Tuesday, April 25, 2017

எஸ்.எல்.பைரப்பா

இன்று கன்னட எழுத்தாளர் பைரப்பாவைக் குறித்து ஜெயமோகன் எழுதியிருக்கும் குறிப்புகளை வாசித்தேன். அவர் இணைப்புக் கொடுத்திருந்த வலம் கட்டுரையையும் வாசித்தேன்.  ஒரு வித இறுக்கமும் அமைதியின்மையும் தோன்றவே பைரப்பாவின் விக்கிப் பக்கத்தை நிதானமாய் வாசித்து முடித்தேன். குடும்பம் சிதைகிறது நாவலை வாசித்த  உடன் நான் எழுதிய சில குறிப்புகள் நினைவிற்கு வரவே அதையும் வாசித்தேன். மனம் அமைதியடைந்தது. ஒரு எழுத்தாளரைப் பற்றி, அவர் வாழ்வு மற்றும் படைப்புகளைப் பற்றி அடுத்தவர் உருவாக்கிக் கொள்ளும் வெவ்வேறு சித்திரங்கள் இவை. மற்றவர் நிலைப்பாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு என்னுடையது என்ன என்பதை இப்படி எழுதிப் பார்த்துக் கொள்கிறேன்,

நான் ஒரு எளிய வாசகன். படைப்புகளின் வழியாய் எழுத்தாளரை அறிந்து கொள்ள முற்படுபவன். படைப்புகள் மட்டுமே அறியப்பட்டால் கூடப் போதும் என நினைப்பவன். அதே சமயம் தகுதியுள்ள எழுத்தாளருக்கு கிடைக்க வேண்டிய அத்தனை அங்கீகாரங்களும் கிடைக்க வேண்டும் என விரும்புபவன். 

அங்கீகாரம் என்பது பரவலாய் வாசிக்கப்படுவதா, நிறுவனங்களால் தரப்படும் விருதுகளைப் பெறுவதா அல்லது  இவரைத்  தவிர்த்துவிட்டு இம்மொழியின் இலக்கியத்தை அளவிட்டு விட முடியாது எனும் மதிப்பீடா என்றால் நான் மூன்றாவதையே தேர்ந்தெடுப்பேன். மற்ற இரண்டையும் விட மதிப்பீடே ஒரு எழுத்தாளரின் பங்களிப்பை முக்கியமானதாக்குகிறது. அந்த மட்டில் பைரப்பா ஏற்கனவே கன்னட இலக்கியத்தின் மிக முக்கியமான அம்சம். இந்திய இலக்கிய மேதைகளில் ஒருவர்.  மேலதிகமாய் பத்மஸ்ரீ, சாகித்ய அகடாமி உள்ளிட்டப் பலவிருதுகளைப் பெற்றிருக்கிறார். அவருடைய சமீபத்திய நாவலான ஆவரணா வெளியாவதற்கு முன்பே விற்றுத் தீர்ந்திருக்கிறது. என்னளவில் பைரப்பா ஒரு முழுமையான மற்றும் முழுமையடைந்த எழுத்தாளர். 

பைரப்பாவின் சுயசரிதை நூலான பித்தி யில் குறிப்பிடப்பட்டிருக்கும் அவர் இளமைக்கால நிகழ்வுகளும் -  குடும்பம் சிதைகிறது நாவலும் ஏறக்குறைய ஒன்றுதான் என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன். எனக்கு ஏற்பட்ட  அமைதியின்மைக்கும் இதுவே காரணம்.  

குடும்பம் சிதைகிறது, வாசிப்பவரை மிகவும் துயரத்திலாழ்த்தும் நாவல். இவ்வளவு துயரங்களா என்கிற தவிப்பும் பரிதாபமும் வாசிக்கையில் நம்மைத் தொந்தரவு செய்யும். அத்தனை குரூரங்களும் பைரப்பாவிற்கு நேர்ந்தவை எனும்போது உண்மையிலேயே மனம் பதறித்தான் போகிறது. 

தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்லாது எழுத்து வாழ்விலும் பைரப்பா குழு அரசியல் வாதங்களால் பழி வாங்கப்பட்டிருக்கிறார். ஒரு எழுத்தாளரின் எழுத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவது என்பது அவர் வாசிக்கப்படாமல் போவதை விடத் துயரமானது. 

தமிழில் பிரதானமாக இருக்கும் பிராமண மோகம் பைரப்பாவின் எழுத்துகளில் கிடையாது. நம் சூழலில் குறிப்பாக பிராமணர் படைப்புகளை எடுத்துக் கொண்டால் அவற்றை யதார்த்தம், அழகியல் எனும் இரு பெரு பிரிவுகளிலும், காமம், அகச்சிக்கல், உள்ளொளி தரிசனம், பொருந்தாக்காமம், நிறைவேறாக் காமம், இப்படி சில பல உள் வகைமைக்குள்ளும் பொருத்தி விட முடியும். இதைத் தாண்டி அவர்களின் சுயசாதி விமர்சனம் படைப்புகளில் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் அர்ச்சகர்களையும் பூசாரிகளையும் மக்களை ஏய்த்துப் பிழைப்பவர்களாக பைரப்பா சித்தரித்திருப்பார். நாவலின் முதல் அத்தியாயமே ஒரு பிராமணக் குடும்பத்தின் அதிகாலை, தாய் மற்றும் மகன்களின் ஏராளமான வசைச் சொற்களோடுதான் விடியும். மகன்கள் தாயை ”மொட்டை முண்டை”, ”கழுத முண்டை” என வசைவதும் பதிலுக்குத் தாய் மகன்களை ”தேவடியாப் பிள்ளைகளா” என வசைவதுமாய் நாவல் ஆரம்பிக்கும். பிராமணக் குடும்பத்தின் கதை என்றாலும் கூட மிக நேரடியான மக்கள் மொழி அதாவது மிக அசலான கிராம மொழியில்தான் மொத்த நாவலும் எழுதப்பட்டிருக்கிறது. பிறகு எப்படி பைரப்பா தவறாக அடையாளப்படுத்தப்படுகிறார் என்பது தெரியவில்லை.

தற்சமயம் பைரப்பாவை இந்துத்வ சக்திகள் தாங்கிப் பிடிப்பதும் நிச்சயம் இன்னொரு தவறான அடையாளப்படுத்தலாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.

கன்னடத்தில் நிகழும் இலக்கிய குழு அரசியல் விஷயங்களைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மேலும் பைரப்பாவின் இரண்டு நாவல்களைத் தவிர்த்து வேறெதையும் வாசித்ததும் இல்லை. எனவே திட்டவட்டமாக எதையும் கூற விரும்பவில்லை. இப்போதைக்கு பைரப்பாவின் மற்ற படைப்புகளைத் தேடி வாசிக்க வேண்டும். மற்றவைப் பிறகு.




No comments:

Featured Post

test

 test