  அங்கை பற்களைக் கடித்தபடி சொன்னாள்.

 "நீ என் புள்ளிமான கொன்னுட்டடா"

என்ன, என்ன சொல்ற? என்கிற அவன் பதட்டத்தைப் பொருட்படுத்தாது  உரத்தக் குரலில் கத்தினாள்

"நீ என் புள்ளிமானக் கொன்னுட்டடா கொலகாரப் பாவி"

தடுமாறி எழ முயன்றவனின் மீது பாய்ந்தாள். அவன் கழுத்தை நெருக்கினாள். அவ்வளவு ஆழமாக, அவ்வளவு ஆசையாக அவனது கழுத்தை இறுக்கினாள். அவன் தொண்டைக் குழி நசிக்கும் நொடிக்கு முன்னர்   யாரோ அவளை, அவன் மீதிருந்து இழுத்துக் கீழே போட்டனர். ரவி நெஞ்சே வெடித்துவிடும்படி  இருமி அவன் உயிரைக் காத்துக் கொண்டான். தன்னுடைய எந்த ஆசையுமே நிறைவேறாமல் போன அங்கை வெடித்து அழுதாள்.

யாரோ போலிசைக் கூப்பிடச் சொன்னார்கள். ரவியின் அம்மாவின் முகம் தென்பட்டது. அங்கை நிதானத்திற்கு வந்தாள். மெல்ல வெளியே நடக்க ஆரம்பித்தாள். இரவு அடர்ந்திருந்தது. கடைகளை மூடி விட்டிருந்தார்கள். மருந்தகங்கள் மட்டும் திறந்திருந்தன. அப்படியே நடக்க ஆரம்பித்தாள். மாடுகளும் பன்றிகளும் நாய்களும் சுதந்திரமாக சாலையில் நடமாட ஆரம்பித்திருந்தன. அங்கையின் கால்கள் அவளை சேஷாத்ரி ஆசிரமத்தில் இருக்கும் மானிடமே கூட்டிச் சென்றன. காவலர் கேட்டை அடைத்திருந்தார். இவள் அந்தக் குறுகலான காம்பவுண்டின் மேல் ஏறி உள்ளே குதித்தாள். என்ன ஏது என ஓடிவந்தவர் இவளின் கோலத்தைப் பார்த்துப் பதறினார்.

‘என்னம்மா இப்படி வந்து நிக்குற என்னாச்சி.., என்னாச்சி..,?

 என்கிற கேள்விகளைப் பொருட்படுத்தாது உறங்க ஆரம்பித்திருந்த மானின் அருகாமையில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

எப்படி எப்படியெல்லாமோ அவளைச் சமாதானப் படுத்த முயன்று சலித்துப் போன முதியவர் நுழை வாயிலுக்கு சமீபமாய் நடந்து வந்தார். கேட்டில் யாரோ நின்று கொண்டிருப்பதைப் போல் பட்டது.
யாரு என்றபடியே முன்னால் சென்றார். ஒரு பதின்மன் தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்தான்.

”எங்கக்காவ காணம் தாத்தா” என்றான்

அவனை அவருக்கு தெரிந்திருந்தது.

”இங்கதான்யா இருக்கா.  வா.., உள்ள வா.,  வந்து சீக்கிரம் கூட்டிட்டு போ! ” என்றபடியே கதவைத் திறந்து விட்டார்.

அங்கையின் தம்பி ஓட்டமும் நடையுமாக அங்கை அருகில்போய் நின்றான்.

அக்கா எழுந்து வீட்டுக்கு வா!

எனக் கெஞ்சினான். அங்கை அழுது ஓய்ந்திருந்தாள். சற்றுத் திடமானாள். எழுந்து கொண்டாள்.

வா! போலாம் என்றபடியே முன்னால் நடந்தாள்.  பின் சடாரென நின்று மீண்டும் மானிடம் நடந்து வந்து அதைக் கடைசி முறையாய் பார்த்துக் கொண்டாள். உடலைக் குலுக்கிக் கொண்டாள்.

வாயிலை நோக்கி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். பெரியவர் நிம்மதியாய் அவர்கள் இருவரையும் வெளியில் விட்டு கதவைப் பூட்டிக் கொண்டார்.

நள்ளிரவில் இருவரும் வீட்டை அடைந்திருந்தனர். அங்கையின் அப்பாவும் அம்மாவும் செய்வதறியாமல் அமர்ந்திருந்தனர். அரசல் புரசலாய் அவர்களுக்கு விஷயம் தெரிந்து விட்டிருந்தது. உள்ளே நுழைந்த அங்கை எதுவும் பேசாமல் அவர்கள் முன் நின்றாள். இனி மீண்டும் ரவி வீட்டிற்குத் தான் போகப்போவதில்லை என்றாள். ரவியும் இங்கு வரக்கூடாது என்றாள். அவர்கள் ஒன்றும் பேசாமல் திகைத்து நின்றனர். அங்கையற்கன்னி உள்ளறைக்குப் போய் அங்கிருந்த மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பழைய பாய் ஒன்றை எடுத்து உதறி தரையில் போட்டுப் படுத்துக் கொண்டாள்.

- மேலும்Featured Post

எனக்கு மனிதர்களைப் பிடிக்காது - கவிதைத் தொகுப்பு - அய்யனார் விஸ்வநாத்

இக்கவிதைகள் தனிமையின் இசை மற்றும் நானிலும் நுழையும் வெளிச்சம் கவிதைத் தொகுப்புகளிற்குப் பிறகு எழுதப்பட்டவை. 2010 ஆம் வருடத்திலிர...