Sunday, June 25, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தி இரண்டு


மழை விட்டிருந்தது. அங்கையும் சங்கமேஸ்வரனும் சுய நினைவிற்கு திரும்பி இருந்தனர். விழுந்து புரண்டதில் உடல் முழுக்க சேறு அப்பியிருந்தது. உடைகள் முழுக்க சக்தியாகியிருந்தன. அங்கையற்கன்னி எழுந்து கொண்டாள். மரத்தடியில் கிடந்த புடவையை எடுத்து அணிந்து கொண்டாள். சற்றுத் தொலைவில் நீர் தேக்கத் தொட்டி ஒன்றிருந்தது. சங்கமேஸ்வரன் அவளை அங்கு கூட்டிக் கொண்டு போனான். தொட்டியில் நீர் நிறைதிருந்தது. அங்கையும் அவனும் உடைகளோடு நீர் தொட்டியில் இறங்கினர். கழுத்து வரை நீரில் மூழ்கி எழுந்தார்கள். சகதியும் சேறுமாய் இருந்த அவர்கள் சுத்தமானார்கள். அங்கைக்கு இதெல்லாமே கனவு என மனம் சொல்லிக் கொண்டிருந்தது. உடல் முழுக்க வலி தெறித்தது. நீர் பட்ட உடன் உடலின் பல இடங்கள் எரிந்தன. முற்கள் உடலைக் கிழித்திருக்கலாம்.

வானம் தெளிவடைந்திருந்தது. ரவி வீடு திரும்பியிருப்பானோ என்கிற எண்ணம் தோன்றி மறைந்தது. வாய்ப்பில்லை. இரவு அடங்கியதும் ஒரு திருடனைப்போலத்தான் அவன் வருவான். ரவியை அங்கை மன்னித்திருந்தாள். சங்கமேஸ்வரன் களைத்திருந்தான். அவன் கண்களில் சாந்தம் குடியேறியிருந்தது. இருவரும் பைக் நிறுத்தப்பட்டிருந்த அரச மரத்தடியை நோக்கி நடந்தார்கள். அவர்கள் விழுந்து புரண்ட இடத்தில் அங்கை சிறிது நேரம் நின்றாள். முன்னால் சென்றவனை அழைத்தாள். வந்தவனை இறுக அணைத்துக் கொண்டாள். அவளுடல் ஒரு கோழிக் குஞ்சைப் போல நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் அவள் முதுகை ஆதூரமாய் தேய்த்து இன்னும் இறுக அணைத்தான். பைக்கில் கொஞ்ச தூரம் போனால் காற்றில் ஈரம் காய்ந்து விடும் என சொன்னான். காயலனாலும் பரவால்ல என முறுவலித்தாள். அவன் பைக்கை உதைத்தான். மழையில் நனைந்திருந்ததால் இரண்டு மூன்று முறை உதைக்க வேண்டி இருந்தது. அங்கை ஏறி அமர்ந்தாள். காற்றை கிழித்துக் கொண்டு பைக் விரைந்தது. உடலும் துணிகளும் படபடத்தன.

அவள் தன்னை உணர்ந்திருந்தாள். தன் உடலை அறிந்திருந்தாள். ஓர் அநாசய தைரியம் அவள் நெஞ்சில் குடியேறியிருந்தது. இனி என்ன ஆனாலும் இவன் தான் என்கிற உறுதி படர்ந்தது. முடிந்தால் இன்று இரவே ரவியிடம் பேசி விட வேண்டும். பைக் பிரதான சாலையைத் தொட்டதும் அவன் காதருகில் சொன்னாள். எனக்கு இப்ப வீட்டுக்கு போக வேணாம். சங்கமேஸ்வரன் பைக்கை மலை சுற்றும் பாதைக்காய் திருப்பினான். பிரதான சாலையிலிருந்து மலை சுற்றும் பாதைக்குள் நுழைந்தது. முதலில் வந்த கல் மண்டபத்திற்காய் வண்டியை நிறுத்தச் சொன்னாள். ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. மழையின் காரணமாய் அங்கு அமர்ந்திருக்கும் சாமியார்களையும் பார்க்க முடியவில்லை. லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அந்தப் பழையக் கல் மண்டபத்திற்குள் நுழைந்தாள். லிங்கத்தின் அருகில் அகல் விளக்கொன்று சுடர் விட்டுக் கொண்டிருந்தது. கைகூப்பி வணங்கினாள். சங்கமேஸ்வரன் அருகில் எதுவும் பேசாமல் நின்றிருந்தான். மண்டபத்தை விட்டு வெளியே வந்தார்கள். ஒரு கல் தூணில் அமர்ந்தார்கள்.

 ஏதாச்சும் பேசு என்றாள். அவன் ஏதோ ஒரு உலகத்தில் தொலைந்திருந்தான். அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். முகத்தில் வந்து விழுந்த முடிக் கற்றைகளை மெதுவாய் ஒதுக்கினான். அவள் உதடுகளில் அசாதாரணச் சிவப்புக் குடியேறியிருந்தது. முத்தமிடும் எண்ணத்தை மறக்கப் பார்வையைத் திருப்பிக் கொண்டான். அவள் அவன் முகவாயைத் தனக்காகத் திருப்பி உதடுகளில் முத்தினாள். அவன் அங்கை என முனகினான்.

" என்ன நடக்குதுன்னே புரியல இல்ல" எனச் சொல்லிப் புன்னகைத்தாள்.

" ஆமா அங்கை. மலர்செல்வி போனதில இருந்து அவ்வளவுதான் என் வாழ்க்கைன்னு தோணுச்சி. தற்கொல பண்ணிக்க தைரியமில்ல. ஒரு பொணம் மாதிரிதான் வாழ்ந்துட்டு இருந்தேன். நீ எங்கிருந்த? எப்படி நான் உன் மனசுக்குள்ள இத்தன வருஷம் இருந்தேன். இதெல்லாம் ஒண்ணுமே புரியலை"

" இல்ல மானு இதெல்லாம் இப்படி நடக்கணுங்கிறது ஏற்கனவே எழுதப்பட்டிருக்கு"

" என்ன சொன்ன மானா?"

" ஆமா நீ எனக்கு மான் தான். உன்ன மானுன்னுதான் கூப்டப் போறேன்."

" கூப்டு நல்லாருக்கு கேக்க. உன்னை நான் தேனுன்னு கூப்டவா?"

" ஓ, ஆனா கூப்டறோத நிறுத்திக்க. நக்கிப் பாக்காத சரியா?"

"இல்ல நக்குவேன்"

ஏய் ஏய் என அவள் திமிற சங்கமேஸ்வரன் அவள் கழுத்தை நாவினால் துழாவினான். இருவருமே சாலையில் இருபுறங்களையும் பார்த்தார்கள்.

"சாமி இருக்க இடம் கிளம்பலாம்" என்றாள்.

" இனிமே எப்படி" என்றான்.

" நான் இன்னிக்கு நைட்டே ரவிகிட்ட பேசிடுறேன். அவன் புரிஞ்சிப்பான். நீ காலைல வீட்டுக்கு வந்துடு இதே பைக்ல ஏறி உன் கூட வந்துடுறேன். மலர் செல்விய மட்டும்தான் டூர் கூட்டிப் போவியா என்ன கூட்டிப் போவ மாட்டியா?"

" ஏய் ச்சீ நீதான் இனி என் உலகம். நாம இதே பைக்ல நாளைக்கு காலைல பறந்துடலாம். நம்ம ரெண்டு பேரையும் யார்னே தெரியாத ஒரு மலை கிராமத்துக்குப் போய் புதுசா ஒரு வாழ்க்கைய ஆரம்பிக்கலாம்."

 அங்கைக்கு கண்கள் சொருகின.

"நெனைக்கவே நல்லாருக்கு மானு. ஏன் நான் வீட்டுக்கு போவனும். இப்பவே இப்படியே போய்டலாமே"

" இல்லமா எனக்குச் சின்ன சின்ன வேலைகள் இருக்கு எல்லாத்தையும் நைட்டே முடிச்சிட்டு காலைல ஏழு மணிக்கெல்லாம் உன் வீட்டுக்கு வந்திடுறேன்."

" ம்ம் சரி வா கிளம்பலாம்"

 மீண்டும் பைக்கை உதைத்து, வந்த சாலையிலேயே திரும்பினான்.

" ஏன் மானு மலைய சுத்திட்டு போலாமே?"

" இல்லடி தேனு இப்படியே போய்டலாம். உன்ன வீட்ல விட்டுட்டு கிளம்புறேன்"

" இல்ல நீ என்ன சேஷாத்ரி ஆசிரம வாசல்ல விட்டுடு நான் போய்க்குறேன்"

" ம் சரி"

 பைக் நிதானமாய் விரைந்து பிரதான சாலையைத் தொட்டது. அரசு கலைக் கல்லூரி தாண்டியதும் பைக்கின் வேகத்தைக் கூட்டினான்.

" ஏய் நிதானமா போ" என்றாள்

" உன் தலை இன்னும் காயல. வேகமா போன காத்துல காய்ஞ்சிடும்" என்றபடியே பைக்கைத் திருகினான். மழைச் சாலை வழுக்கியது.

இரமணாசிர காம்பவுண்டில் ஒரு மயில் தோகை விரித்தபடி நின்று கொண்டிருந்தது. பரவசமான அங்கை ஏய் ஏய் இங்க பாரு மயில் தோகை விரிச்சிருக்கு எனக் கத்தினாள்.

எங்க என திரும்பியவன் சடாரெனக் குறுக்கில் வந்தவனை கவனிக்கவில்லை. அங்கைதான் ரவியை அடையாளம் கண்டு அய்யோ ரவி எனக் கத்தினாள். வெகு சமீபத்தில் பார்த்து ப்ரேக்கை அழுத்த வண்டி அவனை மோதிவிட்டு வழுக்கியது. பதினைந்தடி தூரம் சறுக்கிக் கொண்டு போய் இஞ்சின் உறுமி நின்றது. சங்கமேஸ்வரன் தலை தார்ச்சாலையில் மோதியது. அங்கையின் மீது வண்டி விழுந்தது. ரவி தெறித்திருந்தான்.

- மேலும்

No comments:

Featured Post

test

 test